ஐரோப்பாவிற்கு ஒரு ஜெலன்ஸ்கி, ஆசியாவிற்கு நான்சி பெலோசி! நான்சி பெலோசி அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உண்மை முகம்.! நான்சி பெலோசியின் பயணத்தால் கைகூடும் சீனாவின் நீண்டநாள் கனவு!!
418 Views
![]()
ஐரோப்பாவிற்கு ஒரு ஜெலன்ஸ்கி, ஆசியாவிற்கு நான்சி பெலோசி!
நான்சி பெலோசி அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உண்மை முகம்.!
நான்சி பெலோசியின் பயணத்தால் கைகூடும் சீனாவின் நீண்டநாள் கனவு!!
2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் துவங்கிய கோவிட் 19 இரண்டு வருடங்கள் முழுமையாக உலகை நிலைகுலையச் செய்தது. இன்னும் அதன் தாக்கம் தொடர்கிறது. கோவிட் பாதிப்பால் பாதிக்கப்படாத நாடோ, மக்களோ எவரும் இல்லை. பாதிக்கப்பட்ட ஒவ்வொரு நாடும், அந்நாட்டு மக்களும் மெல்ல மெல்ல அதன் தாக்கத்திலிருந்து தற்பொழுது தான் மீண்டு வருகிறார்கள். இலங்கை உள்ளிட்ட பல தேசங்கள் பொருளாதார வீழ்ச்சியால் சிக்கித் தவிக்கின்றன. இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதத்தில் ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் போர் மூண்டது. இந்த போரினால் ஐரோப்பாவின் பெரும்பாலான நாடுகளும், உலகின் பல பிரதேசங்களும் பெட்ரோல், டீசல் விலை ஏற்றத்தால் கடும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளன. கருங்கடலிலிருந்து ஏற்றுமதியாகும் கோதுமை உள்ளிட்ட உணவுத் தானியங்கள் உக்ரைன் – ரஷ்யப் போரினால் தடைப்பட்டு நிற்கின்றன. இதனால் பல நாடுகளில் உணவு தட்டுப்பாடுகளும், அதனால் பசி மற்றும் பட்டினிகளும் ஏற்படும் அபாயம் நிலவி வருகிறது. இந்நிலையில் கடந்த மூன்றாம் தேதி அமெரிக்க நாடாளுமன்றத்தின் சபாநாயகர் – 82 வயது பெண்மணி நான்சி பெலோசி திடீரென்று தைவான் விஜயம் செய்து சீன – தைவான் போருக்கு வித்திட்டு ஆசிய அமைதியைச் சீர்குலைக்கும் முயற்சியில் தூபமிட்டு சென்றுள்ளார்.
உலகத்தின் எந்த நாட்டின் சபாநாயகர்களும் இது போன்ற அரசியல் ரீதியான சுற்றுப் பயணங்களை மேற்கொள்வதும் இல்லை; கருத்துக்கள் சொல்வதுமில்லை. தைவானுக்கு வருவதற்கான பயணத்தை மலேசியா, சிங்கப்பூர், தென்கொரியா, ஜப்பான் என்று தலையைச் சுற்றி மூக்கை தொட்டுள்ளார். சபாநாயகர்கள் ஜனநாயக நாடுகளில் நடைபெறக்கூடிய சபாநாயகர்களின் கூட்டங்களில் கலந்து கொண்டு, அவைகளை எவ்வாறு நடுநிலையோடு நடத்துவது என்பதை பற்றி தான் கருத்தரங்குகளை நடத்துவார்கள். ஆனால் அம்மணி நான்சி பெலோசியோ அதற்கு முற்றிலும் மாறுபட்ட வகையில் சம்பந்தமில்லாத அரசியல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.
நேட்டோ கூட்டமைப்பை கிழக்கு ஐரோப்பா வரை நீட்டிக்கக் கூடாது என்ற ஒப்பந்தத்தை மீறி, உக்ரைன் நாட்டை நேட்டோவில் சேர்க்க எடுக்கப்பட்ட முன்முயற்சியைத் தடுக்கவில்லை என்றால் நேட்டோவின் ஏவுகணைகள் ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவின் வாசல்வரை நிறுத்தப்படும் சூழல் உருவாகும்; எனவே நேட்டோவிற்கு தலைமை தாங்கும் அமெரிக்கா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுக்கு உக்ரைனை நேட்டோவில் சேர்க்கும் முயற்சியைக் கைவிடும் படி இரஷ்ய அதிபர் புடின் வேண்டுகோள் வைத்தார். ஆனால், அதற்கான உத்தரவாதம் எதுவும் அமெரிக்கா மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளால் கொடுக்கப்படாத நிலையிலும்; உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும் அதுகுறித்து எவ்வித அறிவிப்பையும் வெளியிடாத நிலையிலும் ஏப்ரல் மாதத்தில் உக்ரைன் மீது ரஷ்யா தனது தாக்குதலைத் தொடுத்தது. உக்ரைனின் மிக முக்கியமான பகுதிகளைக் கைப்பற்றிக் கொண்ட ரஷ்யா தொடர்ந்து தொலைதூர ஏவுகணைகள் மூலமாக உக்ரைன் மீது தினமும் தாக்குதலை நடத்தி வருகிறது. உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி மாற்றப்படுகின்ற வரையிலுமோ, அந்நாடு முழுமையாக வீழ்ச்சி அடைகின்ற வரையிலுமோ அல்லது உக்ரைன் முழுமையாக ரஷ்யத் தேசத்துடன் இணைக்கப்படும் வரையிலுமோ இந்தப் போர் தொடரலாம். அது எத்தனை ஆண்டுகள் அல்லது மாதங்கள் நீடிக்கும் என தற்போது கூற இயலாது. இன்று வரையிலும் நேரடியாக அமெரிக்கா அந்தப் போரில் ஈடுபடவில்லை என்று அறிவித்தாலும் பல லட்சக்கணக்கான கோடி ரூபாய் மதிப்புள்ள நவீன ஆயுதங்களை உக்ரைனுக்கு அமெரிக்காவும், பிற ஐரோப்பிய நாடுகளும் வழங்கி வருகின்றன. பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளிலிருந்து Mercenaries எனும் கூலிப்படைகள் உக்ரைனுக்கு ஆதரவாகக் களம் இறக்கப்பட்டதாகவும் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. ரஷ்யாவை பலம் இழக்கச் செய்ய வேண்டும்; ரஷ்யாவின் பொருளாதாரத்தை முடக்க வேண்டும் என்ற அமெரிக்க அதிபர் பிடனின் முயற்சிகள் எதிர் விளைவுகளையே தந்துள்ளன. ரஷ்யாவின் ரூபிள் நாணயத்திற்கு அதிக மதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்; ரஷ்யப் பொருளாதாரம் முன்பை காட்டிலும் வலுவடைந்து உள்ளதாகவும்; ரஷ்ய அதிபர் புட்டினின் மதிப்பு முன்பை காட்டிலும் உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் உயர்ந்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகளுக்கு ஏற்பட்ட தோல்வியை மறைப்பதற்காக அமெரிக்க அதிபர் பிடன் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸியை ஒரு கைப்பாவையாகப் பயன்படுத்தி உக்ரைன் ரஷ்யா போர் தொடங்குவதற்குக் காரணமாக அமைந்தார். அதனால் ஐரோப்பாவின் அமைதி முழுமையாகச் சீர்குலைந்தது. நல்ல நிலையிலிருந்த பல ஐரோப்பிய நாடுகளும் இப்பொழுது பொருளாதாரத்திலும் நலிவடைந்து வருகின்றன. உக்ரைன் – ரஷ்யப் போரைப் பயன்படுத்திக் கொண்டு இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு, போர்களையே சந்திக்காத பல தேசங்கள் இப்பொழுது அமெரிக்காவிடமிருந்து நவீன ஆயுதங்களை வாங்கி குவிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டன. அமெரிக்க அண்ணன் ஜோராக ஆயுதம் விற்பனை செய்து தன்னை வளப்படுத்திக் கொண்டு வருகிறார். மற்ற ஐரோப்பியத் தேசங்கள் தங்கள் நாட்டு மக்களைச் சுரண்டி அமெரிக்க ஆயுத வியாபாரிகளின் சந்தைகளாக மாறித் தேய்ந்து வருகிறன. உக்ரைன் – ரஷ்யப் போரில் அமெரிக்கா தோற்றாலும் தங்களுடைய வியாபாரத்திற்கு எவ்விதமான பாதிப்பில்லை என்ற அளவில் அவர்களுக்கு இன்னொரு இடத்தில் எங்காவது போரைத் துவக்கியே ஆக வேண்டும் என்ற அடிப்படையில் தைவானை இப்பொழுது களமாகவும் தளமாகவுமே பயன்படுத்தியிருக்கிறது.
கடந்த 25 வருடங்களாக அமெரிக்காவிலிருந்து அதிபர், துணை அதிபர் அல்லது மூன்றாவது ஸ்தானத்தில் இருக்கக்கூடிய எவருமே தைவானுக்கு விஜயம் செய்யவில்லை. ஆனால், நான்சி பெலோசி தற்போது விஜயம் செய்திருக்கிறார். அமெரிக்க அரசு நான்சி பெலோசியின் பயணத்தைத் தடுத்திருக்க முடியும். ஆனால் அவ்வாறு செய்யவில்லை. 140 கோடி மக்கள் தொகை கொண்ட சீனா 1949 இல் முழு விடுதலை பெற்று, Peoples Republic Of China என்று அந்த நாடு தன்னை உலக அளவில் பிரகடனப்படுத்திய பிறகும், அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் சீனாவை அங்கீகரிக்கவில்லை. 1922 முதல் புரட்சியை முன்னெடுத்த சீனக் கம்யூனிஸ்ட் கட்சி 1949-ல் முழுமையாக ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியதால் அதற்கு முன்பு Republic Of China என்ற பெயரில் ஆட்சியிலிருந்த Kuomintang கட்சியினுடைய தலைவர் சியாங்கே சேக் தனது விசுவாசிகளாயிருந்த 20 லட்சம் பேருடன் அவர் சீனாவின் எல்லையிலிருந்து 150 கிலோமீட்டருக்கு அப்பால் உள்ள Formosa என்ற ’அழகிய தீவி’ற்கு தப்பிச் சென்றார். தொன்று தொட்டு சீனாவின் அங்கமாக இருந்த பார்முசா / தைவான் தீவு 1895 ஆம் ஆண்டு ஜப்பான் கைப்பற்றிக் கொண்டது. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு பார்முசா எனும் தைவான் தீவு ஜப்பானிடமிருந்து மீட்டெடுக்கப்பட்டது. 1949 இல் சீன மக்கள் குடியரசான சீனா 1971 இல் தான் ஐ.நாவில் அங்கம் பெற்றது. அதுவரையிலும் ROC என்ற Republic Of China என்ற பெயரை அடையாளப்படுத்திக் கொண்டு தைவானில் மையம் கொண்டிருந்த Kuomintang அரசு முற்றாக ஐ.நாவிலிருந்து விலகிக் கொண்டது. எனவே 1971க்கு பிறகு, சீன மக்கள் குடியரசு PRC – People’s Republic Of China மட்டுமே சீனாவின் ஏகப்பிரதிநிதியாக உலக அளவில் அனைத்து நாடுகளாலும் அங்கீகரிக்கப்பட்டு வருகின்றன.
அதாவது 1971 வரையிலும் Mainland முதன்மையான சீனா ஒரு சீனாவாகவும்; தைவான் இன்னொரு சீன தேசமாகவும் அழைக்கப்பட்டு வந்த நிலை மாறி அமெரிக்கா, மற்றும் அனைத்து உலக நாடுகளும் இன்றைய சீன மக்கள் குடியரசு நாட்டுடன் மட்டுமே எல்லா விதமான ராஜ்ய உறவுகளையும் தொடர்ந்து வந்துள்ளன. எனவே சீனா என்ற அடையாளத்தை முழுமையாக இழந்த பார்முசா தீவு என்ற தைவானுக்கு ’நாடு’ என்ற அங்கீகாரம் கொடுக்கப்படாமல், பொருளாதார மற்றும் வர்த்தக ரீதியான உறவுகளை மட்டுமே உலகின் பல நாடுகள் இன்று வரை மேற்கொண்டு வருகின்றன. அதே அடிப்படையில் சீன நாடும் தைவானுடன் பலவிதமான பொருளாதார உறவுகளை வைத்துள்ளது. தைவானின் பல தொழிற்சாலைகள் சீனாவிலும்; சீனாவின் நிறுவனங்கள் பல தைவானிலும் இன்று வரை இருக்கின்றன. தைவானில் இருக்கக்கூடிய மக்களும் பூர்வீகமான சீன தேசத்தவர்களே. சீனா தீவிரமாக தைவானை தாய் தேசத்துடன் என்றாவது ஒருநாள் சேர்ப்போம் என்று சொல்லி வந்துள்ளதே தவிர, அதற்கான எவ்வித இராணுவ முஸ்தீபையும் இதுவரை சீனா மேற்கொண்டதில்லை. எனினும் ’இலைகள் விரும்பினாலும் காற்று சும்மா விடாது’ என்பதற்கு இணங்க எப்பொழுதெல்லாம் சீனாவை சீண்ட வேண்டும் என்று அமெரிக்கா கருதுகிறதோ, அப்போதெல்லாம் தைவானை ஒரு கருவியாகப் பயன்படுத்திக் கொள்ளும். அதன் அடிப்படையிலேயே மெல்ல மெல்ல தைவானுக்கு தேவையான ஆயுத உதவிகள், தொழில்நுட்ப உதவிகள் அனைத்தையும் இன்று வரையிலும் அமெரிக்கா அளித்து வருவதோடு ஒரு தாய் மக்களான சீன மக்களையும், தைவான் மக்களையும் பகைவர்களாக்கக்கூடிய வகையிலேயே அவ்வப்போது அமெரிக்கா சிண்டு முடியும் வேலைகளைச் செய்து வருவதுண்டு. நான்சி பெலோசியின் தைவான் விஜயமும் சீனாவின் மூக்கை சொறியும் வேலையே!
கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு ஜப்பான் சென்று இருந்த பிடனும் வாய் தவறி ’சீனா தைவான் மீது போர் தொடுக்குமேயானால், அமெரிக்காவும் நேரடியாகப் போர்க்களத்தில் இறங்கும்’ என்று அவர் சொல்லியிருந்தார். அதற்குப் பிறகு வெள்ளை மாளிகை ’இல்லை! இல்லை! அது தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டது’ என்று விளக்கம் அளித்தது. இப்படிப்பட்ட சூழலில், அமெரிக்காவின் முக்கியமான பொறுப்பில் உள்ள நான்சி பெலோசி தைவானுக்கு பிரத்தியேகமான பயணத்தை மேற்கொள்வது தைவானை இன்னொரு சீனாவாக அங்கீகரிப்பதற்குச் சமம் என்ற அடிப்படையிலேயே சீனா கடும் கோபம் கொண்டு எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது. இன்று உலகில் பொருளாதாரத்திலும், ராணுவத்திலும் அமெரிக்காவிற்கு எவ்விதத்திலும் சளைக்காத நிலையில் உள்ள சீனாவை சிறுமைப்படுத்தக்கூடிய வகையில் தன்னுடைய தேசத்தின் அங்கமாக இருந்த ஒரு மிகச் சிறிய துண்டு நிலத்தை இன்னொரு நாடாக அங்கீகரிக்கும் போக்கை சீனா எப்படி ஏற்றுக்கொள்ளும்? நான்சி பெலோசி 15000 கிலோமீட்டர் பயணம் செய்து தைவானில் அப்படி என்ன ஜனநாயகத்தை நிலைநாட்டப் போகிறார்? நான்சி பெலோசி பயணத்தின் மூலம் சீனா – தைவான் போர் மூளுமேயானால் அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகள் நேரடியாக களம் இறங்கினாலும் சீனா தைவானை கைப்பற்றுவதை தடுக்க இயலாது என்பதே எதார்த்த நிலை. நான்சி பெலோசியின் விஜயம் Mainland சீனாவுடன் தைவானை இணைக்கும் சீனாவின் நீண்ட நாள் கனவு எளிதில் கைகூடும் நிலையே இப்பொழுது உருவாகியுள்ளது.
சீனா அணு ஆயுத நாடு – அமெரிக்கா அணு ஆயுத நாடு. 1945 க்கு பிறகு இரண்டு தேசங்களும் இதுவரையிலும் நேரடியாக மோதிக் கொள்ளாத நிலையில் பெலோசியின் தைவான் பயணம் இது ஆசியாவின் அமைதியை மட்டும் கெடுக்காது; உலகத்தின் அமைதியைக் கெடுப்பது மட்டுமல்ல, உலகத்திற்கு அழிவையே கூடக் கொண்டு வரலாம். அதற்கான அறிகுறிகள் தென்பட்டு விட்டன. கடந்த ஐந்து தினங்களாக இதுவரை இல்லாத அளவிற்குத் தைவானைச் சுற்றி ஆறு திசைகளிலும் சீனா தீவிர போர்ப் பயிற்சியைச் செய்து வருகிறது. இந்த போர்ப் பயிற்சி இதோடு நிற்குமா? அல்லது ரஷ்யா உக்ரைனினுடைய எல்லையில் படைகளைக் குவித்து வைத்து சில நாட்களுக்குப் பிறகு உக்ரைன் மீது படையெடுத்ததைப் போல, தைவான் மீது சீனா தாக்குதல் தொடுக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
ஐரோப்பிய அமைதியைக் கெடுத்தது ஜெலென்ஸ்கி; இன்று ஆசிய – உலக அமைதியைக் கெடுக்க நான்சி பெலோசி. யுத்தம் இல்லாமல் ஒருநாளும் அமெரிக்கா உயிர் வாழாது என்பதற்கு இணங்க, எங்காவது யுத்தத்தைத் துவக்கிக் கொண்டே இருக்கிறது. அதனால், அல்லல் படுவதோ ஏழை, எளிய நாடுகளும், அந்நாட்டின் மக்களும்; கெடுவது உலக அமைதியும் மட்டுமே! நான்சி பெலோசியின் தைவான் பயணத்தை அனைத்து உலக நாடுகளும் கடுமையாகக் கண்டித்திருக்க வேண்டும். ஏன் கண்டிக்கவில்லை? எனத் தெரியவில்லை. உக்ரைன் – ரஷ்யப் போரைக் காட்டிலும், சீனா – தைவான் போர் உக்கிரமானதாகவே இருக்கும்!
சீனாவின் கடும் எதிர்ப்பையும் மீறி நான்சி பெலோசி தைவான் பயணம் மேற்கொண்டார்!
இப்பொழுது நான்சி அமைதியாகிவிட்டார்!
சீனா – தைவான் போர்மேகம் சூழ்ந்து,, ஆசிய அமைதி கெட்டுவிட்டது.!
அதிலும், சீனாவிற்கு நான்சி நல்லதே செய்துள்ளார்.!
சீனாவின் நீண்ட நாள் கனவான தைவானைக் கைப்பற்ற நல்லதொரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்து விட்டார்.!
டாக்டர் க. கிருஷ்ணசாமி MD.Ex MLA,
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
10.08.2022.






