மது-புகை-போதை இல்லா தேசம் படைப்போம்.!
641 Views
![]()
மது-புகை-போதை இல்லா தேசம் படைப்போம்.!
பாரத தேசம் பல நூறாண்டுகள் ஆக்கிரமிப்பாளர்களால் படையெடுக்கப்பட்டு தன்னுடைய அடையாளத்தை இழந்து நின்றது. இறுதியாக ஆதிக்கம் செலுத்திய ஆங்கிலேயர்களிடமிருந்து விடுதலை பெற்று 75 ஆண்டுகள் நிறைவுற்று 76வது ஆண்டில் அடி எடுத்து வைக்கிறோம். நம் தேசம் விடுதலை பெறுவதற்கு லட்சக்கணக்கானோர் தன்னுடைய இன்னுயிரை நீத்து இருக்கிறார்கள்; சிறைப்பட்டு இருக்கிறார்கள்; சொத்து, சுகத்தை இழந்து இருக்கிறார்கள்; சொல்லொணா துயருற்று இருக்கிறார்கள். அன்று வாழ்ந்த 30 கோடி மக்களின் உழைப்பு மட்டுமல்ல, நமது இயற்கை வளங்களும் கொள்ளையடிக்கப்பட்டன. ஒரு காலகட்டத்தில் வறுமையும், பிணியும் நிறைந்து ’ஆசியாவின் நோயாளி’ என்று முத்திரை குத்தப்படும் அளவிற்கு இந்தியாவின் நிலைமை இருந்தது. எனினும் கடந்த 75 வருடத்தில் நாம் மிகப் பெரும் முன்னேற்றத்தைக் கண்டிருக்கிறோம்.
இன்றைய தலைமுறையினர் அனுபவிக்கும் சுதந்திரமான சூழ்நிலையை அடைய தங்களுடைய இன்னுயிரை அர்ப்பணித்தவர்களுடைய தியாகங்களைப் போற்றுவதற்கு பதிலாக, அவ்வாறு போராடிப் பெற்ற சுதந்திரத்தை இழப்பதற்கு வேறு வேறு வழிகளில் இரையாகிறார்கள். இன்றைய இளைஞர் சமுதாயம் மது – புகை – போதை – கஞ்சா – அபின் உள்ளிட்ட வஸ்துக்களையும், புதிய புதிய முறையில் கண்டுபிடிக்கப்படும் நவீன மாத்திரைகளையும் உட்கொண்டு தங்களுடைய சுய நினைவுகளை இழப்பதன் மூலம் அவர்கள் ஒட்டுமொத்த சுதந்திரத்தையே இழக்கிறார்கள். அதற்கு தூபமிடுவதை போல பல மாநில அரசாங்கங்கள் மதுபான கடைகளை வீதிதோறும் திறக்கிறார்கள். இளைஞர்கள் மது, சிகரெட், குட்கா, கஞ்சா, அபின் போன்ற புகைப் பழக்க வழக்கங்களுக்கும், நவீன போதை வஸ்துக்களுக்கும் அடிமையாகி தாங்கள் படிக்கக்கூடிய கல்வியிலோ, வேலை வாய்ப்பிலோ சிறிதும் அக்கறை இல்லாமல், கவனம் செலுத்தாமல் புதிய ஒரு அடிமைத்தனத்திற்கு பட்டவர்த்தனமாக ஆளாகிறார்கள். பாரத தேச – தமிழக இளைஞர்களை மது – புகை – போதை வஸ்துக்களிலிருந்து விடுதலை பெற வைப்பது மிக மிக அவசியமானதாகும்.
எனவே, மது, புகை மற்றும் போதை வஸ்துக்களால் இளைஞர்களுக்கு ஏற்படும் அபாயங்கள்குறித்து தமிழ்நாடு எங்கும் அனைத்து ஒன்றியங்கள், பேரூராட்சி, நகராட்சிகளில் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி சுதந்திர தினத்தன்று காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரையிலும் புதிய தமிழகம் கட்சியின் சார்பாக 1000 இடங்களில் ‘மது, புகை போதை இல்லா பாரத தேசம் – தமிழ் நாட்டை உருவாக்கும்’ பொருட்டு துண்டுப் பிரசுரங்கள் வழங்கி இருசக்கர வாகன விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்த புதிய தமிழகம் கட்சி நடத்த உள்ளது. இந்த நிகழ்ச்சியில் அனைத்து மாணவர்களும், இளைஞர்களும், ஆர்வலர்களும் திரளாகக் கலந்து கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
டாக்டர் க. கிருஷ்ணசாமி MD.Ex MLA,
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
13.08.2022.






