சேலம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் மாம்பழங்களுக்கு உரிய விலை கிடைக்காததால் சாலையோரங்களில் கொட்டப்படும் அவலம் – அரசு நேரடியாகக் கொள்முதல் செய்யக் கோரி மாண்புமிகு வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் ர. வினோத் அவர்களுக்கு புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் க. கிருஷ்ணசாமி அவர்கள் எழுதிய கடிதத்தின் சாராம்சம்

அறிக்கைகள்
s2 9 Views
721266307 1583297563157058 464500281210920100 N
Published: 15 Jun 2026

Loading

சேலம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் மாம்பழங்களுக்கு உரிய விலை கிடைக்காததால் சாலையோரங்களில் கொட்டப்படும் அவலம் – அரசு நேரடியாகக் கொள்முதல் செய்யக் கோரி மாண்புமிகு வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் ர. வினோத் அவர்களுக்கு புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் க. கிருஷ்ணசாமி அவர்கள் எழுதிய கடிதத்தின் சாராம்சம்
……………………………………………………
அன்புடையீர் வணக்கம்!

சேலம் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களின் பல பகுதிகளில், மாம்பழங்களைச் சாலையோரங்களில் கொட்டிச் செல்லும் காட்சிகள் செய்திகளாக வெளியாகி இருப்பது மிகுந்த வேதனையளிக்கின்றது. உரிய விலை கிடைக்கவில்லை என்பதற்காக மாம்பழ உற்பத்தியாளர்கள் இவ்வாறு தெருக்களிலும் சாலையோரங்களிலும் கொட்டிச் செல்லும் செயல்கள் ஏற்புடையவை அல்ல எனினும், மரத்திலிருந்து பறித்த கூலிகூடக் கிட்டவில்லை என்ற ஆதங்கத்தில் அவர்கள் இதனைச் செய்துள்ளனர்.
இதேபோன்று, தக்காளிக்குப் போதிய விலை கிடைக்காதபோதும், பாலுக்குச் சரியான விலை கிடைக்காதபோதும் பல்லாயிரக்கணக்கான கூடை தக்காளிகளையும், ஆயிரக்கணக்கான லிட்டர் பாலையும் தெருவோரங்களில் கொட்டி விவசாயிகள் தங்களது மனக்குமுறல்களை வெளிப்படுத்தியுள்ளனர். வறட்சிக் காலங்களிலும் மிதமிஞ்சிய மழைக்காலங்களிலும் பயிர்கள் கருகியோ, அழுகியோ அல்லது அதிக விளைச்சல் ஏற்பட்டும் போதிய விலை கிடைக்காத சூழலிலோ விவசாயிகள் பெரும் இன்னல்களுக்குத் தள்ளப்படுகிறார்கள்.

இதுபோன்ற சூழல்களைத் தமிழ்நாடு வேளாண்மைத்துறை கணக்கில் கொண்டு துரிதமாகச் செயல்பட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். அனைத்து விதமான விளைபொருட்களையும் ‘தேசிய சொத்து’ என்ற கண்ணோட்டத்தோடு பாதுகாக்க வேண்டும். இதற்காகத்தான் அனைத்து விளைபொருட்களுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயம் செய்யப்பட வேண்டும் என்று நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். அதுமட்டுமின்றி, அதிக விளைச்சலால் ஏற்படும் விலை வீழ்ச்சியைச் சமாளிக்கப் போதிய குளிர்பதனக் கிடங்குகளை ஆங்காங்கே அமைத்துத் தர வேண்டும் என்பதும் எங்களின் முக்கிய கோரிக்கையாகும்.

நம் நாட்டில் எண்ணற்ற குழந்தைகளுக்குப் போதிய பால் கிடைப்பதில்லை; வைட்டமின் நிறைந்த காய்கறிகள் கிடைப்பதில்லை. அதனால் ஏற்படும் சத்துக்குறைபாட்டால் குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள், பெரியவர்கள் எனப் பலரும் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். மாம்பழத்தில் கண் பார்வைக்குத் தேவையான வைட்டமின் ‘ஏ’ நிறைந்துள்ளது. விவசாயிகள் தாங்கள் விளைவித்த காய்கறிகள், பழங்கள் மற்றும் பால் பொருட்களை உற்பத்தி விலைக்குக் கூட விற்க முடியாத பொழுது, அரசே அவற்றை நேரடியாகக் கொள்முதல் செய்து ஏழை எளிய மக்களுக்கும்; அனைத்து அங்கன்வாடிகளுக்கும், மாணவ, மாணவியர் விடுதிகளுக்கும் அரசே இலவசமாக வழங்க முன்வர வேண்டும்.
விவசாயம் என்பது ஓரிருவர் உழைப்பால் உருவாகக்கூடியது அல்ல; எண்ணற்றவர்களின் கூட்டு உழைப்பால் உருவாவது; அவற்றை வீணடிக்கக் கூடாது. எனவே, உற்பத்தியான அனைத்து விளைபொருளையும் பாதுகாக்க வேண்டியது தமிழக அரசின் வேளாண்மைத்துறையின் கடமையும் பொறுப்பும் ஆகும். மாங்கூழ் உற்பத்தி ஆலைகளில் கூட மாம்பழங்களை போதிய விலை கொடுத்து வாங்குவதில்லை என்ற செய்திகள் வருகின்றன.

எனவே, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்பில் மாம்பழங்கள் விளைவிக்கப்பட்டு, அவற்றை மரங்களிலிருந்து பறிக்கக்கூட முடியாத சூழலில் தவிக்கும் விவசாயிகளின் மாம்பழங்கள், காய்கறிகள் உள்ளிட்ட விளைப் பொருட்கள் எதுவாயினும், அடிப்படை விலையை நிர்ணயம் செய்து அரசே அவற்றை நேரடியாகக் கொள்முதல் செய்திட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.