தொடர்மழையால் பாதிக்கப்பட்ட தமிழக விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.25,000 முதல் ரூ.50,000 நிவாரணம் வழங்குக!

அறிக்கைகள்
s2 31 Views
  • Dr-K-Krishnasamy

    தொடர்மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு டாக்டர் கிருஷ்ணசாமி கோரிக்கை

  • Provide Relief 25 T0 50 K Per Acre To Tamil Nadu Farmers Affected By Continuous Rains Says Dr Krishnasamy
  • Dr-K-Krishnasamy
  • Provide Relief 25 T0 50 K Per Acre To Tamil Nadu Farmers Affected By Continuous Rains Says Dr Krishnasamy
Published: 22 Jan 2021

தமிழக அரசுக்கு புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் – தலைவர்
டாக்டர்.க.கிருஷ்ணசாமி அவர்கள் வேண்டுகோள்!!

தமிழகத்தில் அண்மையில் பெய்த தொடர்மழையின் காரணமாக, பெரும்பாலான மாவட்டங்களில் இலட்சக்கணக்கான ஏக்கர் நிலங்களில் பயிரிடப்பட்ட உளுந்து, பாசிப்பயிறு, கம்பு, மக்காச்சோளம் உள்ளிட்ட மானாவாரித் தானியப் பயிர்களும், தக்காளி, கத்தரி, மிளகாய் போன்ற காய்கறிகள், பருத்தி நெல், வாழை உள்ளிட்ட நன்செய் நிலப் பயிர்களும் முற்றாக நிலத்திலேயே அழுகிப்போய், விவசாயிகளுக்கு மிகப்பெரிய அளவில் நட்டம் ஏற்பட்டிருக்கிறது. மானாவாரிப் பயிர்களானாலும், நன்செய் நிலப் பயிர்களானாலும் ஏக்கருக்கு குறைந்தது ரூ.15,000 முதல் ரூ.50,000 வரை செலவு செய்தே பயிரிடப்பட்டுள்ளன. அறுவடைக்குத் தயாரான நிலையில், தானியங்கள் கழனியிலேயே முளைத்துப் போய்விட்டன. ஓரிரு சதவீத தானியம் கூட வீடு வந்து சேராத நிலை. ஆடுகள், மாடுகள், கோழிகள் உள்ளிட்ட கால்நடை உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன. பல பகுதிகளில் ஏழை, எளிய மக்களின் வீடுகள் தகர்ந்து போயுள்ளன. விவசாயத் தொழிலாளர்கள் வேலைக்குச் செல்ல முடியாமல் பாதிப்படைந்துள்ளனர்.

வெள்ளநீர் முறையாக வடியாத காரணத்தினால், 4 அடி முதல் 6 அடி வரையிலும் இப்பொழுதுவரை குடியிருப்புகளைத் தண்ணீர் சூழ்ந்துள்ளதால் மக்கள் தங்கள் சொந்த வீடுகளை விட்டு வெளியேறிவிட்டனர். உதாரணத்திற்கு, தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட ஆதிபராசக்தி நகர், இராம் நகர், இரஹ்மத் நகர், அய்யாச்சாமி காலனி, முத்தம்மாள் காலனி, தனசேகர் நகர், நேதாஜி நகர், குறிஞ்சி நகர், வி.எம்.எஸ். நகர், கதிர்வேல் நகர், பி & டி காலனி, கோக்கூர், பிரேம் நகர், வள்ளிநாயகிபுரம், கால்டுவெல் காலனி ஆகிய பகுதிகள் இன்னும் வெள்ளக்காடாகவே காட்சியளிக்கின்றன. ஓட்டப்பிடாரம், கயத்தாறு, கோவில்பட்டி, எட்டையபுரம், விளாத்திக்குளம், தூத்துக்குடி, திருவைகுண்டம், ஏரல், திருச்செந்தூர், சாத்தான்குளம் ஆகிய தாலுகா பகுதிகளில் அனைத்து விவசாயிகளும் பெரும் பாதிப்புக்குள்ளாகியிருக்கின்றனர்.

அதுமட்டுமின்றி, தமிழகத்தில் திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல் ஆகிய தென்மாவட்டங்களும், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்களும், கன்னியாகுமரி, தூத்துக்குடி, இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, கடலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை திருவள்ளூர் ஆகிய கடலோர மாவட்டங்களும், அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், ஈரோடு, திருப்பூர், கோவை, நீலகிரி உள்ளிட்ட வடக்கு மற்றும் மேற்கு மாவட்டங்களும் கடும் பாதிப்புக்குள்ளாகியிருக்கின்றன.

எனவே, இந்தத் தொடர் மழையால் ஏற்பட்டப் பாதிப்புகளிலிருந்து விவசாயிகளையும், அனைத்து தரப்பட்ட ஏழை, எளிய தொழிலாளர் வர்க்கங்களையும் தமிழ்நாடு அரசு உடனடியாக மீட்டெடுக்க வேண்டும். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மாநில அரசு சார்பில் ஹெக்டேருக்கு வெறுமனே ரூ.10,000 மட்டும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. அது எந்தவிதத்திலும் போதுமானது அல்ல. பெரும்பாலான விவசாயிகள் வங்கிகளிலும் தனியாரிடத்திலும் கடன் பெற்றே நடவுப் பணிகளை மேற்கொண்டுள்ளனர். அவர்கள் அந்தக் கடனைத் திருப்பிச் செலுத்தவில்லையெனில் அடுத்தாண்டு விவசாயம் செய்ய இயலாது. எனவே, தமிழக அரசு தமிழகத்தின் விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், அனைத்து வகைத் தொழிலாளர்கள், வீடு இழந்தோர், கால்நடை இழந்தோருடைய துயர் துடைக்க கீழ்கண்ட நிவாரண உதவிகளை காலம்தாழ்த்தாது செய்திடுமாறு வலியுறுத்துகிறேன்.

1. மானாவாரிப் பயிர்களாக இருந்தால் ஏக்கருக்கு தலா ரூ.25,000, நெல், கரும்பு, வாழை உள்ளிட்ட பயிர்களாக இருந்தால் ரூ.50,000 வரையிலும் விவசாயிகளுக்கு உரிய நட்டஈடு வழங்க வேண்டும். சிறு, குறு, நடுத்தர விவசாயிகள் என்று எவ்வித பாகுபாடுமின்றி அனைத்து தரப்பு விவசாயிகளுக்கும் உரிய நட்ட ஈட்டை தாராள மனப்பான்மையோடு வழங்க வேண்டும்.

2. நிலத்தில் பயிரிடுவோர் உரிமையாளர்களாக இருந்தால் நேரடியாக அவர்களிடமும், குத்தகை அல்லது கட்டுக்குத்தகை முறையில் பயிரிடுபவராக இருந்தால் பயிரிட்டவர்களிடத்தில் மட்டுமே நட்ட ஈட்டை வழங்க வேண்டும்.

3. பயிர்க்காப்பீட்டுத் தொகைகளை முழுமையாக விவசாயிகளுக்கு அளித்திட வேண்டும்.

4. ஆடுகள், மாடுகள், கோழியினங்கள் வெள்ளத்தால் பாதிப்படைந்திருந்தாலோ, அதைத் தொடர்ந்து நோய்வாய்ப்பட்டு இறந்திருந்தாலோ விவசாயிகள் அவற்றை உடனடியாகப் புதைத்திருப்பார்கள். எனவே அவர்களிடத்தில் பிரேதப் பரிசோதனை ஆவணங்கள் எதையும் வலியுறுத்தாமல் ஆடுகளாக இருந்தால் குறைந்தது ரூ.7,500, மாடுகளாக இருந்தால் குறைந்தது ரூ.40,000 நட்ட ஈடு வழங்க வேண்டும்.

5. தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட ஆதிபராசக்தி நகர், இராம் நகர், இரஹ்மத் நகர், அய்யாச்சாமி காலனி, முத்தம்மாள் காலனி, தனசேகர் நகர், நேதாஜி நகர், குறிஞ்சி நகர், வி.எம்.எஸ். நகர், கதிர்வேல் நகர், பி & டி காலனி, கோக்கூர், பிரேம் நகர், வள்ளிநாயகிபுரம், கால்டுவெல் காலனி ஆகிய பகுதிகளில் கடந்த 10 தினங்களாகத் தேங்கிக் கிடக்கூடிய 4 முதல் 6 அடி தண்ணீரை வெளியேற்ற இன்றுவரை குறைந்த சக்தி கொண்ட 4 பம்புசெட்டுகள் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளன; இது எந்த விதத்திலும் போதாது. 2015, 2016-ஆம் ஆண்டுகளில் வெள்ளம் ஏற்பட்டபொழுது நான் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினராக இருந்த வேளையில் மதுரை உயர்நீதிமன்றம் வரைச் சென்று போராடி, 1500-க்கும் மேற்பட்ட சக்திவாய்ந்த பம்புசெட்டுகளைப் பெற்று, குடியிருப்புகளைச் சூழ்ந்து, தேங்கிக் கிடந்த நீரை வெளியேற்றினோம். தற்போதும் அதேபோன்று நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வெள்ளம் சூழ்ந்துள்ள 30,000-க்கும் மேற்பட்ட வீட்டு உரிமையாளர்கள் அவர்களின் சொந்த இல்லங்களுக்கு விரைந்து திரும்புவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

6. தூத்துக்குடி, கன்னியாகுமரி, இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, நாகப்பட்டினம், கடலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர் ஆகிய கடலோர மாவட்டங்களில் புயல் காரணமாக கடலுக்குச் செல்ல முடியாத மீனவக் குடும்பங்களுக்கு தலா ரூ.15,000 நிவாரணமும், படகுகள் பழுதுபட்டிருந்தால் பாதிப்பிற்கேற்ப நட்ட ஈடும் வழங்க வேண்டும்.

7. இடிந்த வீடுகளுக்கு நட்ட ஈடாக ரூ.25,000 வழங்கவும், மாற்றாக அவர்களுக்குக் கான்கிரீட் வீடுகள் உடனே கட்டித் தரவும் வேண்டும்.

8. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்துக் குடியிருப்புப் பகுதிகளிலும் மருத்துவ முகாம்களை உடனடியாக நடத்தி, எந்தவிதமான தொற்று நோய்களும் பரவாமல் தடுத்திடவேண்டும். அதேபோன்று ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடைகளுக்கும் தடுப்பூசிகள் போடப்பட வேண்டும்.

9. தொடர் மழையால் வேலையிழந்து தவிக்கும், திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை ஆகிய டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.15,000 நிவாரணம் வழங்க வேண்டும்.

10. இராஜபாளையம், திருவில்லிப்புத்தூர், சங்கரன்கோவில், நாங்குநேரி, திருச்செந்தூர், ஓட்டப்பிடாரம், தூத்துக்குடி போன்ற பகுதிகளில் தொடர் மழையால் பாதிக்கப்பட்டுள்ள நெசவுத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.15,000 நிவாரணம் வழங்க வேண்டும்.

11. சிவகாசி, சாத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வாழும் பட்டாசுத் தொழிலாளர்கள், தமிழகம் முழுவதும் வாழும் மண்பாண்டம் செய்வோர், செங்கல்சூளை தொழிலாளர்கள், கட்டிடத் தொழிலாளர்கள், நடைபாதை வியாபாரிகள், சுயதொழில் முனைவோர், ஆட்டோ/வேன்/டாக்சி/கனரக வாகன ஓட்டுனர்கள், ஆலைத் தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பட்ட தொழிலாளர்களையும் கண்டறிந்து ஒவ்வொரு குடும்பங்களுக்கும் தலா ரூ.15,000 நிவாரணம் வழங்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்.

12. பருவமழை மற்றும் வெள்ளத்தால் ஏற்படக்கூடிய இந்த பாதிப்புகளுக்கு நிரந்தரமாகத் தீர்வு காணும் பொருட்டு, குளம், ஏரி, குட்டை, ஆறு, ஓடை ஆகிய அனைத்துவித நீர்நிலைகளிலும் இருக்கக்கூடிய ஆக்கிரமிப்புகளை பாரபட்சமின்றி அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்.

இப்படிக்கு,
டாக்டர். க.கிருஷ்ணசாமி,
22/01/2021