சட்டங்களை உடைக்கலாம்! சாசனத்தை உடைக்க முற்படக் கூடாது!!

பாதிப்புண்டாகும் பிரச்சினைகளை தீர்க்க எவரும் போராடலாம். ஆனால், பிரச்சினைகளை உருவாக்கும் நோக்கம் இருக்கக்கூடாது.

அறிக்கைகள்
s2 508 Views
  • Delhi

    சட்டங்களை உடைக்கலாம்! சாசனத்தை உடைக்க முற்படக் கூடாது!!

  • Delhi
Published: 27 Jan 2021

Loading

ஆயிரம் ஆண்டுகாலம் அடிமைப்பட்டுக் கிடந்த தேசம் பல்லாயிரக்கணக்கானோரின் உயிர் தியாகத்தாலும், அளவிடற்கரிய அர்ப்பணிப்புக்களாலும் விடுதலை பெற்று பாரத தேசம் – இந்திய தேசம் என்ற நமது பூர்வீக அடையாளத்தோடு எழுந்து நிற்கிறோம். 1947, ஆகஸ்ட் 15-ஆம் தேதி சுதந்திரம் பெற்றாலும், நமக்கான அரசியல் சாசனம் என்று உருவானதோ, அன்றுதான் நாம் பரிபூரண இந்திய குடிமக்களானோம். அந்த நாள்தான் ஜனவரி – 26.

இந்திய தேசம் வெறும் வானுயர்ந்த கட்டிடங்களாலும், ஆயிரக்கணக்கான மைல்கள் தூரமுள்ள சாலைகளாலும் அடையாளப்படுத்தப்படுவதில்லை. இந்த மண்ணில் வாழும் 130 கோடி மக்களுடைய ஆன்மாவால் அடையாளப்படுத்தப்படுவதே இந்த தேசமாகும். அரசுகள் வரும் போகும். ஒவ்வொரு அரசும் புதிய புதிய சட்டங்களைக் கொண்டு வரலாம். சில சட்டங்கள் நிலைத்து நிற்கும்; சில சட்டங்கள் காலத்தால் காணாமல் போகும்; சில சட்டங்கள் ஏற்றுக்கொள்ளப்படும்; சில சட்டங்கள் நிராகரிக்கப்படும்; சில சட்டங்கள் பலருக்கு மகிழ்ச்சியூட்டும்; சிலருக்கு வெறுப்பூட்டும். மூன்று சட்டங்களே சாசனம் ஆகிவிடாது. சாசனத்திற்குள் சட்டங்கள் அடங்கும்; சட்டத்திற்குள் சாசனம் அடங்காது; சட்டங்கள் பிடிக்கவில்லையெனில் தூக்கி எறியலாம்; உடைத்தெரியலாம். மாற்றலாம். ஆனால், சாசனத்தைத் தூக்கி எறியவோ, உடைத்தெரியவோ கூடாது.

ஆனால், இன்று டெல்லியில் நடந்தது, சாசனத்தின் மீதான தாக்குதல். ஆம்! இந்திய அரசியல் சாசனத்தின் மீதான தாக்குதல். மூவர்ணக்கொடி என்பது முண்டாசுப் பனியன் அல்ல, அதை நினைத்த போது தூக்கி எறிந்துவிட்டு இன்னொன்றை போட்டுக் கொள்வதற்கு. இந்திய தேசத்தில் பலதரப்பட்ட மக்களும் இருக்கின்றனர். விவசாயிகள் உண்டு; அவர்களுக்கு வேதனைகளும் உண்டு; விவசாய தொழிலாளர்கள் உண்டு; அவர்களின் வேதனைகளை சொல்லிமாளாது; பனியிலும், வெயிலிலும், மழையிலும் இந்திய தேசத்தையும், இந்திய சாசனத்தையும், இன்று டெல்லி போராட்டக்காரர்களால் இறக்கப்பட்ட கொடியையும் பாதுகாக்கும் பொருட்டு, பல்லாயிரம் அடிகளுக்கு மேல் பனிச் சிகரங்களின் முகடுகளைப் பாதுகாக்கும் இலட்சோபலட்சம் வீரர்களும் உண்டு; எல்லா சட்டங்களும் எல்லோருக்கும் எல்லா காலக்கட்டங்களிலும் பலனளித்து விடுமா என்ன? அப்படி ஒரு சட்டத்தை உலகத்தில் எந்த நாட்டில், எப்பொழுது கொண்டு வந்திருக்கிறார்கள்?

நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட மூன்று வேளாண் சட்டங்களும் 18 மாதங்களுக்கு அமல்படுத்தப்படாது என்று, அதைக் கொண்டுவந்த அரசே அறிவித்துவிட்டது. வேளாண்மையை முதன்மையாகவும், முதுகெலும்பாகவும் கொண்டிருக்கின்ற இந்திய தேசத்தில், அந்த முதுகெலும்பை உடைக்கின்ற வகையில் எந்த ஆட்சியாளர்களும் ஈடுபடமாட்டார்கள். மூன்று நபர்களுக்காக 130 கோடி மக்களுக்கு பாதகம் செய்ய எந்த அரசும் துணியாது. விவசாயம் என்பது பிரிட்ஜ், ஏசி, கார் போன்ற மேல்தட்டு வர்க்கங்கள் பயன்படுத்தக் கூடியது அல்ல; அவற்றின் விலைகள் ஏறினால் அதை எவரும் பெரிதுபடுத்தமாட்டார்கள்.

ஆனால் பாலும், காய்கறிகளும், தானியங்களும் தினமும் கோடானகோடி பேர் பயன்படுத்தக்கூடிய இன்றியமையாத உணவுப் பொருட்கள். இதில் சிறு, குறு விவசாயிகள் முதல் பெரு விவசாயிகள் வரை ஈடுபடுகிறார்கள். ஒருவேளை மத்திய அரசின் சட்டங்கள் ஏழை, எளிய விவசாயிகளின் கழுத்தை நெரிப்பதாக இருந்தால், நிச்சயமாக இந்திய சமுதாயம் அதை ஏற்றுக்கொள்ளாது. உண்மையிலேயே அந்தச் சட்டத்தில் பாதிப்பு இருக்குமேயானால், இந்த 18 மாதகால அவகாசத்தைப் பயன்படுத்தி அதனுடைய பாதகங்களை நாடெங்கும் எடுத்துரைக்கலாம்.

அதை விட்டுவிட்டு தலைநகருக்கு அருகாமையில் இருக்கின்றோம்; தங்களால் ஆறுமாத காலம் அல்ல, ஒரு வருடம் ஆனாலும் தாக்குப்பிடிக்க முடியும் என்றெண்ணி, 130 கோடி மக்களின் தன்மான உணர்வை பிரதிபலிக்கும் குடியரசு தினத்தன்று, டெல்லி செங்கோட்டையில், இந்திய தேசத்தின் கொடியை இறக்கி விட்டு, இன்னொன்றை ஏற்றும் செயலை, மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட 3 வேளாண் சட்டங்களை மாற்றியமைப்பதற்கான போராட்டமாக கருதமுடியாது. இதை இந்திய அரசியல் சாசனத்தின் மீது – இந்திய இறையாண்மையின் மீது – இந்திய தேசத்தின் மீது – 130 கோடி இந்திய மக்களின் ஆன்மாவின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதலாகவே கருத முடியும்.

பாதிப்புண்டாகும் பிரச்சினைகளை தீர்க்க எவரும் போராடலாம். ஆனால், பிரச்சினைகளை உருவாக்கும் நோக்கம் இருக்கக்கூடாது.

இப்படிக்கு,
டாக்டர்.க.கிருஷ்ணசாமி,
26/01/2021

 

[ Photo Credits to: Twitter ]