விஜய் அவர்களின் அரசை, ‘பலகீனமான அரசு’ என்று உலகிற்கு காட்ட பலர் தப்புக் கணக்குப் போட்டு காத்து கொண்டிருக்கிறார்கள்! தமிழக முதல்வர் விஜய் அவர்கள் அதற்கு எவ்விதத்திலும் வாய்ப்பளித்து விடக் கூடாது!
5 Views

![]()
ஒற்றைக் கட்சி ஆட்சி முறைக்கு முடிவுகட்டி,
60 வருடங்களுக்கு பிறகு நடந்துள்ள அரசியல் மாற்றம்!
ஆட்சி அமைந்த 6 நாளில் 60 அழுத்தங்கள்!
……………………………………………………………………….
தமிழக வெற்றி கழகம் 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட 234 தொகுதிகளில் 108 இடங்களில் வெற்றி பெற்று, தமிழக அரசியல் வரலாற்றில் மிகப்பெரும் சாதனையை நிகழ்த்தியுள்ளது. சட்டமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பிலும் சில கட்சிகளின் துணையோடு வெற்றி பெற்று, தமிழக முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் வீறுநடை போடுகிறார்!
அவரது வெற்றியின் மூலம் பல அரசியல் மாற்றங்கள் நடைபெற்று இருக்கின்றன. 1967ஆம் ஆண்டிற்குப் பிறகு, கடந்த 59 வருடங்களாக நிலவி வந்த ‘திமுக அல்லது அதிமுக’ என்ற இருமுனை அரசியல் களம், இந்த முறை மூன்றாவது சக்திக்கு இடம் அளித்துள்ளது.
அண்டை மாநிலங்களான கேரளம், கர்நாடகம், ஆந்திரா, தெலுங்கானா மற்றும் பல வட மாநிலங்களிலும், இந்தியாவை ஆளுகின்ற மத்திய அரசில் கூட தொடர்ந்து பல வருடங்களாக கூட்டணி ஆட்சி முறை இருந்து வரினும், தமிழகத்தில் மட்டும் ஒற்றைக்கட்சி ஆட்சி முறை என்பதே எழுதப்படாத விதியாக இருந்து வந்தது”. “ஆட்சியில் பங்கு என்பது சாத்தியமே இல்லாத விஷயம்; கூட்டணி ஆட்சியைத் தமிழக மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்” என்று, கீறல் விழுந்த ரெக்கார்டு பிளேயர் போல திராவிடக் கட்சிகள் கூட்டணி குறித்துக் குரல் எழுந்த போதெல்லாம் ஒருமித்த குரலில் மறுப்புத் தெரிவித்தார்கள்.
வரலாறுகளை மக்களே மாற்றி அமைக்கும் தகுதி வாய்ந்தவர்கள் என்பதற்கு இணங்க, ஏறக்குறைய 60 ஆண்டுகாலம் நீடித்து வந்த ஒற்றைக்கட்சி ஆட்சி முறைக்கு முடிவுரை எழுதப்பட்டுவிட்டது. இனிவரும் காலங்களிலும் “கூட்டணி ஆட்சி” என்பதே நிதர்சனம் என்பதும் நிலை நாட்டப்பட்டுள்ளது.
தேர்தலுக்கு முந்தைய நாள் வரையிலும் கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பு இல்லை என்று கூறிவந்த எதிரும் புதிருமாய் இருந்த இரு திராவிடக் கட்சிகளும், தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள திரைமறைவில் கூட்டணி ஆட்சிக்கு மேற்கொண்ட முயற்சிகள் அம்பலமாகியுள்ளன; அதிலும், ஒரு கட்சியின் பொதுச் செயலாளர் கூட்டணி பேச்சு வார்த்தையின்போது கூட்டணி ஆட்சி அமைக்கும் சூழல் உருவாகுமேயானால், எதிர் கட்சியாக கூட அமர்ந்து கொள்வோம்; ஆட்சியில் பங்கு இல்லை என்று நம்மிடம் கூறியவர் தான்.!
நாம் கடந்த இரண்டு வருடங்களாக ஊடகங்களின் வாயிலாக ஆட்சி அதிகாரத்தில் பங்கு குறித்து தொடர்ந்து பேசி வருகிறோம். “ஆட்சிக்கு வர முடியவில்லை” என்று தற்போது ஆதங்கப்படும் தலைவர்கள், மாறிவரும் அரசியல் சூழல்களை கணக்கில்கொண்டு, ஜனநாயக ரீதியாக ஆட்சியில் பங்களிக்க தேர்தலுக்கு முன்பே வெளிப்படையாக அறிவித்து செயல்பட்டிருந்தால், மெகா கூட்டணியும் அமையப் பெற்றிருக்கும்; ஆட்சியில் பங்கு என்ற உணர்வுடன் அக்கட்சிகளின் தொண்டர்கள் கூட்டணி வெற்றிக்கு அரும்பாடு பட்டிருப்பார்கள்; தேர்தல் தீர்ப்புகளும் வேறு விதமாக இருந்திருக்கும்.
விஜய் அவர்களும் தனது முதல் மாநாட்டில் ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்களிக்க விடுத்த அறைகூவலின்படி, தேர்தலுக்கு முன்பே கூட்டணியை வலுப்படுத்தி இருந்தால், அறுதிப் பெரும்பான்மையான 118 இடங்கள் கிடைக்காமல், எதிர் முகாம்களில் வெற்றி பெற்றவர்களின் ஆதரவை நாட வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது.
தமிழகத்தில், கடந்த 59 வருடங்களாக நடைபெற்று வந்த திராவிடக் கட்சிகள் மீதான சலிப்பும்; சாதி ஒழிப்பும், சமூக நீதியும் வெற்றுக் கோஷங்களாகிப் போனதும், ஆட்சியில் நிலவிய மிதமிஞ்சிய ஊழலும்; மதுப் போதைகளால் ஏற்பட்ட சமூகச் சீரழிவும்; குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளும்; ஒன்றிய-மாவட்ட அளவில் உருவான புதிய புதிய ‘ஜமீன்களும் பாளையக்காரர்களும்’ என்ற பண்ணையார்த்தனங்களுடன் அவர்களின் பிரதானக் கொள்கைகளிலிருந்து பின்னோக்கிச் சென்றதும், மக்கள் மத்தியில் ஏற்பட்ட கோபங்களின் வெளிப்பாடுகளுமே 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகளாகும்.
முதலமைச்சர் விஜய் அவர்களிடம் தமிழக மக்கள் நேர்மையான, தூய்மையான, வெளிப்படையான, ஊழலற்ற ஆட்சி நிர்வாகத்தை (Best Governance) மட்டுமே மக்கள் எதிர்பார்க்கிறார்கள். எனவே, அனைத்து தரப்பு தமிழக மக்களின் எதிர்பார்ப்பு எவ்விதத்திலும் வீண்போய்விடக் கூடாது என்பதே அனைவரது விருப்பமுமாகும்.
யாரை வீழ்த்த வேண்டும் என்று தேர்தல் பரப்புரையில் குறிப்பிட்டாரோ, அவர்களது முகாமிலிருந்தே ஆதரவைப் பெற வேண்டிய நிலைக்கு விஜய் தள்ளப்பட்டுள்ளார். முதல் மூன்று தினங்களில் மிகவும் இக்கட்டான சூழலில் அவர்கள் எப்படியெல்லாம் நடந்து கொண்டார்கள் என தமிழக மக்கள் அனைவரும் அறிவர்.
வேறு ஒரு அரசியல் முகாமிலிருந்து ஆதரவுக்கரம் நீட்டப்பட்டிருக்கிறது. அது ஆட்சியை தற்காலிகமாக நிலைத்து நிற்க (stability) பயன்படலாம்; ஆனால் தூய்மையான ஆட்சி என்ற அடையாளத்தை உருவாக்க அது பயன்படுமா? நிரந்தர நிலையான ஆட்சிக்கு வழிவகுக்குமா? என்பது மிகப்பெரிய கேள்விக்குறி. ஆட்சியில் உடனடியாக பங்களிப்பது, ஆட்சியின் மீதான நம்பகத்தன்மையைச் trustworthiness சீர்குலைக்கக் கூடும்.
ஆட்சிப் பொறுப்பேற்று இன்னும் ஒரு வாரம்கூட ஆகவில்லை; அதற்குள் எவ்வளவு அழுத்தங்கள்! வந்தே மாதரத்தில் துவங்கி, ரதன் பண்டிட் நியமனம் மற்றும் மகளிர் உரிமைத்தொகை, 717 மதுக்கடைகளை மூடியது உள்ளிட்ட அனைத்து முக்கிய முடிவுகளும் கடும் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளன.
ஆளுநர் நடத்திய விழாவில் பாடப்பட்ட வந்தே மாதரத்திற்கும், பதவியேற்காத அரசிற்கும் எவ்விதச் சம்பந்தமும் இல்லை; எனினும், அதற்கும் விஜய் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். ரதன் பண்டிட் என்பவரைத் தனது அரசியல் உதவியாளராக நியமித்தது கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. ஆட்சி அமைந்த அடுத்த நாளே மகளிர் உரிமைத்தொகை விடுவிக்கப்பட வேண்டும் என அழுத்தம் கொடுக்கப்பட்டது.
நம்பிக்கை வாக்கெடுப்பில் பேசிய பலரும் மரபுகளில் இருந்து வெகுதூரம் விலகிச் சென்று, தாங்கள் விரும்பியதையெல்லாம் பதிவு செய்தார்கள். சில கட்சிகள் வெளியில் இருந்து கொடுக்கும் ஆதரவிற்கு, அளவிற்கு மீறி அரசியல் ஆதாயம் தேட நினைக்கிறார்கள்; தங்களின் அனைத்துத் திட்டங்களையும் இந்த அரசை வைத்து நிறைவேற்றத் துடிக்கிறார்கள்.
ஊசலாட்டம் கொண்டவர்கள், ஊழல் கரை படிந்தவர்களின் ஆதரவு முன்னே இனிக்கும்; பின்னே கசக்கும். தமிழக முதல்வர் விஜய் அவர்களின் அரசை “பலகீனமான அரசு” என்று பலர் தப்புக் கணக்குப் போடுகிறார்கள்; “பலகீனமான அரசு” என உலகிற்கு காட்டவும் காத்தும் கொண்டிருக்கிறார்கள்; அதற்கு தமிழக முதல்வர் விஜய் அவர்கள் எவ்விதத்திலும் வாய்ப்பளித்து விடக் கூடாது என்பதே தமிழக மக்களின் எதிர்ப்பார்ப்பாகும்.
டாக்டர் க. கிருஷ்ணசாமி MD, Ex.MLA,
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
16.05.2026







