பெரும் பொங்கலும், பசு வணக்கமும் பொங்கல் திருநாளின் பிரிக்க முடியாத அங்கங்கள்!

தமிழர் பண்பாடு-இயற்கை வழிபாடு!
இயற்கை வழிபாடு இந்து வழிபாட்டின் ஓர் அங்கமே!!

பொங்கல் திருநாளில் சாதி, மத, இன, பண்பாட்டுச் சிதறல்களைப் போக்குவோம்!
உழவர்-தமிழர்-இந்து-இந்தியர் ஒற்றுமையை போற்றுவோம்!!

அறிக்கைகள்
s2 404 Views
  • Dr K Krishnasamy

    டாக்டர் கிருஷ்ணசாமி

  • Dr K Krishnasamy
  • Dr K Krishnasamy
  • Dr K Krishnasamy
Published: 14 Jan 2021

Loading

உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கும், உழவர்களுக்கும், மருத நில மக்களாம் தேவேந்திரகுல வேளாளர் சொந்தங்களுக்கும், புதிய தமிழகம் கட்சியினருக்கும் எனது நெஞ்சம் கனிந்த பொங்கல் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

அறுவடைத் திருநாள் – உழவர் திருநாள் – தைத்திருநாள் எனும் பொங்கல் பண்டிகை ஆண்டு தோறும் ஜனவரி 13 அல்லது 14 ஆம் தேதி, அதாவது தை மாதம் 1 ஆம் தேதி முதல் தமிழகத்தில் நான்கு தினங்கள் வெகுவிமரிசையாக கொண்டாடப்படும் மிகப் பெரிய இந்து விழா ஆகும். மார்கழி கடைசி நாள் போகிப் பண்டிகை எனவும், தை 1 ஆம் தேதி பெரும் பொங்கல் அல்லது சூரியப் பொங்கல் எனவும், தை இரண்டாவது நாள் பட்டிப் பொங்கல் அல்லது மாட்டுப் பொங்கல் எனவும், மூன்றாவது நாள் காணும் பொங்கல் எனவும் உலகெங்கும் வாழும் தமிழர்களால் கொண்டாடப்படுகிறது. குடும்பத்தார், உற்றார் உறவினர்கள், ஊர் மக்கள் ஆண்டுக்கு ஒருமுறையாவது குடும்பத்தோடும், ஊரோடும் ஒன்று சேர்ந்து ஒற்றுமையாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்க வேண்டும் என்ற அடிப்படையிலேயே திருவிழாக்கள் கொண்டாடப்படுகின்றன. அதுமட்டுமின்றி நாம் வாழும் பூமிக்கும், இயற்கைக்கும், நம்முடைய வாழ்க்கைக்கு உற்ற துணையாக விளங்குகின்ற கால்நடைகளுக்கும், உணவை உற்பத்திச் செய்யக்கூடிய உழவர்களுக்கும் நன்றி செலுத்துவது இதன் அடிப்படை அம்சமாகும். தொல்காப்பியத்தில் மருதநில மக்களாக அடையாளப்படுத்தப்பட்ட உழவர்குடி மக்கள்-தேவேந்திரகுல வேளாளர்கள் ஆயிரமாண்டு கால அந்நியப் படையெடுப்புகளால் அழிக்கப்பட்ட அடையாளங்களையும், பறிக்கப்பட்ட நிலங்களையும் மீட்டெடுப்பதற்காகப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். அடையாள மீட்பு மற்றும் பட்டியல் வெளியேற்றம்-மண்ணுரிமை போராட்டங்கள் மகத்தான வெற்றி பெற இந்நன்னாளில் சபதம் ஏற்போம்

ஒவ்வொரு விழாக்களின் பெயரிலேயே அதன் அம்சங்களும் வெளிப்படும். தீபாவளி என்றால் தீப ஒளித் திருநாள் என்று சொல்கிறோம். பொங்கல் திருநாள் என்றால் பெரியப் பொங்கல்-சூரியப் பொங்கல், பட்டிப் பொங்கல் அல்லது மாட்டுப் பொங்கல் ஆகிய பெயர்களே அவற்றின் நோக்கத்தை உணர்த்துகின்றன. அறுவடை திருநாள் நாம் மட்டுமே கொண்டாடப்படக்கூடிய விழா அல்ல. அண்டை மாநிலமான ஆந்திரம், கர்நாடகம், பாண்டிச்சேரி மற்றும் இலங்கை நாடுகளிலும், வடக்கு மற்றும் மேற்கு மாநிலங்களிலும் ’சங்கராந்தி’ என்ற பெயரில் அனுசரிக்கப்படுகிறது. தைத்திருநாளை தமிழ் காலண்டர்களின் துவக்கம் என்று கூட சிலரால் முயற்சி எடுக்கப்பட்டது. எப்பொழுதுமே அதுபோன்ற ஒன்றை உறுதிப்படுத்த முயலுகின்ற பொழுது, உலகம் ஏற்றுக்கொள்கிற அளவில் விஞ்ஞானத்தையும் அதில் சேர்த்துக்கொள்ள வேண்டும். தமிழகத்தில் பொங்கல் திருநாள் பெருமளவில் கொண்டாடப்படுகின்ற காரணத்தினால் அதைத் தமிழர் திருநாள் என பெருமைப்படுத்திக்கொள்கிறோம்.

இயற்கையின் ஒத்துழைப்பு இல்லாமல் வேளாண்மையை செய்ய இயலுமா? உரிய நேரத்தில் பூமி உலரவும் வேண்டும்; குளிரவும் வேண்டும். மண்ணும் மழையும், சூரிய ஒளியும், காற்றும் இல்லாமல் விவசாயம் நடைபெறாது. ஆடி-புரட்டாசி மாதங்களில் விதைக்கப்பட்ட பயிர்கள் விளைந்து அறுவடைக்கு தயாராகும் மாதம் தை. எனவே தன்னுடைய பூமியில் விளைந்த புதுநெல்லிலே இருந்து அரிசியை எடுத்து, புதுப் பானையிலே பொங்கல் வைத்து, இயற்கையை-சூரியனை வணங்கி சூரியப் படையலிட்டபின், தான் உண்கிறான் ’உழவன்’. இதுதான் உழவனின் மகிமை.

நிலத்தை உழுது பண்படுத்துவதற்கும், தொழுவடிப்பதற்கும், கழனியிலே விளைந்த நெல் மணிகளைப் பிரிக்கவும், வீட்டிற்குக் கொண்டு செல்லவும் கால்நடைகளே இன்று வரையிலும் பெரும் பங்காற்றுகின்றன. கால்நடைகள் வளர்த்தலும் வேளாண்மையின் மிகப்பெரிய அங்கமே. கால்நடைகளின் சாணங்கள் கூட நிலங்களுக்கு உரங்கள் ஆகின்றன. உழவர்களின் வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்த ஆடு, மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளுக்கு மரியாதைச் செலுத்தக்கூடிய வகையில் தை 2 ம் தேதி அவற்றிற்கு ஓய்வு கொடுத்து, குளிப்பாட்டி, கொம்புகளுக்கு வண்ணம் பூசி, அன்று மாலையில் கால்நடைகளை அடைத்து வைக்கும் பட்டிகள் அருகே சிறிய அளவிலான தெப்பங்களை உருவாக்கி கரும்புகளை நட்டு கிழக்கு நோக்கிப் பொங்கல் வைத்து, அந்த ஆட்டுப் பட்டியையும், தெப்பக்குளத்தையும் ’ஆசனம் பட்டியார் ஆசனம், வாய்கழுவு பட்டியார் வாய்கழுவு’ என்று கிராமிய பாடல்களைப் பாடிக்கொண்டு அதைச் சுற்றி வந்து, தாங்கள் படைத்த பொங்கலை அந்த கால்நடைகளுக்கு ஊட்டி மகிழ்வதே பட்டிப் பொங்கல் அல்லது மாட்டுப் பொங்கல் ஆகும்.

காலம் காலமாகச் சேற்றிலே உழன்று அனைவருக்கும் சோறு அளிக்கின்ற உழவர் குடி மக்கள் இம்மண்ணில் உண்மையிலே மதிக்கப்படுகிறார்களோ இல்லையோ? வணங்கப்படுகிறார்களோ இல்லையோ? ஆனால், உழவர்கள் தனக்கு உற்ற துணையாக விளங்கும் கால்நடைகளுக்கும், இயற்கைக்கும் மறவாமல் நன்றி செலுத்துகிறார்கள். தாய்ப்பால் இல்லாத நிலையிலும் அதற்கு நிகராக கிடைக்கும் பசும்பாலே கோடான கோடி குழந்தைகளுக்கு உணவாகிறது. தாய்க்கு நிகராக தன்னுடைய மடிக்காம்புகளிலே இருந்து பால் தருகிற பசுக்களுக்கும், மனிதக் குலத்தின் மிகமிக அத்தியாவசியமான முக்கியமான வாழ்வாதாரமாக விளங்கக் கூடிய ஆடு,மாடுகளுக்கும் நன்றி சொல்வதும், அவை வாழும் இடங்களில் பட்டிப் பொங்கல் வைப்பதிலும் சிலருக்கு மத வாடை வீசுகிறதாம்.

சூரிய பொங்கலையும், பட்டிப் பொங்கலையும் எப்படி பொங்கல் திருநாளிலிருந்து பிரித்துப் பார்க்க முடியும்? அவைகள் உழவர்கள்-தமிழர்கள்-இந்துக்கள்-இந்திய திருநாட்டின் கலாச்சார பண்பாட்டின் வழிபாட்டு அம்சங்களாகும். பொங்கல் வைப்பதையும், பசுக்களுக்கு வணக்கம் செலுத்துவதையும் நீக்கிய பிறகு எங்கே பொங்கல் திருநாள் இருக்கும்? பொங்கல் இல்லாத விழா எப்படி பொங்கல் விழாவாக இருக்க முடியும்? நமது இருப்பை உறுதி செய்யும் இயற்கைக்கும், விலங்கினங்களுக்கும் நன்றி சொல்லும் பொங்கல் திருநாளுக்கும் மதச்சாயம் பூசுவது. அவர்களது சிந்தனைப் பிழையே தவிர, விழாவின் நோக்கத்தில் பிழை இல்லை. பாலிலிருந்து எப்படி வெண்மையைப் பிரிக்க முடியாதோ; நிலவிலிருந்து எப்படி குளுமையைப் பிரிக்க முடியாதோ, அதுபோல தைத்திருநாள்-அறுவடைத்திருநாள்-பொங்கல் திருநாளிலிருந்து சூரியனுக்கு பொங்கலிட்டு வணங்குவதையும், கால்நடை, பசு வணக்கத்தையும் பிரிக்க முடியாது. மதச்சார்பின்மை என்ற பெயரிலும், பகுத்தறிவும் என்ற பெயரிலும் தமிழர்களின், உழவர்களின் பண்பாடுகள் மற்றும் காலச்சாரங்கள் மீது போர் தொடுக்க நினைத்தாலோ அல்லது வேறு மதங்களைப் புகுத்த நினைத்தாலோ விளைவுகள் விபரீதமாகும்.

இயற்கையைக் கட்டிக் காப்போம்! இயற்கையைப் பாதுகாப்போம்!!

இயற்கையை வணங்குவோம்.!!!

தமிழர் பண்பாடு-இயற்கை வழிபாடு!

இயற்கை வழிபாடு இந்து வழிபாட்டின் ஓர் அங்கமே!!

இப்பொங்கல் திருநாளில்,
சாதி, மத, இன, பண்பாட்டு சிதறல்களை போக்கவும்;
உழவர்-தமிழர்-இந்து-இந்தியர் ஒற்றுமையை போற்றவும் தமிழர்கள் அனைவரும் உறுதி ஏற்போம்!!

டாக்டர் க.கிருஷ்ணசாமிMD,
நிறுவனர் &தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
14.01.2021