மாஞ்சோலை குத்தகை ரத்தானவுடன், அதை உருவாக்கியவர்களுக்கே உடைமையாக்குங்கள்! அவர்களின் பிள்ளைகளும் – பேரப்பிள்ளைகளும் தலைமுறை தலைமுறையாக தளைக்கட்டும்.!

அறிக்கைகள்
s2 547 Views
  • 3
  • 3
Published: 02 Sep 2023

Loading

மாஞ்சோலை குத்தகை ரத்தானவுடன்,
அதை உருவாக்கியவர்களுக்கே உடைமையாக்குங்கள்!
அவர்களின் பிள்ளைகளும் – பேரப்பிள்ளைகளும் தலைமுறை தலைமுறையாக தளைக்கட்டும்.!

புதிய தமிழகம் கட்சியின் போராட்ட வரலாறுகளுடன் பின்னி பிணைந்தது மாஞ்சோலை. கடந்த 25 வருடத்தில் மாஞ்சோலை போராட்டத்திற்கு ஈடு இணையான நிகழ்வுகள் எதுவும் இல்லை. 1998 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20 ஆம் தேதி முதல்முறையாக மாஞ்சோலை சென்ற பொழுது தோட்ட தொழிலாளர்களின் தினச்சம்பளம் ரூபாய் 35 முதல் ரூபாய் 52 வரை மட்டுமே இருந்தது. கடந்த 27 ஆம் தேதி புதிய தமிழகம் கட்சியின் நிர்வாகிகளோடு மாஞ்சோலை சென்றிருந்தோம். இதற்கிடையே பல போராட்டங்கள் உயிரிழப்புக்கள், சிறைச்சாலைகள், பொருள் இழப்புக்கள், புகழ் இழப்புக்கள், அரசியல் பின்னடைவுகள் என என்னன்னவோ நடந்தேறி விட்டன.

திருநெல்வேலியில் இருந்து 80 கிலோமீட்டர் தொலைவில் மணிமுத்தாறு அணையில் இருந்து மாஞ்சோலை எஸ்டேட் 45 நிமிடத்தில் செல்லும் தூரம் தான். எத்தனையோ முறை முன்பெல்லாம் சென்ற பொழுது கண்மூடி கண் திறப்பதற்குள் மணிமுத்தாறிலிருந்து மாஞ்சோலையை அடைந்து விடுவோம். ஆனால் இந்த முறை 22½ கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள மாஞ்சோலையை அடைய 2:30 மணி நேரம் ஆகிவிட்டது. மாஞ்சோலை முதல் கடைசி எஸ்டேட்டான குதிரைவெட்டி வரை 45 கிலோமீட்டர் தூரமும் சாலை குண்டும் குழியுமாக சீரழிந்து கிடந்தது. தளப் பகுதியில் இருந்து மாஞ்சோலை அல்லது ஊத்து எஸ்டேட் பகுதிகளுக்கு செல்வதற்குள் இரண்டு மூன்று பேருந்துகளையாவது எதிரே பார்த்து விடுவோம். ஆனால் இந்த முறை மூன்று மணி நேரம் கழித்துதான் ஒரு பேருந்து கண்ணுக்கு தென்பட்டது. 5000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இருந்த பகுதியில் தற்போது வெறும் 800 தொழிலாளர்களே இருக்கிறார்கள் என்று கூறுகிறார்கள்.

150 வருடங்களுக்கு முன்னர் எந்தவிதமான போக்குவரத்து வசதியும் இல்லாத காலத்தில் கால்நடையாக சென்று பத்துக்கும் மேற்பட்ட மலை அடுக்குகளுக்கு அப்பால் கொடிய விலங்குகளின் தாக்குதலுக்கு இரையாகியும், பல்லாயிரக்கணக்கானவர்களுடைய உழைப்பாலும் தியாகத்தாலும் உருவானதே ’மாஞ்சோலை தேயிலை தோட்டங்கள்’ ஆகும்.

மாஞ்சோலை ஒரு பொது பெயராக இருந்தாலும் 100 கிலோமீட்டர் சுற்றளவில் மாஞ்சோலை, காக்காச்சி, நாலு முக்கு, ஊத்து, குதிரை வெட்டி என ஐந்து டிவிஷன்களையும் உள்ளடக்கியதாகும். கடந்த காலங்களில் ஓரிரு சந்தர்ப்பங்களை தவிர, பெரும்பாலும் வேலை நாட்களிலேயே மாஞ்சோலை சென்றிருக்கிறேன். சிவப்பு பச்சை வர்ண கொடியை கண்டவுடன், எவ்வளவு தூரத்தில் தேயிலை பறித்துக் கொண்டிருந்தாலும்; கங்காணிகளும் சூப்பர் வைசர்களும் என்ன தான் மிரட்டினாலும், தடுத்தாலும்; அதையெல்லாம் பொருட்படுத்தாமல், மலையின் உச்சியில் இருந்தாலும்; காரை நிறுத்தச் சொல்லி நம்மை சந்திக்க சாலைக்கு வந்து விடுவார்கள். விடுமுறை தினம் என்பதால் அதுபோன்ற அன்பு பரிமாற்றக் காட்சிகளை அன்று காண முடியாமல் போய்விட்டது.

மாஞ்சோலை போராட்டங்களில் எண்ணற்ற தாய்மார்களும் சகோதரர்களும் முழுமையாக தங்களை அர்ப்பணித்து இருக்கிறார்கள். எனினும் மிக மிக முக்கியமான காலகட்டத்தில் போராட்டம் துளியளவும் பிசகாமல் செல்வதற்கு துணை நின்ற திருமதி அன்பு, தேவராஜ் உள்ளிட்ட பல போராளிகள் அங்கும் இல்லை; இம்மண்ணிலும் இல்லை. மூன்றாண்டு கால தொடர் போராட்டத்தில் முன்னணி மேலும் வகித்த பலர் வயது மூப்பின் காரணமாக மரணமெய்தி விட்டார்கள்; சிலர் அப்பணியே வேண்டாம் என உதறி எறிந்து விட்டு தங்களுடைய சொந்த கிராமங்களுக்கு சென்று விட்டார்கள். அந்த முகங்களை எல்லாம் காண முடியவில்லையே என்ற ஆதங்கமும்; ஒவ்வொரு எஸ்டேட்டிலும் கொத்துக்கொத்தாக 500-1000 பேர் என்று இருந்த இடங்களில் வெறும் 5-100 பேரை மட்டுமே கண்டது மனதிற்கு ஆழ்ந்த வேதனையை ஏற்படுத்தியது.

தமிழகத்தின் வேறு எந்த பகுதியிலும் இல்லாத 8,864 ஏக்கர் பரப்பு கொண்ட வளமிக்க மாஞ்சோலையின் மையப் பகுதியில் மிக மிக அடர்த்தியான காடுகளுடன் ஆண்டுதோறும் மழை பெய்து மணிமுத்தாறு அணையை நிரப்பும் நீர் பிடிப்பு பகுதியில் 984 ஹெக்டேர் பரப்பளவில் இருந்த ”குசுங்குலியார்” அடர்ந்த வனப்பகுதியில் இருந்த விலைமதிப்பற்ற மரங்கள் வெட்டப்பட்டு என்றோ காசாக்கப்பட்டு விட்டன; வன இலாக்காவினரும் கூட அந்த கொள்ளையை தடுக்க முடியாத அளவிற்கு பிபிடிசி நிர்வாகத்தினரின் ஆதிக்கம் அன்று அவ்வளவு வலுவாக இருந்தது.

இவ்வளவு வளமிக்க வனப்பகுதி ஒரு காலத்தில் திருவிதாங்கூர் ராஜ்ஜியத்தின் கீழ் இருந்தது. அது பாகிஸ்தானின் நிறுவனர் ஜின்னா அவர்களின் மகள் வழி பேரன் நுசில்வாடியாவின் பிபிடிசி நிறுவனத்திற்கு கை மாறியதே ஒரு மிகப்பெரிய கதை. அதுகுறித்து விரிவாக வேறொரு தருணத்தில் பார்ப்போம். ஆனால், 8,864 ஏக்கருக்கும், தலா ஒரு ஏக்கருக்கு ஆண்டொன்றுக்கு ரூபாய் 10 மட்டுமே அவர்கள் அரசுக்கு குத்தகையாக செலுத்தி, கடந்த 99 வருடமாக அனுபவித்து வந்தார்கள் என்பது தான் வினோதத்திலும் வினோதம்; வேதனையிலும் வேதனை!

ஆங்கிலேயர்கள் தங்களுடைய உடல் பலத்தாலும், அதிகார பலத்தாலும் திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இருந்து ஏழை, எளிய மக்களை வேட்டையாடியே அங்கு கொண்டு போய் சேர்த்தார்கள். ஒரு கட்டத்தில் பணிக்கு அழைத்துச் சென்றவர்களின் 75 சதவீதம் பேர் அங்கேயே மாண்டு போய்விட்டனர்.

எஞ்சியவர்களையும் தேயிலைத் தோட்டங்கள் உருவான பிறகு அங்கேயே பணிக்கும் அமர்த்திக் கொண்டார்கள். பச்சைப்பசேல் என்று தெரிகின்ற மாஞ்சோலையையும்; செக்க செவேல் எனத் தோன்றும் தேயிலையின் நிறத்தையும், மணத்தையும், குணத்தையும் தந்தது தென்மாவட்ட தேவேந்திர குல வேளாளரும், அவர்களின் அளப்பரிய உயரிய தியாகங்களும் மட்டுமே! அம்மக்களின் வலிகளும், வரலாறுகளும் பெரும்பாலானோருக்கு முழுமையாக தெரியாது; தெரிந்தாலும் பொதுத் தளத்தில் பரந்துபட்டு கொண்டு வர யார் முன் வருவார்கள்?
1998 ஆண்டு வரை தினச் சம்பளமாக பெற்றுவந்த ரூபாய் 55 சம்பளத்தை உயர்த்தி ரூபாய் 150 சம்பளம் கொடுக்க வேண்டும் என்று போராடியது குற்றம்; சட்ட மீறல்; அதுதான் உலக மகா வன்முறை என்ற தவறான எண்ணம் பலரது பார்வையிலும், ஆழ் மனதிலும் பதிக்கப்பட்டது; தங்களின் வயிற்று பசிக்காக போராடினார்கள் என்பதை கூட சக தமிழ் சமுதாயம் உணரவிடாமல் அன்றைய திராவிட ஸ்டாக்கிஸ்ட் அரசும் தலைமை தாங்கிய வ்சனகர்த்தாவும் தடுத்து விட்டார்கள்; அதுமட்டுமல்ல, சட்டமன்றத்திலும் மக்கள் மன்றத்திலும் அவதூறு பிரச்சாரம் மட்டுமே செய்தார்கள்! அதுமட்டுமின்றி அவர்களுக்காக குரல் கொடுத்த நம் மீதும் வீண்பழி சுமத்தி வன்முறையாளர்கள் என்ற முத்திரையையும் குத்தினர்களே அந்த ஆட்சியாளர்களின் உள்ளத்தில் எவ்வளவு வன்மம் புரையோடிப்போயிருந்திருக்க வேண்டும். ஆனால், தமிழகத்தை – இந்தியாவை தாண்டி உலகெங்கும் பலரும் அருந்தும் தேயிலையில் கலந்துள்ளது பல்லாயிரக்கணக்கான ஏழை, எளிய தமிழக மக்களுடைய ரத்தம் என்பது அதைப் பருகுவோருக்கும் தெரியாமல் போய்விட்டது.

இன்று போல் அன்று சமூக ஊடகங்கள் இருந்திருந்தால் மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்களுடைய பிரச்சினைகளுக்காக நாம் அவ்வளவு பெரிய அளவில் போராட வேண்டிய தேவை இருந்திருக்காது என்றே கருதுகிறேன். 17 பேர் மரணமும் கூட நிகழ்ந்திருக்க வாய்ப்பு இருந்திருக்காது. ஒருவேளை அந்த சம்பவம் நடந்து இருந்தாலும் அந்தக் குற்றம் இழைத்த அன்றைய கொடிய ஆட்சியாளர்கள், அதிகாரிகள், நிர்வாகத்தினர் தண்டிக்கப்பட்டு இன்றும் கூட சிறைக் கம்பிகளை எண்ணிக் கொண்டிருந்திருப்பார்கள்.

காசு பணம் இருக்கின்ற காரணத்தினாலே வீணர்களைப் பற்றி சிலர் வெட்டி கதைகள் எழுதி அவற்றையெல்லாம் படச்சுருளாக்கி மேன்மேலும் காசும், புகழும் தேடிக் கொள்ள நினைக்கிறார்கள். “நிழல்களை வைத்து நிஜங்களை மறைக்க நினைக்கிறார்கள்”
எனினும், மாஞ்சோலையின் மறைக்கப்பட்ட வரலாறுகள்; அதன் கதாநாயகர்கள் குறித்து நல்லொதொரு படைப்புகளாக வெளிவரும் தூரம் வெகு தொலைவில் இல்லை; எங்கோ தொடங்கி, எங்கோ போய்விட்டதை போன்று தோன்றலாம்! நாம் எங்கும் போய்விடவில்லை.! அதே மாஞ்சோலையில் தான் கடந்தும், நடந்தும் கொண்டிருக்கிறோம்.!

கடந்த 20 வருடங்களுக்கு முன்பு, பார்த்த மாஞ்சோலை அதே செழிப்போடு இன்று இல்லை. பல வருடங்களாகவே உரங்கள் இடவில்லை; களை எடுக்கவில்லை என்று சொல்கிறார்கள். தேயிலைத் தோட்டங்கள் எப்பொழுதுமே களைகள் எடுத்து, கண்ணாடி போல பளிச்சென்று இருக்கும். ஆனால், இப்பொழுது பல இடங்களில் கோரைப் புற்களும், தைலப் புற்களும், பிற செடிகளும், புதிய புதிய புதர்களும் உருவாகி இருக்கின்றன. களை எடுப்பதற்கும், உரம் இடுவதற்கும் ஆட்கள் தட்டுப்பாடு; அசாம் மாநிலத்தில் இருந்து வரவழைக்கப்பட்ட தொழிலாளர்களும் இப்பொழுது அங்கு பணியில் இல்லை. மாஞ்சோலை, ஊத்து, நாலுமுக்கு ஆகிய மூன்று டிவிசன்களில் மட்டுமே தொழிலாளர்கள் கொஞ்சம் பேர் பணிபுரிகிறார்கள்; பிற டிவிசன்கள் மூடப்பட்டு விட்டதாக தகவல்கள் வருகின்றன. புதிய காடுகளும் முறையாக உருவாக்கப்படவில்லை; பழைய தேயிலை காடுகள் பராமரிக்கப்படவுமில்லை; நாளுக்கு நாள் தேயிலை தோட்ட பரப்பு சுருங்கி வருவதும் செல்லும் வழியிலேயே கண் கூட தெரிகிறது.

6000 பேர் பார்த்த பணியை 600-பேர் எப்படி பார்க்க முடியும்? எவ்வளவு மோசமான வறட்சி சூழலிலும் ஒரு பெண் தொழிலாளியால் தினமும் 18 கிலோ தேயிலை பறிக்க முடிந்தது. ஆனால், தற்போது இரண்டு முதல் மூன்று கிலோ தேயிலை கிடைப்பதே ’அரிது’ என்று சொல்கிறார்கள்; இவையெல்லாம் என்னவென்று சொல்வது ’காலத்தின் கோலம்’ என்று தானே சொல்ல வேண்டும்.

1998 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 20 ஆம் தேதி 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாஞ்சோலையில் 5,000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கு பெற்ற ஆர்ப்பாட்டம் நமது தலைமையில் நடைபெற்றது. காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரையிலும் கடும் வெயிலில் கரடியாய் கத்தியும் கூட இரக்கமற்ற நிர்வாகத்தின் மேலாளர்களுக்கு தொழிலாளர்களின் குரல் கேட்கவில்லை. நிர்வாகத்தின் தரப்பிலிருந்து ஒருவரும் பேச முன்வரவில்லை. 20 கோரிக்கைகளில் ஒன்று இரண்டை தவிர, அத்தனையும் நிர்வாகமே எளிதாக நிறைவேற்றக்கூடிய கோரிக்கைகளாகவே இருந்தன. ’ஒவ்வொரு தொழிலாளர்களின் வீட்டு முன்பும் ஆங்கிலேயர்களுடைய காலத்தில் கொடுக்கப்பட்டு பல தலைமுறைகளாக காய்கறி பயிரிடப்பட்டு வந்த மூன்று சென்ட் நிலத்தை கல்லிடைக்குறிச்சியிலிருந்து அழைத்த வரப்பட்ட அடியாட்களை கொண்டு அழிக்கப்பட்ட நிலங்களை திருப்பி கொடுக்கப்பட வேண்டும்; பால்குடி மறவாத குழந்தைகளுக்கு பால் கொடுக்க சட்ட விதிகளுக்கு உட்பட்டு காலையும் மாலையும் தாய்மார்கள் வீட்டுக்கு சென்று வர அனுமதி அளிக்க வேண்டும்; மேற்கூரை, முன் – பின் மற்றும் கழிவறை கதவுகள் இல்லாமல் இருந்த வீடுகளை பழுது பார்த்து தர வேண்டும்’ உள்ளிட்ட 18 கோரிக்கைகளை நிர்வாகம் நினைத்திருந்தால் அன்றைய நாட்களிலேயே சரி செய்து தந்திருக்க முடியும். ஆனால் BBTC நிர்வாகத்திடம் இருந்த ஆணவ போக்கும், வரலாற்றில் உழைப்பின் மகிமையை அன்று அவர்கள் உணராததுமே மாஞ்சோலை போராட்டத்தில் ஏற்பட்ட துயரச் சம்பவங்களுக்கும், இன்றைய மாஞ்சோலையின் பரிதாப நிலைக்கும் காரணம்.

”தோட்டத் தொழிலாளர்கள் மனிதநேயத்துடன் நடத்தப்பட வேண்டும்; அவர்களின் வாழ்வு மேம்படவேண்டும்!” என்பது நமது எண்ணமாக இருந்தாலும் ஒருபோதும் தேயிலைத் தோட்டங்கள் நலிவடைய வேண்டும் என்று எண்ணியதில்லை!! தொழிலாளர்கள் நல்லமுறையில் நடத்தப்பட்டால், அவர்கள் உடல், உள்ளநலன் மேம்பட்டால், உற்பத்தியும் மேம்படும் அதனால் பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வறுமைக் கோட்டிலிருந்து விடுபடுவார்கள்! அவர்கள் வாழ்வு மேம்படும் இந்தியா முழுமைக்கும் ஏன் உலகத்திற்கே வழிகாட்டும் நடவடிக்கையாக இருக்கும் என்று கூறியதை அன்று மாஞ்சோலை மட்டுமல்ல, வால்பாறை, குன்னூர் உட்பட அனைத்துத் தோட்ட அதிபர்களுக்கும் கேட்கவில்லை. நமது கோரிக்கையை ஏற்பதை முதலாளிகள் கெளரவக் குறைச்சலாகப் பார்த்தார்களே தவிர, தொலைநோக்கோடும் பரந்தமனப்பான்மையோடும் பார்க்கவில்லை.

அதனுடைய விளைவாகவே இப்பொழுது தொழிலாளர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது; உற்பத்தி குறைந்துள்ளது. உலக அளவில் தேயிலை உற்பத்தியில் முதலிடத்தில் இருந்த தமிழ்நாடு, இப்பொழுது 4, 5-வது இடத்திற்குத் தள்ளப்பட்டு, மிகச்சிறிய நாடான இலங்கையிடம் போட்டிபோட முடியாமல் திண்டாடுகிறோம். ”மூத்தோர் சொல்லும் முதுநெல்லிக்காயும், முன்னே கசக்கும் பின்னே இனிக்கும்; வினை விதைத்தால் வினை கிடைக்கும், தினை விதைத்தால் தினை கிடைக்கும்” என்பதைப் போன்று, இன்று தேயிலைத் தொழிலே பெரும் நஷ்டத்திலும் திண்டாட்டத்திலும் உள்ளது. நமது போராட்டத்தின் நியாயத்தை பிபிடிசி நிர்வாகமும் உணர்ந்து இருப்பின் தொழிலாளரும் நலமுடன் இருந்து இருப்பார்கள்; தமிழக தோட்ட முதலாளிகள் சங்கமும், நிர்வாகமும் மேலோங்கி இருந்திப்பார்கள்.

மனித குரங்கிலிருந்து மனிதனாக பரிணாமம் ஆனதே உழைப்பு தான் என்பது தானே சமூக வரலாறு. உலகின் எந்த தேசமாக இருந்தாலும் அங்கு ஏதாவது ஒரு சமூக மாற்றம் நிகழ்ந்திருக்கிறது என்றால் அது உழைப்பாளி மக்களின் பங்களிப்பால் தான். மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்களின் சமூக பின்னணியை மனதில் வைத்தே அம்மக்களுக்கு வசதிகளை செய்து தரக் கூடாது என்ற மேல் தட்டு உணர்வுகள் தான் ஒரு சாதாரண டிவிசன் மேலாளரையும் கூட அதனுடைய உரிமையாளர்களைப் போல நடக்க வைத்தது. அம்மக்களுக்கு சாதாரண அடிப்படை வசதிகளை கூட செய்து தராமல் ஒவ்வொரு டிவிசன் மேலாளரும் ஒரு சர்வாதிகாரியைப் போல நடந்து கொண்டார்கள்.

காலை 8 மணியிலிருந்து மாலை 4 மணி வரை மட்டும் தான் வேலை செய்வோம் என 8 மணி நேர வேலையை வலியுறுத்தி 4 மணிக்கு தேயிலை பறிப்பை நிறுத்தியதற்காக அரை நாள் சம்பள பிடித்தம் செய்தார்கள். முழு சம்பளத்தையும் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி அன்றைய திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் தனவேல் அவர்களை சந்திக்க 10 கைக்குழந்தைகள், 250 பெண்கள் உட்பட 625 தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் மாவட்ட ஆட்சியர் இல்லத்தை முற்றுகையிட்டார்கள்; அதில் சிறைப்படுத்தப்பட்ட தொழிலாளர்களை நிபந்தனை இன்றி விடுதலை செய்ய வலியுறுத்தி 1999 ஆம் ஆண்டு ஜூலை 23ஆம் தேதி அந்த மகத்தான பேரணி நடைபெற்றது.

நெல்லை சந்திப்பிலிருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை அமைதியாக பேரணி நடத்தி வெயிலின் களைப்பில் அமர்ந்திருந்த தொழிலாளர்கள் மீது அடாவடியாக தடியடி நடத்தப்பட்டது; கூட்டத்தை கலைக்க பிறப்பிக்கப்பட்ட உத்தரவை அப்படியே நிறைவேற்றியது காவல்துறை. தாமிரபரணியில் தள்ளிவிடப்பட்டவர்கள் தப்பிக்க மறுகரை ஏறியும் வெளிவர முடியாமல் ஆற்றிலேயே 17 பேர் அமுக்கிக் கொல்லப்பட்டார்கள். தொழிலாளர்கள் கலைக்கப்பட்டது போதாது என நம் மீது கல்வீச்சு தாக்குதல் தொடுக்கப்பட்டதில் முக்கிய நிர்வாகிகள் காயம்பட்டார்கள். நாம் மட்டும் எப்படி தப்பித்தோம் என்று அவர்கள் எழுப்பிய வினா வினையமானது தான். ஆம், நாம் அன்றைய ஆட்சியாளர்களின் திட்டமிட்ட கொலை வெறி தாக்குதலில் இருந்து தப்பித்தது அதிசயம் தான்!! நம் மீது வந்த கல்லடிகளை கூட தாங்கி நம்மைக் காப்பாற்றியதும் நம் தோழர்களே.!

எட்டு மணி நேர வேலையும், 150 ரூபாய் சம்பளமும் கேட்டது தான் நிர்வாகத்திற்கு கசப்பாகவும் காழ்ப்பாகவும் இருந்தது. அன்றைய காலகட்டத்தில் ஒரு தொழிலாளி நிரந்தரம் என்றால், கூடுதலாக இரண்டு தற்காலிக தொழிலாளர்கள் இருந்தார்கள்; வேலை கேட்டு தேயிலைத் தோட்ட வாசல்களில் காத்திருந்த காலம் உண்டு. இன்று ரூபாய் 430 தினச்சம்பளம்; கிரைண்டர், மிக்ஸ், பிரிட்ஜ் கொடுக்க கூட தயார். ஆனால், வேலைக்கு வரத்தான் ஆட்கள் இல்லை. உள்ளூர்க்காரர்கள் மட்டுமல்ல! வெளியூர் வெளி மாநிலத்தவர் கூட வர தயாராக இல்லை; இதற்குப் பெயர் தான் வரலாறு திருப்பி அடிக்கும் என்பது.!

மலையும் காடுகளும் எவராலும் உருவாக்கப்பட்டது அல்ல. ஆனால் அதில் பரந்து கிடக்கும் தேயிலைத் தோட்டங்கள் நமது மண்ணின் மக்களால் உருவாக்கப்பட்டவைகள். நம் முன்னோர்கள் செய்த தியாகங்கள், உழைப்புகள் என எவற்றையும் மதிக்காமல் அரசு தன்னுடைய கைவசம் இருக்கிறது; அதிகாரம் தன்னிடத்தில் இருக்கிறது என்ற ஆணவப் போக்கில் பிபிடிசி நிர்வாகத்தினர் அன்றைய காலகட்டங்களில் நடந்து கொண்டார்கள்; அதன் பலனை நிர்வாகம் இன்று அனுபவிக்கிறது.

மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் விடுதலைக்காக குரல் கொடுத்ததற்காக புதிய தமிழகம் கட்சி மிகப்பெரிய விலை கொடுத்துள்ளது. ஏறக்குறைய அரை நூற்றாண்டு காலம் அரசியல் ரீதியான பின்னடைவை சந்தித்தோம்; பல பழிகளை சுமந்தோம்; எண்ணற்ற வழக்குகளை சந்தித்தோம்;

உயிரிழப்புக்களையும் சந்தித்தோம். எனினும் உண்மை வரலாறுகளையும் நிரந்தரமாக எவராலும் மறைக்க முடியாது அல்ல? அனைத்து உண்மைகளும் என்றாவது ஒருநாள் வெளி வந்து தானே தீர வேண்டும். ஆம், 2028 ஆம் ஆண்டு BBTC யின் மாஞ்சோலை தேயிலைத் தோட்ட குத்தகை ஒப்பந்தம் முடிவடைய போகிறது. இனி அந்த ஒப்பந்தம் எக்காரணம் கொண்டும் நீட்டிக்க பட வாய்ப்பு இல்லை; நீடிக்கவும் புதிய தமிழகம் கட்சி விடாது என்பதும் அவர்களுக்கு தெரியும். தெரிந்து தானே சாலைகளை பழுது பார்க்காமல் வைத்திருக்கிறார்கள். தேயிலை தோட்டங்களை களையெடுக்காமலும் உரமிடாமல் காய்ந்து போக விட்டிருக்கிறார்கள்; எல்லாம் நன்மைக்கே.!

நாம் அன்று வைத்த கோரிக்கைகளில் மிக முக்கியமானது. தேயிலைத் தோட்ட குத்தகையை ரத்து செய்து விட்டு ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா ஐந்து ஏக்கர் வழங்க வேண்டும் என்பதே; ஆனால் அது அன்று நிறைவேறவில்லை; 2028 ஆம் ஆண்டு BBTC வெளியேறிவிடும் அல்லது அதற்கு முன்பாகவே கூட வெளியேறலாம். நமது தலையாய கோரிக்கை நிறைவேறும் தருணம் வந்துவிட்டது.

ஆகஸ்ட் 27 ஆம் தேதி மாஞ்சோலை பயணம். கடந்த 10 ஆண்டுகளாக அந்த பகுதிக்கு நாம் செல்லவில்லை. தொழிலாளர்கள் அப்படியே இருக்கிறார்களா? அவர்களுடைய வாழ்வாதாரம் எப்படி இருக்கிறது? அவர்களுக்கான பிரச்சனைகள் தீர்க்கப்பட்டுவிட்டனாவா? என்ற ஏக்கத்திலேயே தான் சென்றேன். ஓரிருவர் தன் சுயநலத்திற்கான நிறம் மாறி இருந்தாலும், 90 சதவிகிதம் பேர் ’தாயை காணும் சேயை போல’ புதிய தமிழகம் கட்சியோடு தான் இருப்பார்கள் என்ற நம்பிக்கை என்னிடத்தில் இருந்தது; அப்படித்தான் இருந்தார்கள்; இரவு 8 ½ மணிக்கு கடும் குளிரிலும் அத்தனை பெண்களும் ஆண்களும் நாலுமுக்கு எஸ்டேட்டில் கூடி இருந்தார்கள்.

புதிய தமிழகம் கட்சியின் பொறுப்பாளர்கள் பலர் மாஞ்சோலை போராட்டம் துவங்கிய பொழுது மிக மிக இளம் வயதில் இருந்தவர்கள். அவர்களுக்கு மாஞ்சோலையும் தெரியாது; அந்த பிரச்சனைகளும் என்னவென்றே தெரியாது. ஜூலை மாதம் 23 ஆம் தேதி தாமிரபரணி தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்த வருவது ஒன்று மட்டுமே அவர்களுக்கு தெரிந்த விஷயங்கள்.

1998 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20 ஆம் தேதி இரவோடு இரவாக பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களோடு தீப்பந்தங்களோடு மாஞ்சோலையிலிருந்து திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை நடந்து வந்த கரடுமுரடான பாதையை; தேயிலை தோட்டங்களை, அங்கு பணிபுரிந்த தொழிலாளர்களை, 180 சதுர அடி மட்டுமே கொண்ட அவர்களது சிதிலடைந்த வீடுகளை, இன்றும் முன்-பின் கதவுகள் உடைந்து பழுதுபார்க்கப்படாமல் குரங்குகளும் காட்டுப் பன்றிகளும் எளிதாக எந்த நேரத்திலும் வீட்டுக்குள் விஜயம் செய்யும் நிலைகளை கண்ணுற்றார்கள். தின கூலி சம்பளம் வாங்கும் தொழிலாளர்களிடம் தொழில் வரி பிடித்தம் செய்யும் கொடுமை, மின்விளக்கு இல்லாமை, கதவுகளே இல்லாத கழிப்பறைகள் என அனைத்து அவலங்களையும் கண்டும்; இத்தனை வேதனைகளுடன் இன்னும் அவர்கள் அங்கே பணியில் இருப்பினும், ”அன்று ரூபாய் 35 மட்டுமே சம்பளம் பெற்றுக் கொண்டிருந்தோம்; இன்று ரூபாய் 430 பெறுகிறோம் என்றால் அது டாக்டர் அய்யா அவர்களால்தான்; அவரது போராட்டங்களால் தான் நாங்கள் இப்பொழுது மகிழ்ச்சியுடன் இருக்கிறோம்” என்று அவர்கள் உள மகிழ சொன்னது புதிய தமிழகம் கட்சியின் இளைய தலைமுறையினருக்கும், அன்று நம்முடன் பயணித்தவர்களுக்கும் இது நல்லதொரு வழிகாட்டியாகவும் பாடமாகவும் அமையும். நமது உழைப்பு உடனடியாக பலனளிக்காவிட்டாலும் என்றாவது ஒருநாள் பலனளிக்கும் என்பதையும் நம்மால் பலன் பெற்றவர்கள் ஒலிபெருக்கி வைத்து உரக்கக்கூராவிடினும் எங்கிருந்தோ வாழ்நாள் எல்லாம் வாழ்த்திக் கொண்டே இருப்பார்கள் என்பதையும் நமது புதிய தமிழகம் கட்சியின் இளைய தலைமுறையினர் ”தங்கள் உள்ளங்களில் புதிய தமிழகம் கட்சியின் லட்சியங்களை பசு மரத்தில் அடித்த ஆணிகளை போல” பதித்திருப்பார்கள் என்று கருதுகிறேன்.

இம்மண்ணில் சமத்துவம் – சம உரிமை – சம பங்கை நிலைநாட்டும் நமது லட்சியத்தை அடையும் தூரம் வெகு தொலைவில் இல்லை. உழைக்கும் மக்களை உயர்த்தவும்; ஏழை, எளிய மக்களை உயரச் செய்யவும் அர்ப்பணிப்பு ஒன்றை மட்டுமே குறிக்கோளாக கொள்ள வேண்டும் என்பதே ஏறக்குறைய 10 ஆண்டு கால இடைவெளிக்கு பின்பு மாஞ்சோலை பயணத்தில் புதிய தமிழகம் கட்சியின் இளைய தலைமுறை கற்றுக் கொள்ள வேண்டிய பாடமாகும்.

மாஞ்சோலை வெகு தூரத்தில் இல்லை; ஆனால் முன்பைக் காட்டிலும் பயண நேரம் தான் பன்மடங்கு அதிகமாகி இருக்கிறது. தாமிரபரணியில் 17 பேர் உயிரிழப்பிற்கு காரணமான, அப்பாதகச் செயலை நடத்திய குற்றவாளிகள் இன்று மணிப்பூர் பற்றி பேசுகிறார்கள்; ஆனால் மாஞ்சோலை பற்றி பேச மறுக்கிறார்கள்! குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும் தானே.! மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்கான நமது போராட்டத்தில் நியாயம் இருந்ததா? இல்லையா? 25-வருடங்களுக்கு முன் இழைக்கப்பட்ட அநீதிகளின் மிச்ச சொச்சங்கள் இன்றும் இருக்கிறதா? இல்லையா?

தமிழகத்தின் பிற பகுதிகளிலும் உள்ள 10 லட்சத்திற்கும் மேற்பட்ட தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் சம்பள உயர்வு பெற்றதும் மாஞ்சோலை போராட்டத்தின் விளைவு தானே. தேனி மாவட்டம் ஹைவேஸ்; கோயமுத்தூர் மாவட்டம் வால்பாறை முடிஸ்; நீலகிரி மாவட்டம் கோத்தகிரி, குன்னூர், கூடலூர்; சேலம் மாவட்டம் ஏற்காடு உள்ளிட்ட பகுதிகளிலும் வாழக்கூடிய லட்சோப லட்சம் தொழிலாளர்களின் வாழ்க்கையில் ஏற்பட்ட மறுமலர்ச்சி மற்றும் முன்னேற்றங்களையும், அதன் உண்மைத் தன்மையையும் கண்ணாரக் கண்டும், காதரக் கேட்டும் எழுதிட ஏதாவது சில சமூக ஆர்வலர்கள் அங்கு சென்று வருவார்களா? தாங்கள் கண்ட உண்மை நிலைமைகளை வெளிக்கொணர்வார்களா? நிழல் ஹீரோக்களை விட்டுவிட்டு நிஜ ஹீரோக்களை ஏற்றுக்கொள்ளும் மனோபாவம் தமிழகத்தில் உருவாகுமா? வாய் விற்பனையாளர்களின், வசனக் கர்த்தாக்களின் மறைவு வரையிலும் தமிழ் சமுதாயத்திற்கு ஏற்பட்ட பின்னடைவுகளை ஈடுகட்டக்கூடிய வகையில்

இச்சமூகத்திற்கு உண்மையான போராட்டங்களையும் போராளிகளையும் முன்னிலைப்படுத்தும் காலம் வருமா? இனியாது ஏழை, எளிய விளிம்புநிலை தமிழர்களுக்கும் விடிவு காலம் பிறக்குமா? மாஞ்சோலை அதற்கு ஒரு திறவுகோலாக இருக்குமா?
”இருக்க வேண்டும்” என்பதே நமது எதிர்பார்ப்பாகும்.!

மேற்கு மலைத்தொடர்ச்சியில் – கிழக்கில் எத்தனையோ மலைகளும் காடுகளும் வானுயர நிற்கின்றன! அவைகளை கண்ணுற்றாலும் பெயர்களை நாம் உச்சரிப்பதில்லை!!

மாஞ்சோலை வெறும் காடுகளும், முட்புதர்களும், சோலைகளும் நிறைந்த மலைப் பகுதி அல்ல!!
ஆயிரமாயிரம் மனித உழைப்புகளாலும் அர்ப்பணிப்புகளாலும், அலங்கரிக்கப்பட்ட பூஞ்சோலை!!
மாஞ்சோலை, குத்தகை ரத்துக்கு பின்,
புலிகள் சரணாலயமானால்,
புலிக்கு என்ன தான் லாபம்? என்ன தான் பெருமை?
அத்தேயிலைத் தோட்டங்களில் தங்களை உரமாக்கிக் கொண்டு
அங்கேயே உண்டும் உறங்கியும் கொண்டிருக்க கூடியவர்களுக்கும்,
தாமிரபரணி ஆற்றில் உடல் கரைந்து போனாலும்
உயிராக ஓடிக்கொண்டிருக்க கூடியவர்களின் நினைவாகவும்!
மாஞ்சோலை மாஞ்சோலையாக! பூத்துக் குலுங்கும் பூஞ்சோலையாக நிலைக்கட்டும்!!
பச்சை பசேல் என்ற பரவிக் கிடக்கும் தேயிலைத் தோட்டங்கள் அதை உருவாக்கியவர்களுக்கே உடைமையாகட்டும்!
அவர்களின் பிள்ளைகளும் – பேரப்பிள்ளைகளும் தலைமுறை தலைமுறையாக தளைக்கட்டும்.!

டாக்டர் க.கிருஷ்ணசாமி MD,Ex.MLA,
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
02.09.2023.

மறைக்கப்பட்ட வரலாறும் மறுக்கப்பட்ட உரிமைகளும்.. Manjolai வரலாற்று பயணம் with Dr. Krishnasamy | EP-01