பல்லடம் அருகே மது போதைக்கு நான்கு பேர் படுகொலை! தினமும் கொலைகளும், தற்கொலைகளும் அதிகரிக்கிறதே? முதலவர் ஸ்டாலின் அவர்களின் பதில் என்ன? பல்லடம் கொலையாளிகளை கடுமையாக அணுக வேண்டும்.!

அறிக்கைகள்
s2 191 Views
  • Palladam
  • Palladam
Published: 04 Sep 2023

Loading

திருப்பூர் அருகே பல்லடம், கள்ளக் கிணறு என்ற கிராமத்தில் செந்தில்குமார், மோகன்ராஜ், அவர்களுடைய தாயார், சித்தி ஆகிய நான்கு பேர் நேற்று நள்ளிரவு கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளனர். தங்கள் வீட்டருகே மது அருந்தக்கூடாது என்ற என்று சொல்லிய காரணத்திற்காக 2 பெண்கள் உட்பட நான்கு பேர் படுகொலைக்கு ஆளாயிருக்கிறார்கள். இந்த சம்பவம் மனிதநேயமற்ற செயல்; வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. குற்றவாளி வெங்கடேஷ் மற்றும் அவனது கூட்டாளிகளையும் மது போதையால் குற்றவாளிகளாக்கிய இந்த அரசும் குற்றவாளியே!

தமிழகத்தில் மது போதைக்கு ஆளாவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது; பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களும் இப்பழக்க வழக்கங்களுக்கு அடிமை ஆகிறார்கள். எனவே மதுவிலக்கை அமல்படுத்துவது ஒன்றுதான் இதற்கு தீர்வு என்று தொடர்ந்து சுட்டிக்காட்டி இருக்கிறோம். ஏழை, எளிய குடும்பத் தலைவர்களின் வருமானம் வீட்டுக்கு வந்து சேராததால் குடும்ப வறுமைகளை தாங்கமுடியாமல் குடும்பத் தலைவிகளும் தற்கொலை செய்து கொள்கிறார்கள். தந்தைமார்களின் கொடிய மது பழக்கவழக்கங்களைக் சகித்துக் கொள்ள முடியாத அக்குடும்ப பள்ளி, கல்லூரி மாணவ மாணவியரும் கூட இளம் வயதிலேயே தங்களுடைய உயிரை மாய்த்துக் கொள்ளக்கூடிய சூழல்களும் அதிகரித்து வருகின்றன.

டாஸ்மாக் மூலம் பல ஆயிரம் கோடி வருமானம் வர வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் மட்டும் இந்த அரசு செயல்படுவதால் ஒட்டுமொத்த தமிழ் சமுதாயமும் சீரழியும் நிலை உருவாகிவிட்டது. ஒரு பக்கம் மித மிஞ்சிய ஊழல்; இன்னொரு பக்கம் கொலை, கொள்ளை சம்பவங்கள் தலைவிரித்தாடத் துவங்கியிருக்கின்றன. பள்ளி மாணவ, மாணவிகள் பிறந்தநாள் கொண்டாடுவதற்கு மதுபானம் அருந்தினார்கள் என்ற செய்திகளை காணும் ஓர் மோசமான சூழலைக் காண்கிறோம்.

நேற்று இரவு பல்லடத்தில் நடந்த நான்கு பேரின் படுகொலை நமது ஒவ்வொருவரின் ஆழ் மனதிலேயும் ஒரு ஆதங்கத்தையும் கோபத்தையும் உருவாக்குகிறது. கோவை அருகே உள்ள கள்ளக் கிணறு கிராமத்தைச் சார்ந்த செந்தில்குமார், மோகன் ராஜ் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். தன்னிடத்திலே வேலைக்கு இருந்த வெங்கடேசன் வேலை நீக்கம் செய்யப்பட்ட காரணத்திற்காகத் தினமும் செந்தில் குமார், மோகன்ராஜ் ஆகியோரின் வீட்டு அருகே வந்து மது அருந்துவது, அவர்களின் குடும்பத்தை சிறுமைப்படுத்துவது போன்ற ஆத்திரமூட்டும் செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு இருக்கிறார்கள். அவர்களுடைய நோக்கம் எப்படியாவது செந்தில்குமாரை வம்புக்கு இழுத்து கொலை செய்ய வேண்டும் என்பதே நோக்கமாகும். அதற்காகவே முன்னேற்பாடுகளுடன் கொடிய அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் வந்து காத்திருந்து சம்பவத்தை நிகழ்த்தியிருக்கிறார்கள்.

கோவை, திருப்பூர் மாவட்டங்களில் இது போல கொலை சம்பவமே அரிதினும் அரிதான சம்பவம்; 40,50 வயதான பெண்களையும் கொலை செய்யும் அளவிற்குக் கொலையாளிகளிடம் வன்மம் தலைக்கேறி இருக்கிறது; இந்த சம்பவத்தைக் கேள்விப்பட்ட உடனேயே கோவை மாவட்டத்தில் இது போன்ற சம்பவங்கள் நடைபெறுவதற்கு வாய்ப்பு இல்லையே என்ற சந்தேகம் இருந்தது. அதற்கு ஏற்பவே கொலையாளி தென் மாவட்டமான தூத்துக்குடியைச் சேர்ந்தவர் என்ற தகவல் இப்பொழுது வெளியாகி இருக்கிறது.

தினமும் கொலைகளும் தற்கொலைகளும் வெட்டுக் குத்துகளும் நிகழ்ந்து தமிழக மக்களை அச்சத்தில் ஆழ்த்துவது எவ்விதத்திலும் சரியானது அல்ல. சட்ட ஒழுங்கு நாளுக்கு நாள் சீரழிந்து வருவதை இது காட்டுகிறது. பள்ளி, கல்லூரி மாணவர்களும் வன்முறையில் ஈடுபடுவது, இது போன்ற அர்த்தமற்ற கொலைகளுக்கு ’மதுவே’ பின்புலமாக இருப்பது என்பது மட்டுமே தெளிவாகத் தெரிகிறது. சில மாதங்களுக்கு முன்பு கொத்தாக மது அருந்தி விழுப்புரம் மரக்காணம் மதுராந்தகத்தில் 30-க்கும் மேற்பட்டோர் மரணமெய்தினார்கள். தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் மதுவால் தினமும் ஏதோ ஒரு விதத்தில் சமூக கேடு நடைபெற்றுக் கொண்டே இருக்கின்றன. அது தற்கொலையோ, கொலையோ, கொள்ளையோ, பாலியல் அத்துமீறல்களோ ஏதாவது ஒன்று நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது.

எனவே ஒட்டுமொத்த சமூகமும் இதன் மூலம் பதட்டமும், சட்ட ஒழுங்கின் மீது நம்பிக்கையையும் இழக்கக் கூடிய அளவிலும் அனைத்து நிகழ்வுகளும் நடந்து கொண்டிருக்கிறது. நாம் இந்த அரசுக்கு பலமுறை சுட்டிக்காட்டி விட்டோம். இதுபோன்ற சட்டம் ஒழுங்கு சீரழிவதற்குக் காரணமாக இருப்பது மது மட்டுமே என்று.! ’தமிழ் சமுதாயத்தில் முற்றாக மது ஒழிக்கப்பட வேண்டும்’ என்ற ஒற்றைக் குறிக்கோளுடன் டாஸ்மாக்கை நிரந்தரமாக மூடிட இந்த அரசு முன்வர வேண்டும். காவல்துறையைத் தனது கையில் வைத்திருக்கக்கூடிய ஸ்டாலின் அவர்கள் இதுபோன்ற வன்முறைச் சம்பவங்களுக்கு தானே முன்வந்த பொறுப்பேற்க வேண்டும். ஆனால் அவர் பொறுப்பு ஏற்க மாட்டார் என்பது தெரியும். அவர் பொறுப்பேற்க மறுக்கின்ற பொழுது மக்கள் தங்களுக்கு இருக்கின்ற ஒரே வழி தேர்தல் நேரத்தில் ஆட்சியில் தவறு இழைக்கக் கூடியவர்களுக்கு தோல்வியைத் தான் பரிசாக அளிப்பார்கள்.
எந்த விதமான அச்சமும் இல்லாமல் மாணவர்களும் ஆயுதம் எடுத்துக் கொண்டு பள்ளிகளுக்கு செல்லக்கூடிய போக்குகள்; தவறுக்கு உடந்தை இல்லை என்று சொன்னால் உடனடியாக கத்தி எடுக்கக்கூடிய போக்குகள்; அண்மையில் ஓட்டப்பிடாரம் அருகே பசுவந்தி என்ற பள்ளியில் படிக்கக்கூடிய மாணவர்களுக்குள் காப்பியடிக்க உதவவில்லை என்பதற்காக மாணவனை கத்தியால் எடுத்துக் குத்திய சம்பவங்கள் எல்லாம் நடக்கின்றன. எனவே இது போன்ற சம்பவங்கள் எல்லாம் நடைபெற வண்ணம் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.

மது அருந்துவதைத் தட்டிக் கேட்டதற்காக இரண்டு அப்பாவி பெண்கள் உட்பட நான்கு பேரைத் திட்டமிட்டு கொலை செய்த அந்த கொலையாளிகளைக் கைது செய்து, நீண்ட நாள் சிறையிலே வைத்து, பிணையில் அனுப்புவது, குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வது என்பதெல்லாம் அவர்களை மீண்டும் மீண்டும் வலுப்படுத்த உதவுகிறது. எனவே இதுபோன்று அஞ்சாமல் செய்யக்கூடிய கொலை பாதகர்களுக்கு பாடம் புகட்டக்கூடிய வகையில் காவல்துறை உரிய முறையில் இந்த வழக்கை அணுக வேண்டும் என்பதே புதிய தமிழகம் கட்சியில் வேண்டுகோளாகும்.

டாக்டர் க.கிருஷ்ணசாமி MD Ex MLA,
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
04.09.2023.