மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடைய குறைகளை நிறைவேற்றக்கோரி போராட்டம்

அறிக்கைகள்
s2 495 Views
  • Manjioli

    மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் குறைகளை கேட்டறிந்தார் டாக்டர் கிருஷ்ணசாமி

  • Manjioli
Published: 31 Aug 2023

Loading

அன்புடையீர் வணக்கம்.!
நான் கடந்த 27.08.2023 அன்று நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடைய குறைகளை கேட்டறிய மாஞ்சோலையில் உள்ள ஐந்து டிவிசன்களுக்கும் சென்று இருந்தேன். அப்பொழுது தோட்ட தொழிலாளர்களுக்கான சாலை வசதி, போக்குவரத்து வசதி, 4ஜி இணைய வசதி, மற்றும் குடியிருப்புகளை பழுது பார்த்தல் உள்ளடங்கிய பல்வேறு கோரிக்கைகளையும் குறைபாடுகளையும் எடுத்துரைத்தார்கள்.

அதனுடைய அடிப்படையில் மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் கோரிக்கைகளை போர்க்கால அடிப்படையில் தீர்வு காண வலியுறுத்தி திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அவர்கள், நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் மற்றும் மேற்பார்வை பொறியாளர்; திருநெல்வேலி மண்டல அரசு போக்குவரத்து கழக மேலாளர் தொழிலாளர் துறை இணை மற்றும் துணை ஆணையர்கள், பேரூராட்சி உதவி இயக்குனர், திருநெல்வேலி சரக வனத்துறை தலைமை பாதுகாவலர் மற்றும் பி.எஸ்.என்.எல் மேலாளர் மற்றும் ஆகியோருக்கு தனித்தனியாக கடிதம் எழுதி உள்ளேன்.

இச்செய்தியை தங்களது பத்திரிக்கை / ஊடகங்களில் வெளியிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
அக்கடிதங்களின் சாராம்சம் பின்வருமாறு.!

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை மாஞ்சோலையில் 8,864 ஏக்கர் பரப்பில் உள்ள மாஞ்சோலை, காக்காச்சி, நாலு முக்கு, ஊத்து, குதிரைவெட்டி ஆகிய ஐந்து டிவிஷன்களிலும் 99 வருட குத்தகைக்கு Bombay Burma Trading Corporation Limited (BBTC) நிறுவனம் ஆர்கானிக் தேயிலை பயிரிட்டு வருகிறது. அங்கு நிரந்தர மற்றும் தற்காலிக தொழிலாளர்கள், பேக்டரி ஊழியர்கள், அலுவலர்கள் என 800 முதல் 1000 பேர் பணிபுரிந்து வருகிறார்கள்.

மணிமுத்தாறு அணை மற்றும் வனச்சரக செக் போஸ்ட்டில் இருந்து கடைசி எஸ்டேட்டான குதிரை வெட்டி வரையிலும் மொத்தத் தூரம் 45 கி.மீட்டர் ஆகும். அங்கு பணிபுரியக்கூடிய தொழிலாளர்களுக்கு அம்பாசமுத்திரம், திருநெல்வேலி உள்ளிட்ட தரைப்பகுதிக்கு வந்து செல்ல இந்த ஒரே பாதையும், அரசு போக்குவரத்து கழக பேருந்து வசதியும் மட்டுமே உண்டு.

1998 ஆம் ஆண்டுக்கு முன்பு வரை தினச் சம்பளம் ரூபாய் 35 முதல் 52 வரை மட்டுமே இருந்தது. 1951 ஆம் ஆண்டு தேயிலைத் தோட்ட சட்ட விதிமுறைகளை அமல்படுத்தவும், சம்பள உயர்வை வலியுறுத்தியும் 1998 முதல் தொடர்ந்து 25 ஆண்டுகளாக புதிய தமிழகம் கட்சியும், தேயிலைத் தோட்ட தொழிலாளர்களும் போராடினோம். தொடர் போராட்டத்தின் விளைவாக இப்போது தினச் சம்பளம் ரூபாய் 430 வரை உயர்ந்துள்ளது. அங்கு பணிபுரியக்கூடிய பெரும்பாலான தொழிலாளர்கள் திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களை பூர்வீக வாழ்விடமாக கொண்டவர்கள்; தேயிலைத் தோட்டங்களை உருவாக்கிய காலம் முதல் அங்கு பணிபுரிந்து வருகிறார்கள். பல தலைமுறைகளானதால் இன்று அங்குள்ள பல குடும்பங்களுக்கு தங்களுடைய சொந்த கிராமம் – ஊர் எதுவென்று கூட தெரியாது. தெரிந்தாலும் ஒரு சென்ட் வீட்டு மனை கூட அவர்களுக்கு அங்கு சொந்தமாக இல்லை.

மேற்குறிப்பிட்ட ஐந்து எஸ்டேட்களிலும் ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே பள்ளிகள் உண்டு. ஆறாம் வகுப்பிற்கு பிறகு அவர்கள் தங்களுடைய குழந்தைகளை அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விடுதிகளில் சேர்த்து படிக்க வைத்து வருகிறார்கள். சனி, ஞாயிறு மற்றும் பொது விடுமுறை நாட்களில் தங்களுடைய பெற்றோரைக் காண மாஞ்சோலைக்கு வருகிறார்கள். மேலும் தொழிலாளர்கள் தங்களுடைய உற்றார் உறவினர்களின் திருமண விழா, கோவில் விழா உள்ளிட்ட சமூக நிகழ்ச்சிகளுக்கும் தரைப் பகுதிகளுக்கு செல்ல வேண்டி இருக்கிறது. எஸ்டேட்டில் உள்ள கம்பெனி மருத்துவமனையிலும் முதலுதவி அளிக்கக்கூடிய வசதி மட்டுமே உள்ளது. விஷக்கடி, அவசர அறுவை சிகிச்சை அல்லது பிரசவங்களுக்கு 80 கீ.மீட்டருக்கு அப்பால் உள்ள நெல்லை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தான் செல்ல வேண்டும். தோட்ட பணிகளை தவிர, பிற அனைத்து தேவைகளுக்கும் எஸ்டேட்டில் இருந்து தரைப்பகுதிக்கு பயணம் செய்தே தீர வேண்டும். எனவே சாலை வசதியும், அரசு போக்குவரத்து வாகன வசதியும் மிக முக்கியமான தேவையாக இருக்கிறது. மேலும், இதைத் தவிர வேறு சாலை மார்க்கமோ பிற போக்குவரத்து, வாகன வசதிகளோ கிடையாது. சொற்ப வருமானம் என்பதால் சொந்த வாகனங்கள் வைத்துக் கொள்ளும் வசதியும் இல்லை.

இப்படிப்பட்ட சூழலில் மணிமுத்தாறு அணை முதல் கடைசி எஸ்டேட்டான குதிரைவெட்டி வரையிலும் கடந்த 15 ஆண்டுகளாக 45 கி.மீ சாலை புதுப்பிக்கப்படாததாலும், சாலை முற்றாக பழுதடைந்து குண்டும் குழியுமாக இருப்பதாலும் வாகனங்களை இயக்குவது என்பது மிக மிக கடினமானதாக இருக்கிறது. 45 கி. மீட்டர் பயணம் செய்ய 4 மணி நேரத்திற்கு மேலாகிறது; இதனால் பேருந்துகளும் அடிக்கடி பழுதாகி விடுகின்றன.
பேருந்துகள் ஒரு நாளைக்கு மூன்று முறை மட்டுமே இயக்கப்படுகின்றன. தொழிலாளர்கள் ஒரு வாரத்திற்கு தேவையான காய்கறிகள் மற்றும் மளிகைச் சாமான்களை இந்த பேருந்துகளில் தான் தங்களது குடியிருப்பு பகுதிகளுக்கு ஏற்றிச் செல்ல வேண்டும். விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை மட்டுமே அனைத்து தொழிலாளர்களும் நகர் பகுதிகளுக்கு வருகை புரிந்து மளிகை பொருட்கள், காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்கி செல்கிறார்கள்.

இப்பொழுது இயங்கக்கூடிய பேருந்துகளில் தானியங்கி கதவுகளின் விஸ்தீரணம் இரண்டு அடிக்கும் குறைவாக மட்டுமே இருப்பதாலும்; பேருந்துகளின் மேற்கூரைக்கு செல்ல ஏணிகளும், மேலே கேரியர்களும் பொருத்தப்படாததாலும்; பேருந்தின் உள்ளே பயணிகள் எளிதாகச் செல்ல முடியாமலும்; ஒரு இருக்கைக்கும் மறு இருக்கைக்கும் இடைவெளி மிக குறைவு என்பதால் அமர முடியாமலும்; தொழிலாளர்கள் மிக மிகச் சிரமப்படுகிறார்கள். சாலைகளை மேம்படுத்தவும், பேருந்து வசதிகளை முறைப்படுத்தவும் உள்ளாட்சி, தொழிற்சங்க பிரதிநிகள் மூலமாக பலமுறை மனு அளித்தும் எவ்விதமான நடவடிக்கையும் எடுக்காமல் கேட்பாரற்ற நிலையில் இருப்பதை நான் இந்த வாரம் 27.08.2023 ஞாயிற்றுக்கிழமை அன்று தோட்டத் தொழிலாளர்களின் குறைகளை கேட்டறிய சென்ற போது காண முடிந்தது.

மாணவர்களுக்கு கரோனா காலத்தில் ஆன்லைன் மூலமாக பாடங்கள் பயிற்றுவிக்கப்பட்டன. ஆனால் மாஞ்சோலை பகுதிகளில் 4ஜி வசதி இல்லாததால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஆன்லைன் மூலமாக கல்வி கற்க முடியாமல் பெருத்த அவதிக்கு ஆளாகினர். இன்று வரையிலும் மாஞ்சோலை பகுதிக்கு 4ஜி சேவை கிடைக்கவில்லை. தோட்ட தொழிலாளர்களின் குடியிருப்புகளில் பழுதடைந்த வீடுகள் பழுது பார்க்கப்படாததால் மேற்கூரை, முன்புற மற்றும் பின்புற வாசல்கள் வழியாக குரங்குகள் வீடுகளில் புகுந்து சமைத்து வைத்த உணவுகளை சாப்பிட்டு விடுகின்றன; அத்துடன் வீட்டில் உள்ள அனைத்து சமையல் பொருட்களையும் சேதப்படுத்தி விடுகின்றன. காலை சமைத்து வைத்துவிட்டு மதியம் உணவு வேளையில் வந்து பார்க்கின்ற பொழுது வெறும் பாத்திரம் மட்டுமே மிஞ்சி இருக்க கூடிய நிலையும், அதனால் தொழிலாளர்கள் பட்டினியுடன் மீண்டும் வேலைக்கு செல்ல வேண்டிய அவலநிலையும் இருக்கிறது. பல வீடுகளில் மின்சார வசதி கூட இல்லை; 90% குடியிருப்புகளில் கழிப்பிடங்களுக்கு கதவுகள் இல்லை. மொத்தத்தில் தொழிலாளர்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கக்கூடிய 180 சதுர அடி கொண்ட ஒரு குடும்பத்திற்கான ஆஸ்பிட்டாஸ் வேயப்பட்ட வீடுகளைக் கூட BBTC நிர்வாகம் முறையாக பராமரித்து தருவதில்லை. தொழிலாளர் நல சட்ட விதிகளின் படி தேயிலைத் தோட்ட நிர்வாகம் கண்டிப்பாக இவற்றையெல்லாம் சரி செய்து தர வேண்டும். இது போன்ற குறைபாடுகளை தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் அடிக்கடி தேயிலை தோட்டங்களுக்கு விஜயம் செய்து நேரடியாக பார்வையிட்டு நிர்வாகத்திற்கு அறிவுறுத்த வேண்டும். ஆனால் எந்த அலுவலரும் பல ஆண்டு காலமாக மாஞ்சோலை பகுதிகளில் தொழிலாளர் குடியிருப்புக்களை மேற்பார்வையிடவில்லை.

தேயிலைத் தோட்டங்கள் வேளாண்மை சார்ந்த தொழிலாகவே அங்கீகரிக்கப்பட்டுள்ளது. நூற்பாலைகளைப் போல அல்லது நவீன தொழில்களை போல தொழிலாளர்களுக்கு Time Scale Pay என்று அழைக்கப்படக்கூடிய கால நிர்ணயம் செய்யப்பட்ட சம்பள விகிதம் செய்து வழங்கப்படுவதில்லை. தினசரி எவ்வளவு சம்பளம் என்பதையே கணக்கிட்டு அவர்கள் மாதத்தில் எத்தனை நாட்கள் வேலை செய்து இருக்கிறார்களோ அத்தனை நாட்களுக்கு மட்டுமே சம்பளம் வழங்கப்படுகிறது. மாதம் ஒருமுறை சம்பளம் வாங்கினாலும் அவர்கள் தினசரி கூலி தொழிலாளர்களே. ஆனால் அவர்களிடத்திலும் professional tax தொழில் வரி என்று 6 மாதத்திற்கு ஒருமுறை ரூ 1000 முதல் ரூ 1500 வரையிலும் வருடத்திற்கு ரூ 3000 வரை மணிமுத்தாறு பேரூராட்சி நிர்வாகத்தில் இருந்து பிடித்தம் செய்கிறார்கள். இது முழுக்க முழுக்க சட்டவிரோதமானது ஆகும்.

வேறு எங்கும் இல்லாத நடைமுறையாக தினசரி கூலி தொழிலாளர்களிடமிருந்து professional tax வசூல் செய்யக்கூடிய அதே மணிமுத்தாறு பேரூராட்சி மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுடைய குடியிருப்புகளின் சுகாதாரத்தை மேம்படுத்துவதற்கு தூய்மை பணியாளர்களை அனுப்பி வைக்க முடியாது என்று மறுக்கிறது.

தோட்டத் தொழிலாளர்களின் சூழ்நிலையை கருதி, 2019 ஆம் ஆண்டு மணிமுத்தாறு அருகே தெற்கு பாப்பான் குளத்தில் 500க்கும் மேற்பட்டவர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இன்று வரையிலும் யார் யாருக்கு எந்த இடம், எவ்வளவு இடம், எந்த பகுதி என்பது குறித்து அப்பகுதி வருவாய் துறை அதிகாரிகளால் அளவீடு செய்து உரியவர்களிடத்தில் வீட்டுமனைகள் ஒப்படைக்கப்படவில்லை.

மிதமிஞ்சிய பனி, மழை, வெயில் ஆகிய அனைத்து இயற்கை சூழல்களிலும் கடுமையாக உழைக்க வேண்டிய ஒரே தொழில் இந்த தேயிலைத் தோட்ட தொழில் மட்டுமே. நமது தமிழக தொழிலாளர்கள் தங்களுடைய வியர்வையையும், இரத்தத்தையும் சிந்துவதாலும் தங்களை முழுமையாக அர்ப்பணித்துக் கொள்வதாலும் மட்டுமே இம்மண்ணையும் தாண்டி உலகெங்கும் பல்வேறு நாட்டு மக்களும் சுகாதாரமான சுவையான உடலுக்கு ஆரோக்கியமான தேநீரை பருக முடிகிறது. ஆனால் அப்படிப்பட்ட தொழிலாளர்களுடைய வாழ்வாதாரம் மேம்படுத்தப்படாமலே இருக்கிறது.

1998 ஆம் ஆண்டை ஒப்பிடும்போது இன்று கிடைக்கும் 430 ரூபாய் சம்பளம் ஒரு தொகையாக கருதப்பட்டாலும் இன்றைய விலைவாசியின் கணக்குப்படி அது குறைவு தான். இன்றைய கால கட்டங்களின் விவசாயத் தொழில் – கட்டுமானத் தொழிலில் ஈடுபடக்கூடியவர்களும் ரூ 950 – ரூ1100 வரை பெறுகிறார்கள். எனவே இவற்றையெல்லாம் கணக்கில் கொண்டு டைம் ஸ்கேல் படி மாதச்சம்பளம் நிர்ணயிக்க வேண்டிய காலம் வந்து விட்டது. இது குறித்து கொள்கை முடிவு எடுக்க அரசுக்கு கருத்துரு அனுப்பி வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். மேலும், இன்றைய சூழலில் மிக மிக அவசியமானதும், அவசரமுமான சில முக்கியமான குறைபாடுகளை பிபிடிசி நிர்வாகமும் அரசும் நிவர்த்தி செய்ய வேண்டியுள்ளது. இவற்றை தோட்ட தொழிலாளர்களின் அடிப்படை உரிமையாகவே கருதுகிறோம்.

மாஞ்சோலை தேயிலைத் தோட்டங்களில் நிலவும் கீழ்க்கண்ட குறைபாடுகளை தாங்கள் நிவர்த்தி செய்ய போர்க்கால அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்க அன்புடன் வேண்டுகிறோம்.

1. மணிமுத்தாறு முதல் மாஞ்சோலை – குதிரை வெட்டி வரையிலும் சாலை புதுப்பிப்பதற்கு ஏற்கனவே நிதி ஒதுக்கப்பட்டும், பணிகள் மேற்கொள்ளப்படவில்லை என்ற தகவல்கள் வருகின்றன. ஒருவேளை அந்த நிதி திருப்பி அனுப்பப்படாமல் இருந்தால் அந்த நிதியை பயன்படுத்தியும்; திருப்பி அனுப்பப்பட்டு இருந்தால் அந்நிதியை திரும்பப் பெற்றும், மேலும் மாநில அரசின் நெடுஞ்சாலை துறை மூலமாகவோ, மாவட்ட ஆட்சியரின் பொது நிதி மூலமாகவோ அல்லது சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்; உள்ளாட்சி பிரதிநிதிகளின் நிதியில் இருந்தோ கூடுதல் நிதி ஆதாரங்களை ஏற்பாடு செய்து ஒட்டுமொத்த 45 கி.மீ தூரத்திற்கும் போர்கால அடிப்படையில் தார்சாலை அமைத்து தர வலியுறுத்துகிறோம்.

2. போக்குவரத்து துறை மூலம் விசாலமான முன்பகுதி படிக்கட்டுகளுடனும் போதுமான இடைவெளியுடன் கூடிய இருக்கைகள் அமையப்பெற்றும் ஏணிப்படியும் கேரியரும் பொருந்திய வசதிகளுடன் கூடுதல் பேருந்துகளை இயக்கவும் வலியுறுத்துகிறோம்.

3. தினசரி கூலித் தொழிலாளர்களான தேயிலைத் தோட்ட தொழிலாளர்களிடமிருந்து தொழில்வரி பிடித்தம் செய்வது சட்டவிரோதமானதாகும். எனவே, இதுவரை வசூல் செய்ததை திருப்பி கொடுக்கவும், இனிமேல் அது போன்று தொழில் வரி பிடித்தம் செய்யாமல் இருக்கவும் மணிமுத்தாறு பேரூராட்சிக்கு தாங்கள் உரிய அறிவுரைகளை வழங்கவும் வலியுறுத்துகிறோம்.

4. கோவிட் காலத்தில் 4G இணையதள இணைப்பு வசதி கொடுக்க வலியுறுத்தி பி.எஸ்.என்.எல் நிர்வாகத்திடம் நாங்கள் பலமுறை முறையிட்டும், பி.எஸ்.என்.எல் நிறுவனம் தயாராக இருந்த போதிலும் வனத்துறை ஒத்துழைப்பின்மை காரணமாக 4G கருவிகளை பொருத்த முடியாமல் போய்விட்டது. எனவே இதன் அவசர அவசியம் கருதி பி.எஸ்.என்.எல் அல்லது வேறு ஏதேனும் ஓர் நிறுவனங்களின் மூலமாக உடனடியாக 4G வசதியை அனைத்து எஸ்டேட் பகுதிகளிலும் செய்து தந்து ஏழைத் தொழிலாளர்களின் குழந்தைகள் கல்வி கற்க உதவிட வேண்டுகிறோம்.

5. 2019 ஆம் ஆண்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு தெற்கு பாப்பான்குளத்தில் வழங்கப்பட்ட வீட்டுமனை பட்டாக்களின் அடிப்படையில் அவரவருக்குண்டான இடத்தை முறையாக அளந்து உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டுகிறோம்.

6. தொழிலாளர்களின் வீடுகளின் மேற்கூரைகள், கதவுகள், கழிப்பறைகளை சரி செய்து, குரங்குகள், காட்டுப்பன்றிகள் மற்றும் பிற விலங்குகளின் தொல்லையிலிருந்து இருந்து மக்களை பாதுகாக்கவும் உடனடி நடவடிக்கை எடுக்க பிபிடிசி நிர்வாகத்தை எடுக்க தொழிலாளர் நலத் துறை அறிவுத்த வேண்டுகிறோம்.

7. மணிமுத்தாறு அணை அருகே உள்ள வனத்துறை நிறுத்தத்தில் மாஞ்சோலை செல்லும் வாகனங்களிடம் கட்டாயப்படுத்தி தொழிற்சங்க பணிகளுக்கு செல்பவர்களிடமும் பணம் வசூல் செய்கிறார்கள். அது எந்த அரசாணையின் உத்தரவின் வசூலிக்கப்படுகிறது? அந்த நிதி என்ன தேவைக்கு பயன்படுத்தப்படுகிறது? என்பது குறித்து தெளிவுப்படுத்தப்படவும்; அந்த கட்டாய வசூலை உடனடியாக தடுத்து நிறுத்தவும் வேண்டுகிறோம்.

8. பிபிடிசி நிறுவனத்திற்கான 99 வருட குத்தகை ஒப்பந்தம் வரும் 2028 ஆம் ஆண்டுடன் முடிவடைகிறது. எண்ணற்ற தொழிலாளர்கள் தேயிலை தோட்டங்களில் தேயிலை பறிக்கும் பணிகளிலும்; தேயிலையை உலர வைக்கும் தொழிற்சாலைகளிலும் பணிபுரிகிறார்கள். அங்கு பணிபுரியக்கூடிய தொழிலாளர்களுக்கு தேயிலை பறிக்கவும், அதை சார்ந்த தொழில்களில் மட்டுமே தேர்ச்சி பெற்றவர்கள் ஆவர். 2028 ஆம் ஆண்டோ அல்லது அதற்கு முன்பாகவோ கூட பிபிடிசி நிர்வாகம் மாஞ்சோலை தேயிலை தோட்டங்களில் இருந்து வெளியேறலாம். அச்சுழலில் பல தலைமுறைகளாக அங்கு வாழக்கூடிய தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க கூடிய பொறுப்பு அரசுக்கு இருக்கிறது. எனவே 2028 ஆம் ஆண்டு குத்தகை காலம் முடிந்தவுடன் தேயிலை தோட்ட தொழிலாளர்களின் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 5 ஏக்கர் வரையிலும் தற்போது உள்ள தேயிலை தோட்டங்களை வழங்கி அவர்களின் பராமரித்து வருமானத்தை பெருக்கிக் கொள்ளவோ அல்லது காய்கறிகளை பயிரிடவோ வழிவகை செய்திட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய, மாநில அரசுகளுக்கு பரிந்துரை செய்ய அன்புடன் வேண்டுகிறோம்.

டாக்டர் க. கிருஷ்ணசாமி MD.Ex MLA,
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
30.08.2022