அக்டோபர் – 6! மெரினா தியாகிகள் நினைவு தினம்!!
அக்டோபர் – 6, சென்னையில், தேவேந்திரகுல வேளாளர் மக்களுடைய மனித உரிமை மீட்புப் போராட்டக் களத்தில் உயிர்நீத்த,
தியாகிகள் சிவஞானம், சுப்பிரமணியம் ஆகியோரை
மனித உரிமை மீட்புப் போராளிகளாக நினைவு கூர்வோம்!!
301 Views
![]()
தேவேந்திரகுல வேளாளர் மக்களுடைய மனித உரிமை மீட்புப் போராட்டக் களத்தில் உயிர்நீத்த தியாகிகள் சிவஞானம், சுப்பிரமணியம் ஆகியோரை மனித உரிமை மீட்புப் போராளிகளாக நினைவு கூர்வோம்!!
1995-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 30, 31 ஆகிய தேதிகளில் கொடியங்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட தேவேந்திரகுல வேளாளர்கள் வாழக்கூடிய கிராமங்களை சூரையாடிய காவல்துறை மற்றும் அன்றைய அரசின் மீது சி.பி.ஐ. விசாரணையை வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சியின் சார்பில் சென்னை மன்றோ சிலையிலிருந்து சீரணி அரங்கம் வரை நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்ட திரிசூலம் சிவஞானம் மற்றும் சுப்பிரமணியம் ஆகியோரை அன்றையக் காவல்துறையினர் சுட்டுப் படுகொலை செய்தனர். துப்பாக்கிச் சூடு நடந்ததைக் கூட மூடிமறைத்து, ’பேரணியில் வந்தவர்களுக்கும் மீனவர்களுக்குமிடையே நடந்த மோதலில் தான் உயிரிழந்தார்கள்’ என்று அன்றைய அரசு அந்த நிகழ்வையும் மூடி மறைத்தது. 6 நாட்கள் தொடர் போராட்டம் நடத்தி, மறுபிரேதப்பரிசோதனை அறிக்கையில், ’துப்பாக்கிக் குண்டுகளால் துளைக்கப்பட்டதால் தான் உயிரிழப்பு ஏற்பட்டது’ என்று சான்று பெற்றப் பிறகே, அவர்களின் உடல்கள் பெறப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டன.
ஜூலை மாதம் 27-ஆம் தேதி வீரசிகாமணியில் துவங்கி, ஏறக்குறைய ஒரு மாத காலம் அன்றைய அரசின் ஆதரவோடு தென் தமிழகம் முழுவதும் கலவர பூமியாக்கப்பட்டது. ஏறக்குறைய 10 மாவட்டங்களில் தேவேந்திரகுல வேளாளர்களுடைய உடைமைகளுக்கும் உயிர்களுக்கும் தொடர் சேதங்கள் விளைவிக்கப்பட்டன. ஒரு தவறை மறைக்க இன்னொரு தவறு என்ற அடிப்படையில், பேரணி நிறைவில் அமைதியாக நிகழ்ந்த பொதுக்கூட்ட நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி, இரண்டு அப்பாவித் தொழிலாளர்களுடைய உயிரைப் பறித்தார்கள். தேவேந்திரகுல சமுதாயத்தினுடைய அடையாளத்தை முற்றாக அழிக்கவும் அவர்களை அடக்கி, ஒடுக்கி நிரந்தர அடிமைப்படுத்தவும் எடுத்த அந்த நடவடிக்கைகள் எதிர்மறை விளைவுகளையேத் தந்தன.
தங்களுடைய அடையாளங்களை மறந்து, பிரக்ஞையற்று வாழ்ந்து கொண்டிருந்த தேவேந்திரகுல வேளாளர்கள், தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பாகவும், புதிய தமிழகம் கட்சியாகவும் எழுச்சி பெற்று ஒருங்கிணைக்கப்பட்டார்கள். தேவேந்திரகுல மக்களை அடக்கவும் ஒடுக்கவும் அரசு எடுத்த ஒவ்வொரு நடவடிக்கையும் தோல்வியில் முடிந்து, அந்த மக்களை மீண்டும் மீண்டும் எழுச்சி பெறச் செய்தன. அக்டோபர் 6-ல் நடந்த துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து, அதே ஆண்டு நவம்பர் மாதம் 6-ஆம் தேதி நடத்தப்பட்ட இரண்டு மணி நேர பந்த் மகத்தான வெற்றியைப் பெற்றது. அதன்பின்பு டிசம்பர் 6 டெல்லியில் போராட்டம், ஜனவரி 6 ஆர்ப்பாட்டம், பிப்ரவரி 6 தமிழகமெங்கும் உண்ணாவிரதம், மார்ச் 6 மதுரையில் மாநாடு என்று ஒவ்வொரு நாளும் தேவேந்திரகுல வேளாளர்களின் எழுச்சியும் ஒற்றுமையும் வலுவடைந்துகொண்டே சென்றன. இன்று, ’தேவேந்திரகுல வேளாளர்’ என்ற தங்களுடைய வரலாற்று ரீதியான அடையாளம் அரசாணையாக்கப்பட்டு இருக்கிறது என்று சொன்னால், 1995-ஆம் ஆண்டு அக்டோபர் 6 அன்று, சென்னையில் நடைபெற்ற மெரினா பேரணிக்கும், அதில் உயிர்நீத்த சிவஞானம், சுப்பிரமணியம் ஆகியோருடைய அளப்பரிய தியாகத்திற்கும் மிகப்பெரிய பங்குண்டு. எந்தவொரு இயக்கமும், சமுதாயமும் அந்த சமுதாயத்தினுடைய விடுதலைக்காகவும், மேன்மைக்காகவும் உழைத்தவர்களையும், அர்ப்பணித்தவர்களையும், தியாகம் செய்தவர்களையும் ஒருக்காலும் மறந்து விடக்கூடாது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். வீரர்களையும் தியாகிகளையும் போற்றுகின்ற சமுதாயமே என்றென்றும் தளைத்தோங்கும்.
அக்டோபர் – 6, சென்னையில், தேவேந்திரகுல வேளாளர் மக்களுடைய மனித உரிமை மீட்புப் போராட்டக் களத்தில் உயிர்நீத்த,
தியாகிகள் சிவஞானம், சுப்பிரமணியம் ஆகியோரை
மனித உரிமை மீட்புப் போராளிகளாக நினைவு கூர்வோம்!!
இப்படிக்கு,
டாக்டர்.க.கிருஷ்ணசாமி, MD, EX.MLA,
நிறுவனர் – தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
06/10/2021.







