வடமாநில தொழிலாளர்கள் விவகாரம் – திமுக இரட்டை வேடம்
கூழுக்கும் ஆசை.! மீசைக்கும் ஆசை.!
பிள்ளையையும் கிள்ளி, தொட்டிலும் ஆட்டிய கதை.!
இரட்டை வேடம் போடலாமா??
445 Views
![]()
வட மாநில தொழிலாளர்கள் தமிழகத்திற்கு வருவது குறித்து சில மாதங்களாக சில YouTube channels மூலம் பெரிய அளவிற்கு விஷம பிரச்சாரம் தமிழகத்தில் நடைபெற்று வந்தது. ’தொழிலாளர்கள்’ என்று கூட அழைக்காமல் ‘வடக்கன்ஸ்’ என்றே சிறுமைப்படுத்தினர். தினமும் பல்லாயிரக்கணக்கானோர் சென்னை சென்ட்ரல், ஈரோடு, கோவை, திருப்பூர் இரயில் நிலையங்களில் அலை அலையாக வந்து இறங்குகிறார்கள் என சமூக வலைதளங்களில் செய்திகள் பரப்பப்பட்டன. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையிலும், கட்ச் வளைகுடா முதல் வடகிழக்கு மாநிலங்கள் வரையிலும் இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் பல மொழி, இனம் சார்ந்தவர்கள் ஏற்கனவே பணி புரிந்தும், நிரந்தரமாக வாழ்ந்தும் வருகிறார்கள்.
தமிழர்கள் டெல்லியில் மட்டும் 15 லட்சத்திற்கும் மேற்பட்டோரும், மும்பை நகரில் தாராவி உள்ளிட்ட பல பகுதிகளில் லட்சக்கணக்கிலும் வாழ்கிறார்கள்; பெங்களூரில் பெருமளவிற்கு தமிழ் மக்கள் தொகை உண்டு; கல்கத்தா, அகமதாபாத், ஹைதராபாத், நாக்பூர், பூனே, காசி, திருவனந்தபுரம் உள்ளிட்ட பல நகரங்களிலும் தமிழ் மக்கள் உண்டு. அதேபோல கோவை, சென்னை, மதுரை, திருப்பூர் உள்ளிட்ட பெருநகரங்களில் ராஜஸ்தான், குஜராத், மேற்கு வங்காளம், பீகார் உள்ளிட்ட பல மாநிலங்களிலிருந்தும் புலம்பெயர்ந்து பன்னெடுங்காலமாக வாழ்கிறார்கள். மதுரையில் சௌராஷ்டிரா மக்கள் தொகை எவ்வளவு பெரியது என்பதை அனைவரும் அறிவர். தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழி பேசுபவர்களுடைய எண்ணிக்கை தமிழகத்தின் பல நகரங்களில் கணிசமாக உண்டு.
தமிழர்கள் கடல் கடந்து இலங்கையிலே பணிபுரிந்தார்கள்; பர்மா, பிஜி, மலேசியா, சிங்கப்பூர், தென்னாப்பிரிக்கா வரையிலும் தமிழர்கள் பணிக்காக புலம்பெயர்ந்தார்கள். 1984 ஆம் ஆண்டு தமிழர் – சிங்களர் மோதல் உக்கிரமாக தீவிரமடைந்த பிறகு, ஏறக்குறைய 15 முதல் 25 லட்சத்திற்கு மேற்பட்ட ஈழத்தமிழர்கள் உலகெங்கும் பல்வேறு நாடுகளுக்கு இடம் பெயர்ந்து இருக்கிறார்கள்.
உணவு, தண்ணீரைத் தேடி பறவைகள் மற்றும் விலங்கினங்கள் தங்களுடைய இருப்பிடங்களிலிருந்து நகர்வது போல, மனித குலமும் தற்காலிகமாகவோ நிரந்தரமாகவோ இடம்பெயர்வதன் அடிப்படையில் வாழ்விடங்கள் உருவாகின; அவைகளே நகரங்களாகவும், நாகரிகங்களாகவும் பரிணாமம் அடைந்து இருக்கின்றன. அதுவே வரலாறு.! உணவு மற்றும் நீர்ப் பற்றாக்குறைகளும்; 15 ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு கடல் வழிப் பயணங்கள், தொழில் வளர்ச்சிகள், யுத்தங்கள் போன்றவை பல்வேறு நாடுகளுடைய எல்லைகளையே மாற்றிப் போட்டு இருக்கிறது. முதல் மற்றும் இரண்டாம் உலகப் போரில் பல தேசங்கள் அடையாளமே இல்லாமல் போயிருக்கிறது, புதிய தேசங்கள் உருவாகி இருக்கிறது. துனிசியா, எகிப்து, ஈரான், ஈராக், லிபியா, சிரியா போர்களும்; பாலசீன போர்களும்; தற்போது நடைபெற்று வரும் ரஷ்யா – உக்ரைன் போரும் லட்சக்கணக்கானோரை தாங்கள் பெருமையோடு வாழ்ந்த தேச முகவரிகளை விட்டுவிட்டு, வேறு தேசங்களில் தஞ்சம் புகும் நிலையை ஏற்படுத்தியுள்ளது.
“The sun never set on the British Empire” சூரியன் அஸ்தமிக்காத ஏகாதிபத்தியம் என்று அழைக்கப்பட்ட பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் இங்கிலாந்து தேசம் ஒரு காலத்தில் நூற்றுக்கு நூறு கிறிஸ்தவர்களால் நிரப்பப்பட்டு இருந்தது. ஆனால், ஐரோப்பா மற்றும் ஆசியா கண்டங்களில் ஏற்பட்ட யுத்தங்களால் அந்நாடுகளிலிருந்து அகதிகளாக வரக்கூடியவர்களுக்கு இங்கிலாந்து போன்ற நாடுகள் சரணாலயங்களாக அமைந்தன. நூற்றுக்கு நூறு கிறிஸ்தவர்களாக இருந்த இங்கிலாந்தில் இன்று 10-க்கும் மேற்பட்ட மேயர்களை உருவாக்கும் அளவிற்கு இஸ்லாமியர்கள் வசிக்கும் பகுதியாக மாறி இருக்கிறது. அமெரிக்க நாட்டின் மெக்சிகோவிலிருந்து லட்சக்கணக்கானோர் இடம்பெயர்கிறார்கள். ட்ரம்ப் ஆட்சிக் காலத்தில் மெக்சிகோவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே மிகப்பெரிய தடுப்புச்சுவரை கட்ட முடிவெடுத்திருந்தார். எனினும் அவர்களுடைய வருகையைத் தடுத்து முடியவில்லை. இந்தியா அண்மை காலமாக பல்வேறு துறைகளில் முன்னேற்றத்தைக் கண்டாலும், இந்தியக் குடியுரிமையைத் துறந்து, இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்சு, ஆஸ்திரேலியா, ஜப்பான், கனடா போன்ற நாடுகளுக்கு ஆண்டுக்கு 5-10 லட்சம் பேர் புலம்பெயர்கிறார்கள்.
உலகெங்கும் இப்பொழுது புலம்பெயர்வது என்பது வேகமாக நடைபெறுகிறது. அதிலும் கடந்த 2019-2020 ஆம் ஆண்டு கரோனா தாக்குதலுக்குப் பிறகு, மக்கள் அச்சத்தாலும், அவநம்பிக்கையாலும் சொந்த தேசத்தை விட பிற தேசம் பாதுகாப்பானதாக இருக்கும்? என்று கருதி தினம் தினம் இடம் பெயர்ந்து கொண்டே தான் இருக்கிறார்கள்.!
உலக நாடுகளின் தலைவர்களாலோ, தனது கடமையிலிருந்து குறுகிப் போன ஐ.நாவாலோ, நோபல் பரிசு பெறக்கூடிய பொருளாதார மேதைகளாலோ ’என்றும் இல்லாத அளவிற்கு அண்மை காலமாக மக்கள் மத்தியில் புலம்பெயரும் சூழல் உருவானது’ குறித்து ஆராயவோ, அது குறித்து கருத்துக்கள் பரிமாற்றம் செய்யவோ, தீர்வு காணவோ நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை.
எனவே, உலகெங்கும் நடைபெறும் புலம்பெயர்தலின் ஒரு பகுதியாகத்தான், இப்பொழுது பல மாநிலங்களிலிருந்தும் தமிழகத்தை நோக்கி ஏழைத் தொழிலாளர்களின் வருகையும் நிகழ்கிறது. இப்பொழுதெல்லாம் ஆர்ப்பாட்டம் தேவையில்லை, போராட்டம் தேவையில்லை, சிறை செல்ல வேண்டிய அவசியம் இல்லை, கல்லடி – சொல்லடி பட வேண்டிய அவசியம் இல்லை. சில ஆயிரம் ரூபாயில் ஒரு YouTube சேனல் தொடங்கி, பரபரப்புக்குரிய ஒரு செய்தியை வெளியிட்டாலே புகழ்பெற்றும் விடலாம்; செல்வந்தர் ஆகியும் விடலாம் என்ற சூழலில், பரபரப்பு செய்திக்காகவும், விசமத்தனத்துடனும் பல்லாண்டு காலமாக தொடர்ந்து நடைபெற்று வரக்கூடிய ’வாழ்வாதாரத்திற்கான புலம்பெயர்தலை’ கொச்சைப்படுத்துகிறார்கள்; அவமானப்படுத்துகிறார்கள்.
சென்னை சென்ட்ரல், கோவை ரயில்வே நிலையங்களில் ராஜஸ்தான், மேற்கு வங்கம், பீகாரிலிருந்து பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் தமிழகத்திற்கு வருகிறார்கள் என்று கூக்குரலிடக்கூடியவர்கள் சென்னையில் இருக்கக்கூடிய American Embassy, British Embassy போன்ற தூதரகங்களில் மழையிலும் வெயிலிலும் கால் கடுக்க நின்று விசா பெற்று பல்லாயிரக்கணக்கான பட்டதாரிகள் நம்முடைய இந்த செல்வம் கொழிக்கும் தமிழகத்திலிருந்து மேற்படிப்பு / வேலைவாய்ப்பு என்று மேலைநாடுகளுக்குப் புலம்பெயர்கிறார்களே, அதேபோல எண்ணற்ற தமிழக இளைஞர்கள் கட்டிட பணிகளுக்கும், துப்புரவு பணிகளுக்கும், வீட்டுப்பணிகளுக்கும் உயர் பணிகளுக்கும் அரபு நாடுகளுக்குப் புலம்பெயர்கிறார்களே? அவர்கள் வயிற்றுப் பிழைப்புக்கும் அல்லது நல்லதொரு வாழ்வைத் தேடியும் தானே புலம் பெயர்கிறார்கள்? அது எல்லாம் இந்த காமாலைக் கண்ணுடையவர்களுக்கு புலப்படாமல் போனது ஏன்?
”என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்” எனப் பெருமை பேசுவோர், சோழர் பெருமை பேசுவோர் தாங்கள் படித்த படிப்பின் அடிப்படையில் இந்த தமிழ்நாட்டை வளப்படுத்துவதற்கு பதிலாக தமிழ்நாட்டை விட்டு சிங்கப்பூர், அமெரிக்கா, போன்ற வெளிநாடுகளுக்கு இடம்பெயர்வது ஏன்? மகன், மகள், பேரன், கணவர் அமெரிக்காவின் இந்த மாகாணத்தில் இருக்கிறார்; லண்டனில் இருக்கிறார்; ஜெர்மனியில் இருக்கிறார்; சிங்கப்பூரில் இருக்கிறார்; துபாயில் இருக்கிறார்; கர்த்தாரில் இருக்கிறார்; குவைத்தில் இருக்கிறார்; மஸ்கட்டில் இருக்கிறார்; சவூதியில் இருக்கிறார்; அந்த நாட்டில் இருக்கிறார், இந்த நாட்டில் இருக்கிறார் என்று பெருமிதம் அடையும் நிலை இருக்கிறதே, இவையெல்லாம் இந்த தி – ஸ்டாக்கிஸ்டுகளுக்கும், வறட்டு சித்தாந்த – த – தேசியவாதிகளுக்கும் தெரியாமல் போனது ஏன்?
நியூயார்க் மெட்ரோ ரயில்வேக்கு இணையாக தமிழகத்தில், சென்னை மற்றும் மதுரை, கோவை, திருச்சிக்கு மெட்ரோ வேண்டும்; பல்லடுக்கு மேம்பாலம் வேண்டும் என ஆசைப்படுகிறார்கள். மெட்ரோ பாதை அமைக்க பூமிக்கு 100 அடி ஆழத்திற்கு கீழே சுரங்கப்பாதைகளை தோண்டுவதற்கு உயிரைப் பணயம் வைத்து இரவும் பகலும் பணிபுரிய எத்தனை தமிழர்கள் தயாராக இருக்கிறார்கள்? நாம் சென்னை அண்ணா சாலையிலும், பூந்தமல்லி சாலையிலும் செல்கின்ற பொழுது இரும்பு தொப்பிகளை மாட்டிக் கொண்டு, பாலம் கட்டும் பணியில் வடமாநிலத் தொழிலாளர்கள் ஈடுபட்டுக் கொண்டு இருக்கிறார்களே அவர்களைப் பற்றி எல்லாம் நாம் என்றாவது ஒருநாள் கவலைப்பட்டதுண்டா? சிந்தித்துப் பார்த்ததுண்டா? அவர்களுடைய தியாகங்களை, கஷ்டங்களை உணர்ந்ததுண்டா? சென்னை உட்பட பெருநகரங்களில் விண்ணை எட்டும் அளவில் நூற்றுக்கணக்கான அடுக்குமாடிக் குடியிருப்புகள் எழுந்திருக்கின்றனவே, அவையெல்லாம் யாரை வைத்து எழுப்பப்பட்டது? எத்தனை சதவிகித தமிழர்கள் அதிலே பணி புரிந்தார்கள்?
10-15 வருடங்களுக்கு முன்பு வரையிலும், திருப்பூர் மாநகரில் இருக்கக்கூடிய பின்னலாடை தொழில் நிறுவனங்களே தென் மாவட்டங்களில் இருக்கக்கூடிய இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு மையமாக இருந்தது. இப்பொழுது அவர்களுடைய எண்ணிக்கை பெருமளவிற்குக் குறைந்து போனது. அந்த இடத்தை தமிழக இளைஞர்கள் விட்டுக் கொடுத்தது ஏன்? விஞ்ஞான விதிகளின்படி, வெற்றிடம் என்று எதுவும் இருக்காது. அதை ஏதோ ஒன்று நிரப்பிக் கொண்டே இருக்கும். குறிப்பிட்ட காலத்தில், குறிப்பிட்ட நேரத்தில், குறிப்பிட்ட நாடுகளுக்கு தங்களுடைய உற்பத்தி பொருட்களை அனுப்ப வேண்டும் என்ற நிர்ப்பந்தத்திற்கு ஆளான உற்பத்தியாளர்கள் எப்படியாவது தங்களுடைய பணி முடிந்தால் போதும் என்ற நிலையில் தானே, பிற மாநிலங்களிலிருந்து வரக்கூடியவர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கிறார்கள்.
விவசாயப் பணிகளுக்கும், சாதாரண கட்டிட பணிகளுக்கும் தமிழகத்தில் ஆட்கள் கிடைப்பதில்லை. எல்லா தொழில்களுமே திறன் மிக்க தொழிலாளர் பற்றாக்குறையின் காரணமாக முடங்கப்படக்கூடிய சூழலில், தமிழகத்தில் வேலை வாய்ப்புக்கள் இருக்கிறது என்று தெரிந்த பிறகு தானே, பிற மாநிலங்களிலிருந்து இங்கு பணிகளுக்காக இடம்பெயர்கிறார்கள்?
பிற மாநிலங்களிலிருந்து வரக்கூடிய தொழிலாளர்களால் எப்படி தமிழக தொழிற்சாலைகளில் வேலைவாய்ப்பைப் பெற முடிகிறது? அங்கே தான் எல்லா சூட்சமும் ஒளிந்தும், மறைந்தும் கிடக்கிறது. தமிழ்நாடு அளவிற்கு நூற்றுக்கணக்கான கல்வி நிலையங்கள் பீகாரில் இல்லை; ராஜஸ்தானில் இல்லை; உத்திர பிரதேசத்தில், மத்தியப் பிரதேசத்தில் இல்லை தான். ஆனால் குறைந்த படிப்புடன் அங்கிருந்து வருபவர்கள் கார்பெண்டர், எலெக்ட்ரிக்கல், பிளமிங்க், கம்பி கட்டும் வேலையை எளிதாகச் செய்கிறார்கள், கட்டிட வேலை – டைல்ஸ் பதிக்கும் பணி, பியூட்டி பார்லர்கள் என வேறு எந்த பணியைக் கொடுத்தாலும் அந்தப் பணியைத் துல்லியமாக அவர்களால் செய்ய முடிகிறது.
தமிழகத்தில் எண்ணற்ற லட்சக்கணக்கான பட்டதாரிகள் உண்டு. ஆனால், தொழில், வணிக நிறுவனங்களுக்கு தேவையான திறன்கள் இல்லை. அரசாங்கத்தில் ஒரு தலையாரி வேலை என்று சொன்னால் ஆயிரக்கணக்கான எம்.ஏ பட்டதாரிகளும், பி.எச்.டி பட்டதாரிகளும் விண்ணப்பிக்கிறார்கள். எட்டாம் வகுப்பு படித்தால் போதும் என்ற தகுதியுடைய நியாயவிலைக்கடை நிலுவையாளர் பணிக்கு எம்.எஸ்.சி, எம்.எட் படித்த பட்டதாரிகள் விண்ணப்பிக்கிறார்கள். 50 பணியிடங்களுக்கு ஐம்பதாயிரம் பட்டதாரிகள் விண்ணப்பிக்கிறார்கள். ஒரு பணியிடத்திற்கு ஆயிரம் பேர் போட்டிப் போடுகிறார்கள். ஆனால், இதற்கும் சம்பளம் பெரிய அளவில் இருப்பதில்லை. ஆனால், ஆயிரம் ரூபாய் கொடுக்கிறோம் என்று சொன்னாலும் கட்டிட பணிகளான மேசன், கார்பெண்டர், எலக்ட்ரிக்கல், வெல்டிங், பிளம்பிங் உள்ளிட்ட எவ்விதமான பணிகளுக்கும் தமிழகத்தில் ஆட்கள் கிடைப்பதில்லை.
அதற்கு மிக முக்கிய காரணம் உண்டு. ஏறக்குறைய நூறாண்டு காலமாக தமிழகத்தில் ”திறன் வளர்ப்பிற்கு” எதிராக மேற்கொள்ளப்பட்ட விசம பிரச்சாரமும், அதனை ஒட்டி உருவாக்கப்பட்ட கல்வி நிலையங்களுமே.! அவை ஏட்டளவிற்கான பட்டதாரிகளை உருவாக்கிக் கொடுக்கிறதே தவிர, Life Skill திறனாளிகளை உருவாக்கித் தரவில்லை. அதற்கான பாடத்திட்டமோ, கல்வி நிலையங்களோ தமிழகத்தில் உருவாகவில்லை. பட்டம் பெற்றால் போதும், திறனாளிகளாக இருக்கத் தேவையில்லை. அதுவே 1967க்கு பிறகு, தமிழ் மாநிலத்தில் அமைந்த அரசுகளின் கொள்கையாக இருக்கிறது.
1952-ஆண்டு ராஜாஜி அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது ”மாணவப் பருவத்திலேயே கல்வியையும் தொழிலையும் கற்றுக் கொள்ள வேண்டும்” என்ற ஒரு உயரிய சிந்தனையோடு சொன்ன கருத்தைத் திராவிட திரிபு வாதிகள் ராஜாஜியின் திட்டம் ’குலக்கல்வி திட்டம்’ எனக் கொச்சைப் படுத்தி, ”முடி திருத்துபவரின் மகன் முடித் திருத்தும் தொழில்தான் கற்றுக் கொள்ள வேண்டும்; வண்ணத் தொழிலாளியின் மகனை வண்ணத் தொழிலாளியாக இருக்கச் சொல்கிறார் ராஜாஜி” என்றெல்லாம் பொய் பிரச்சாரங்களைக் கட்டவிழ்த்துவிட்டு, தமிழகத்தில் தொன்று தொட்டு இருந்த தொழில் மற்றும் ஆயக்கலைகள் 64-ல் பெரும்பாலானவை வேரறுக்கப்பட்டு விட்டன.
உலகத்தின் எந்த நாட்டிலும் வாழ்க்கைக்கு தேவையான திறனைக் கொச்சைப்படுத்தி பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படவே இல்லை. திராவிடத்தின் பெயரால் தமிழகத்தின் பல தலைமுறைகள் எத்திறனும் அற்றவர்களாக, காகிதப் பட்டங்களை கையிலேந்தி வேலை தேடி அலையும் கூட்டங்களாக உருவாக்கப்பட்டிருக்கிறார்கள். ஐயோ! ஐயோ! வடக்கன் வந்து விட்டான்; கிழக்கன் வந்து விட்டான்; மேற்கன் வந்து விட்டான் என்று சக பாரதத் தாயின் சகோதரர்களைக் கொச்சைப்படுத்தியும், குறைத்துப் பேசியும் என்ன பலன் கிடைத்தது? இதே நிலை நீடித்தால் தமிழக இளைஞர்கள் சொந்த மண்ணிலேயே வேலை தேடி அலையும் நாள் வெகு தொலைவில் இல்லை.
ஓருயிர் உயிரினம் முதல் ஆறறிவு படைத்த மனிதர்கள் வரை தங்களிடத்தில் இருக்கக்கூடிய ஏதாவது தனித் திறன் வாயிலாக மட்டுமே உயிர் வாழ முடிகிறது. தமிழகத்தில் வீண் பெருமை பேசி, தகுதி வளர்த்துக் கொள்வதை, திறனாளி ஆவதையே தாழ்வாகப் பார்க்கக்கூடிய ஒரு கேவலமான அரசியல் கடந்த 60 வருடங்களாக தமிழகத்திலே தலை தூக்கி விட்டது.
சிறிய நிறுவனமோ, பெரிய நிறுவனமோ தங்களுடைய கைக்கெட்டும் தூரத்தில், தங்களுக்கு தேவையான பணிகளைச் செய்து கொடுக்கக் கூடிய திறமையானவர்கள் கிடைக்கக்கூடிய பட்சத்தில், அவர்களை விடுத்து எதற்கு வேறு மாவட்டம், மாநிலம், நாட்டிலிருந்தோ ஆட்களைத் தேடப் போகிறார்கள்? தமிழக இளைஞர்கள் எதார்த்தத்தைப் புரிந்துகொள்ளத் தயாராக இல்லை. எனினும் தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் Coastal Energen போன்ற சில பெரிய நிறுவனங்கள் மேல்நிலைப் பணிகளுக்கு பிற மாநில தொழிலாளர்களையும், அடிமட்ட பணிகளுக்கு உள்ளூர்-தமிழ் தொழிலாளர்களையும் வேலைக்கு அமர்த்தும் வேறுபாட்டுடனான நிலைகளையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்; இதற்கு ஒரு தீர்வு வேண்டும்.
இலட்சக்கணக்கிலே வெளி மாநிலத்தவர் தமிழ்நாட்டிற்குள் நுழைந்து விட்டால் தமிழகத்துடைய இளைஞர்கள் – பெண்களின் எதிர்காலம் என்னவாகும் என்று கேள்வி எழுப்பினால் மட்டும் போதுமா? வெறுமனே பிற மாநிலத்துக்காரர்கள் மீது வெறுப்பை உமிழ்ந்து கொண்டிருந்தால் மட்டும் வெற்றி அடைய முடியுமா? போட்டிகள் நிறைந்த இந்த உலகத்தில் உயர்வான நிலைக்குச் செல்ல தயாராக இருக்கிறோமா? சனிக்கிழமை சம்பளம் வாங்கினால் ஞாயிற்றுக்கிழமை, திங்கட்கிழமை, செவ்வாய்க்கிழமை என மூன்று நாட்கள் விடுமுறை எடுத்துக் கொண்டு வாரத்தில் நான்கு நாட்கள் மட்டுமே பணி செய்தால் எந்த நிறுவனம் உருப்பட முடியும்?
திராவிட வாதிகள் கடந்த அறுபது ஆண்டு காலமாக ”வடக்கு வாழ்கிறது; தெற்கு தேய்கிறது” என்ற பிரச்சாரம் செய்தே பாரத தேசத்தினுடைய மக்களிடையே பிளவை உருவாக்கி, வெறுப்பை விதைத்து, அரசியல் லாபம் அடைந்தார்கள். என்றோ தூவிய திராவிட பிரிவினை வாதம் இன்று வரை ஒழிந்த பாடில்லை. அப்பாக்கள் ’திராவிட ஸ்டாக்கிஸ்ட்’ பேசுகிறார்கள்; மகன்கள் வடக்கன் – தெற்கன் என்ற தமிழ் தேசிய பிரிவினை விஷ விதையை ஊன்றுகிறார்கள். அன்று தூவிய ’தனி நாடு’ கோஷமும், இன்று விதைக்கப்படும் தமிழ் தேசிய கோஷமும் தான் இன்று வட மாநில தொழிலாளர்களுக்கு எதிராகக் களம் அமைத்துக் கொடுத்திருக்கிறது. தமிழக இளைஞர்களுக்கு கூழுக்கும் ஆசை! மீசைக்கும் ஆசை.!! தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய வேலைவாய்ப்புகளுக்குத் தகுதி வாய்ந்தவர்களாக தங்களையும் தயார்ப்படுத்திக் கொள்ள தமிழக இளைஞர்கள் தயாராகவும் இல்லை; இருக்கக்கூடிய வேலைவாய்ப்புகளைப் பயன்படுத்துவதற்கு முன்வருவதும் இல்லை. அந்த இடத்தில் வேறு யாராவது வந்து பணியைச் செய்தால் அதை ஏற்றுக்கொள்ளும் மனநிலையும் இல்லை. இதற்கு பெயர்தான் கூழுக்கும் ஆசை.! மீசைக்கும் ஆசை என்பது.!
”பிள்ளையையும் கிள்ளுவார்கள் – தொட்டிலையும் ஆட்டுவார்கள்” என்பது பழமொழி. அமைச்சர் பெருமக்களும், கூட்டணி கோஷ்டிகளும், யூடியூப்பர்களும் கடந்த சில மாதங்களாகவே வட மாநில தொழிலாளர்களுக்கு எதிராக பிரச்சாரம் செய்வது ஆட்சியாளர்களின் கவனத்திற்கு வராமலா போயிருக்கும்? “இந்தி பேசும் இளைஞர்களை தமிழ்நாட்டு வேலைக்குள் நுழைப்பது மூலமாக பாஜகவை வளந்த்துவிடலாம் எனச் சூழ்ச்சி செய்து கொண்டு இருக்கிறார்கள்; அதை பழனிச்சாமி கும்பல் வேண்டுமென்றால் வேடிக்கை பார்க்கலாம்; அதை திமுகவோ, தமிழக மக்களோ வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கமாட்டார்கள்” என எதிர்க்கட்சி தலைவராக இருந்த போது திருவண்ணாமலை பிரச்சாரத்தில் பேசிய போதும்; ”தமிழ்நாட்டில் உள்ள வணிகர்கள் மட்டுமே மாநிலம் முழுவதும் வணிகம் செய்ய வேண்டும்; வட மாநிலத்தவர்களைத் தமிழ்நாட்டிலிருந்து அப்புறப்படுத்த தமிழக வணிகர்கள் முன்வர வேண்டும்” என்று அமைச்சர் மூர்த்தி பேசியபோதும்; ”இந்தி படித்தால் கோயம்புத்தூரில் பாணி பூரி தான் விற்கலாம்” என அமைச்சர் பொன்முடி பேசியபோதும்; வெளிமாநில தொழிலாளர்களின் பணிகள் குறித்து தயாநிதி மாறன் சிறுமைப்படுத்திப் பேசிய போதும்; ”தமிழக வேலை தமிழருக்கே! வட இந்தியனை வெளியேற்று” எனக் கூட்டணி கட்சியினர் பிரிவினை வாத சுவரொட்டி பிரச்சாரங்களை மேற்கொண்டபோதும்; ”வட இந்தியர்கள் தமிழர்களை விரட்டி விரட்டி அடிப்பார்கள், அப்போது என்னைத் தேடுவீர்கள்” என கருந்தமிழர் பேசியபோதும் மாநில அரசு என்ன செய்து கொண்டு இருந்தது? அவர்கள் ஏன் கண்டிக்கப்படவில்லை? அவர்கள் மீது ஏன் வழக்குகள் பதிவு செய்யப்படுவதில்லை?
இப்பொழுது இந்த பிரச்சனை தமிழகத்தையும் தாண்டி அகில இந்திய அளவிற்கு ஒரு மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுக்கப் போகிறது எனத் தெரிந்தவுடன், இப்பொழுது வேகமாக சில அறிக்கைகள் ’இந்தியிலே’ வருகின்றன. திராவிட இனவாதம் பேசுவது, திராவிட ஸ்டாக்கிஸ்ட் பேசுவது, இந்திய ஒருமைப்பாட்டுக்கு எதிராக ’ஒன்றிய அரசு’ பேசுவது போன்றவற்றின் விளைவுகள் தான் இன்று புற்றீசல் போல தங்களுடைய கூட்டணி கோஷ்டிகளும், ஆதரவு யூடியூப் சேனல்களும் பிற மாநில தொழிலாளர்களுக்கு எதிரான வஞ்சக பிரச்சாரங்களை மேற்கொள்ளச் செய்து இருக்கிறது. ஒரு பக்கம் உள்ளூர சந்தோஷம் கொள்வதும், உற்சாகப்படுத்துவதும், ஆதரவு கொடுப்பதும்; இன்னொரு பக்கம் வேறு விதங்களில் எதிர்ப்புகள் வந்தவுடன் வேகமாக பின் வாங்கிக் கொண்டு, இங்கு வட மாநில தொழிலாளர்கள் மீது எவ்விதமான தாக்குதல்களும் இல்லை என்று ’இந்தியில்’ பதில் உரை அளிப்பது. இதற்குப் பெயர்தான் ’இரட்டை வேடம்’ என்பது!
ஒன்றை நிறைவாக சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். மதவாத பூச்சாண்டி காட்டி தமிழக இளைஞர்கள் மனிதநேயத்திற்கு எதிராக, சகோதரத்துவத்திற்கு எதிராக, பிரிவினைவாத சிந்தனையோடு வளர்க்கப்படுகிறார்கள். அதிலிருந்து தமிழக மக்கள் – தமிழக இளைஞர்கள் தங்களை விடுவித்துக் கொள்ள வேண்டும். தமிழ் மொழியினுடைய அடையாளம் – தமிழர்களுடைய அடையாளம் திராவிடத்தால் தான் அழிக்கப்படுகிறது என்பது கூட புரியாமல் ”வடக்கன் – தெற்கன்” என்று தூண்டிவிடுகிற’ திராவிட சதி’ வலையில் தமிழ் இளைஞர்கள் விழுந்து விடக்கூடாது என்பதே அனைவரது எதிர்பார்ப்பு ஆகும்.
தமிழகத்திற்கு வேலைக்கு வராத போது பீகார் காரர்களோ, ராஜஸ்தான் காரர்களோ பட்டினி கிடந்து இறந்து விடவில்லை. தமிழகத்தைக் காட்டிலும் வற்றாத ஜீவநதிகள் உத்தரப்பிரதேசத்திலும், பீகாரிலும், மேற்கு வங்கத்திலும் உண்டு என்பதை தமிழ் மக்கள் மறந்து விட வேண்டாம்.! கடந்த கால போர்களும், இயற்கை சீற்றங்களும் தான் வடமாநிலங்களின் வளர்ச்சிக்கு முற்று கட்டைகளாக இருந்தன. தமிழகத்தில் உள்ள ஒருவர் வேலைக்குச் செல்லும்போது ஜாதி பார்க்கிறோம், மதம் பார்க்கிறோம், ஆனால் பிற மாநிலத்திலிருந்து வரக்கூடியவர்களிடம் சாதி பார்ப்பதில்லை, மதம் பார்ப்பதில்லை. அவர்கள் வேலை பார்த்துக் கொடுத்தால் போதும் என்ற ’சமத்துவம்’ உருவாகி இருக்கிறது. இன்று நமது நிலத்தை வளப்படுத்த; நமது வீட்டைச் சுத்தப்படுத்த; வீடு, தொழிற்சாலைகளைக் கட்டிக் கொடுக்க; நமது தொழிற்சாலைகளில் தொழிலை மேம்படுத்த வரக்கூடியவர்களை நம்முடைய விருந்தினர்களாக ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் கூட விரோதிகளாகப் பார்க்காதீர்கள் என்பதே நமது வேண்டுகோள்.!
இப்படியே பிற மாநிலங்களிலிருந்து வரக்கூடியவர்களால் தமிழகத்தில் உள்ள எல்லா வேலை வாய்ப்புகளும் பறி போய்விட்டால் தமிழக இளைஞர்களின் கதி என்னாகும் என்ற அச்சம் நியாயமாகவும், உண்மையாகவும் கூட இருக்கலாம், அப்படி ஒரு அபாயகரமான சூழல் உருவாகும் என்ற நிலை வரும் என இளைஞர்கள் கருதினால் கீழ்க்கண்ட சூழல்களுக்கு தங்களைத் தயார்ப்படுத்த ஆயத்தமாகிக் கொள்ளுங்கள்.!
முதலில் தமிழக இளைஞர்கள் குடிப்பழக்கத்திலிருந்து வெளியேறுங்கள்!
உழைப்பின் பலன், மதிப்பு என்ன என்பதை புரிந்து கொள்ளுங்கள்.!
கல்லூரி பட்டங்களால் மட்டும் வேலை வாய்ப்புக்கள் கிடைக்காது.! பள்ளி – கல்லூரி படிக்கும் போதும், படித்த பிறகும் குறைந்தது இரண்டு மூன்று திறன்களில் Life Skill மேம்பட்டவர்களாக்கிக் கொள்ளுங்கள்!
தங்களுடைய சொந்த ஊரில், பகுதியில் எந்த வேலை கிடைத்தாலும் எந்த பணியும் உயர்வானதும் அல்ல, தாழ்வானதும் அல்ல என்ற அடிப்படையில் குடும்ப பற்றோடு, கிராம பற்றோடு, பகுதி பற்றோடு, தேசப்பற்றோடு எந்த பணிகளையும் செய்ய உங்களை ஆயத்தப்படுத்திக் கொள்ளுங்கள்! அதைவிடுத்து நம்முடைய மேம்பாட்டிற்காக உழைக்க வரக்கூடிய தொழிலாளர்கள் மீது விசம பிரச்சாரங்களை உமிழாதீர்கள்.
நம்மை போல விஷம பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு டெல்லியிலிருந்தும், பம்பாயிலிருந்தும், கல்கத்தாவிலிருந்தும், உலகின் பல்வேறு பகுதியிலிருந்தும் தமிழர்கள் விரட்டியடிக்கப்பட்டால் தமிழர்களின் நிலை என்னவாகும் என்பதை மட்டும் ஒரு கணம் எண்ணிப் பாருங்கள்!
வடக்கன், தெற்கன், கிழக்கன், மேற்கன் என்ற வெறுப்புப் பிரச்சாரங்களை விட்டொழியுங்கள்!
எல்லோரையும் சகோதரர்களாகப் பார்க்கும் மனப்பாங்கை வளர்த்தெடுங்கள்!
எல்லோரும் பாரதத் தாயின் புதல்வர்கள் என்பதை மனதில் நிறுத்திக் கொள்ளுங்கள்!!
மது, போதை, புகைப் பழக்கங்களை அறவே தவிர்த்து; தனித்திறன்களை வளர்த்து; விவசாயமோ, கட்டிடப் பணியோ, தையல் பணியோ, பொறியியல் பணியோ, உயர் பதவிகளோ எப்பணி ஆகினும் அது நமது நாட்டின் வளர்ச்சி! அதுவே நமது வீட்டின் வளர்ச்சி!! என்ற முற்போக்கு சிந்தனையோடு செயல்படுங்கள்!! அதுவே நம்மையும் உயர்த்தும்! நமது பாரத தேசத்தையும் உயர்த்தும்!!
தமிழக இளைஞர்களே.!
வடக்கன், தெற்கன், கிழக்கன், மேற்கன் என்ற வெறுப்புப் பிரச்சாரங்களை விட்டொழியுங்கள்!
பல்வகை Life Skill வாழ்க்கை திறன்களை வளர்த்துக் கொள்ளுங்கள்.!!
டாக்டர் க. கிருஷ்ணசாமி MD.Ex MLA,
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
06.03.2023






