மதுரை விமான நிலைய சம்பவத்தில் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் மீது பதியப்பட்டுள்ள வழக்கு எவ்விதத்திலும் நியாயமானதல்ல!
387 Views
![]()
மதுரை விமான நிலைய சம்பவத்தில் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் மீது பதியப்பட்டுள்ள வழக்கு எவ்விதத்திலும் நியாயமானதல்ல!
அவ்வழக்கை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்!!
தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அஇஅதிமுக இடைக்கால பொதுச் செயலாளருமான சகோதரர் எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்கள் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு, கட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக சிவகங்கை மாவட்டம் சென்ற பொழுது, மதுரை விமான நிலையத்தில் அவருக்கு எதிராக எழுப்பிய அவதூறு கோசமும், எடப்பாடி அவர்கள் மீது பதியப்பட்டுள்ள வழக்கும் கண்டனத்திற்குரியது.
தலைவரோ, சாதாரண பிரஜையோ எவராயினும் விமானத்தில் பயணிக்க விமான நிலையத்திற்குள் நுழைந்தது முதல் வெளியே வருகின்ற வரையிலும் அவர்களது பாதுகாப்பை விமான நிலையமும், விமான நிர்வாகமுமே ஏற்றுக் கொள்கிறது. ஏனெனில், ஒவ்வொரு பயணியும் சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்பட்ட உடைமைகளை தவிர, அவர்கள் நிராயுதபாணிகளே.!
விமானம் ஏறுவதற்கு முன்பும், இறங்கிய பின்னரும், விமானத்திற்குள்ளும் அரசியல் மற்றும் சமூக தளங்களில் பிரபல்யமானவர்களை பலர் நெருங்கி வந்து தங்களை அறிமுகம் செய்து கொள்வதும், செல்ஃபி புகைப்படம் எடுத்துக் கொள்வதும் அண்மை கால நடவடிக்கைகள். இவைகள் எல்லாம் மனித நேயத்தோடு நடந்திடும் அன்றாட நிகழ்வுகள். விமானத்தில் பயணிப்போர் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட முறையில் அரசியல் கருத்துக்கள் இருக்கலாம். தங்கள் கருத்துக்களோடு ஒத்துப் போகக்கூடிய சக பயணிகளோடு அல்லது பிரமுகர்களோடு அதிக நேரம் சம்பாசனையில் ஈடுபடுவது எதார்த்தம். தங்கள் கருத்துக்களுக்கு மாற்றுக் கருத்துக்கள் உடையவர்களோடு யாரும் பெரும்பாலும் பேசமாட்டார்கள். ஒருவேளை நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டால் சம்பிரதாயத்திற்காக வணக்கம் சொல்லுவது நாகரீகம்.
ஆனால், அண்மை காலமாக மாற்றுக் கருத்து கொண்டுள்ள அரசியல் தலைவர்கள் விமானத்தில் பயணிக்கின்ற பொழுது விமான நிலையத்தையும், விமானத்தையும் அரசியல் தளமாக மாற்றுகின்ற தவறான போக்குகள் இளைஞர்களிடத்திலே உருவாகி வருகின்றன. ஐந்து வருடங்களுக்கு முன்பு இது போன்ற ஒரு சம்பவம் தூத்துக்குடி செல்லும் விமானத்தில் ஒரு முக்கிய கட்சியின் தலைவருக்கு ஏற்பட்டது. கைப்பேசிகள் கண்டுபிடிக்கப்பட்ட பின் உலகம் கைக்குள் சுருங்கிவிட்டது. முகநூல், ட்விட்டர் மற்றும் வாட்ஸ்அப் போன்றவை நல்ல தகவல்களை விரைந்து அனுப்புவதற்காக உருவாக்கப்பட்டன. ஆனால் ”குரங்கு கையில் கிடைத்த பூ மாலை” போன்று கைபேசிகளும் சமூக வலைதளங்களும் சமூக விரோத எண்ணம் கொண்ட சில இளைஞர்களிடம் சிக்கி சின்னாபின்னம் ஆகிறது.
குறிப்பாக வெளிநாடு சென்று வரக்கூடிய இளைஞர்கள் மேலை நாடுகளில் வெறுத்து ஒதுக்கப்பட்ட தவறான நடைமுறைகள் பலவற்றை இந்தியாவிற்குள் இறக்குமதி செய்கிறார்கள். மேலைநாடுகளில் விளையாட்டாக நடைபெறும் செயல்களை காப்பியடித்து இளைஞர்கள் அது போன்ற செயல்களில் ஈடுபடுவது பேதமையானது. சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வரை பயணித்து சாலை மார்க்கமாக சிவகங்கை மாவட்டம் செல்வது அவருடைய திட்டமாக இருந்திருக்கிறது. தன்னிச்சையாகவோ அல்லது சிலரது தூண்டுதல்களுக்கு ஆளாகியோ அரசியல் மாறுபட்ட கருத்து இருந்தாலும் ஒரு முன்னாள் முதல்வர், மதிப்பிற்குரிய எதிர்க்கட்சித் தலைவர், ஒரு கட்சியின் பொதுச் செயலாளர் என்ற தகுதியில் இருக்கக்கூடிய அவருக்கு எதிராக ஒரு நபர் எழுப்பிய முழக்கங்கள் எவ்விதத்திலும் ஏற்புடையது அல்ல. அது அனைவராலும் கண்டிக்கத்தக்கதும், சட்டப்படி தண்டிக்கப்படக் கூடியதும் ஆகும்.ஒரு இளைஞன் எடப்பாடி அவர்களிடத்தில் நெருக்கமாக சென்று, அவரை வீடியோ பதிவு செய்து கொண்டே அவருக்கு எதிராக கோஷம் எழுப்புகின்ற போதும் அவர் ஒரு சிறிய எதிர் பிரதிபலிப்பைக் கூடக் காட்ட வில்லை. அந்த இளைஞன் விமான நிலைய பேருந்திலிருந்து இறங்கி தனது உடைமைகளை எடுக்கச் சென்ற பொழுதும் கூட எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அந்த இளைஞரிடம் எவ்வித வெறுப்பையும் காட்டிக் கொண்டதாகத் தெரியவில்லை. பொதுவாக இது போன்று தலைவர்களிடத்தில் அத்துமீறுகின்ற பொழுது அதைக் கேள்விப்படுகின்ற அந்த கட்சியின் தொண்டர்கள் தங்களது தலைவரிடத்தில் தகாத முறையில் நடந்து கொண்டவர்களிடத்தில் வாக்குவாதத்தில் ஈடுபடுவதும், சில நேரங்களில் அது கை கலப்பாக முடிவதும் உண்டு.
எடப்பாடி அவர்களிடம் இது போன்று ஒருவர் அத்துமீறி நடந்து கொண்டார் என தெரிய வந்ததுமே காவல்துறையினரும், விமான நிலைய அதிகாரிகளும் விரைந்து செயல்பட்டு அந்த குறிப்பிட்ட நபர் மீது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அந்த நபருடைய அலைபேசியைக் கைப்பற்றி மேல்விசாரணை மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும். பாதிக்கப்பட்ட எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் புகார் அளிக்காமலேயே அந்த இளைஞர் மீது நடவடிக்கை பாய்ந்திருக்க வேண்டும். ஆனால் இவை எதுவும் நடைபெறவில்லை. இதற்கு மாறாக, பாதிப்புக்கு ஆளான எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் மீதும் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருப்பது முறையும் அல்ல, ஜனநாயக நடைமுறையும் ஆகாது.
அரசியலில் ஒவ்வொரு கட்சியினருக்கு இடையே பல்வேறு கருத்து வேறுபாடுகள், முரண்பாடுகள் இருக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் அதுவும் ஒரு கட்சியின் தலைவர் யாருடைய துணையும் இல்லாத நேரத்தில் இது போன்ற சம்பவங்களில் ஈடுபடுவது தனிப்பட்ட முறையில் நடந்த தாக்குதலுக்குச் சமமானதாகவே கருதப்பட வேண்டும். கத்தியும் வாளும் துப்பாக்கியும் வெடிகுண்டுகளும் மட்டும் தான் ’ஆயுதம்’ என்று கருதக்கூடாது. நாக்கும், ஆயுதம் தான்; பேச்சும் ஆயுதம் தான்; இன்றைய சமூக வலைதளங்களும் ஆயுதமே.!
எதார்த்தத்தில் அவரிடத்தில் நெருங்கி வந்து காணொளி எடுத்தது உள்ளிட்ட செயல்களை ’கொலை முயற்சி’ செயலாகவே கருதி அது போன்ற வழக்குகளே அந்த இளைஞர் மீது பதிவு செய்யப்பட்டு இருக்க வேண்டும். இதுபோன்ற தவறிழைத்த அந்த இளைஞர் மீது வழக்குப் பதிவு செய்து, அவரை சட்டத்தின் முன் நிறுத்துவதற்குப் பதிலாக எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் உட்பட அவரது கட்சியினர் பலர் மீது ஆறு பிரிவுகளின் கீழும், குறிப்பாக கைப்பேசியை அபகரித்துக் கொண்டார் என கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்திருப்பது முழுக்க முழுக்க அரசியல் உள்நோக்கம் கொண்டதாகும். இது எடப்பாடி பழனிச்சாமி அவர்களை ”மன உளைச்சலுக்கு ஆளாக்க வேண்டும்; அவதூறை பரப்ப வேண்டும்” என்ற தீய எண்ணத்தில் சம்பவம் கையாளப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. இப்பொழுது எல்லா பழியையும் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் மீது சுமத்தி கடும் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கின்றது. அந்நிகழ்ச்சிக்குத் தூண்டுகோலாக அமைந்தவர் யார் என்பதை ஆராய்ந்து மட்டுமே ஒருவர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட வேண்டும். அதை விடுத்து, பாதிக்கப்பட்டவர் மீது வழக்குப் பதிவு செய்வது என்பது எதிர் விளைவுகளையே தரும்.
கடந்த 1983 ஆம் ஆண்டு நெல்லைக்கு ரயில் பயணம் மேற்கொண்ட அன்றைய முதலமைச்சர் கலைஞர் மீது உளி வீச்சு சம்பவம் நடைபெற்றது. உளி வீசியவர்கள் மீதுதான் வழக்குப் போடப்பட்டதே தவிர, கலைஞர் மீது வழக்கு போடப்படவில்லை. கோவை விமான நிலையத்தில் அன்றைய முதல்வர் எம்ஜிஆர் அவர்களுக்கு மாலை இட்ட ஒரு மாணவத் தலைவன் தவறாக மாலையிட்டதால் விரும்ப தகாத சம்பவம் ஒன்று நடைபெற்றது. அப்பொழுது அந்த மாலையைத் தவறுதலாக போட முயன்ற மாணவர் மீது தான் நடவடிக்கை பாய்ந்தது; அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர் மீது அல்ல!
எனவே, மதுரை விமான நிலைய சம்பவத்தில் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் மீது போடப்பட்டு இருக்கக்கூடிய வழக்கு எவ்விதத்திலும் நியாயமானதல்ல, அவ்வழக்கை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
டாக்டர் க. கிருஷ்ணசாமி MD.Ex MLA,
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
15.03.2023






