மோடி தவிர்த்து இருக்க வேண்டிய உக்ரைன் பயணம்.!

அறிக்கைகள்
s2 168 Views
  • Ukrain
  • Ukrain
Published: 27 Aug 2024

Loading

2014 ஆம் ஆண்டு முதன் முறையாக பிரதமரானது முதல் கடந்த பத்து வருடத்தில் நரேந்திர மோடி அவர்கள் பல்வேறு நாடுகளுக்கு அதிகாரப்பூர்வ பயணம் செய்து உள்ளார். இதில் பல நாடுகளுக்கு இரண்டாவது மூன்றாவது முறையாகவும், சில தேசங்களுக்கு முதல் முறையாகவும் பயணித்துள்ளார். இப்பயணங்களின் மூலம் அந்நாடுகளுடனான இந்திய உறவு பலப்பட்டுள்ளது என்பதில் மாறுபட்ட கருத்து இருக்க முடியாது; எனினும் பல நாடுகள் உடனான பயணங்கள் ராஜாங்க உறவு ரீதியான பெரிய பலன்கள் எதையும் உண்டாக்கவில்லை. அதற்கு எடுத்துக்காட்டாக அண்டை நாடான வங்கதேசத்தைக் குறிப்பிடலாம்.

கடந்த ஐந்து தினங்களுக்கு முன்பு, பிரதமர் மோடி அவர்கள் உக்ரைன் நாட்டிற்குச் சென்று வந்தார். ரஷ்யா – உக்ரைன் போர் இரண்டரை ஆண்டுகளையும் தாண்டி மூன்றாவது ஆண்டிலும் தொடர்கிறது. இரண்டு நாடுகளுக்கு இடையேயான போரின் துவக்கத்தில் இரு நாடுகளுக்கும் தனித்தனியே பயணங்களை மேற்கொண்டு, அந்நாட்டின் தலைவர்களுடன் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை நடத்தி இருந்தால் இந்திய நாட்டின் மீதான நன்மதிப்பின் அடிப்படையில், ஒரு நல்ல பலன் கிடைத்திருக்க வாய்ப்புண்டு. ஆனால் போரின் போக்குகள் வேறு வேறு விதமாக மாறி விட்டன. ஒரு பக்கம் உக்ரைனுக்குள் ரஷ்யா முன்பைக் காட்டிலும் உக்கிரமாகப் போரை நடத்திப் பல பகுதிகளை தன் வசப்படுத்திக் கொண்டு வருகிறது. இன்னொரு பக்கம் உக்ரைன் படைகள் ரஷ்யாவின் எல்லையைத் தாண்டி குர்ஷ் பகுதியில் 15 கிலோமீட்டர் உள்ளே நுழைந்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது.

ரஷ்யா – உக்ரைன் போர் என்பது எல்லை பிரச்சனை சம்பந்தப்பட்டது அல்ல.! அமெரிக்காவின் தலைமையில் அமையப்பெற்று இருக்கக்கூடிய இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற பல நாடுகளை உள்ளடக்கிய நேட்டோ எனும் ராணுவக் கூட்டமைப்பிற்குள் உக்ரைன் சேர்க்கப்பட்டு விட்டால் வினாடி நேரத்தில் நேட்டோவின் ஏவுகணைகள் மாஸ்கோவை தாக்குவதற்கான வாய்ப்பு ஏற்பட்டு விடும். உடனடியாக இல்லாவிட்டாலும் என்றாவது ஒரு நாள் இந்த யுத்தம் ரஷ்யாவுக்கு எதிராகத் துவங்கப்படும் என்று எண்ணிய ரஷ்யாவின் அதிபர் புடின் ஏறக்குறைய மூன்றரை லட்சம் படைகளுடன் 2021 ஆண்டு உக்ரைன் மீது தனது ராணுவ நடவடிக்கையைத் துவக்கினார். உண்மையில் இந்தப் போரை நடத்துவது உக்ரைன் அல்ல.! சில ஏகாதிபத்தியங்களினுடைய போர் தாகத்தைத் தீர்த்துக் கொள்வதற்காக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உக்ரைனை பலிபீடம் ஆக்கி இருக்கிறார். அதன் காரணமாக லட்சக்கணக்கான உக்ரைன் மக்கள் ஐரோப்பிய நாடுகளில் அகதிகளாக்கப்பட்டிருக்கிறார்கள்.

ஐரோப்பாவின் பல நாடுகள் இந்த போரை விரும்பவில்லையெனினும் அமெரிக்கா தலைமையிலான நேட்டோவின் பிடியிலிருந்து உக்ரைனால் எளிதில் தப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டு விட்டது. இரண்டாம் நூற்றாண்டுக்கு பிறகு, ஆயுத வியாபாரத்தால் மட்டுமே தன்னை வளப்படுத்தி வலிமையாக்கிக் கொண்ட அமெரிக்கா பொருளாதாரத்தை மீண்டும் ஆயுத வியாபாரம் மூலமாக வலுப்படுத்திக் கொள்ள எண்ணுகிறது; இஸ்ரேல் பாலஸ்தீனம், லெபனான், ஈரான் என மத்திய ஆசியாவிலும் கடந்த பத்து மாதங்களாகப் போர் நடந்து வருகிறது; அதனால், ஆயுத வியாபாரமும் நன்கே நடந்து வருகிறது.

உக்ரைனின் கால்வாசி நிலப் பகுதி இப்பொழுது ரஷ்யாவின் வசமாகிவிட்டது. லட்சோப லட்சம் கோடி மதிப்புள்ள அடுக்குமாடி வீடுகள், அரசு மாடிக் கட்டிடங்கள், அனைத்தும் தரைமட்டமாக்கப்பட்டுள்ளன. ரஷ்யாவும் பல பொருளாதார தடைகள், போரினால் ஏற்படக்கூடிய உயிரிழப்புக்கள் மற்றும் பொருளாதார வீழ்ச்சிகளைச் சந்திக்க வேண்டி இருக்கிறது.

ஹிட்லரை வீழ்த்தி இரண்டாம் உலகப்போரை முடிவுக்குக் கொண்டு வந்தது ரஷ்யா. பல நாடுகள் பிரிந்து போனாலும், முன்பு இருந்த சோவியத்தாக இல்லாவிட்டாலும் இன்றும் அணு ஆயுத பலத்தில் அமெரிக்காவுக்கு நிகராக இருக்கக்கூடிய நாடு ரஷ்யா மட்டுமே. மேலும் அந்த தேசத்திற்கு தலைமை தாங்கக் கூடியவர் புடின் வலுவான தலைவர். ஏறக்குறைய இரண்டரை வருடங்களுக்கு மேலாக நீடிக்கும் இந்த போரில் இனிமேல் ரஷ்யாவுக்குப் பெரிய பின்னடைவுகள் ஏற்படுவதற்கு உண்டான வாய்ப்பு குறைவாகவே உள்ளது. எனினும் இப்போரில் எப்படியாவது ரஷ்யாவைத் தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக இதுவரையிலும் குறைந்த தூரத்தில் மட்டுமே தாக்கக்கூடிய ஆயுதங்களைக் கொடுத்து வந்த அமெரிக்கா, ஜெர்மனி, இங்கிலாந்து போன்ற நாடுகள் வெகுதூரம் ரஷ்யாவுக்குள்ளும் சென்று தாக்கக்கூடிய ஏவுகணைகளையும் விமானங்களையும் கொடுத்திருக்கிறார்கள். எதைக் கொடுத்தாலும் ஜெலன்ஸ்கியின் அபாய குரல் ஓயவில்லை. ரஷ்யாவை ஒரே ஆயுதத்தில் தாக்கக்கூடிய ஆயுதத்தை கொடுத்து விடுங்கள்’ என ஜெலன்ஸ்கி கூக்குரல் இடுகிறார். இந்த நேரத்தில்தான் மோடி அவர்கள் நான்கு தினங்களுக்கு முன்பு உக்ரைன் பயணத்தை மேற்கொண்டு உள்ளார்.
இந்தியா – ரஷ்யாவுடனான உறவு ஏறக்குறைய 50-60 ஆண்டு காலமாக பலமாகவே இருக்கிறது. ரஷ்யா சந்தேகத்திற்கு அப்பாற்பட்ட நண்பனாகவே இன்றும் விளங்குகிறது. இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு, மிக முக்கியமான காலகட்டத்தில் ஆயுத உதவிகளை அளிக்காவிட்டாலும் கூட, சர்வதேச அளவில் இந்தியாவிற்குத் துணையாகவே நின்று இருக்கிறது. இந்தப் போருக்கு பின்பு, பல நெருக்கடி இருப்பினும், இந்திய ரூபாயிலேயே மிகக் குறைந்த விலைக்கு பெட்ரோல், டீசலை ரஷ்யா வழங்கி வருகிறது.

1992 வரையிலும் உக்ரைன் – ரஷ்யாவின் ஒரு அங்கமாக இருந்தது. அதற்கு பின்பு, அண்மைக் காலம் வரை, ரஷ்யாவுடன் நட்பு கொண்டிருந்த உக்ரைன் அமெரிக்காவின் அரசியல் விளையாட்டின் காரணமாக எதிர் நிலைக்கு மாற்றப்பட்டுள்ளது. ஜெலன்ஸ்கி அதற்கு இரையாகி இருக்கிறார். ரஷ்யா தங்களது இறையாண்மை பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக போர் தொடுத்திருக்கிறது; உக்ரைன் ஒரு ஏகாதிபத்தியத்தின் ஏவு தளமாக்க முனைப்புக் காட்டியதற்காக இந்த போரைச் சந்திக்க வேண்டி இருக்கிறது.

உக்ரைனுக்கு பின்புலமாக உலகின் ராணுவ பலம், பணபலம், அதிகாரம் மிக்க நாடுகள் விளங்குகின்றன. அமெரிக்கா போரை நிறுத்த விரும்பினாலும் பழைய ஏகாதிபத்திய பிரிட்டிஷ் விடாது; ஜெர்மனியும் விடாது. எனவே இந்த போர் ஒரு நாள் உக்ரைன் பயணத்தின் மூலமாக தீரக்கூடியது அல்ல.

ஒரு மிகப்பெரிய ஜனநாயக நாட்டினுடைய பிரதமராக இருக்கக்கூடிய மோடி அவர்கள் இந்த நேரத்தில் உக்ரைன் பயணத்தை மேற்கொண்டு இருக்க வேண்டிய அவசியம் இல்லை. அதுவும் உலக அரங்கில் இன்று மிகவும் மதிப்பும் மரியாதையும் மிக்க மோடி அவர்கள், ஜெலன்ஸ்கியின் மீது கை போட்டுச் சந்திக்கக் கூடிய அளவிற்கு, ஒரு வலுவான தீர்க்கமான கொள்கை கொண்ட ராஜதந்திரி அல்ல. ஜெலன்ஸ்கி எவ்விதமான சுய முடிவுகளைவும் எடுக்கத் தகுதியற்றவர். எனவே ஜெலன்ஸ்கி மோடியின் ஆலோசனைகளை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளமாட்டார். மோடியின் சந்திப்பின் மூலம் அங்கு அமைதி உண்டாவதற்கான இம்மியளவும் வாய்ப்பு இல்லை. ஏன் எனில் ஜெலன்ஸ்கி ஒரு அமெரிக்கக் கைப்பாவை!

நேற்றைய தினம் மட்டுமே அங்கு இரு பெரும் சம்பவங்கள் நடந்திருக்கின்றன. ரஷ்யாவின் முக்கிய நகர் ஒன்றில் உள்ள 38 மாடிக் கட்டிடத்தின் மீது உக்ரைனின் தற்கொலைப்படை (ட்ரோன்) விமானத் தாக்குதல் ஒன்று நடைபெற்று இருக்கிறது. இதில் எவ்வளவு உயிரிழப்புகள், பாதிப்புகள் என்பது குறித்து இன்னும் வெளிவரவில்லை; அதே நேரத்தில் ரஷ்யா உக்ரைன் மீதான கடும் தாக்குதலை தொடுத்துள்ளது; ஜெலன்ஸ்கி மீண்டும் ’ஆயுதம் வேண்டும்; ஆயுதம் வேண்டும்’ என்று அலறுகிறார். இப்படிப்பட்ட ஒரு சூழலில், அவசர அவசரமாக எவ்விதத்திலும் அரசியல் பலனற்ற உக்ரைன் பயணத்தை நமது பாரத பிரதமர் மோடி அவர்கள் மேற்கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை; ஏனெனில் இது சரியான தருணமும் அல்ல! சரியான பயணமும் அல்ல.!

டாக்டர் க.கிருஷ்ணசாமி MD, Ex MLA,
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
27.08.2024