திமுகவின் ”ஒன்றிய அரசு” எனும் முழக்கத்தின் பின்னால் ஒளிந்து கிடக்கிறது, திராவிட நாடு கோரிக்கை!

”INDIA that is BHARAT shall be a union of states”
இந்தியா அதாவது, பாரத தேசம் ஒன்றுபட்ட இறையாண்மை மிக்க ”ஒரு பேரரசாகத் திகழும்” – என்பதே அதன் அர்த்தமாகும்.
”நாடு” என விகுதி கொண்டிருந்தாலும் தமிழ்நாடு ஒரு மாநிலமே!

திமுகவின் ”ஒன்றிய அரசு” எனும் முழக்கத்தின் பின்னால் ஒளிந்து கிடக்கிறது, திராவிட நாடு கோரிக்கை!

அறிக்கைகள்
s2 627 Views
  • Dr K Krishnasamy

    டாக்டர் கிருஷ்ணசாமி

  • Dr K Krishnasamy
Published: 08 Jun 2021

Loading

”ஒன்றிய அரசு” எனும் முழக்கத்தின் பின்னால் ஒளிந்து கிடக்கிறதா, திராவிட நாடு கோரிக்கை?
”INDIA IS AN INDESTRUCTIBLE UNION OF DESTRUCTIBLE STATES”
இந்தியா எனும் பாரத தேசத்தை ”ஒன்றிய அரசு” என்று அழைத்து அகமகிழ்ச்சி கொள்ளுகின்ற ஒரு கூட்டத்தின் கூச்சல் இன்னும் அடங்கியபாடில்லை. இம்மாநிலத்தின் ஆட்சி, அதிகாரம் அவர்கள் கைக்கு வந்த நாள் முதலே துள்ளி குதிக்கிறார்கள். மே 07 ஆம் தேதி “Belongs to the Dravidian stock” என்று டிவிட்டரில் பதிவு செய்யப்பட்டு, பரப்பப்பட்டதை இதனுடன் பொருத்திப் பார்க்க வேண்டும். திடீரென்று இது போன்ற சிந்தனைகள் அவர்களிடத்தில் இன்று முளைத்திடவில்லை. ஆனால், திரும்ப ”மாநில சுயாட்சி – ஒன்றிய அரசு” பல்லவியைப் பாடி வருவதிலும், இப்பொழுது அதை உரக்கப் பேசுவதிலும் வேறொரு உள்ளார்ந்த நோக்கம் இருப்பதாகவே கருத வேண்டியுள்ளது.

1962-ல் அன்றைய பிரதமர் நேரு அவர்களின் “திமுகவுக்குத் தடை விதிக்கப்படும்” என்ற ஒரே ஒரு அரட்டலுக்கு அடிபணிந்து, ’திராவிட நாடு எனும் பிரிவினை கோஷத்தை’ கைவிட்டார்கள். எனினும் ”தற்காலிகமாக அக்கோரிக்கையை கை விட்டாலும், திராவிட நாடு கேட்பதற்கு உண்டான காரணிகள் அப்படியே இருக்கிறதென்று அண்ணா சொல்லிவிட்டுப் போயிருக்கிறார்” என்கிறார்கள். ”ஒன்றிய அரசு” முழக்கத்தின் மூலம் திமுக ”திராவிட நாடு” கோரிக்கையை மீண்டும் தூசித் தட்டி தூக்கிப் பிடிக்கிறது என்பது தெளிவாகிறது. திமுகவின் பார்வையில் ”திராவிட நாடு” என்பது மட்டுமே நாடு. இந்தியா தேசமுமல்ல, நாடும் அல்ல; ஊராட்சிக்கு ஒரு படி மேலே உள்ள ஒன்றியத்திற்கான மதிப்புதான். அந்த எண்ணத்திலேயே இப்போது முதலமைச்சரின் அறிக்கை உட்பட எல்லாவற்றிலும் ’ஒன்றிய அரசு’ என்றே குறிப்பிடப்படுகிறது.

”INDIA that is BHARAT shall be a union of states” என்ற இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் முதல் சரத்தை (Article) உள்நோக்கத்துடன் “Google” மூலம் மொழிபெயர்த்து மத்திய அரசைத் தவறுதலாக ”ஒன்றிய அரசு” என்று தொடர்ந்து திமுக மற்றும் அதன் அரசியல் கூட்டாளிகள் தமிழக மக்களிடம் அவதூறு பிரச்சாரமாகவும், அதை இயக்கமாகவும் முன்னெடுத்துச் செல்கிறார்கள். இந்திய அரசியல் சாசனத்தில் ஏறக்குறைய 100 ஆண்டுகாலம் புழக்கத்தில் உள்ள ”Union of States” என்ற சொல்லாடலுக்கு மொழிபெயர்க்க இவர்களுக்கு Google தான் கிடைத்ததா? தமிழகத்தில் நல்ல அறிஞர்களுக்கும், சட்ட வல்லுநர்களுக்கும் பஞ்சம் ஏற்பட்டு விட்டதா?

ஆட்சிக்கு வருவதற்கு முன் ”பாசிசம்” என அடைமொழியிட்டு, மத்தியில் உள்ள ஆட்சியாளர்களைச் சாடி வந்தார்கள். இப்பொழுது நேரடியாக இறையாண்மைமிக்க இந்தியத் தேசத்தின் மீதே குறி வைத்து தாக்குதல் தொடுக்கிறார்கள். எனவே, இந்திய மைய அரசு – பாரத பேரரசு மீதான திமுக மற்றும் அதன் கூட்டாளிகளின் தாக்குதலை இந்தியக் குடிமக்கள் எவரும் எளிதாக எடுத்துக் கொண்டு, கடந்து போக முடியாது. இந்திய அரசியல் சாசனத்தில் சொல்லி இருக்கக் கூடிய “Union” என்ற வார்த்தையைத் தானே நாங்கள் ”ஒன்றியம்” என பயன்படுத்துகிறோம் என்று மழுப்பி, பித்தலாட்டம் செய்வதற்கு ஓர் முற்றுப் புள்ளி வைக்கப்பட வேண்டும்.

அரசியல் சாசனத்தின் முழு அம்சத்தை அறியாத சாதாரண குடி மக்கள் ”Union என்றால் ஒன்றியம்” – ”States என்றால் மாநிலம்”, எனவே ”மாநிலங்களாலான ஒன்றிய அரசு” என்று அவர்கள் கூறுவதை அப்படியே ஏற்று, எளிதாக நம்பக் கூடும். ஆனால், உண்மை அதுவல்ல, ”India that is bharat shall be a union of states” என்ற அரசியல் சாசனத்தின் முதல் சரத்தின் (Article) பொருளை ஒவ்வொரு வார்த்தையாகத் தனித்துப் பிரித்து பொருள் கொள்ளக்கூடாது. இந்தியா அடிமைப்பட்ட வரலாற்றையும், அது மீட்டெடுக்கப்பட்டு சுதந்திரம் பெற்ற வரலாற்றையும், தேசத்திற்கான வடிவமைக்கப்பட்ட அரசியல் சாசனத்துடன் இணைத்தும், பொருத்தியும் பார்க்க வேண்டும்.

இந்தியா கிழக்கிந்திய கம்பெனியின் கீழ் 200 ஆண்டுக்காலமும், பிரிட்டிஷ் அரசின் கீழ் நேரடியாக 100 ஆண்டுகாலமும் என 300 ஆண்டுகள் அடிமைப்பட்டு கிடந்ததையும் ; அதற்கு முன்னரும் இந்தியா 1000 வருடங்களுக்கு மேலாகப் பல அந்நிய படையெடுப்புகளுக்கு ஆளாகி தனது முகவரியை முழுமையாக இழந்து கிடந்த வரலாற்றையும் திட்டமிட்டே மறைக்கிறார்கள். இந்தியா மீதான முகமதியர்களின் ஆக்கிரமிப்புகளுக்குப் பிறகு, தமிழ்நாடு உள்ளிட்ட இந்தியாவின் பல மாநிலங்களின் முகவரி எங்கே இருந்தது? 1300-க்கு பிறகு, விஜயநகர பேரரசின் கீழ், 230 ஆண்டுகள் தமிழ்நாடு அடிபணிந்து கிடந்ததை இவர்கள் ஏன் மறைக்கிறார்கள்? இக்கால கட்டத்தில் தமிழகத்தினுடைய ஏதாவது ஒரு பகுதியாவது தமிழ் மன்னர்களின் கீழ் சுதந்திரமாக இருந்ததா? தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுமைக்கும் ஆட்சியிலிருந்த 600-க்கும் மேற்பட்ட சிற்றரசுகள் மற்றும் பேரரசுகள் அடங்கிய சமஸ்தானங்கள் ஆங்கிலேயருக்குக் கைக்கட்டி வாய் பொத்தி கப்பம் கட்டிக் கொண்டு தானே இருந்தார்கள்.

ஆங்கிலேயருக்கு எதிரான சுதந்திரப் போராட்டத்தில் எத்தனை சமஸ்தானங்கள் பங்குபெற்றன? எவரும் பங்கேற்கவில்லையே! இந்தியச் சுதந்திரப் போராட்டத்தை முன்னெடுத்த போராளிகள் இந்தியாவின் எந்தவொரு குறிப்பிட்ட பகுதிக்கான விடுதலைக்காக மட்டும் தனித்துப் போராடவில்லை. அவர்கள் பரந்துபட்ட பாரத தேச விடுதலைக்காகவே போராடினார்கள். எனவே இந்தியாவுக்கான சுதந்திரம் என்பது பிரிட்டிஷ் அரசாங்கத்தின் நேரடி கட்டுப்பாட்டிலிருந்த ”பிரிட்டிஷ் இந்தியா” என்ற ஒன்பது பிராந்தியங்களையும், “Indian States” என்றழைக்கப்பட்ட 600 சமஸ்தானங்களையும் விடுவிப்பதற்காகவே இருந்தது.

எனவே, பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகு, பாரத தேசத்தில் எஞ்சியிருந்த அனைத்து பகுதிகளும் ஒன்றிணைந்து அல்லது ஐக்கியமாகி இந்தியா அல்லது பாரதம் தனது இழந்த முகவரியை மீட்டெடுத்து மீண்டும் உருவாகியுள்ளது என்பதை வெளிப்படுத்தக்கூடிய வகையிலேயேதான் ”Union of States” என்ற சொல்லாடல் பயன்படுத்தப்பட்டது. ஒரு நாட்டின் புதிய அரசியல் சாசனம் வடிவமைக்கப்படுவதற்கு முன்பு, அந்த தேசம் எப்படிப்பட்டது; அதன் வரலாறு என்ன? என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டிய கடமை அரசியல் சாசன தளகர்த்தர்களுக்கு உண்டு. அதனடிப்படையில் தான் ”இந்தியா பிரிக்க முடியாத ஐக்கியப்படுத்தப்பட்ட ஒரே தேசம் என்பதை ”Union of States” என்று தெள்ளத் தெளிவாகக் குறிப்பிட்டு இருக்கிறார்கள். ஆனால் திமுகவினர் பிதற்றுவதைப் போல, இந்தியத் தேசம் அமெரிக்கா, கனடா, இரஷ்யா போன்று வேறு வேறு மாநிலங்கள் அல்லது நாடுகளாலான கூட்டமைப்பு (Federation) அல்ல. ஆனால் அதைத் தெரிந்திருந்தும், இந்தியத் தேசம் பல மாநிலங்களின் கூட்டமைப்பு தான் (Federal) என்று அரசியல் சாசனத்திற்கு விரோதமான, உண்மைக்குப் புறம்பான கருத்தைக் தமிழக மக்கள் மத்தியில் திணிக்க முற்படுகிறார்கள்.

பல நூறாண்டுக்காலம் அடிமைப்பட்ட இந்தியத் தேசம் ஒரே நாளில் விடுதலை பெற்று விடவில்லை. அதற்காக இலட்சோபலட்சம் பேர் தங்களது இன்னுயிர்களை, வாழ்க்கையை, பொருட்களை அர்ப்பணித்திருக்கிறார்கள்; அந்தமான் செல்லுலார் தனிச் சிறையில் தங்களது வாழ்க்கையை முடித்துக் கொண்டோர் பலர்; இளைஞர்கள் பலர் தூக்கு மேடைக்கும் சென்றிருக்கிறார்கள்.

விடுதலைக்குப் பின் அரசியல் சாசனமும் ஐந்தாறு அறிவாளிகளை அழைத்து ஒரு அறையில் அமர்த்தி எழுதிடப்படவும் இல்லை. இந்திய அரசியல் சாசனத்தை வடிவமைப்பதற்கான அரசியல் நிர்ணய சபை முன்கூட்டியே உருவாக்கப்பட்டு, இந்தியாவின் சுதந்திரத்தை முன்னெடுத்த தலைவர்களான மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, இராஜேந்திர பிரசாத், இராதாகிருஷ்ணன்; 552 சமஸ்தானங்களைத் தனது சாதுரியத்தால் இந்தியாவுடன் ஐக்கியப்படுத்திய சர்தார் வல்லபாய் படேல், அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர், சட்டமேதை அண்ணல் அம்பேத்கர் உட்படப் பலரும் பல்வேறு வளர்ந்த நாடுகளின் அரசியல் சாசனத்தின் சரத்துக்களை உள்வாங்கி இந்தியாவிற்கான ஒரு வலுவான ஒரு புதிய அரசியல் சாசனத்தை உருவாக்கித் தந்திருக்கிறார்கள்.

இந்தியாவின் சுதந்திரத்திற்காகப் போராடிய முன்னணி தலைவர்கள் ஒற்றை ஆட்சி முறையையே (Unitary) பரிந்துரைப்பார்கள் என அக்காலகட்டத்தில் பல நாடுகளும் எதிர்பார்த்தன. ஆனால், அரசியல் நிர்ணய சபையில் பங்குபெற்ற ஒரு சிலரைத் தவிர பெரும்பாலான முன்னணித் தலைவர்கள் பரந்துபட்ட ஜனநாயக முற்போக்கு சிந்தனை கொண்டவர்களாக இருந்த காரணத்தினால் இந்தியாவின் பாரம்பரியத்தையும், கலாச்சாரத்தையும் விட்டு விடாமலும்; கோடான கோடி மக்களின் சமூக, பொருளாதார, அரசியல், வாழ்வியல் சிக்கல்களுக்கு விடிவு காலத்தை உருவாக்கிடவும் முடிந்த அளவிற்கு ஒரு நல்ல புதுவிதமான அரசியல் சாசனத்தை வடிவமைத்துத் தந்திருக்கிறார்கள்.

அவர்கள் எண்ணி இருந்தால், மத்திய அரசை மட்டுமே அதிகார மையமாகக் கொண்ட ஒற்றை ஆட்சி முறையை (Unitary) இந்திய அரசியல் சாசனத்தின் அங்கமாக்கி இருக்க முடியும். ஆனால் அவர்கள் அவ்வாறு செய்யவில்லை. அவர்கள் பிரிந்து கிடந்த தேசத்தின் அனைத்து பகுதிகளையும் ஒற்றை அடையாளத்தில் ஐக்கியமாக்க நினைத்தார்கள்; பூகோள ரீதியாக பண்டைய பாரத தேசம் மீண்டும் புத்துணர்ச்சி பெற வேண்டும் என எண்ணினார்கள்; ஆனால் ஆட்சி அதிகாரம் ஓரிடத்தில் குவிய வேண்டுமென்று அவர்கள் நினைக்கவில்லை. அமெரிக்க நாட்டினுடைய அரசியல் சாசனத்திலிருந்து அடிப்படை உரிமைக்கான (Fundamental Rights) சரத்துக்களையும், கூட்டாட்சிக்கான (Federal) தத்துவத்தைக் கனடாவிலிருந்தும், அடிப்படை கடமைகளுக்கான (Fundamental Duties) சரத்துக்களை இரஷ்யாவிடமிருந்தும், நல்ல ஆட்சி, அதிகாரத்திற்கான பல்வேறு சரத்துக்களை ஐரீஸ் (IRIS) கூட்டமைப்பு அரசியல் சாசனத்திலிருந்தும் உள்வாங்கிக் கொண்டு ஒற்றை ஆட்சி முறை மற்றும் கூட்டாட்சி முறை இணைந்த புதிய (Novel) ஆட்சி முறையை (Quasi Federal & Quasi Unitary) இந்தியாவிற்கு ஏற்படுத்தித் தந்திருக்கிறார்கள். அதனடிப்படையில் தான், மத்திய அரசிற்கான அதிகாரங்களும், மாநில அரசிற்கான அதிகாரங்களும் உள்ளடக்கிய ஒரே அரசியல் சாசனம் உருவாக்கப்பட்டது.
இந்தியத் தேசம் என்ற ஒற்றை அடையாளத்தின் கீழ் பிரிந்து கிடந்த பல பகுதிகளை இணைத்து ஐக்கியப்படுத்த வேண்டிய சூழலும், அதையே அரசியல் சாசனத்தில் ”Union of States அல்லது ஐக்கியமான தேசம்” எனச் சொல்ல வேண்டிய அவசியமும் வந்தது. எனவே, ஒன்றுபட்ட இந்தியத் தேசத்தை மாநிலங்களின் கூட்டமைப்பு “Federation of States” என்று சொல்ல முயற்சிப்பது தவறானது; அது இந்திய அரசியல் சாசன விதிகளைப் புரிந்துகொள்ளாத சில அறிவிலிகளின் கூற்றுமாகும்.

இந்தியாவினுடைய இறையாண்மை என்பது நிரந்தரமானது; இறவாத்தன்மை (Eternal) கொண்டது; அழிக்க முடியாதது; உடைக்க முடியாதது. தேசத்தில் பல மொழிகள், பல இனங்கள், பல மதங்கள் இருக்கலாம்; ஊராட்சி, நகராட்சி, மாநகராட்சி, வட்டம், மாவட்டம், மாநிலங்கள் எனவும் செயல்படலாம். ஆனால், அனைத்தும் ஒற்றை இந்தியத் தேசத்திற்குள் செயல்படலாமே தவிர, பிரிந்து செல்ல முடியாது.

ஏகாத்திபத்தியவாதிகளால் ஏற்படுத்தப்பட்ட நாடு பிரிவினையைத் தவிர, சுதந்திர இந்தியாவில் கடந்த 74 வருடத்தில் எந்தவொரு பிரிவினையும் ஏற்படவில்லை. ஆனால், 1974 ஆண்டு வரையிலும் தனி நாடாக இருந்த சிக்கிம், அதே போன்று கடந்த ஆண்டு வரை 370 சரத்தின் கீழ் தனி அந்தஸ்துடன் இருந்து வந்த காஷ்மீர் போன்ற பகுதிகளும் இந்தியப் பேரரசுக்குள் ஐக்கியம் ஆகியிருக்கிறது.

எனவே, தமிழ்நாடு என்பதில் ’நாடு’ என விகுதி இருக்கின்ற காரணத்தினால் அதை ’தனி நாடு’ எனப் பாவிக்கக்கூடியவர்களே, கடந்த கால திராவிட நாடு கோரிக்கையை இன்று முன்னிறுத்தக்கூடியவர்கள் ஆவர். தமிழகத்தில் கூட எத்தனையோ ஊர்கள் ”நாடு” எனும் விகுதியைக் கொண்டுள்ளன. அதற்காக அந்த கிராமங்கள் எல்லாம் நாடுகளாகி விடுமா?

இந்திய அரசியல் சாசனத்தில் மத்திய, மாநில அரசுகளுக்கான தனித்தனி அதிகாரங்கள் வரையறை செய்யப்பட்டுள்ளன. அந்த வரையறைக்குள் தான் மத்திய அரசும், அனைத்து மாநிலங்களும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. வேகமாக வளர்ந்து வரும் சூழலில் அந்தந்த மாநிலங்களின் வளர்ச்சிக்கு சில கூடுதலான அதிகாரம் மற்றும் நிதி பங்கீடுகள் தேவைப்படலாம். அதை எடுத்துச் சொல்வதற்கு மக்களவை, மாநிலங்களவை உண்டு; நாடாளுமன்றக் குழுக்கள் உண்டு; நீதிமன்றங்கள் உண்டு. அந்த ஜனநாயக ரீதியான வழிமுறைகளை விட்டு விட்டு தமிழ்நாட்டு மக்களிடத்தில் இந்திய அரசின் மீதான வெறுப்பையும், தமிழ் மாநில பிரிவினை எண்ணங்களை விதைப்பதும், வளர்ப்பதும் மிகப்பெரிய ஆபத்தாக முடியும். இந்திய அரசியல் சாசனம் எழுத்து வடிவிலும், நெகிழும் தன்மையை உள்ளடக்கியது என்ற காரணத்தினால் தான் மத்திய, மாநில அரசுகளைத் தாண்டி கிராம ஊராட்சிகளும், நகராட்சிகளும், பேரூராட்சிகளும் தங்களுடைய அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள, சுயமாகச் செயல்படக் கிராம பஞ்சாயத்து ராஜ், நகர்பாலிகா சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

எனவே, மத்திய அரசு, மாநில அரசு, உள்ளாட்சி அரசு என மூன்று அதிகார மையங்கள் இப்போது இந்திய அரசியல் சாசனத்திலேயே இடம் பெற்று விட்டன. கிராம பஞ்சாயத்து ராஜ், நகர்பாலிகா சட்டங்கள் உள்ளதால், ஊராட்சி தலைவர் அல்லது நகராட்சித் தலைவர் போன்றோர் மாநில முதல்வரை ஏளனம் செய்தால் எப்படி இருக்குமோ, அதே போலத்தான் மாநில அரசு இந்தியப் பேரரசை ”ஒன்றிய அரசு” என சிறுமைப்படுத்துவதும் இருக்கிறது.

ஜிஎஸ்டி கூட்டத்தில் பழனிவேல் தியாகராஜன் தன்னுடைய அறிவுத்திறமையை பயன்படுத்தி, தமிழகத்திற்கு வர வேண்டிய 12,000 கோடியைப் போராடிய பெற்றுத் தந்திருந்தால் மகிழ்ச்சியாக இருந்திருக்கும். ஆனால் அதைவிட்டு விட்டு, மத்திய, மாநில அரசுகளுக்கிடையே பிணக்கை உண்டாக்கியது மட்டுமில்லாமல், இன்னொரு சர்ச்சைக்குரிய கருத்தையும் பதிவு செய்துள்ளார். அதாவது மாநிலங்களுக்குத்தான் வாக்கு வங்கி, மத்திய அரசுக்கென்று எந்த வாக்கு வங்கியும் இல்லையென்று. அய்யோ பரிதாபம்! இந்தியாவில் சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல்களை நடத்துவது இந்தியத் தேர்தல் ஆணையம் என்பது கூடவா அவருக்குத் தெரியாது? வாக்காளர்களைச் சேர்ப்பது, நீக்குவது, வாக்காளர் அடையாள அட்டை வழங்குவது ஒன்றிய அல்ல, இந்தியத் தேர்தல் ஆணையமே. சட்டமன்றத் தேர்தலுக்கென்றும், நாடாளுமன்றத் தேர்தலுக்கென்றும் வாக்காளர் பட்டியல் உண்டு; வாக்குவங்கி எங்கே உண்டு? என்பதை மேதாவிகள் ஏன் புரிந்து கொள்ளவில்லை?

ஒரு ஊராட்சியோ, நகராட்சியோ தங்களுக்கு இருக்கக்கூடிய நிதி பலத்தோடு தனித்தும் செயல்பட வேண்டும், மாநில அரசையும் சார்ந்து இருக்க வேண்டும். மாநில அரசு விரும்பினால் இவர்களின் எல்லைகளைக் கூட மாற்றியமைக்க முடியும்? ஆனால், மாநிலத்தின் கட்டுப்பாட்டிற்குள் வரமாட்டோமென எந்த ஊராட்சியோ, நகராட்சியோ தீர்மானம் நிறைவேற்ற முடியுமா? அதே போலத்தான், கோரிக்கைகளின் அடிப்படையில் தமிழ்நாட்டைத் தென் தமிழ்நாடு, வட தமிழ்நாடு, கிழக்கு தமிழ்நாடு, மேற்கு தமிழ்நாடு, மத்திய தமிழ்நாடு என மத்திய அரசு நினைத்தால் பிரிக்கவும் முடியும்; தமிழகத்தின் எல்லைகளை மாற்றியமைக்கவும் முடியும். இதுபோலத்தான் அரசியல் – அதிகாரம் பரவலாக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் 1956-க்கு பிறகு, மொழிவாரியாகவும், நிர்வாக வசதிக்காகவும் மாநிலங்கள் பிரிக்கப்பட்டது. பல மாநிலங்களைப் பிரிக்க வேண்டும் என்ற முழக்கங்களும் தொடர்ந்து வருகின்றன. மாநில அரசின் எல்லைகளை மத்திய அரசால் மாற்றியமைக்க முடியும். ஆனால், இந்திய அரசின் எல்லைகளை எவராலும் மாற்றியமைக்க முடியாது. அதைத்தான் ”India is an indestructible union of destructible states” என அரசியல் சாசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எந்தவொரு அரசியல் சாசனமும் நூற்றுக்கு நூறு முழுமை பெற்றதாக இருக்க முடியாது. அதற்கொப்ப இந்திய அரசியல் சாசனமும். காலத்திற்கேற்ற மாற்றங்களுக்கு உட்பட்டு இருக்கிறது. கடந்த 72 வருடத்தில் 102 முறை திருத்தப்பட்டுள்ளது. சுதந்திரத்திற்குப் பின், இந்திய அரசியல் சாசனம் நமக்கு வழங்கியுள்ள பேச்சுரிமை, எழுத்துரிமை, கருத்துரிமை உள்ளிட்ட அனைத்தையும் மறந்துவிட்டு இந்திய அரசியல் சாசனத்தையும், இந்தியத் தேசத்தையும் சொல்லாலும், செயலாலும் சிறுமைப்படுத்த எண்ணுகிறார்கள். ஒரு மரக்கிளையின் நுனியைப் பிடித்துக்கொண்டு அடிமரத்தை வெட்டினால் என்ன நிகழுமோ? அதேபோலத்தான் அவர்களுக்கும் நிகழும்.

நமது பாரத தேசத்தைத் தாழ்த்தி, மட்டம் தட்டிப் பேசும் அளவிற்குத் இந்த ஒரு மாதத்தில் தமிழகத்திற்கு, தமிழக மக்களுக்கு என்ன அநீதி இழைக்கப்பட்டு விட்டது? ஆட்சிக் கட்டிலில் எப்படியாவது அமரவேண்டும் என்ற பேராசையில் ஒரு வருடத்திற்கு முன்பே தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கினீர்கள்; கரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளைச் சீர்குலைத்தீர்கள்; மக்களை வறுமை நிலைக்குத் தள்ளி 100க்கும், 200க்கும் விலைபேசி கூட்டம் சேர்த்தீர்கள்; உங்கள் கூட்டங்களில் முக கவசமோ, சமூக இடைவெளியோ கடைப்பிடிக்கப்படவில்லை; கரோனா பரவல் உச்சத்திலிருந்த காலகட்டத்தில் தேர்தல் வாக்கு எண்ணிக்கையைத் தள்ளி வைக்க வேண்டும் என்ற கோரிக்கைக்குக் கூட நீங்கள் செவி சாய்க்கவில்லை. அதனால், நீங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் கரோனா பாதிப்புக்குள்ளானோரின் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்து மக்களை வாட்டி வதைக்கிறது.

மிகப் பின்தங்கிய பகுதிகள் என அழைக்கப்படும் வடக்கு மாநிலங்களில் கூட 60%க்கும் மேற்பட்டோர் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். ஆனால் இந்திய விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்ட அத்தடுப்பூசிகளைக் கூட விஷ ஊசி என்றும், அதைப் போட்டுக் கொண்டால் உயிர் போகும் என்றும் தமிழகத்தின் பட்டி தொட்டியெல்லாம் எடுபிடி ஊடகங்கள் மூலம் பிரச்சாரம் செய்யப்பட்டது. அதன் காரணமாகவே இன்று கரோனா கட்டுப்படுத்த முடியாத நிலைக்குச் சென்றுள்ளது. இந்த நேரத்திலாவது மாநிலத்தின் பொருளாதார சிக்கல்களை எடுத்துச் சொல்லி, ஜிஎஸ்டி நிலுவைத் தொகையைப் பெறுவதற்கு இராஜதந்திர முறையை கையாளாமல் மத்திய, மாநில அரசுகளிடையே உரசலை உருவாக்கும் போக்கையே நீங்கள் கடைப்பிடிக்கிறீர்கள்.

இந்தியாவின் நிதியமைச்சர் தலைமையில் நடைபெற்ற 30-க்கும் மேற்பட்ட மாநில நிதியமைச்சர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் தமிழ்நாட்டின் வரியை மட்டுமே கொண்டு மத்திய அரசு இயங்குவதைப் போல சித்தரித்து இருக்கிறீர்கள்; சிறுமைப்படுத்தி இருக்கிறீர்கள். இன்றிருக்கும் பாரத தேசமோ, மத்திய அரசோ, தமிழ் மாநிலமோ உங்கள் இயக்கத்தாலோ, கட்சியாலோ உருவாக்கப்பட்டதல்ல. இன்னும் சொல்லப்போனால், ஆங்கிலேயருக்கு வால் பிடித்து, சுதந்திரத்திற்கு எதிராகச் செயல்பட்டு, சுதந்திர தினத்தன்றும் கருப்பு கொடி ஏற்றி துக்கத் தினமாக அனுசரித்தவர்களின் வழி வந்த உங்களுக்கு பாரத தேசத்தைப் பழிப்பதற்கோ அல்லது இகழ்ந்து பேசுவதற்கோ, ஏன் அதன் மீது ஒரு குண்டூசியைத் தூக்கிப் போடுவதற்கோ கூட உரிமை கிடையாது. மொழிவாரி மாநில அந்தஸ்து கூட நீங்கள் போராடிப் பெற்றது அல்ல, அதற்காக உயிரை நீத்தவர்கள் ஆந்திராவைச் சேர்ந்தவர்கள். தமிழ்நாடு பெயர் மாற்றம் கூட உணவு, தண்ணீரின்றி உண்மையாக உண்ணாவிரதம் மேற்கொண்டு உயிர்விட்ட சங்கரலிங்கனார் அவர்களின் தியாகத்தால் வந்தது.

பொய்யுரையும், புரட்டுரையுமே ஆட்சிக்கு வர உங்கள் வாடிக்கையாக இருந்திருக்கிறது. ஆனால், அதே பாணியை தேச ஒற்றுமைக்கு எதிராகக் கடைப்பிடிப்பதை இந்த தேசத்தின் மீது பற்று கொண்ட எந்த குடிமக்களும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்; ஏற்றுக் கொள்ளவும் முடியாது.
இனியாவது திமுக மற்றும் அதன் அருவருடிகள் இந்திய அரசியல் சாசனத்தின் அருமை, பெருமைகளைத் தெரிந்து செயல்பட வேண்டும். இறையாண்மை மிக்க இந்தியப் பேரரசை ”ஒன்றிய அரசு” எனத் தொடர்ந்து அழைப்பது எட்டுகோடி தமிழ் மக்களின் உணர்வுகளைக் காயப்படுத்துவதற்கும், 140 கோடி இந்திய மக்களைச் சீண்டிப் பார்ப்பதற்கும் சமமானதும், சட்டவிரோதமானதும், தேசவிரோதமானதும் ஆகும்.

திமுகவும், அதன் கூட்டணி கட்சியினரும் இந்திய அரசை ”ஒன்றிய அரசு” எனக் குறிப்பிடுவதும், ”திராவிட நாடு” என்ற பிரிவினை முழக்கமும் உள்ளடக்கத்தில் ஒன்றே தவிர, வேறு வேறு அல்ல. ஏற்கனவே ”பிரிவினை வாதம்” பேசி 1976, 1990-களில் ஆட்சியை இழந்தது நினைவில் இல்லாமலா போய்விடும்? இது தொடர்ந்தால் ஐந்து வருடத்திற்குப் பிறகு, வர வேண்டிய முடிவு, ஐந்தே மாதத்தில் வந்து விடுமோ என்ற சந்தேகமும் எழாமல் இல்லை. தவறான தமிழாக்கம் மூலம் மத்திய அரசை ”ஒன்றிய அரசு” என்று சிறுமைப்படுத்தி வருவதின் உள்ளார்ந்த அர்த்தம் தெரிய வராததால் இன்று வரை மத்திய அரசின் உளவுத் துறையும், உள்துறையும் கவனத்தில் கொள்ளாமல் இருக்கிறது. இந்தியா, அதாவது பாரத தேசம் ஒன்றுபட்ட பேரரசு. அதை எவரும் துண்டாட முடியாது; துண்டாட நினைப்பவர்களே, துண்டாடப்பட்டு இருக்கிறார்கள் என்பதே வரலாறு.

மீண்டும் நினைவு படுத்த விரும்புகிறேன்.

”INDIA that is BHARAT shall be a union of states”
இந்தியா அதாவது, பாரத தேசம் ஒன்றுபட்ட இறையாண்மை மிக்க ”ஒரு பேரரசாகத் திகழும்” – என்பதே அதன் அர்த்தமாகும்.
”நாடு” என விகுதி கொண்டிருந்தாலும் தமிழ்நாடு ஒரு மாநிலமே!

திமுகவின் ”ஒன்றிய அரசு” எனும் முழக்கத்தின் பின்னால் ஒளிந்து கிடக்கிறது, திராவிட நாடு கோரிக்கை!

டாக்டர் க.கிருஷ்ணசாமி MD,
நிறுவனர் & தலைவர்.
புதிய தமிழகம் கட்சி.
08.06.2021