பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மாணவ பருவத்திலேயே சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாப்பதற்கான நல்ல கல்வியையும், பழக்கவழக்கங்களையும் கற்பிக்கவேண்டும்.

அறிக்கைகள்
s2 530 Views
  • Dr K Krishnasamy

    டாக்டர் கிருஷ்ணசாமி

  • Dr K Krishnasamy
Published: 05 Jun 2021

Loading

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மாணவ பருவத்திலேயே சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாப்பதற்கான நல்ல கல்வியையும், பழக்கவழக்கங்களையும் கற்பிக்கவேண்டும்.

சுற்றுப்புற சூழலைக் கட்டிக் காக்க எட்டு வழிகள்!

சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாப்பதும், சீதோஷ்ண நிலையைக் கட்டுப்படுத்துவதும் வேறு வேறு அல்ல. ஒன்றோடொன்று தொடர்பு உடையவையே. கரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்த முடியாமலேயே உலகம் திண்டாடுகிறது. ஆனால், இதைவிடப் பேராபத்துக்கள் உலகை நோக்கி இருக்கின்றன என்பதை எவரும் பெரிதாக எடுத்துக் கொள்வதாக தெரியவில்லை.

சுற்றுப்புறச் சூழலை எப்படி வேண்டுமானாலும் கெடுத்துக் கொள்ளலாம் என்று எண்ணுவதை, பெரிய ஆபத்து வந்தால் தான் இந்த உலகம் உணர்ந்து கொள்ளுமா? நாம் வாழும் இந்த பூமியை இயற்கை ஒன்றும் நமக்கு பட்டாப் போட்டுக் கொடுக்கவில்லை. இயற்கையோடு இணைந்து பயணித்தால் மட்டுமே மனிதக் குலம் நிலைக்கும்; தழைக்கும். இல்லையேல் எவரும் எதிர்பாராத பெரும் விளைவுகளை சந்திக்க நேரிடும்.

இப்போதே அதற்கான அறிகுறிகள் தென்பட ஆரம்பித்து விட்டன. இமயமலையில் பெரிய பெரிய பனிப் பாறைகள் சரிந்து விழுகின்றன; அண்டார்டிக்காவில் பனிப் பாறைகள் உருகுகின்றன. பனிப்பாறைகள் உருகி கடல் மட்டம் உயர்ந்தால் பல நாடுகள், நகரங்கள் காணாமல் போய்விடும். பருவகாலங்கள் தலைகீழாக மாறும். மழைக் காலத்தில் வெயிலும், வெயில் காலத்தில் மழையும் என பருவ நிலை மாற்றங்கள் நிகழும். தொடர் மழை, பூகம்பங்கள், புயல்கள் தினசரி நிகழ்வுகளாகிவிடும். ஒவ்வொரு தனி மனிதருக்கும், பிற உயிரினங்களுக்கும் உணவு கிடைக்காது; நல்ல காற்று கிடைக்காது.

எனவே, சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாப்பதில் உலகத்தில் உள்ள அனைத்து நாடுகளுக்கும், அரசுகளுக்கும் பொறுப்புண்டு. அதேபோல ஒவ்வொரு தனிமனிதர்களுக்கும்; குழுக்களுக்கும் பொறுப்புண்டு. பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மாணவ பருவத்திலேயே சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாப்பதற்கான நல்ல கல்வியையும், பழக்கவழக்கங்களையும் கற்பிக்கவேண்டும். எல்லாவற்றையும் அளவோடு பயன்படுத்தும் பண்பாடுகள் வளர்க்கப்பட வேண்டும்.

1.சுற்றுப்புறச் சூழலை பாதுகாக்க வீட்டிற்கு ஒரு மரம் நடுவது என்பது நன்று, அம்மரங்களை வெட்டாமல் இருப்பது மிக மிக நன்று. மரங்களை வெட்டியே காகிதங்கள் தயாரிக்கப்படுகின்றன. எனவே, காகித பயன்பாட்டை குறைத்திட நோட்டுப் புத்தகங்களைத் தவிர்த்திடுவோம்; மடிக்கணினி பயன்பாட்டை அதிக பயன்படுத்துவோம்.

2.சூழலுக்கு கேடு விளைவிக்கும் பிளாஸ்டிக் பைகளைத் தவிர்த்து, மீண்டும் மீண்டும் பயன்படுத்தும் துணிப் பைகளைப் பயன்படுத்துவோம்.

3.வீடுகளில் மின்சார பயன்பாட்டைக் குறைக்க மின்விளக்குகளை, காற்றாடிகளை, குளிர்விப்பான்களை, தொலைக்காட்சிப் பெட்டிகளை அவசியமின்றி பயன்படுத்துவதைத் தவிர்த்திடுவோம். வீடுகள் கட்டுகின்ற போதே நல்ல காற்றோட்டமும், இயற்கை வெளிச்சமும் இருந்திடும் வகையில் கட்டிடுவோம்.

4.அன்றாட வாழ்வில் பல் துலக்கும் போது, குளிக்கும் போது அவசியமின்றி தண்ணீரை வீணடித்தல் மற்றும் வீடு, தெருக் குழாய்களில் தண்ணீர் வீணாகுவதையும் தவிர்த்திடுவோம்.

5.எதற்கெடுத்தாலும் கார்கள், இரு சக்கர மோட்டார் வாகனங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து, குறைந்த தூரங்களுக்கு மிதிவண்டிகளை மட்டுமே பயன்படுத்துவோம். அது உடல் நலத்திற்கும், சுற்றுப்புறச்சூழலுக்கும் பாதுகாப்பனதாகும்.

6.ஆண்டிற்கு ஒருமுறை மட்டும் மரம் நட்டால் போதாது; அது நமது வாழ்வின் தின தொடர் நிகழ்வாக இருந்திடல் வேண்டும்.

7.தெருக்களில் குப்பைகளை, டயர்களைக் கொளுத்துவது; மலம், ஜலம் கழிப்பது; எச்சில் துப்புவது போன்றவற்றை அறவே தவிர்க்க வேண்டும்.

8.தன்னுடைய உழைப்புக்கும், வயதுக்கும், தேவைக்கும் அதிகமான கலோரிகளைக் கொடுக்கும் உணவுப் பொருட்களை மிதமிஞ்சி எடுத்துக்கொள்ளக் கூடாது. எந்த இறைச்சியானாலும் அளவோடு உண்ண வேண்டும். மது மற்றும் புகைப் பழக்கங்கள் அறவே தவிர்க்கப்பட வேண்டும்.
நல்லதொரு சுற்றுப்புறச் சூழலை உருவாக்குவது என்பது மற்றவர்கள் நமக்குத் தருவது அல்ல, மற்றவர்களுக்கு நாம் உருவாக்கித் தர வேண்டியது என்ற கடமை உணர்வு ஏற்பட வேண்டும்.
எனவே, இந்த ஆண்டு சுற்றுப்புறச் சூழல் தினத்தில் புகையை உண்டாக்கும் வாகனங்களைத் தவிர்த்து, சுற்றுப்புறச் சூழலுக்கும், உடல் நலத்திற்கும் உகந்த மிதிவண்டிகளை அதிகம் பயன்படுத்தச் சபதமேற்போம்.

டாக்டர் க.கிருஷ்ணசாமி,
புதிய தமிழகம் கட்சி
05.06.2021.