கரோனா மரணங்களின் எண்ணிக்கையை குறைக்கவோ மறைக்கவோ கூடாது கால தாமதமின்றி கரோனா இறப்பு சான்றிதழ் வழங்கிடுக!

கரோனா இறப்புச் சான்றிதழ் வழங்குவதில் உள்ள காலதாமதம் மற்றும் இடர்பாடுகளை அறவே நீக்கி இறப்புச் சான்றிதழ் வழங்கிடவும், தமிழகத்தில் கடந்த ஒன்றரை வருடமாக நிகழ்ந்த கரோனா மரணங்களின் உண்மை எண்ணிக்கையை வெளிப்படையாக வெளியிடவும் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

அறிக்கைகள்
s2 351 Views
  • Dr K Krishnasamy

    கொரோனா

  • Dr K Krishnasamy
Published: 11 Jun 2021

Loading

கோவிட் – 19 என்றழைக்கப்படும் கரோனா பெருந்தொற்று இந்திய நாட்டில் பரவியது முதல், தினமும் எண்ணற்றோர் மரணம் எய்தி வருகிறார்கள். மார்ச் மாதத்தில் இரண்டாவது அலை துவங்கிய பிறகு, அதிக அளவில் ஏற்படும் உயிரிழப்புகள் மிகுந்த கவலை அளிக்கின்றன. கரோனாவால் ஏற்படும் மரணங்கள் பற்றிய உண்மை தகவல்களை மத்திய, மாநில அரசுகள் முறையாகப் பொதுமக்களுக்கு தெரிவிக்கவில்லை என்ற கருத்துகளும் பெரிய அளவில் பரவி வருகின்றன. எண்ணிக்கை குறித்த தகவல்கள் இன்றில்லை என்றாலும், என்றாவது ஒருநாள் பூகம்பமாக வெடிக்கக் கூடும். உதாரணத்திற்கு, பீகார் மாநிலத்தில் கரோனா எண்ணிக்கை திட்டமிட்டு மறைக்கப்பட்டதாக செய்திகள் வருவதே இதற்குச் சாட்சி. தமிழகத்திலும் கரோனா தொற்று ஏற்பட்டு வீட்டில் மரணம் எய்தியவர்களைக் கணக்கில் கொள்வதே இல்லை. இதனால் இறப்புச் சான்றிதழ் பெறுவதில் ஏழை, எளிய மக்கள் அலைக்கழிக்கப்படுவதாகச் செய்திகள் வருகின்றன.

கரோனா பாசிட்டிவ் தெரிந்த நாள் முதல் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று மரணம் எய்தினால் மட்டுமே இறப்புச் சான்றிதழ் வழங்கப்படுகிறது. கரோனா தொற்றுக்கு ஆளானோர் பலர் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய சில நாட்களிலேயே கரும் பூஞ்சை நோய், மாரடைப்பு மற்றும் முளை இரத்தக் கசிவு போன்ற கரோனா தொடர் பாதிப்புகளாலும் மரணம் எய்துகிறார்கள். கரோனா வியாதியால் உடலில் என்னென்ன பாதிப்புகள் ஏற்படுகிறது? உடலின் எந்த உறுப்பை அதிகம் பாதிக்கிறது? என்பதைக் கண்டறியப் பிரேதப் பரிசோதனை செய்யத் தொடர்ந்து நான் வலியுறுத்தி வருகிறேன். ஆனால், கரோனா தொற்று ஏற்பட்ட நாள் முதல் நடைபெற்ற பல்லாயிரக்கணக்கான மரணங்களில் ஓரிரு பிரேதப் பரிசோதனை கூட நடைபெற்றதா? என்றால் அது சந்தேகமே.

மூச்சுத்திணறலுடன் மட்டும் மருத்துவமனைக்கு வந்து மயங்கி விழுந்து உயிர் நீத்தவர்கள்; போதிய விழிப்புணர்வு இல்லாத காரணங்களாலும், சமூக காரணங்களாலும் வீட்டிலேயே முடங்கிக் கிடந்து மரணமெய்தியவர்கள்; சுயமாகச் சிகிச்சையை மேற்கொண்டு மரணமெய்தியவர்கள்; நோய்த் தொற்று ஏற்பட்டிருந்தாலும் அதுகுறித்த அறிகுறிகள் எதுவும் வெளியே தெரியாததால் சிகிச்சைகள் எதுவும் பெறாமல் நிகழ்ந்த மரணங்கள்; கரோனா சிகிச்சைகளுக்கு பின்னர் மருத்துவமனைகளிலிருந்து வீடு திரும்பிய பின் ஏற்படும் மரணங்கள் என பல வகைகளில் கரோனா மரணங்கள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன.

எனவே இப்படிப்பட்ட சூழலில் கரோனா பாசிட்டிவ் தெரிந்த நாள் முதல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மரணம் எய்தினால் மட்டுமே இறப்புச் சான்றிதழ் வழங்கப்படும் என்ற ஓர் அலகின் மூலம் மட்டும் தீர்மானிக்கும் முறை தவறானது. இதனால் கணவனை இழந்த பெண்கள், மனைவியை இழந்த ஆண்கள், பெற்றோரை இழந்த குழந்தைகள், உற்றார் உறவினர் என பல தரப்பினரும் இறப்புச் சான்றிதழ் பெற முடியாமல் பெரும் துயருக்கு ஆளாகுகிறார்கள். அதுமட்டுமல்ல, உண்மையான இறப்புகளின் எண்ணிக்கை மத்திய, மாநில அரசுகளுக்கும் மிக முக்கியம்; சமூகத்திற்கும் மிக முக்கியம். ஏனெனில் பெருந்தொற்றுக்களால் ஏற்படும் பாதிப்புகளின் புள்ளி விபர அடிப்படையில் மட்டுமே சர்வதேச சுகாதார நிறுவனம் எதிர்கால திட்டமிடல் குறித்து உறுப்பு நாடுகளுக்கு உரிய அறிவுரைகளை வழங்கும். மேலும் மூன்றாவது, நான்காவது அலை ஏற்படும் என்ற இந்த வேளையில் ஏன் இறப்பு விகிதங்களை மறைத்திட வேண்டும்? எனவே மாநில அரசுகள் மரணங்களைக் குறைத்துக் காட்ட வேண்டும் என்ற தவறான சிந்தனையில் ஈடுபட்டால் அது நாட்டுக்கும், வீட்டுக்கும் மிகப்பெரிய பின்விளைவுகளை ஏற்படுத்தும்.

அதுவும் குறிப்பாக கரோனா ஊரடங்கு அமலில் இருக்கும் போது கரோனா இறப்புச் சான்றிதழ் பெற ஏழை, எளிய மக்களை அலைக்கழிப்பது எவ்வித்திலும் நியாயம் இல்லை. பிறப்பு சான்றிதழ் எப்படி ஒருவருக்கு வாழ்நாள் முழுவதும் முக்கியமோ, அதே போல இறப்புச் சான்றிதழ் நாட்டுக்கும் முக்கியம்; இறந்தவர்களின் குடும்பங்களுக்கும் முக்கியம். ஏனெனில் ஒவ்வொரு இறப்புச் சான்றிதழிலும் இறப்புக்கான காரணங்கள் குறிப்பிடப்பட வேண்டும். அப்படி இல்லையெனில் அச்சான்றிதழ் கூட செல்லாததாகிவிடும். இறப்பு சான்றிதழ் இருந்தால் தானே வாரிசு வேலை, வாரிசு சொத்துக்கள், இன்சூரன்ஸ், அரசு நிவாரணங்கள் உள்ளிட்ட எல்லாவற்றையும் முறையாகப் பெற முடியும்.

எனவே, கரோனா இறப்புச் சான்றிதழ் வழங்குவதில் உள்ள காலதாமதம் மற்றும் இடர்பாடுகளை அறவே நீக்கி இறப்புச் சான்றிதழ் வழங்கிடவும், தமிழகத்தில் கடந்த ஒன்றரை வருடமாக நிகழ்ந்த கரோனா மரணங்களின் உண்மை எண்ணிக்கையை வெளிப்படையாக வெளியிடவும் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

டாக்டர் க.கிருஷ்ணசாமி MD,
நிறுவனர் & தலைவர்.
புதிய தமிழகம் கட்சி.
11.06.2021