டெல்டா பகுதியில் நிலக்கரி ஆய்வுச் செய்ய மாநில அரசு அனுமதி அளித்ததா? தடைசெய்யப்பட்ட வேளாண் மண்டலத்தில் நிலக்கரி சுரங்கம் அமைக்க டெண்டர் கோர மத்திய அரசு அனுமதித்தது எப்படி?
410 Views
![]()
எந்த ஒரு தேசத்தின் வளர்ச்சியும் அந்தந்த தேசங்களில் கிடைக்கப் பெறும் வனவளம், நிலவளம், நீர்வளம், கடல் வளம், கனிம வளம் மற்றும் மனித வளங்களின் அடிப்படையிலேயே அமையும்.!
இந்திய தேசம் மூன்று பகுதிகளிலும் கடல் வளம் மிக்க பகுதியாகும்; மேற்குத் தொடர்ச்சி மலைகள், கிழக்கு தொடர்ச்சி மலைகள், விந்திய மலை, இமயமலை உள்ளிட்ட மலை வளங்களாலும்; வற்றாத ஜீவ நதிகளான கங்கை, யமுனை, பிரம்ம புத்திரா, சிந்து, கோதாவரி, கிருஷ்ணா, நர்மதா, காவேரி, தாமிரபரணி உள்ளிட்ட நதி வளங்களாலும் நாம் செழிப்படைகிறோம். நீர் வளத்திற்கு ஏற்ப மண் வளமும் நம்மிடத்திலே உண்டு. இவைகளில் பெரும்பாலனவைகள் பூமிக்கும் மேற்பரப்பில் இருக்கக்கூடிய வளங்கள்.
இந்த நவீனக் காலத்தில் பூமியின் மேற்பரப்பில் கிடைக்கக்கூடிய வளங்களைக் காட்டிலும், பூமி மற்றும் கடலுக்கு அடியில் கிடைக்கும் இரும்புத் தாது; நிலக்கரி மற்றும் பெட்ரோலியப் பொருட்கள், கனிம வளங்கள் எந்த தேசத்தில் அதிகமாக கிடைக்கிறதோ அந்த தேசமே வேகமாக முன்னேறி இருக்கிறது. ஐரோப்பாவில் புரட்சி ஏற்பட்ட காலத்தில் அந்த நாட்டில் கிடைத்த நிலக்கரி, இரும்பு; பிற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பிற தாதுக்களே அந்நாட்டின் தொழில் வளர்ச்சியை ஊக்குவித்தன.
தொழில் வளர்ச்சிக்கு மையமாக விளங்குவது மின்சாரம். மின்சார உற்பத்தியில் இன்றுவரையிலும் பெரும் பங்காற்றுவது ’தெர்மல் பவர்’ என்று அழைக்கப்படக்கூடிய நிலக்கரியால் உற்பத்தி செய்யக்கூடிய மின்சாரமே! 140 கோடி மக்களின் வீடு, வணிகம், மற்றும் தொழில், கல்வி நிறுவனங்களின் மின் தேவைகளை பெரும்பாலும் ’நிலக்கரி மின் உற்பத்தி நிலையங்கள்’ தான் பூர்த்தி செய்கின்றன.
நிலக்கரி உற்பத்தியை அடிப்படையாகக் கொண்டு துவங்கப்பட்ட நெய்வேலி நிலக்கரி கார்ப்பரேஷன் (NLC) 60 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு, அங்குத் தயாரிக்கப்படும் மின்சாரம் தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல, இந்தியா முழுமைக்கும் மத்திய தொகுப்பின் மூலமும் எடுத்துச் செல்லப்படுகிறது. இந்த முக்கியத்துவம் வாய்ந்த நெய்வேலி மின் உற்பத்தி நிலையத்திற்கு பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விவசாயிகளின் நிலங்கள் கடந்த காலங்களில் எடுத்துக் கொள்ளப்பட்டன. ஆனால் அந்த விவசாய நிலங்களை வழங்கிய பல பேருடைய நிலைமை இன்றும் கவலைக்கிடமாக இருக்கிறது. நிலம் கொடுத்தவர்கள் நட்ட ஈடு கேட்டு பல ஆண்டுகளாகப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு உண்டான நட்ட ஈடு இன்னும் வழங்கப்படவில்லை; வாக்குறுதிப்படி நிலம் வழங்கியவர்களுக்கு அந்நிறுவனத்தில் வேலை வாய்ப்பும் வழங்கப்படவில்லை.
இந்திய தேசத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியும் கணக்கிலே கொண்டு எங்கெல்லாம் பெட்ரோல், டீசல், நிலக்கரி, இரும்பு தாது உள்ளிட்ட கனிம வளங்கள் இருக்கிறதோ அங்கெல்லாம் ஆய்வு செய்து அதை நம்முடைய பாரத தேசத்தின் வளர்ச்சிக்குப் பயன்படுத்த வைப்பதே மத்திய-மாநில அரசுகளின் கடமை. ஆனால், அது அப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை தகர்க்கக்கூடாது.
கர்நாடக மாநிலத்தில் இரண்டு மூன்று மாவட்டங்களில் மிகப்பெரிய அளவிற்கு கனிம வள தாது கிடைக்கப்பெறுகிறது. ஒடிசா, சத்தீஸ்கர் போன்ற வடக்கு மாநிலங்களில் இரும்பு மற்றும் நிலக்கரி உள்ளிட்ட பிற தாதுக்கள் மிகப்பெரிய அளவிற்கு எடுக்கப்படுகின்றன. அப்போது அந்த பகுதி மக்களுடைய வாழ்க்கையும் சுபிட்சம் அடைந்திருக்க வேண்டும். ஆனால், இந்தியாவில் இதுபோன்ற சுரங்களை வெட்டி எடுப்பதற்கு தன்னுடைய நிலங்களை எல்லாம் வழங்கிய மக்களுடைய வாழ்க்கையில் பெரிய மாற்றங்கள் எதுவும் நிகழவில்லை. மாறாக, அந்த பகுதி மக்கள் முன்பை காட்டிலும் கீழ் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
ஒடிசா மாநிலத்தில் எண்ணற்ற பகுதிகளில் நிலக்கரி சுரங்கங்கள் மற்றும் இரும்பு தாதுக்கள் கிடைக்கின்றன. ஆனால், லட்சக்கணக்கான டன் நிலக்கரிகள், இரும்பு தாதுக்கள் எடுத்துச் செல்லப்பட்டு சுரங்க அதிபர்களும் மற்றவர்களும் மிகப்பெரிய அளவிற்கு பலன் அடைகிறார்கள். ஆனால் நிலம் வழங்கிய மக்களின் வாழ்நிலை மட்டும் கேள்விக்குறியாக இருக்கிறதே ஏன்?
ONGC என்று அழைக்கப்படக்கூடிய இந்திய எண்ணெய் நிறுவனம் நாகப்பட்டினம், தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் அமைத்த எண்ணெய் கிணறுகளால் அந்தப் பகுதி மற்றும் மட்டுமின்றி சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் மாசுபடுகின்றன; வேளாண்மை பாதிக்கப்படுகிறது. அதைக் கணக்கில் கொண்டு அந்தப் பகுதியில் வேறு எந்த நிறுவனமும் பெட்ரோல் உள்ளிட்ட வேறு எந்த துணைப் பொருட்களும் எடுத்திட அனுமதி மறுக்கப்பட்டு தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, அரியலூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள் வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு வேளாண்மை தவிர, வேளாண்மையைப் பாதிக்கப்படக்கூடிய பெட்ரோலியப் பொருட்கள் எடுப்பது, நிலக்கரி சுரங்கம் அமைப்பதற்கு அனுமதி இல்லை என்ற அரசாணை 2020-ல் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அதே டெல்டா மாவட்ட பகுதிகளில் ஒரத்தநாடு உள்ளிட்ட பிற பகுதிகளில் நிலக்கரி சுரங்கம் தோன்றுவதற்கு மத்திய அரசினுடைய கனிமவளத்துறை டெண்டர் கோரி உள்ளதாக தகவல்கள் வருகின்றன; அதைத் தொடர்ந்து அதற்கு எதிர்ப்புகளும் வருகின்றன. ஏற்கனவே நெய்வேலி விவசாயிகள் ஒரு பக்கம் போராடிக் கொண்டிருக்கிறார்கள். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு புதுக்கோட்டை, பேராவூர் பகுதியில் மீத்தேன் எடுக்க எதிர்ப்பு தெரிவித்து மிகப்பெரிய போராட்டங்கள் நடைபெற்றன.
ஏற்கனவே இது போன்ற கனிம வளங்கள் எடுக்க அனுமதி இல்லை என்று ஒரு மாநில அரசு முடிவு எடுத்து விட்ட பிறகு, மத்திய அரசு இதையெல்லாம் கணக்கிலே கொள்ளாமல் டெண்டர் கோர அனுமதி அளித்தது எப்படி? மாநில அரசு ஆய்வு செய்ய அனுமதித்ததா? என்ற கேள்விகளும் எழுகின்றன.
கடந்த இரண்டு வருடங்களாகத்தான் மத்திய அரசுக்கு எதிராக தமிழகத்தில் எவ்வித பெரிய போராட்டங்களும் இல்லாமல் உள்ளது. இந்நிலையில் டெல்டா பகுதியில் கனிம வளங்கள் எடுப்பதில் தமிழக மக்கள் மத்திய அரசுக்கு எதிரான மனநிலையில் இருப்பது தெரிந்தும் தெளிவற்ற நிலைப்பாடு எடுப்பது ஏன்? இச்சமயத்தில் டெல்டா பகுதியில் நிலக்கரி எடுக்க டெண்டர் கோரி இருப்பது மீண்டும் பெரிய போராட்டங்களுக்கும், அமைதி இன்மைக்கும் மட்டுமே வழி வகுக்கும்.
உலக அளவில் ஏற்படும் வெப்பநிலை மாற்றத்தால் புயல், சூறாவளி, வறட்சி, மழை, வெள்ளம் என்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன. இந்நிலையில் புவி வெப்பநிலையை அதிகரிக்கும் நிலக்கரியைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் முறையை தவிர்த்து விட்டு சூரிய ஒளி, காற்றாலை போன்ற மரபுசாரா மின் உற்பத்தியை ஊக்கப்படுத்த வேண்டும்.
டெல்டா பகுதியில் நிலக்கரி ஆய்வுச் செய்ய மாநில அரசு அனுமதி அளித்ததா?
தடைசெய்யப்பட்ட வேளாண் மண்டலத்தில் நிலக்கரி சுரங்கம் அமைக்க டெண்டர் கோர மத்திய அரசு அனுமதித்தது எப்படி?
டாக்டர் க. கிருஷ்ணசாமி MD.Ex MLA,
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
05.04.2023






