திராவிட ஸ்டாக்கிஸ்டுகளிடமிருந்து ’தமிழகத்தை’ வென்றெடுக்க, புதிய தமிழகமே ’மாற்று’ என்பதை உலகிற்கு எடுத்துரைக்க, புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!

அறிக்கைகள்
s2 82 Views
  • New Year 2023

    ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள் - டாக்டர் கிருஷ்ணசாமி

  • New Year 2023
Published: 01 Jan 2023

திராவிட ஸ்டாக்கிஸ்டுகளிடமிருந்து ’தமிழகத்தை’ வென்றெடுக்க,
புதிய தமிழகமே ’மாற்று’ என்பதை உலகிற்கு எடுத்துரைக்க,
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!

புதிய தமிழகம் கட்சியின் நிர்வாகிகளுக்கும்; கட்சியின் நரம்புகளாகவும் நாளங்களாகவும் விளங்குகின்ற தாய்மார்களுக்கும், இளைஞரணி நண்பர்களுக்கும், பெரியோர்களுக்கும்; தமிழகத்திலேயேயும் கடல் கடந்தும் வாழுகின்ற தமிழ் மக்கள் அனைவருக்கும்; விவசாய பெருங்குடி மக்கள், கைவினைஞர்கள், நெசவாளர்கள், மாணவர்களுக்கும்; அரசு ஊழியர்கள், வணிகப் பெருமக்கள், தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் தங்களுடைய உழைப்பையே மூலதனமாகக் கொண்டிருக்கக்கூடிய கோடான கோடி உழைப்பாளிகளுக்கும் புதிய தமிழகம் கட்சியின் சார்பாக 2023 ஆம் ஆண்டு புத்தாண்டு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழக மக்களிடத்திலே இன்றும் நிலவும் சமூக, பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் நீங்கி ’மனித குலம்’ என்ற ஒற்றை அடையாளத்தை அடைந்திட 2023 ஆம் ஆண்டு வித்திட வேண்டுமென வாழ்த்துகிறேன்.

ஆளும் அரசு மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாததால் 2022 ஆம் ஆண்டு அனைத்து தரப்பு மக்களும் பெருத்த ஏமாற்றம் நிறைந்த ஆண்டாகவே நிறைவு பெற்று இருக்கிறது. மாணவர்கள் முதல் முதியோர் வரை மது, போதை வஸ்துக்களுக்கு இலக்காகி ஒரு குடும்ப ஆட்சியின் கீழ் சிக்கித் தவிக்கிற தமிழகத்திற்கு 2023 ஆம் ஆண்டு விடுதலை களமாக அமைந்திட வாழ்த்துகிறேன்.

தமிழகம் கனிம வள கொள்ளைகளிலிருந்தும், எதிலும் ஊழல் என்ற நிலையிலிருந்தும் மீண்டெழ வாழ்த்துகிறேன். அனைத்து தரப்பினரையும் பாதிக்கும் பொருளாதார கஷ்டங்கள் பெருத்த மன அழுத்தத்தை உருவாக்கும் நிலைகள் மாறி பூரணமான அமைதியை அடைய வாழ்த்துகிறேன். மீண்டும் கரோனா வந்துவிடுமோ, என்ற அச்சம் உருவாகியுள்ள சூழலில் அது போன்ற ஒரு சூழல் உருவாகா வண்ணம் தடுத்திட சுய கட்டுப்பாடுகளை மேற்கொண்டு அதிலிருந்து தங்களையும் குடும்பத்தையும் சமூகத்தையும் பாதுகாத்திட வாழ்த்துகிறேன்.

அனைவரும் ஒன்றுபட்டு ஒரு தாய் மக்களாக விளங்கிய பாரதத் தாய் மக்களிடத்திலே என்றோ தோன்றிய சாதிய பிணக்குகள் – களைகள் முற்றாக நீங்கிடவும்; வழிபாடுகள் தனிமனித உரிமை என்பதை உணர்ந்து அந்நிய ஆக்கிரமிப்புகளால் உருவான மத பேதங்கள் விலகிடவும்; வெற்று வாக்குறுதிகளால் ஆட்சிக்கு வந்த திராவிட ஸ்டாக்கிஸ்டுகளிடமிருந்து தமிழக மக்கள் விடுதலை பெறவும், விழிப்பு பெறவும் வாழ்த்துகிறேன்.

புதிய தமிழகம் கட்சியைப் பொருத்தமட்டிலும் 2022 ஆம் ஆண்டு மிகப்பெரிய வளர்ச்சி கண்ட ஆண்டு. 2021 சட்டமன்ற தேர்தலில் ஏற்பட்ட பாதிப்புகளிலிருந்து ஆறே மாதத்தில் மீண்டெழுந்து புதிய தமிழகம் கட்சி வெறும் வாக்கு வங்கி கட்சி அல்ல, மக்களிடையே தேங்கிக் கிடந்த வாழ்வியலை மாற்றி முன்னேறிச் செல்வதற்கான மார்க்கம் என்பதை உலகிற்கு நிரூபித்த ஆண்டு இது.

ஜூலை 23 மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு அஞ்சலி செலுத்த ஆயிரக்கணக்கான வாகனங்களில் பேரணி; செப்டம்பர் 11 ஆம் தேதி தியாகி இமானுவேல் சேகரனார் நினைவிடத்திற்குச் செல்ல அதனிலும் பன்மடங்கு மக்கள் கூட்டம்; செப்டம்பர், அக்டோபர், நவம்பர் மாதங்களில் ஆளும் அரசின் மக்கள் விரோத சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, பெட்ரோல் – டீசல் விலை உயர்வைக் கண்டித்து மாபெரும் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள்; புதிய தமிழகம் கட்சியின் 25 ஆண்டு கால வரலாற்றை இன்னும் 25 வருடங்களுக்கும், 50 வருடங்களுக்கும், 100 வருடங்களுக்கும் எடுத்துச் சொல்லும் வகையில் விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் – அழகாபுரியில் டிசம்பர் 15-ல் மகத்தான மாநாடு; பல்வேறு முன்னணி அரசியல் கட்சிகளின் வாழ்த்துக்கள்; ஆன்மீக பெரியோர்களின் ஆசி உரைகள்; சமூகத் தலைவர்களின் உள்ளார்ந்த பாராட்டுக்கள்; புரையோடிப் போயிருந்த சமூக பிணக்குகள் நீங்கி இணக்கங்கள் உருவாக அனைவரும் கைகோர்த்து விடுத்த அறைகூவல்; கடந்த 25 ஆண்டுக் காலம் சுய சமூக விடுதலைக்காகப் போராடி, ஒட்டுமொத்த சமுதாய மக்களுடைய பொருளாதார – சமூக – அரசியல் மேம்பாட்டிற்காக தங்களை முழுமையாக அர்ப்பணித்துக் கொள்ள புதிய தமிழகம் கட்சியினர் சபதமேற்றுக்கொண்டது என 2022 ஆண்டு முழுக்க உற்சாகமும் எழுச்சியுமே பொங்கியது.

2023 ஆம் ஆண்டும், வரக்கூடிய காலகட்டங்களும் இதனிலும் பன்மடங்கு உற்சாகமும் எழுச்சியும் ஆரவாரமும் உள்ளடக்கிய ஆண்டாகவே அமையும். சென்னை கோட்டையிலேயேயும், டெல்லி கோட்டையிலேயேயும் புதிய தமிழகம் கட்சிக் கொடி பறந்திட வேண்டும் என்பதை நனவாக்கும் ஆண்டு இது! சமூக விடுதலைக்காக நம்மை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்ட காரணத்தினால் இதுவரையிலும் தொட முடியாமல் இருந்த அரசியல் அதிகாரத்தின் உச்சியைத் தொட்டுவிட வேண்டிய, தொட்டுவிடக்கூடிய உயரத்தில் இருப்பதை உணர்ந்து புதிய தமிழகம் கட்சியினர் தங்களுடைய முழு சக்தியையும் ஒன்று திரட்டி, 2024 நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் 2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி – அதிகாரத்தில் பங்கு என்ற லட்சியத்தை அடைந்திட தங்களை முழுமையாக அர்ப்பணிக்க எழுச்சி கொள்ள வேண்டிய ஆண்டு இது.

அர்ப்பணிப்புக்கும், உழைப்பிற்கும், உண்மைக்கும் எத்தனை ஆண்டுகள் கழித்தாலும் உரிய மரியாதை கிடைக்கும் என்பதே புதிய தமிழகம் கட்சியின் வெள்ளி விழா மாநாடு உலகிற்கு உணர்த்தியிருக்கும் பாடம். ”அரசியல் அதிகாரத்தை வென்றெடுக்க சமூக மாற்றம் தேவை; சமூக மாற்றத்தைத் தக்க வைக்க அரசியல் அதிகாரம் தேவை” என்ற நமது முழக்கத்திற்கு ஏற்ப ”கொள்கை ரீதியாகவும், சித்தாந்த ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும், செயல்பாட்டு ரீதியாகவும் திராவிட ஸ்டாக்கிஸ்டுகளுக்கு மாற்று புதிய தமிழகமே” என்ற அரசியல் முழக்கத்தை நிறைவேற்றித் தந்திட, ஒட்டுமொத்த தமிழக மக்களையும் புதிய தமிழகத்தின் பின்னால் ஒன்றிணைக்கும் பணியை 2023 ஆம் ஆண்டில் சிரமேற்கொண்டு செய்து, 2024, 2026-களில் நமது இலக்கை நிலைநாட்டிட புதிய தமிழகம் கட்சியினர் 2023 ஆம் ஆண்டை மன நிறைவுடன் வரவேற்போம்.!

இந்த உயரிய லட்சியத்தை நிறைவேற்றிட தங்களுடைய உடல் நலத்தைப் பேணி காப்பது தலையாயக் கடமை என்பதை உணர்ந்து, மது – போதை வஸ்துகளிலிருந்து அறவே விலகி நின்று, உள்ளத் தூய்மையையும் உடல் தூய்மையையும் தலையாய கடமையாகக் கருதி, அனைத்து மக்களின் குறைகளுக்குச் செவிமடுத்து, அவர்களின் சொல்லுக்கு தலை வணங்கி, தமிழக மக்களின் விடுதலை களத்தில் எவ்வித அர்ப்பணிப்புக்கும் தங்களை ஆயத்தப்படுத்திக் கொண்டு, வழி நடத்திச் செல்லும் வாய்ப்பை தங்களுடைய பிறவிப் பயனாகக் கருதி’ புதிய தமிழகம் படைக்க 2023 ஆம் ஆண்டில் வெற்றிப் பயணத்தை மேற்கொள்ள வாழ்த்துகிறேன்.!

”நன்றே செய்வோம், அதை இன்றே செய்வோம்” என்பதற்கு ஏற்ப நன்னாளான இன்று 2023 ஜனவரி 1 முதல் ஜனவரி 31 ஆம் தேதிக்குள் அனைத்து சட்டமன்ற, நாடாளுமன்ற தொகுதிகளிலும் வாக்குச்சாவடி முகவர் மற்றும் மேற்பார்வையாளர்கள் நியமிக்கும் பணியை முடித்திடவும்; பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் வெள்ளி விழா மாநாட்டுத் தீர்மான விளக்கப் பொதுக் கூட்டங்கள் எனத் தொடர் நிகழ்ச்சிகளுக்கு ஆயத்தமாகவும் வேண்டுகிறேன்.

திராவிட ஸ்டாக்கிஸ்டுகளிடமிருந்து தமிழகத்தை வென்றெடுக்க,
புதிய தமிழகமே ’மாற்று’ என்பதை உலகிற்கு எடுத்துரைக்க,
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!

டாக்டர் கிருஷ்ணசாமி MD.Ex MLA,
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
01.01.2023