திராவிட மாடலைத் திருப்பி அடிக்கிறது வரலாறு.!

அதிகாரத்தின் பின்புலத்தோடு திமுகவின் கூட்டத்தில் பெண் காவலர்களுக்கு இழைத்த அநீதியை என்றென்றும் மறைக்கவோ, மறக்கடிக்கவோ முடியாது. அதே போல அன்று அப்பாவி தோட்டத் தொழிலாளர் மீது வீண்பழி சுமத்தியதையும் என்றென்றும் மறைக்க முடியாது.

வரலாறு இப்பொழுது திருப்பி அடிக்கிறது. இந்த சாதாரண அடி போதாது; அவர்கள் நிகழ்த்திய தீய வரலாறுகள், ’திராவிட மாடலின்’ பொய் பித்தலாட்டங்கள் தவிடு பொடியாக்கப்பட்டு நிரந்தரமாக இம்மண்ணிலிருந்து அகற்றப்படும் வரை துரத்தி அடிக்கப்பட வேண்டும்.!
என்றென்றும் வாய்மையே வெல்லும்!

அறிக்கைகள்
s2 112 Views
  • Dr Krishnasamy

    திராவிட மாடலைத் திருப்பி அடிக்கிறது வரலாறு - டாக்டர் கிருஷ்ணசாமி

  • Dr Krishnasamy
Published: 04 Jan 2023

திராவிட மாடலைத் திருப்பி அடிக்கிறது வரலாறு.!

கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு, சென்னை விருகம்பாக்கத்தில் கனிமொழி கலந்து கொண்ட கூட்டத்தில் பாதுகாப்புப் பணிக்குச் சென்ற 22 வயது இரண்டு பெண் காவலர்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட திமுக ஆதரவாளர்கள் இரண்டு பேர் மீது, பாதிக்கப்பட்ட இரண்டு பெண் காவலர்கள் உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்ததன் பேரில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட அவ்விருவரும் திமுக சட்டமன்ற உறுப்பினரின் தலையீட்டால் விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள்.

”பெண் காவலர்களுக்கே இந்த ஆட்சியில் எவ்வித பாதுகாப்பும் இல்லை” என்று பல அரசியல் கட்சிகளும் இப்பொழுது குரல் எழுப்ப ஆரம்பித்து இருக்கிறார்கள். ’வரலாறுகள் திருப்பி அடிக்கும்’ என்பதற்கு இணங்க திமுகவின் இச்சம்பவம் 23 ஆண்டுகளுக்கு முன்பு தாமிரபரணி ஆற்றில் 1 வயது பாலகன் விக்னேஷ் உட்பட 17 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தை நினைவூட்டுகிறது.

சமதளப் பகுதிகளில் தங்களுடைய சொந்த நிலத்தில் விவசாயப் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த லட்சோப லட்சம் ஏழை, எளிய விவசாயக் குடி மக்களை நூறு வருடங்களுக்கு முன்பு ஆட்சியிலிருந்த பிரிட்டிஷார் கங்காணிகளை வைத்து அரட்டியும், மிரட்டியும் தமிழகத்திற்குள்ளே திருநெல்வேலி, மாஞ்சோலை, கோவை மாவட்டம் வால்பாறை, நீலகிரி மாவட்டம் குன்னூர், கோத்தகிரி போன்ற பகுதிகளில் தேயிலைத் தோட்டங்களைப் புதிதாக உருவாக்கவும்; கடல் கடந்து பர்மா, மலேசியா போன்ற நாடுகளில் ரப்பர் தோட்டங்களில் பணியாற்றவும்; இலங்கையில் தேயிலைத் தோட்டங்களை உருவாக்கவும்; பிஜி தீவிலும், ஆப்பிரிக்காவிலும் கரும்புத் தோட்டங்கள் – சுரங்கங்களில் பணியாற்றவும் அழைத்துச் செல்லப்பட்டார்கள்.

ஈவிரக்கமற்ற ஆங்கிலேயர்கள் கொடுத்த சிறிய வசதிகளைக் கூட பொறுத்துக் கொள்ளா முடியாத தேயிலைத் தோட்டங்களுக்கு அதிபதிகளான உள்நாடு மற்றும் வெளிநாட்டு முதலாளிகள் இந்தியா சுதந்திரம் பெற்றவுடன் அம்மக்களை அதனினும் கொடுமையாக சுரண்டத் தொடங்கினார்கள். 200 வருடங்களுக்கு முன்பு தகரங்களால் செய்த வீடுகளில் பல வருடங்களாக பழுது பார்க்காமலும் கூட வாழும் நிலைக்கு நிர்ப்பந்திக்கப்பட்டார்கள்; காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை கூட அட்டைப் பூச்சிகளும், கொடிய விலங்குகளும் வாழக்கூடிய காடுகளில் பணி செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டார்கள்; 40 நாட்களுக்கு உட்பட்ட குழந்தைகளுக்குக் கூட பால் கொடுக்க தாய்மார்கள் அனுமதிக்கப்படவில்லை; 1947 ஆகஸ்ட் 15 சுதந்திரம் பெற்ற செய்தி கூட அந்த எளிய மக்களை எட்டிப் பார்க்கவில்லை.

பெயரளவிற்கே தொழிற்சங்கங்கள் இருந்தன. ’பெரும் முதலாளிகளின் பகைக்கு ஆளாகுவோம்’ என்ற அச்சத்தில் வாக்குகளை மட்டுமே கணக்கில் கொண்ட அரசியல் கட்சிகள் அந்த தொழிலாளர்களுடைய வாழ்நிலை பற்றி வாய் திறக்கவே இல்லை. அன்றைய காலக் கட்டத்தில் கிராமங்கள், நகரங்களில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஆறு மணி முதல் எட்டு மணி நேர வேலைக்கு 100 ரூபாய் முதல் 150 ரூபாய் சம்பளம் இருந்த பொழுது, தோட்டத் தொழிலாளர்களுக்கு 10 மணி நேரம் முதல் 12 மணி நேர பணிக்கே ரூபாய் 30 மட்டுமே சம்பளமாக இருந்தது.

இதுபோன்ற ஒரு சூழலில், நாம் சட்டமன்ற உறுப்பினராக இருந்த 1996 முதல் 2001 கால கட்டங்களில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடைய அவல நிலைகளை சட்டமன்றத்தில் எடுத்துரைத்தோம். 8 மணி நேர வேலையை வலியுறுத்திப் போராடிய காரணத்திற்காக அரை நாள் சம்பளத்தையே குறைத்த நிர்வாகத்தைக் கண்டித்து முழு சம்பளம் வழங்கிட உத்தரவிடக்கோரி அன்றைய திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, போராடிய 225 பெண்கள், 25 குழந்தைகள் உட்பட 625 பேரை நிபந்தனையின்றி விடுதலை செய்ய வலியுறுத்தி, 1999 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 23 ஆம் தேதி ஆறு சட்டமன்ற உறுப்பினர்களை உள்ளடக்கி புதிய தமிழகம் கட்சியின் தலைமையில் பத்துக்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகள் கலந்து கொண்ட பேரணி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி நடைபெற்றது.

காலை 10 மணிக்கு நெல்லை சந்திப்பிலிருந்து புறப்பட்ட ஊர்வலம் மதியம் 2 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை அடைந்தது. ஊர்வலத்தின் முன் வரிசையில் தோட்டத் தொழிலாளர் பெண்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியைச் சார்ந்த மகளிர் அணி அமைப்பினர் மட்டுமே சென்றனர். அவர்களைத் தொடர்ந்து மற்ற அரசியல் கட்சியினுடைய தலைவர்கள் ஜீப்பிலும், அதற்குப் பின் தேயிலைத்தோட்ட ஆண் தொழிலாளர்களும் என இரண்டு கிலோ மீட்டர் தூரத்திற்கு அணிவகுத்து வந்தார்கள். மதியம் 2 மணியளவில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு முன்பாக குவிக்கப்பட்டிருந்த ஏராளமான போலீசார் துணை கொண்டு ஊர்வலம் தடுத்து நிறுத்தப்பட்டது. 625 தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களையும் நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும் என்று மனுக் கொடுப்பதற்காக ஆறு சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மட்டுமே அனுமதி கோரி மாவட்ட வருவாய்த்துறை அதிகாரிகளுடன் பேசிக் கொண்டிருந்தபோதே கண்மூடி கண் திறப்பதற்குள் காலை உணவு, மதிய உணவு கூட இல்லாமல் நடந்து வந்த களைப்பில் சுடுகின்ற தரையில் தங்களுடைய காலணிகளை கீழே போட்டு அதன் மீது அமர்ந்து கொண்டிருந்த ஆயிரத்திற்கு மேற்பட்ட பெண்கள் உட்பட தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் அனைவர் மீதும் திடீரென்று காவல்துறை கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசினார்கள்; ஒட்டுமொத்த கூட்டத்தின் மீதும் காட்டுமிராண்டித் தனமாக தடியடி நடத்தினார்கள்.

திடீரென்று நடத்திய தடியடியில் பேரணியில் கலந்து கொண்ட ஆண்களும் பெண்களும் நிலை குலைந்து போயினர். சாலையோரம் நின்று கொண்டிருந்தவர்களை அப்படியே ஆற்றுக்குள் தள்ளிவிட்டது காவல்துறை. நீந்தி மறு கரை ஏறிச் சென்று விடலாம் என்று சென்றவர்களையும் கரை ஏற விடாமல் லத்திகளைக் கொண்டு அடித்து தண்ணீரிலே மூழ்கடித்தார்கள்; பலரைப் பலத்த காயப்படுத்தி ஆற்றுக்குள் தூக்கிப் போட்டார்கள். அப்படித்தான் 17 பேரும் தாமிரபரணி ஆற்றிலே உயிர் நீர்த்தார்கள்.
ஆங்கிலேயருடைய காலத்தில் ஜாலியன் வாலாபாக்கில் தாக்குதல் நடத்திய ஜென்ரல் டயருக்கு ஈடாக அன்றைய மாவட்ட ஆட்சியர் ஒருவரும், டிஐஜி ஒருவரும் இணைந்து ஒரு மிகப்பெரிய மனித உரிமை மீறலை நடத்தினார்கள்.

தமிழகத்தின் வற்றாத ஒரே ஜீவநதியான தாமிரபரணியில் அன்று கண்ணீருக்குப் பதிலாக தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் ரத்தம் மட்டுமே ஓடியது. அவ்வளவு கொடூரமான நிகழ்விற்கு – காவல்துறை ஏன் தடியடி நடத்தியது என்பதற்கு அன்றைய ’முதல்வர் – முத்தமிழ் வித்தகர் – சமூக நீதி காவலர்’ கருணாநிதி சொன்ன பதில் பேரணியில் கலந்து கொண்டவர்கள் பெண் காவலர்களைச் சீண்டினார்கள் என்பதே.!

பேரணியின் முன் வரிசையிலிருந்த ஆயிரக்கணக்கான பெண்களுக்கு எதிரே குவிக்கப்பட்டிருந்த ஆண் காவலர்களையும் தாண்டி நின்று கொண்டிருந்த பெண் காவலர்களைப் பேரணியின் கடைசியில் வந்த ஆண்கள் சீண்டினார்கள்; அதனால் தான் தடியடி நடத்தினோம் என்று அபாண்டமாக வீண் பழி சுமத்தினார். சப்பைக்கட்டு கட்ட நெல்லையிலிருந்து 300 கி.மீ அப்பாலுள்ள பழனி காவல் சரகத்தைச் சேர்ந்த பெண் காவலர்களை புகார் கொடுக்க பலிகடா ஆக்கினார்; 17 பேருடைய மரணத்தை நியாயப்படுத்த முயற்சி செய்தார்.

”வரலாறு எப்பொழுதுமே திருப்பி அடிக்கும்” என்பதற்கு இலக்கணமாக, பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னா பிற்பகல் தாமே வரும் என்பதை போல விருகம்பாக்கத்தில் கனிமொழியின் கூட்டத்தில் மாடல் ஆட்சி வார்த்தெடுத்த கொள்கை குன்றுகள் 22 வயது பெண் காவலர்களை பாலியல் ரீதியாகச் சீண்டியிருக்கிறார்கள் எனக் குற்றச்சாட்டு எழுந்து இருக்கிறது. ஆனால், இன்று வரையிலும் அவர்கள் மீது எவ்வித வழக்குப் பதிவோ, கைது நடவடிக்கையோ எடுக்கப்படவில்லை. மாறாக ஒப்புக்காக கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டு; அவர்கள் பாதுகாக்கப்படுகிறார்கள் என்ற செய்திகள் வருகின்றன. ஊடகம், ஆட்சி –

அதிகாரத்தின் பின்புலத்தோடு திமுகவின் கூட்டத்தில் பெண் காவலர்களுக்கு இழைத்த அநீதியை என்றென்றும் மறைக்கவோ, மறக்கடிக்கவோ முடியாது. அதே போல அன்று அப்பாவி தோட்டத் தொழிலாளர் மீது வீண்பழி சுமத்தியதையும் என்றென்றும் மறைக்க முடியாது.

வரலாறு இப்பொழுது திருப்பி அடிக்கிறது. இந்த சாதாரண அடி போதாது; அவர்கள் நிகழ்த்திய தீய வரலாறுகள், ’திராவிட மாடலின்’ பொய் பித்தலாட்டங்கள் தவிடு பொடியாக்கப்பட்டு நிரந்தரமாக இம்மண்ணிலிருந்து அகற்றப்படும் வரை துரத்தி அடிக்கப்பட வேண்டும்.!
என்றென்றும் வாய்மையே வெல்லும்!

டாக்டர் க. கிருஷ்ணசாமி MD.Ex MLA,
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
04.01.2023.