2026-ல் கூட்டணி ஆட்சிக்கு ஆயத்தமாகுங்கள்.! தமிழக அரசியல் கட்சிகளுக்கு ’மகாயுதி’ கூட்டணி சொல்லும் பாடம்.!

அறிக்கைகள்
s2 21 Views
  • Dr Krishnasamy 2
  • Dr Krishnasamy 2
Published: 24 Nov 2024

Loading

2026-ல் கூட்டணி ஆட்சிக்கு ஆயத்தமாகுங்கள்.!
தமிழக அரசியல் கட்சிகளுக்கு ’மகாயுதி’ கூட்டணி சொல்லும் பாடம்.!

மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக, சிவசேனாவின் ஷிண்டே அணி, தேசியவாத காங்கிரஸின் அஜித் பவார் அணி ஒன்றிணைந்து பெரும் வெற்றியை ஈட்டி இருக்கிறார்கள். சிவசேனாவை உடைத்து ஏக்நாத் ஷிண்டேவும், சரத் பவார் கட்சியை உடைத்து அஜித் பவாரும் பாஜகவுடன் ஒன்றிணைந்து கடந்த 2022 முதல் கூட்டணி ஆட்சியை நடத்தி வருகிறார்கள். அந்த கூட்டணி ஆட்சி தொடருமா? என்ற கேள்விக்குறி இருந்தது. ஆனால் எதிர்பார்ப்புகளையும், கருத்துக்களையும் விஞ்சி 288 இடங்களில் 233 இடங்களை பாஜக கூட்டணி கைப்பற்றி இருக்கிறது.

ஆட்சியின் நலத்திட்டங்களால் வெற்றி பெற்றார்களா? கூட்டணி பலத்தால் வெற்றி பெற்றார்களா? எனில், ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்ற ”கூட்டணி ஆட்சிக் கோட்பாடு” பலத்தால் ”மகாராஷ்டிரா மஹாயுதி அணி” வெற்றி பெற்றுள்ளது. மாறாக, ஆட்சி அதிகாரத்தில் பங்கு கொடுக்க மனமில்லாத ”திராவிட மாடல்” போன்ற கூட்டணியால் அல்ல!

தற்போது வரை பாஜகவே அதிகமான சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட கட்சி எனினும், எதிர் கட்சிகள் ஆட்சி அமைத்து விடக்கூடாது என்ற அடிப்படையில் குறைந்த சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கையில் உள்ள அஜித் பவாரை முதல்வர் ஆக்கி, தேவேந்திர பட்னாவிஸ் துணை முதல்வராகி தன்னை ஒரு படி இறக்கிக் கொண்டார். ஷிண்டேவின் சிவசேனாவும் முக்கிய பொறுப்புகளுடன் ஆட்சியில் உள்ளனர். இனியும் அஜித் பவாரே முதல்வர் என்ற நிலை தொடருமா? அல்லது வேறு புதிய சூழல்கள் உருவாகுமா? என பொறுத்திருந்து பார்ப்போம். இது வேறு.

நடந்து முடிந்த தேர்தல் முடிவுகள் மகாராஷ்டிராவிற்கு மட்டுமல்ல; பிற மாநிலங்களுக்கும் முன்னுதாரணமாக அமையும். 2026 இல் சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்க உள்ள தமிழகத்திற்கு இது நன்கே பொருந்தும்.!
தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைப்பதற்கான பல சந்தர்ப்பங்கள் ஏற்பட்டும் தமிழக கட்சிகள் நழுவு விட்டுவிட்டன. ராஜாஜி அவர்கள் உறுதியாக நின்றிருந்தால் 1967 லேயே திமுக – சுதந்திரா – கம்யூனிஸ்ட் கூட்டணி ஆட்சி ஏற்பட்டிருக்கும். திருமதி இந்திரா காந்தி அவர்கள் கண் அசைத்திருந்தால் 1971-ல் திமுக – காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைந்திருக்கும். அதேபோன்று ராஜீவ் காந்தி மரணத்திற்கு பின்னர் 1991-லும், 1996 தோல்விக்கு பின்னர் திமுக – தமாகா; 2006-ல் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி ஆட்சிகள் மலர்ந்திருக்கும்; ஆனால், காங்கிரஸ் மத்தியில் ஆட்சி என்ற ஒரே கனவுடன் மாநிலங்களிலும் ஆட்சியை இழந்தார்கள்; விளைவு நாளடைவில் மாநிலக் கட்சிகளுக்கே இரையாகி விட்டார்கள்.

”ஆட்சியில் பங்கு இல்லை; சீட் வேண்டுமானால் ஒன்று, இரண்டு வேண்டுமென்றால் கூடுதலாகக் கேட்டுப் பெறுங்கள்” என திமுக மீண்டும் தனது நிலையை தெளிவுபடுத்திவிட்டது. 10 தொகுதிகளை கேட்டுப் பெற்று, அதில் வெற்றி பெற்றாலும் ஐந்து ஆண்டுகளுக்கும் சில கோரிக்கைகளைக் கூட நிறைவேற்ற மன்றாடும் நிலை தான் இனியும் இருக்கும் என்பது பொதுவுடமைவாதிகளுக்கு புரிந்தும் புரியாதது போல் மீண்டும் நடந்து கொள்ள போகிறார்களா? தமிழக புதிய அரசியல் சூழலுக்கு காங்கிரஸ் தன்னை ஆயத்தப்படுத்திக் கொள்ளுமா?

2026-ல் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைப்பதற்கான அரிய தருணம்.! அதற்கான அஸ்திரத்தை தம்பி விஜய் ஏற்கனவே தொடுத்துள்ளார். மித மிஞ்சிய ஊழலும், கனிம வளக் கொள்ளை, டாஸ்மாக் ஊழல் மற்றும் அதனால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து தமிழகத்தை விடுவிக்க; தனிப்பட்ட மன மாச்சரியங்களை மறந்து, வெறுப்பு அரசியலை ஒதுக்கி, தமிழகத்தில் உள்ள எல்லாப் பிரச்சனைகளுக்கும் தீர்வு குறைந்தபட்ச செயல்திட்டத்தில், ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற முழக்கத்துடன் தமிழக அரசியல் கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும் என்பதே மகாராஷ்டிரா தேர்தல் முடிவுகள் சொல்லும் பாடமாகும்.

டாக்டர் க. கிருஷ்ணசாமி MD, Ex.MLA,
நிறுவனர் – தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
24.11.2024