‘இந்து தமிழ் திசை’ நாளிதழுக்கு நாம் அளித்த பேட்டியின் முழு விபரம்:
‘இந்து தமிழ் திசை’ நாளிதழுக்கு நாம் அளித்த பேட்டியின் முழு விபரம்:
புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அருந்ததியருக்கான உள் இட ஒதுக்கீடு எதிர்ப்பில் கொட்டும் மழையில் சாலையில் புரண்டு போராடும் அளவுக்கு மூர்க்கமாக இருக்கிறார். கூடவே, மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்களுக்காகவும் நீதிமன்றக் கதவுகளைத் தட்டிக்கொண்டிருக்கும் அவரிடம் பேசியதிலிருந்து..!
1. அருந்ததியருக்கான உள் இட ஒதுக்கீட்டை இத்தனை கடுமையாக நீங்கள் எதிர்ப்பது ஏன்?
அருந்ததியருக்கான 3% உள் இட ஒதுக்கீடு சட்டரீதியாகவும் தார்மீக ரீதியாகவும் தவறானது. இந்திய அரசியல் சாசனத்தின் படி, கல்வியிலும் சமுதாய ரீதியாகவும் பின்தங்கிய மக்களை உள்ளடக்கிய அட்டவணை பிரிவு தயாரிக்கப்பட்டு, அதில் எந்த ஒரு பிரிவினரையும் நீக்குவது அல்லது சேர்க்கும் உரிமை முழுமைக்கும் இந்திய ஜனாதிபதியின் அதிகார வரம்பிற்குள் உட்படுத்தப்பட்டுள்ளது. எனவே, அரசியல் சாசனத்தின் விதிமுறைகளுக்கு மாறாக, ஒரு குறிப்பிட்ட சாதிக்கு உள் இட ஒதுக்கீடு கொடுக்கப்பட்ட காரணத்தினால் தான், அதைக் கடுமையாக ஆரம்பத்தில் இருந்தே எதிர்த்து வருகிறேன். உச்ச நீதிமன்றத்திலும் இன்றுவரை எனது மேல்முறையீடு நிலுவையில் உள்ளது.
தமிழகத்தில் பட்டியல் பிரிவில் 76 சாதிகள் உள்ளடங்கி இருக்கின்றன. அந்த 76 சாதிகளில் ’அருந்ததியர்கள்’ மட்டும் மிகப் பின்தங்கி இருக்கிறார்கள் என்பதும், அவர்களுக்கு 3% உள் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதும் எந்த ஆதாரங்களின் அடிப்படையில் தீர்மானித்தார்கள்?
அருந்ததியர் இட ஒதுக்கீட்டிற்காக அமைக்கப்பட்ட ஜனார்த்தனன் கமிட்டியும் அரசுத் துறைகளில் முழுமையான தரவுகளைப் பெற்று அறிக்கை தாக்கல் செய்யவில்லை. எவ்விதமான அதிகாரப்பூர்வமாக நம்பத் தகுந்த வகையில் புள்ளி விவரங்களும் திரட்டப்படாமல் கூட்டணி அரசியல் அழுத்தங்களுக்கு ஆட்பட்டு தமிழகத்தின் மூத்த குடிமக்களான தேவேந்திர குல வேளாளர்களையும் ஆதிதிராவிட பறையர் சமூக மக்களையும் பழி வாங்கும் வகையில் வேறு வேறு காரணங்களுக்காக பட்டியல் பிரிவினருக்கான 18 சதவிகிதத்தில் 3 சதவீத உள் இட ஒதுக்கீட்டை உறுதி செய்ததோடு, எஞ்சியுள்ள 15 சதவீதத்திலும் முன்னுரிமை அடிப்படையில் அருந்ததியர் எனும் மிக மிகச் சிறுபான்மையினர் கபளீகரம் செய்ய அனுமதித்தது எப்படிச் சட்டப்படி செல்லுபடியாகும்? இது எப்படிச் சமூக நீதியாகும்? இந்த அநியாயத்தை எதிர்க்காமல் நான் எப்படி இருக்க முடியும்.?
அது மட்டுமின்றி, ஜனார்த்தனன் கமிட்டியின் அறிக்கையின் படி, ஒவ்வொரு பத்தாண்டுகளுக்கு ஒரு முறை உள் இட ஒதுக்கீட்டின் நன்மை தீமைகளை ஆய்வு செய்திருக்க வேண்டும். அதையும் இந்த அரசு செய்யவில்லை. எனவே, இச்சட்ட விரோத 3% உள் இட ஒதுக்கீட்டை ரத்து செய்யும் வரையிலும் எங்களது போராட்டம் தொடரும்.
2. இட ஒதுக்கீட்டில் அருந்ததியருக்கான பின்னடைவுப் பணியிடங்கள் தான் நிரப்பப்படுவதாகச் சொல்லப்படுகிறதே?
அவ்வாறு ஒரு குறிப்பிட்ட சாதியினருக்கு மட்டும், பின்னடைவு பணியிடங்களை நிரப்பச் சட்டத்தில் இடமில்லை. அவ்வாறு தமிழக அரசு ஒரு குறிப்பிட்ட சாதியை மட்டும் வைத்து பட்டியலின மக்களுக்கான முழுப்பின்னடைவுப் பணியிடங்களையும் நிரப்பியிருந்தால் அது முழுக்க முழுக்க தவறான நடவடிக்கை ஆகும்.
”அட்டவணை பிரிவில் உள்ள மக்களுக்கான இட ஒதுக்கீடு எந்தெந்த துறைகளில் எவ்வளவு வழங்கப்பட்டிருக்கிறது என்பது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என 1996 – 2001 ஆம் ஆண்டுகளில் நான் சட்டமன்ற உறுப்பினராக இருந்த பொழுது வலியுறுத்தியதன் அடிப்படையில் ஒரு கமிட்டி அமைக்கப்பட்டு அதன் முடிவில் 3½ லட்சத்திற்கும் மேற்பட்ட பின்னடைவுப் பணியிடங்கள் (BACKLOG) என அடையாளம் கண்டறியப்பட்டது.
சமூக நீதி, முற்போக்கு பேசக்கூடிய ஆட்சியாளர்கள் அந்த 3 ½ லட்சம் பின்னடைவு காலி பணியிடங்களை நிரப்புவதற்கு, அவர்களின் இத்தனை ஆண்டுகால ஆட்சியில் ஏதாவது சிறப்பு ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளை எடுத்த வரலாறு உண்டா.?
2009 ஆம் ஆண்டு தான் அருந்ததியர் உள் இட ஒதுக்கீடு அரசாணை பிறப்பிக்கப்பட்டது. ஓர் அரசாணை பிறப்பிக்கப்படும் பொழுதே அப்பிரிவினருக்கு பின்னடைவு பணியிடங்கள் எப்படித் தோன்றும்.! ஒருவேளை அந்தப் பணியிடங்களுக்குப் போட்டியிடவே அவர்கள் இன்னும் ஆயத்தமாக வில்லை என்கிற பொழுது உள் இட ஒதுக்கீட்டின் நோக்கமே தவறானது அல்லவா.!
3. இந்த விவகாரம் உச்ச நீதிமன்றம் வரைக்கும் போன பிறகு திமுக அரசால் இனி என்ன செய்யமுடியும் என நினைக்கிறீர்கள்?
அருந்ததியர் அல்லது வேறு எந்த ஒரு சாதிக்கும் முன்னுரிமை அடிப்படையில் சாதி வாரியாக இட ஒதுக்கீடுகள் கொடுப்பதற்கு உச்சநீதிமன்றம் தீர்ப்பளிக்கவில்லை. பட்டியல் பிரிவில் Sub Classification செய்வதற்கு முன்பாக முறையாக ஆதாரங்களை Empirical Data-கள் சேகரிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தி இருக்கிறது.
எனவே, விஞ்ஞான ரீதியாக பட்டியல் பிரிவில் உள்ள 76 சமுதாய மக்களின் சமூக, பொருளாதார, கல்வி, வேலை வாய்ப்பு மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்புகளைச் செய்யாமல் ஆட்சியாளர்களின் விருப்பப்படி அரசியல் ரீதியாக வழங்கப்பட்ட 3% உள் இட ஒதுக்கீடு சட்ட ரீதியாக செல்லத்தக்கதல்ல.! உச்சநீதிமன்றத்தின் 7 நீதிபதிகள் அமர்வு பட்டியல் பிரிவினரை Sub Classification செய்ய முடியுமா? முடியாதா? என்பதற்கான விளக்கத்தை மட்டுமே கூறி உள்ளது. Sub Classification செய்வதற்கு முன்பாக என்னென்ன விதிமுறைகளைக் கையாள வேண்டும் எனும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு ஏற்ப தமிழக அரசு உள் இட ஒதுக்கீடு பங்கீட்டைக் கடைப்பிடிக்கவில்லை. எனவே, சட்டவிரோத 3% அருந்ததியர் உள் இட ஒதுக்கீட்டை ரத்து செய்து விட்டு, முறையாகவும் முழுமையாகவும் ஆய்வு மேற்கொண்ட பின்னரே, எந்த ஒரு முடிவுக்கும் வர வேண்டும்.
4. இந்த விவகாரத்தில் விசிக தலைவர் திருமாவளவனையும் தமிழக முதல்வரையும் சந்தித்துப் பேசுவதில் உங்களுக்கு ஏதேனும் சிக்கல் இருக்கிறதா?
தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களை சந்திப்பதில் எனக்கு எவ்விதமான சிக்கலும் இல்லை. மாஞ்சோலை பிரச்சனை உச்சக்கட்டமாக இருந்த பொழுது 2024 ஜூன் மாதம் 8 ஆம் தேதி, நாடாளுமன்றத் தேர்தல் முடிந்த கையோடு அவர் கோவை வந்தார்; அவரை பார்ப்பதற்கு அனுமதி கேட்டோம். அப்போதும் அனுமதி அளிக்கவில்லை. அதேபோல, நவம்பர் 7ஆம் தேதி சென்னையில் நாங்கள் நடத்திய பேரணிக்குப் பிறகு 8 ஆம் தேதி அன்று தமிழக தலைமைச் செயலாளரைச் சந்திப்பதற்கும் நேரம் கேட்டிருந்தோம்; அவரும் ஒதுக்கவில்லை. மக்களின் பிரச்சனைகளைக் கையாளுவதில் முன்னாள் முதல்வர்கள் கலைஞரோ, ஜெயலலிதாவோ இதுபோன்று காழ்ப்புணர்ச்சியோடு நடந்து கொண்டதில்லை.
எனவே, ஒட்டுமொத்தத்தில் தமிழக மக்களின் பிரச்சினைகளைப் பேசக்கூடிய தலைவர்களைச் சந்திப்பதில் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு ஏதோ சிக்கல் இருப்பதாகத்தான் தெரிகிறது.
5. மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர் பிரச்சினையைத் தமிழக அரசு கையாளும் விதத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்?
அரசின் அணுகுமுறை முற்றிலும் தவறானதாகவும், எதேச்சதிகாரப் போக்குடனும் உள்ளது. மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் நாமெல்லாம் பிறப்பதற்குப் பல தலைமுறைகளுக்கு முன்பாக அங்கு குடியேறியவர்கள். மாஞ்சோலை என்ற ஒரு வனம் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் சிந்திய ரத்தத்தால் மட்டுமே அடையாளப்படுத்தப்படுகிறது.
நூறு வருடங்களுக்கு முன்பு, மாஞ்சோலை ரோஜா பூ தோட்டங்களாலும், துலிப் மலர்களாலும் பூத்துக் குலுங்கி இருக்கவில்லை. பல்லாயிரக்கணக்கான பேரின் வியர்வையாலும், ரத்தத்தாலும் உழைப்பாலும் 8,373 ஏக்கர் பரப்பளவில் அமைந்த தேயிலைத் தோட்டங்கள் எத்தனையோ ஆயிரம் கோடிகளை ஈட்டி தந்திருக்கிறது. அந்த வனப்பகுதியை சோலையாக்க தங்களது வாழ்க்கையை அர்ப்பணித்த மக்களுக்கு குடும்பத்திற்கு இரண்டு முதல் ஐந்து ஏக்கர் பிரித்துக் கொடுத்து அங்கேயே வாழ வைக்க மனம் இல்லாமல் அவர்களைக் கட்டாயப்படுத்தி வெளியேற்ற தமிழக அரசுத் துடிக்கிறது.
மாஞ்சோலையில் மட்டுமல்ல, தமிழகமெங்கும் லட்சோபலட்சம் பேர்; இந்தியாவெங்கும் கோடானகோடி பேர் மலைப்பகுதிகளை தங்கள் வாழ்வாதாரமாகக் கொண்டு வாழ்ந்து வருகிறார்கள். அவர்கள் அனைவரையும் எந்த அரசாவது வெளியேற்ற இயலுமா?
மாஞ்சோலை மக்கள் மாசு படாத காற்றைச் சுவாசித்து, அருவிகளிலும் சுனைகளிலும் உண்டாகும் நீரைப் பருகி இயற்கையோடு இணைந்த வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்கள். அவர்களை அங்கேயே ஆடு கொடுத்தேனும், மாடு கொடுத்தேனும் வாழ வைப்பது தான் மனித நேயம், சமூக நீதி.! 2006 ஆம் ஆண்டு வன உரிமைச் சட்டமும் (Forest Rights Act 2006) அதைத்தான் சொல்கிறது.
வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்திலும் நடைபெற்று வருகிறது; தேசிய மனித உரிமை ஆணையமும் விசாரித்துச் சென்றுள்ளது. அவர்களுக்கு விடிவு பிறக்கும் என்ற நம்பிக்கையோடு இருப்போம்.!!
6. தமிழகத்தில் சாதிக் கட்சிகளின் காலம் மலையேறிவிட்டதாக நினைக்கிறீர்களா… அப்படி இல்லை என்றால், இனியும் சாதிகளுக்காகக் கட்சி நடத்துவது அவசியம் என்கிறீர்களா?
இந்தியாவில் புரையோடிக் கிடக்கக்கூடிய சாதிய பிரச்சனைகளைப் பேசுவதாலும், சாதிக் கொடுமைகளுக்கு ஆளான மக்களை ஒன்றுபடுத்துவதாலும், அவர்களுடைய விடுதலைக்காகப் போராடுவதாலும், அவர்களை அரசியல் அதிகாரத்திற்கு உயர்த்துவதற்காகக் குரல் கொடுப்பதாலும் யாரும் சாதித் தலைவர்களாவும் ஆகி விடமாட்டார்கள்; அதற்காகப் பாடுபடும் கட்சியும் சாதிக் கட்சி ஆகிவிடாது.!
கடந்த காலங்களைப் போல இன்று சாதியக் கூறுகள் இல்லை; அதற்காக சாதியப் பிரச்சனைகளே இல்லை என்று பொருள் அல்ல. சாதியக் கொடுமைகளும் அதனுடைய தூக்கல்களும் வேறு வேறு விதங்களில் ஆதிக்கம் செலுத்துகின்றன.
எனவே, கல்வி – பொருளாதார – சமூகத் தளத்தில் – அரசியல் மட்டத்தில் சமநிலை அடைகின்ற வரையிலும் உண்மையான சமூக நீதிக்காகவும், சமத்துவத்திற்காகவும் போராடும் ”சாதி ஒழிப்புக் கட்சிகள்” மிக மிக அவசியம்.!
7. இமானுவேல் சேகரன் சுதந்திரப் போராட்டத் தியாகியே இல்லை. அதனால் அவருக்கு அரசுப் பணத்தில் மணி மண்டபம் கட்டக்கூடாது என சிலர் கோர்ட்டுக்குப் போயிருக்கிறார்களே..?
ஆங்கிலேயர் காலத்தில் குறிப்பிட்ட ஒரு சாதியினருக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட ‘கை ரேகை சட்டத்தை எதிர்த்த’ ஒருவர் சுதந்திரப் போராட்டத் தியாகி என்றால், சாதிய மூர்க்கத்தனத்தின் கொடுமைகளுக்கு ஆளான மக்களின் விடுதலைக்குப் பாடுபட்ட இன்னொரு தலைவரும் சுதந்திர போராட்டத் தியாகியே.! சாதி ஒழிப்பு போராளி தியாகி இமானுவேல் சேகரன் அவர்களுக்கு அவர் பிறந்த இடத்தில் மட்டுமல்ல; தமிழகம் எங்கும் மணிமண்டபங்கள் கட்டப்பட வேண்டும். பரமக்குடியில் இமானுவேல் சேகரன் அவர்களின் மணி மண்டபத்தை எதிர்ப்பவர்கள் மனித நேயமற்ற சாதிய வன்மம் கொண்டவர்கள்.
8. வாரிசு அரசியலை விமர்சித்தவர்கள் எல்லாம் தங்களது வாரிசுகளை எம்எல்ஏ, எம்பி-க்களாக ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள். நீங்கள் எப்போது?
1949 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17 ஆம் தேதி கொட்டும் மழையில் ராபின்சன் பூங்காவில் ஒரு கட்சி துவங்கப்பட்டது. அதைத் துவக்கியவர் பேரறிஞர் அண்ணா. அது ஜனநாயக ரீதியாகத் துவங்கப்பட்ட இயக்கம். 5 பெரும் தலைவர்களால் உருவாக்கப்பட்ட இயக்கம் அது. ஆனால் அந்த மகத்தான இயக்கத்தை 1969-க்கு பிறகு, தலைமுறை தலைமுறையாக ஒரே குடும்பம் தங்கள் பிடியில் வைத்துக் கொள்வதும், அக்குடும்பத்தைச் சார்ந்த முதன்மை பதவிகளில் முடிச் சூட்டிக் கொள்வதும் தான் வாரிசு அரசியல் ஆட்சி முறை.!
கேட்பாரற்று கடைக் கோடியில் கிடக்கும் சமுதாயங்களைத் தூக்கி நிறுத்துவதற்காக ஒருவர் போராடினாலும், குடும்பமே போராடினாலும், குடும்பத்தில் ஒருவர் எம்.பி/எம்.எல்.ஏ ஆனாலும் அது குடும்ப அரசியலும் ஆகாது; வாரிசு அரசியலுமாகாது.
9. பேரவைத் தேர்தலுக்கு இன்னும் 15 மாதங்கள் தான் உள்ளது. இம்முறை எந்த அணியில் போட்டி என்பதை புதிய தமிழகம் முடிவுசெய்து விட்டதா?
2026-ல் எந்த அணியுடன் கூட்டணி என முடிவு செய்ய வேண்டிய அவசர அவசியம் எதுவும் இப்போது எழவில்லை. தேர்தல் நெருங்குகின்ற பொழுது அவைகளைப் பற்றி சிந்திப்போம்! நல்ல முடிவு எடுப்போம்.!
10. அம்பேத்கர், பெரியார், காமராஜர் உள்ளிட்ட தலைவர்களின் பெயர்களைச் சொல்லி புதிதாக அரசியலுக்கு வந்திருக்கும் விஜய் தேறுவாரா?
புதிதாக தமிழக அரசியலுக்கு வந்திருக்கும் விஜயின் அரசியல் புதிதாக மட்டுமல்ல; புரட்சிகரமாகவும் இருக்கிறது. இதுவரை கடந்த 73 வருடங்களாக ஆட்சியில் இருக்கக்கூடியவர்கள் மிக முக்கியமாக மூன்று கட்சிகள் தான். ஆனால் யாருமே ’ஆட்சியில் பங்கு’ என்ற கோஷத்தை முன்னெடுக்கவில்லை. தமிழக மக்களுக்குத் தேவை இப்பொழுது கூட்டணி ஆட்சியே.!
எனவே மிக முக்கியமான ஒரு தருணத்தில் கூட்டணி ஆட்சி என்ற ஓர் அஸ்திரத்தை அவர் கையாள்கிறார். தமிழ்நாட்டில் பல கட்சிகளும் ஆட்சி அதிகாரத்தில் பங்கு பெறவே ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள். அவர் தனியாகத் தேறுவாரா? என்பது குறித்துத் தெரியாது! ஆனால், கூட்டணி ஆட்சி தமிழகத்திற்கு வேண்டுமெனில் அந்தக் கருத்தை வலுப்படுத்துவதற்காகப் பலரும் ஒன்று திரளுவார்களா? அதற்கான சூழல் உருவாகுமா? என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
ஆனால், ’கூட்டணி ஆட்சி’ என்ற ஒரு அரிய சந்தர்ப்பத்தை தமிழக அரசியல் கட்சிகள் நழுவு விடமாட்டார்கள் என்றே கருதுகிறேன்.
11. நான்கு முனைப் போட்டி ஏற்பட்டால் அது திமுகவுக்குத்தான் சாதகமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறதே..?
கடைசி வரையிலும் அப்படித்தான் திமுக பிரச்சாரம் செய்யும்! அது ஒன்றுதான் அவர்களின் பேராயுதம்.! 5 அல்லது 6 கட்சிகள் இடம்பெறுவதால் மட்டுமே திமுக கூட்டணி வெற்றி பெற்று விடும் என்று எண்ணி விடக்கூடாது; அவர்களும் சேர்ந்தே தோல்வியைத் தழுவுவார்கள்.
வலுவான கொள்கையும் தீர்க்கமான தேர்தல் வியூகங்களும் தான் முக்கியம். திமுகவுக்கு எதிரான மனநிலை கடந்த ஒன்றரை வருடத்திற்கு முன்பே உருவாகி விட்டது. தேர்தல் நேரத்தில் வழங்கப்படும் கையூட்டுகளும் மதுவும் கடந்த தேர்தல்களில் திமுகவுக்கு கை கொடுத்திருக்கலாம். ஆனால், அவை எதுவும் 2026 இல் நிச்சயம் கை கொடுக்காது. 2026 இல் ஆட்சி மாற்றம் என்ற சூழலுக்குத் தமிழக மக்கள் யாரை வேண்டுமானாலும் முன்னிறுத்தி அதைச் சாதித்துக் கொள்வார்கள்.
12. துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலினின் செயல்பாடுகள் எப்படி?
மூத்த அமைச்சர் துரைமுருகன் போன்றோர் தான் அவரை மதிப்பீடு செய்யும் தகுதி வாய்ந்தவர்கள்.
13. கூட்டணியில் இருந்தவர்கள் என்ற முறையில், பிரிந்து கிடக்கும் அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்று சொல்லப்படுவதை நீங்கள் ஏற்கிறீர்களா?
பொதுவாக அரசியலில் நாம் இடம் பெறும் கூட்டணியும், அதற்கு தலைமை தாங்கும் கட்சியும் வலுவாக இருக்க வேண்டும் என எண்ணுவது எதார்த்தம். கூட்டணியில் இடம் பெற்றிருந்தவர்கள் என்ற அடிப்படையில் அதிமுக ஒன்றுபட்டு நிற்க வேண்டும் என்று எண்ணுவது வேறு! விரும்புவது வேறு; எதார்த்தம் வேறு.
14. அண்டை மாநிலங்கள் எல்லாம் சாதி வாரிக் கணக்கெடுப்பு நடத்திக் கொண்டிருக்கின்றன. ஆனால் தமிழக அரசு மவுனம் காக்கிறதே?
இதில் மட்டும் தான் மௌனமா? திமுக கொடுத்த வேறு எந்தெந்த வாக்குறுதியைக் கடந்த 3 ½ ஆண்டுகளில் காப்பாற்றியிருக்கிறார்கள். நீட் ஒழிப்பு என்னாயிற்று.?
தமிழ்நாட்டில் எதார்த்தத்தை, உண்மையைப் பேசுவதற்கு சமூக ஆர்வலர்களுக்கும் பஞ்சம் ஏற்பட்டு விட்டது. அரசியல் கட்சிகளுக்கும் கொள்கை பஞ்சம் வந்துவிட்டது. திமுக என்ன சொல்கிறதோ அதைத் திருப்பிச் சொல்வது மட்டும் தான் தங்களுடைய வாழ்நாள் லட்சியமாக பல கட்சிகள் மாறிப் போய் விட்டன. மதுவிலக்கா மத்திய அரசுதான் காரணம்.?! மின்சாரக் கட்டண உயர்வா, தமிழகத்தில் சட்ட ஒழுங்கு பிரச்சனையா மத்திய அரசுதான் காரணம்.!
தமிழ்நாட்டில் கூட்டணி என்பதற்காக எதையும் விட்டுக் கொடுக்கவும், விட்டு விடவும் தயாரான பிறகு, அறிவாலயத்திலிருந்து தயாரிக்கப்படும் கதை வசனங்களுக்கு ஆடவும் வேண்டும்; பாடவும் வேண்டும். எல்லாப் பிரச்சனைகளுக்கும் மத்திய அரசே காரணம் என்று மடை மாற்றுவதே திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் ஒரே கொள்கை – கோட்பாடாகப் பரிணாமம் அடைந்து இருக்கிறது.
கூட்டணியில் இணைந்து மக்களுக்காக வலுவான குரல் எழுப்ப வேண்டியவர்கள் ’கோவிந்தா கோஷம்’ போடும் நிலைக்குச் சென்று விட்டார்கள். சாதிவாரிக் கணக்கெடுப்பை மத்திய அரசுதான் செய்ய முடியுமெனில், தங்களால் நிறைவேற்ற முடியாத அக்கோரிக்கையை திமுக வாக்குறுதியாகக் கொடுத்தது ஏன்?
15. 2026 தேர்தலில் திமுக தலைவர் 200 தொகுதிகள் டார்கெட் வைத்திருக்கிறாரே… சாத்தியமா?
எந்த ஒரு தலைவருக்கும் கனவுகள் காண்பதற்கும் கற்பனைகள் செய்வதற்கு யாரும் தடை விதிக்க முடியாது. அது அவர்களது உரிமை. திமுக மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதற்கான உருப்படியான பத்துக் காரணங்களைச் சுட்டிக் காட்ட முடியுமா.? திமுக 234 தொகுதிகளிலும் தோற்கடிக்கப்பட வேண்டும் என்பதற்கு நூறு காரணங்கள் உண்டு. திமுக 200 தொகுதிகளிலும் வெல்ல வேண்டும் என்பது அதீத நம்பிக்கை. எதிர்க்கட்சிகள் ஆளாளுக்கு கோஷம் போட முயற்சிக்காமல் ஆளும் கூட்டணியை 234 இடங்களில் தோற்கடிக்க ஒன்றுபட வேண்டும்.!
டாக்டர் கிருஷ்ணசாமி MD,Ex.MLA,
நிறுவனர் – தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
24.11.2024