தேர்தல் முறைகேடுகளைத் தடுப்பது குறித்து ஆலோசிக்க, அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கு டாக்டர் அய்யா அவர்கள் கடிதம்!

அறிக்கைகள்
s2 370 Views
  • Dr K Krishnasamy

    டாக்டர் கிருஷ்ணசாமி

  • Dr K Krishnasamy
Published: 22 Feb 2022

Loading

தேர்தல் முறைகேடுகளைத் தடுப்பது குறித்து ஆலோசிக்க, அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கு டாக்டர் அய்யா அவர்கள் கடிதம்!

பெறுநர்
அனைத்துக் கட்சித் தலைவர்கள்,
தமிழ்நாடு.

அன்புடையீர், வணக்கம்!
2021 சட்டமன்றத் தேர்தல் முடிந்த உடனே, அத்தேர்தலில் நடைபெற்ற மிதமிஞ்சிய பணப்பட்டுவாடா – முறைகேடுகள் குறித்து ஏற்கெனவே நாம் எச்சரித்திருந்தோம்; அப்பொழுது யாரும் அதைப்பற்றி அக்கறை செலுத்தவில்லை. அதன் விளைவாக, இப்பொழுது உலகத்தின் வேறு எந்த நாட்டிலும் நடைபெறாத அளவிற்கு, தமிழ்நாடு நகர்புற உள்ளாட்சித் தேர்தல் ஜனநாயக விரோதமாக நடைபெற்றுள்ளது. 18000 முதல் 20000 வாக்காளர்களைக் கொண்ட ஒரு மாநகராட்சி வார்டில், ரூ.15 கோடி முதல் ரூ.20 கோடி வரையிலும் வேட்பாளர்கள் பணத்தை அள்ளி வீசியிருக்கிறார்கள். ஓர் ஓட்டுக்கு ரூ.5000 முதல் ரூ.7000 வரையிலும் விலைபேசப்பட்டு, 4 ஓட்டுகள் உள்ள குடும்பத்திற்கு ரூ.20,000 முதல் ரூ.28,000 வரையிலும் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி வெள்ளிக்கொலுசு, ஹாட்பாக்ஸ் மற்றும் வெற்றி பெற்றவுடன் வாங்கிக் கொள்வதற்காக டோக்கன்களும் வழங்கப்பட்டுள்ளன.

இத்தனைக் கொடுத்தும் வாக்கு சதவீதம் உயராத மாநகராட்சி வாக்குச்சாவடிகளை, மாலை 3 மணிக்குப் பிறகு கைப்பற்றி அணியணியாக கள்ள ஓட்டுகள் போடப்பட்டிருக்கின்றன; தடுக்க முயற்சி செய்த பிற கட்சிகளைச் சார்ந்த வாக்குச்சாவடி முகவர்கள் அடித்து விரட்டப்பட்டிருக்கிறார்கள்; தட்டிக் கேட்டவர்கள் தாக்கப்பட்டிருக்கிறார்கள். நடுநாயகமாக செயல்படவேண்டிய வாக்குச்சாவடி தேர்தல் அலுவலர்களும் காவலர்களும் நடுநட்டமாகக் கைகட்டி, வாய்பொத்தி நின்றிருக்கிறார்கள்; கோடிகோடியாக பணம் வாரி இறைக்கப்பட்டும், பரிசுப் பொருட்கள் கொடுக்கப்பட்டும், வாக்கு எண்ணிக்கையில் வெற்றி பெறுவதற்குத் தேவையான ஓட்டுகளைப் பெற முடியவில்லையெனில், அதையும் கணக்குச் செய்து கொடுப்பதற்கு கடமையே கண்ணாக கருதி தேர்தல் அலுவலர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

போட்டியிட்ட அனைத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி வார்டுகளிலும் ஆளுங்கட்சியும், அதன் கூட்டணிக் கட்சிகளும் மட்டுமே வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்று அறிவிப்பு வந்தால் கூட ஆச்சரியப்படுவதற்கில்லை. நடைபெற்ற நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் 2 கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்களுக்கு ஹாட்பாக்ஸ்களும், வெள்ளிக் கொலுசுகளும், பிற பரிசுப் பொருட்களும் வழங்கப்பட்டிருக்கின்றன. தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு குறுகிய காலத்தில் இவைகளை உற்பத்தி செய்திருக்கவும், அவற்றை தமிழகம் தழுவி அனைத்துப் பகுதிகளுக்கும் கொண்டு சேர்த்திருக்கவும் முடியாது. இமயமலைக்கு அப்பால் இருக்கக்கூடிய தேசத்தில் உற்பத்தி செய்யப்பட்டு, மலிவுவிலைக்கு வாங்கப்பட்டு, முன்கூட்டியே ஒவ்வொரு வார்டிலும் அவை தயாராக இருப்பு வைக்கப்பட்டிருக்க வேண்டும்.

எனவே இந்த ஹாட்பாக்ஸ், வெள்ளிக்கொலுசு உள்ளிட்ட பரிசுப் பொருட்கள் உற்பத்தியான இடம், அதை ஒட்டுமொத்தமாக வாங்கியவர்கள் விபரம், அதனுடைய விலை, அது எப்பொழுது தமிழகத்திற்குக் கொண்டு வரப்பட்டது? என்ற தகவல்களை ஒரு விசாரணை ஆணையம் அமைப்பதன் மூலமே கண்டுபிடிக்க முடியும். மேலும், இந்தத் தேர்தலில் தமிழ்நாடெங்கும் பல மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் வார்டு கவுன்சிலர் பதவிகள் ஜனநாயகத்திற்கு விரோதமாக ஏலம் விடப்பட்டுவிட்டன; சாதி, ஊர், பகுதிக் கட்டுப்பாடுகள் என்றப் பெயரில் போட்டிகள் தவிர்க்கப்பட்டிருக்கின்றன. இதேபோக்கில் தமிழகத்தில் தொடர்ந்து தேர்தல்கள் நடைபெறுமேயானால், ஜனநாயகத்தின் பெயரில் சர்வாதிகார, பாசிஸ்ட் ஆட்சியே தொடரும். இந்தத் தேர்தலில் தங்கள் கட்சியின் சார்பாகக் களம் கண்ட வேட்பாளர்களும் நாம் மேலே குறிப்பிட்ட எல்லாவிதமான கொடுமைகளையும் அனுபவித்திருப்பார்கள். இத்தனை அத்துமீறல்கள் நடைபெற்ற பின்னரும், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வாய்திறக்கத் தயாராக இல்லை.

எனவே, 1947-க்கு முன்பு இந்தியா ஜனநாயக நாடாகுவதற்கு ஒரு சுதந்திரப் போராட்டம் நடைபெற்றதைப் போல, இன்று இந்த சர்வாதிகார, பாசிஸ்டுகளிடமிருந்து தமிழகத்தை மீட்டெடுப்பதற்கு இன்னொரு சுதந்திரப் போராட்டம் நடத்த வேண்டிய சூழல் உருவாகியிருக்கிறது. இப்பொழுது நடைபெற்ற நகர்புற உள்ளாட்சித் தேர்தலைப் போல, ஜனநாயக விரோத, அடாவடி, ஊழல்படுத்தப்படும் தேர்தல் வழிமுறைகளை, தொடர்ந்து தமிழகத்தில் அனுமதிப்பது தமிழக மக்களுக்கு சொல்லொண்ணா பாதிப்பைக் கொண்டு வந்து சேர்த்துவிடும். பணநாயகம் ஆகிவிட்ட ஜனநாயகத்தை மீட்டெடுக்க வேண்டிய பொறுப்பு நம் அனைவருக்கும் உண்டு.

எனவே வாக்குக்குப் பணம் கொடுப்பது மற்றும் வாக்களிக்கப் பணம் வாங்குவது ஆகியக் குற்றங்களைத் தடுத்து நிறுத்தக்கூடிய வகையிலும், தமிழகத்தில் அண்மைக்காலமாக நடைபெற்று வரும், நெறிமுறையற்ற தேர்தல்களைத் தடுக்கத் தவறியதோடு, சிறிதும் கூட மனசாட்சியோடும் நாணயத்தோடும் நடந்து கொள்ளாத தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தைக் கண்டிக்கக் கூடிய வகையிலும், இனிவரும் காலங்களில் நாடாளுமன்ற, சட்டமன்ற மற்றும் உள்ளாட்சித் தேர்தல்களில் பணப்பட்டுவாடா / பரிசுப் பொருட்கள் இல்லாத, ஜனநாயக ரீதியாக, நேர்மையாக, நியாயமாக தேர்தல்களை நடத்த இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் ஆகியவற்றை வலியுறுத்தியும் தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து ஜனநாயக சக்திகளையும் ஒருங்கிணைத்து, ஒரு பெரிய போராட்டம் நடத்த வேண்டிய சூழல் எழுந்திருக்கிறது. அதன் அவசியம் குறித்து, ஒத்தக் கருத்துடைய அரசியல் கட்சிகளுடைய ஆலோசனைக் கூட்டத்தை, வரும் சனிக்கிழமை (26.02.2022) நடத்த உத்தேசித்துள்ளோம். தாங்கள் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டு தங்களுடைய கருத்தைப் பதிவு செய்தால் மிகவும் சிறப்புடையதாக இருக்கும் எனக் கருதுகிறேன். எனவே அதற்கு தங்களுடைய இசைவை நல்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

இப்படிக்கு,
டாக்டர்.க.கிருஷ்ணசாமி, MD,Ex.MLA,
நிறுவனர் – தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
22.02.2022.