முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது நியாயமற்றது!
465 Views
![]()
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது நியாயமற்றது!
கடந்த 19.02.2022 (சனிக்கிழமை) அன்று நடைபெற்ற தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மதியம் மூன்று மணிக்கு பிறகு, தமிழகமெங்கும் எண்ணற்ற வாக்குச்சாவடிகளில் பெருமளவிற்கு கள்ள ஓட்டுக்கள் போடப்பட்டதை ஊடகங்கள் வாயிலாக தமிழக மக்கள் அனைவரும் அறிவர். தேர்தல் அலுவலர்கள் அதைத் தடுக்க முற்படாத போது, சில அரசியல் கட்சிகளைச் சார்ந்த வாக்குச்சாவடி முகவர்கள் தங்களுடைய எதிர்ப்புகளைப் பதிவு செய்து உள்ளனர். அலையலையாக ஆண்களும் பெண்களும் வாக்குச்சாவடிகளை கைப்பற்ற முயற்சி செய்தபோது, அதைத் தடுக்க முயன்றவர்கள் தாக்கப்பட்டும் இருக்கிறார்கள்.
அதுபோன்றே சென்னை, வண்ணாரப்பேட்டையில் கள்ள ஓட்டுப் போட முற்பட்ட ஒருவரை அ.தி.மு.கவை சேர்ந்த நிர்வாகிகள் பிடித்து காவல் துறையிடம் ஒப்படைத்துள்ளனர். அந்த நிகழ்வின் போது, கள்ள ஓட்டுப் போட முயன்ற ஒருவரின் சட்டையைக் கழற்றியதாகவும், அவர் தாக்கப்பட்டதாகவும் அதிமுக நிர்வாகிகள் 40-க்கும் மேற்பட்டோர் மீது 8 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பெரிய வன்முறைகள், பலத்த காயங்கள், இழப்புக்கள் ஏற்பட்டால் ஒழிய தேர்தல் நிகழ்வுகளுக்காக கைது செய்யப்படுவதில்லை. கள்ள ஓட்டுப் போட முயன்றவரைத் தடுத்து காவல்துறையிடம் ஒப்படைத்த அந்த நேரத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரும் இருந்தார் என்று கூறி அவர் மீதும் வழக்குப் பதிவு செய்து, இரவோடு இரவாகக் கைது செய்து, சிறையிலடைத்தது வன்மையாக கண்டிக்கத்தக்கது. அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என புதிய தமிழகம் கட்சியின் சார்பாகக் கேட்டுக்கொள்கிறேன்.
– டாக்டர்.க.கிருஷ்ணசாமி, MD,Ex.MLA,
நிறுவனர் – தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
21.02.2022.






