ஆணவக் கொலை போன்ற சமூக உணர்வுகளை பாதிக்கின்ற வழக்குகளில், விசாரணை நீதிமன்றங்களை (trial court) புறந்தள்ள முடியுமா?
கவின் கொலை வழக்கு தீர்ப்பு: விசாரணை நீதிமன்றங்களை புறந்தள்ள முடியுமா? – டாக்டர் க.கிருஷ்ணசாமி கேள்வி!
2 Views

![]()
ஆணவக் கொலை போன்ற சமூக உணர்வுகளை பாதிக்கின்ற வழக்குகளில்,
விசாரணை நீதிமன்றங்களை (trial court) புறந்தள்ள முடியுமா?
நவீன ’இல்லுமினாட்டிகளை’ நம்பி ஏமாந்து போன கவினின் அப்பன்!
……………………………………….
“நூறு குற்றவாளிகள் தப்பலாம், ஆனால் ஒரு நிரபராதி கூட தண்டிக்கப்படக் கூடாது” என்பதே பொதுவான நீதியாகும். கவினின் கொலையாளி சுர்ஜித்தின் பெற்றோர்களான சரவணனையும் கிருஷ்ணகுமாரியையும் குற்றப்பத்திரிகையிலிருந்து விடுவித்துத் தீர்ப்பளித்திருக்கிறார் உயர் நீதிமன்ற நீதிபதி விஜயகுமார்.
குற்றத்தில் எவ்விதத்திலும் தொடர்பில்லாதவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று நாம் என்றும் எதிர்பார்த்ததும் இல்லை; அது நமது விருப்பமும் அல்ல. ஆனால், சமூக உணர்வுகளை வெகுவாக பாதிக்கின்ற ஆணவக் கொலை போன்ற பெருங்குற்ற வழக்குகளில், விசாரணை நீதிமன்றங்களை புறந்தள்ளி, வெறும் ஆவணங்களை மட்டுமே அடிப்படையாக கொண்டு, இவ்வளவு எளிதாகக் குற்றவாளிகளை உயர்நீதிமன்றங்களில் விடுவிக்க முடியுமா என்பதே மிக முக்கியமான கேள்வியாகும்.
உயர் நீதிமன்றத்தின் நேற்றைய தீர்ப்பு சமூக அரங்கிலிலும் சட்ட அரங்கிலிலும் பல விவாதங்களை எழுப்பும் என்றே கருதுகிறேன். இது போன்ற கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகள் கீழமை நீதிமன்றங்களில் சாட்சிகள், சந்தர்ப்பங்கள் என அனைத்தையும் பொறுமையாக விசாரித்து, அதற்குப் பிறகு தீர்ப்பு வழங்கப்படுவதற்கு மாறாக, சில ஆவணங்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு தீர்ப்பு வழங்கப்படும் சூழல் உருவாகும் பட்சத்தில், யாரும் இனிமேல் எந்த வழக்கையும் கீழமை நீதிமன்றங்களில் நடத்துவதற்குப் பதிலாக நேரடியாக விஜயக்குமார் போன்ற நீதிமன்றங்களையே நாடக்கூடும் அல்லவா?
எந்த ஒரு வழக்கிலும் நீதிபதி தீர்ப்பு எழுதினால் போதாது; அதில் நீதி நிலைநாட்டப்பட்டிருக்கிறதா என்பதே முக்கியம். நீதிபதி விஜயகுமாரின் இந்த தீர்ப்பை இந்தச் சமூகம் எப்படி அணுகப் போகிறது என்று தெரியவில்லை. ஏனெனில், இதுபோன்ற உயர் நீதிமன்றங்களில் வழங்கக்கூடிய தீர்ப்புகள் அந்த வழக்கோடு மட்டும் முடிந்துவிடுவதில்லை. பல வருடங்களுக்குப் பிறகும் இது போன்ற வழக்குகளின் தீர்ப்புகள் கோடிட்டுக் காட்டப்பட்டு, இதே போன்ற தீர்ப்புகளையும் எதிர்பார்க்கக்கூடும். எனவே, இதை ஒரு சரியான முன்மாதிரியாக எடுத்துக்கொள்ள முடியுமா? இந்த தீர்ப்பை மாற்றி எழுவதற்கு வாய்ப்பு உண்டா? விஜய் செயலாற்றுவாரா?
கவின் படுகொலைச் செய்தியைக் கேட்டு, நமது மனம் அன்று எந்த அளவிற்கு சஞ்சலப்பட்டதோ, அதைக்காட்டிலும் நீதிபதி விஜயகுமாரின் நேற்றைய தீர்ப்பு மிகுந்த மனச்சஞ்சலத்தை உண்டாக்கியிருக்கிறது. நமக்கு மட்டுமா? ஒட்டுமொத்த சமுதாயத்திற்கும் தானே?
விவரம் தெரிந்த காலத்திலிருந்து எளிய விளிம்புநிலை மக்களுக்கான நீதியை நிலைநாட்டச் சட்டமன்றத்திலும் மக்கள் மன்றத்திலும் இம்மியளவும் பிசகாமல், விட்டுக்கொடுக்காமல் போராடி வருகிறோம். கவின் மரணச் செய்தி கேள்விப்பட்டவுடன் புதிய தமிழகம் கட்சியின் தொண்டர்கள் வீதிக்கு வந்து போராடினார்கள்; நெல்லையில் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அதற்கான வழக்குகளை இன்றுவரையிலும் நம்முடைய கட்சியினர் சந்தித்து வருகிறார்கள்.
புதிய தமிழகம் கட்சி மட்டும் அன்று போராடாமல் இருந்திருந்தால், பச்சோந்தியாலும் கருங்காலியாலும் கவினின் மரணத்திற்கான நீதி அன்றே குழிதோண்டிப் புதைக்கப்பட்டிருக்கும். எனினும், கவின் வழக்கு ஆவணங்கள் நம்முடைய கைகளில் கொடுக்கப்படவில்லை. கவினின் சடலத்தை மருத்துவமனை பிரேதக் கிடங்கில் வைத்துக்கொண்டே ஒரு பச்சோந்திக் கூட்டமும், ஒரு கருங்காலிக் கூட்டமும் கமுக்கமாக பேசி முடித்துவிட்டார்கள். மார்ச்சுரியிலிருந்து கவினின் உடலைச் சட்டத்திற்குப் புறம்பாக வெளியே எடுத்து, மாலையிட்டு, அந்த உடலைப் புதைக்க மட்டும் செய்யவில்லை; கவினின் வழக்கையும் அன்றே புதைத்துவிட்டுத்தான் போனான். அவனைத்தான் கவினின் அப்பன் பெரிதும் நம்பினான். ’அவன் பாராளுமன்றத்தில் பேசுவான்” என்று வீடியோ போட்டான்.
இந்த சமுதாயத்திற்கு உதவுவதற்கு வருபவர்களைக் காட்டிலும், காட்டிக் கொடுப்பதற்கு என்றே அண்மைக்காலமாக பலரும் உருவாக்கப்பட்டிருக்கிறார்கள். போட்டி போட்டுக்கொண்டு மனிதநேயமற்ற முறையில் கொலையுண்டவர்களின் உடல்களைப் பெற்றுத் தருவதில் பாடி வண்டிகளாக அவர்கள் காட்டிய வேகம் – மோகம் நீதியைப் பெற்றுக்கொடுப்பதில் என்றும் இருந்ததில்லை.
திண்ணியத்தில் மலம் திணிக்கப்பட்ட போதும், வேங்கைவயலில் குடிநீரில் மலம் கலக்கப்பட்ட போதும் கூட தான் சார்ந்த சமூகத்திற்கும் விசுவாசமாக இல்லாதவன், இன்னொரு சமுதாயத்திற்கு நீதியைப் பெற்றுக்கொடுப்பான் என்று எப்படித்தான் கவினின் அப்பன் நம்பினானோ!
‘ஆடுகள் கசாப்புக் கடைக்காரனைப் பெரிதும் நம்பும்’ என்று கூறுவார்கள். அது ஒன்றும் ஆச்சரியமில்லை. ஆனால், ஒரு சிங்கக் கூட்டமும் இப்பொழுது ஆடுகளாகிவிட்டதே என்பதே கவலை.
கடந்த பத்து வருடத்தில் சமூகத்திற்கு உள்ளிருந்து முளைத்த கள்ளிச்செடிகளுக்கு எதிராகவே நம்முடைய போராட்டம் இருந்தும் கூட அண்மைக்காலமாக ஒரு மிகப்பெரிய பிழைப்புவாதக் கூட்டம் – நவீன ’இல்லுமினாட்டிகள்’ உருவாக்கப்பட்டு இருக்கிறார்கள்.
நமது கண் முன்னால் ஒரு சமுதாயம் நம்பக்கூடாதவர்களை நம்பி ஏமாந்து போயிருக்கிறது. “பிறவியிலே குறை இருந்தாலொழிய புலி புல்லைத் தின்னாது; பாம்பின் விஷம் பாலாகாது; பச்சோந்திகள் தனது நிறத்தை மாற்றாது.” வடக்கிலிருந்து வலிய வந்து அந்த உடலை வாங்கிப் புதைத்துவிட்டுச் சென்ற கும்பல், இன்று இந்த வழக்கை எப்படி நடத்தக் கூடாதோ, அப்படி நடத்தி ஒட்டுமொத்த காரியத்தையும் முடித்து விட்டார்கள்.
யாரைக் குறை சொல்ல? தன்னுடைய சொந்த பந்தங்களை நம்பாமல், சமுதாயத்தை நம்பாமல் ’ஒடுகாலியை’ நம்பி செயல்பட்ட முட்டாள் தந்தையையா? சிறிதும் பாசமற்ற தாயையா? இது அவர்கள் குடும்பத்திற்கு மட்டும் ஏற்பட்ட பாதிப்பல்ல; தலைகுனிவல்ல; ஒட்டுமொத்த சமுதாயத்திற்குமான தலைகுனிவு.
வாழ்ந்து வீழ்ந்து எழுந்த சமுதாயம் மீண்டும் வீழ்ந்து போகுமா? அல்லது மீண்டும் எழுந்து நிற்குமா? கருங்காலிகளிடத்திலும் காட்டிக்கொடுப்பவர்களிடத்திலும் இனியாவது எச்சரிக்கையாக இருக்குமா? நம்பிக்கை துரோகிகளை – வெளிவேஷம் போடுபவர்களை விரட்டியடிக்குமா?
அடிமைபட்டாலும் அறிவுள்ள சமுதாயம் மீண்டும் எழுந்து நிற்கும்!
டாக்டர் க. கிருஷ்ணசாமி MD, Ex. MLA,
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி
30.09.2026







