சாதி ஒழிப்பு பேசக்கூடிய ‘ஆதிதிராவிடர் நல ஆணையம்’ – ஒரு குறிப்பிட்ட சாதிப் பெயரில் இயங்குவது பொருத்தமற்றது.!

அறிக்கைகள்
s2 2 Views
825268513 3971243706339702 5482665073699242597 N
Published: 29 Sep 2026

Loading

சாதி ஒழிப்பு பேசக்கூடிய ‘ஆதிதிராவிடர் நல ஆணையம்’ – ஒரு குறிப்பிட்ட சாதிப் பெயரில் இயங்குவது பொருத்தமற்றது.!
சாலை, தெருப் பெயர்களில் உள்ள சாதிப் பெயரை நீக்கும் முன்,
ஆணையத்தின் ’ஆதி திராவிடர்’ எனும் சாதிப் பெயரை நீக்குக!
……………………………….

கிராமங்கள், நகரங்கள், சாலைகள் மற்றும் தெருக்களின் பெயர்களில் உள்ள சாதிய அடையாளங்களை நீக்க வேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழ்நாடு மாநில சமூகநீதி துறை ஆணையம் (ஆதிதிராவிடர் நல ஆணையம்) அறிவுறுத்தியுள்ளதாகச் செய்திகள் வந்துள்ளன.

சாதி ஒழிப்பின் முதற்படியாக சாலை மற்றும் தெருக்களில் உள்ள சாதிப் பெயர்களை நீக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வந்தாலும் சாதியப் பெயர்கள் இன்றும் தொடர்கின்றன. எம்.ஜி.ஆர் தனது ஆட்சிக் காலத்தில் இப்பெயர்களை நீக்குவதற்குக் பெரும் முயற்சி மேற்கொண்டார். ஆனால், சிலரின் எதிர்வினைகள் காரணமாக அது நிறைவேறாமல் போய்விட்டது. அண்மையில் ஓய்வுபெற்ற நீதியரசர் சந்துரு தலைமையிலான ஒரு நபர் ஆணையம் மூலம் பள்ளி, கல்லூரிகளில் உள்ள சாதி அடையாளங்களை நீக்க பரிந்துரை செய்தார்; அதுவும் அமலுக்கு வரவில்லை.

‘சாதி ஒழிப்பு’ முழக்கத்தை வலுவாக முழங்கிக்கொண்டே தமிழகத்தில் ‘சாதியம்’ வலுவாக வளர்த்தெடுக்கப்பட்டு விட்டது. தெரு மற்றும் சாலைப் பெயர்களில் சாதி அடையாளங்களை நீக்குவது குறித்த ‘நீதிமன்ற இடைக்காலத் தடை’ நீக்கப்பட்டவுடன், இப்பொழுது மாநில சமூகநீதி துறை ஆணையம் (ஆதிதிராவிடர் நல ஆணையம்) அது குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

எந்த ஒரு விஷயத்தையும் எங்கிருந்து தொடங்குவது, எப்படி தொடங்குவது என்பது ஒரு கேள்விக்குறியாக இருக்கும். 28 மாநிலங்கள் உள்ள மத்திய அரசின் பட்டியல் பிரிவு மக்களின் நலனைப் பேணிக் காக்கும் துறைக்கு ‘சமூக நீதித்துறை’ (Social Justice Department) என்ற பொதுப் பெயரே இடப்பட்டுள்ளது; குறிப்பிட்ட எந்தவொரு சாதியின் பெயரிலும் அழைக்கப்படவில்லை; அனைத்து மாநிலங்களிலும் மத்திய அரசின் சமூக நீதித்துறையை ஒட்டியே மாநிலங்களின் துறைகளுக்கு பெயரிட்டுள்ளன.

ஆனால், தமிழ்நாட்டில் மட்டும் கடந்த 50 வருடங்களுக்கு முன்பு, தேவேந்திரகுல வேளாளர் உள்ளடங்கிய 76 சாதிகளின் பட்டியல் பிரிவுக்கு ‘ஆதிதிராவிடர்’ என்ற குறிப்பிட்ட பரையர் சாதியின் பெயரைச் சூட்டினார்கள். ‘ஆதிதிராவிடர்’ என்பது 1921-ஆம் ஆண்டு அன்றிருந்த ஆங்கிலேய அரசிடம் ‘பஞ்சமர்’ பட்டியலில் இருந்த ‘பறையர்கள்’ கேட்டுப் பெற்ற பெயராகும். அது பட்டியல் பிரிவில் உள்ள பிற 76 சாதி மக்களையும் குறிப்பிடாது. ஆனால், தேவேந்திரகுல வேளாளர் உள்ளிட்ட பல்வேறு சாதிகள் தொடர்ந்து எதிர்த்த நிலையிலும் பட்டியல் பிரிவில் உள்ள 76 சாதிகளையும் ‘ஆதிதிராவிடர்’ என்றே வலிந்து முத்திரை குத்தி அழைக்கும் போக்கு இன்று வரையிலும் நீடித்து வருகிறது. இது குறித்து 1996–2001, 2011-2016 ஆகிய காலகட்டங்களில் நாம் சட்டமன்ற உறுப்பினராக இருந்த போது பெயரை மாற்ற குரல் கொடுத்ததை நினைவுப் படுத்த விரும்புகிறோம்.

கடந்த 50 ஆண்டுகளாக ஆதிதிராவிடர் என்று அழைக்கப்பட்ட நலத்துறைக்கு ‘சமூக நீதித்துறை’ என்று இன்றைய விஜய் அரசு முறையாகப் பெயரிட்டுள்ளது. ஆனால், சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட சமூக நீதித்துறை மானியக் கோரிக்கை ஏடுகளில், சமூக நீதித்துறைக்கு உட்பட்ட பட்டியல் பிரிவு மக்கள் என்று குறிப்பிடாமல் ‘ஆதிதிராவிடர் – ஆதிதிராவிடர் நலத்துறை’ என்றே அந்த துறை அமைச்சரால் உள்நோக்கத்தோடு குறிப்பிட்டு இருந்ததையும் நாம் கண்டித்திருக்கிறோம்.

சாதி ஒழிப்பு பேசக்கூடிய ‘ஆதிதிராவிடர் நல ஆணையம்’ குறிப்பிட்ட சாதிப் பெயரில் இயங்குவது பொருத்தமற்றது. எனவே, ‘ஆதிதிராவிடர் நல ஆணையம்’ எனும் பெயரில் உள்ள ‘ஆதிதிராவிடர்’ எனும் குறிப்பிட்ட ஒரு சாதிப் பெயரை நீக்க அவ்வாணையம் முதலில் முன்வர வேண்டும். மேலும், அரசின் அனைத்துவித கடிதப் பரிமாற்றங்கள் மற்றும் ஆணைகளிலும் இனிமேல் ‘ஆதிதிராவிடர் – ஆதிதிராவிடர் நலத்துறை’ எனும் சாதிப் பெயர் இடம்பெறாத வண்ணம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும், இந்த ஆணையத்தின் வாயிலாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் சாதிப் பெயரை மாற்ற உத்தரவு அமலாகின்ற வரையிலும் தொடர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்துகிறேன்.

டாக்டர் க. கிருஷ்ணசாமி MD, Ex. MLA,
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி
29.06.2026