அமைச்சர்கள் ‘கறி’ அரசியல் பேசுவதை விட்டுவிட்டு மாணவர்களுக்குச் சுகாதாரமான உணவு வழங்குக: டாக்டர் க.கிருஷ்ணசாமி!
1 Views

![]()
அமைச்சர்கள் ’கறி’ அரசியல் பேசுவதை விட்டுவிட்டு,
பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு பாதுகாப்பான உணவை வழங்குவதில் கவனம் செலுத்துவார்களா?
……………………………………..
திருவள்ளூர் அருகே உள்ள கொட்டையூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் வழங்கப்பட்ட காலை உணவில் பல்லி விழுந்திருந்ததாகவும், அந்த உணவைச் சாப்பிட்ட சுமார் 30-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் உடல்நலக்குறைவு ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் வெளியாகியுள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.
பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களுக்கு உணவு தயாரிக்கும் சமையல் கூடங்கள் தூய்மையற்றதாகவும், பாதுகாப்பற்றவையாகவும் இருப்பதும், பணியாளர்களின் கவனக் குறைவுமே இதுபோன்ற நிகழ்வுகளுக்கு முக்கிய காரணியாகும்.
பள்ளிக் குழந்தைகளுக்கு வழங்கப்படும் காலை உணவைக் கூட சுகாதாரமான முறையில் வழங்க முடியாத சூழல் இங்கு நிலவி வருகிறது. ஆனால், கள எதார்த்தம் இவ்வாறு இருக்கையில், விடுதிகளில் மாட்டிறைச்சி, பன்றியிறைச்சி தருவோம் என்றெல்லாம் அமைச்சர்கள் வாய்க்கு வந்ததையெல்லாம் பேசி வெற்று வார்த்தை அரசியல் செய்து வருகிறார்கள்.
எனவே, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்துப் பள்ளி மற்றும் கல்லூரி, விடுதிகள், சமையற்கூடங்களை தூய்மையாகவும் சுகாதாரமாகவும் பாதுகாப்பாகவும் வைத்திருப்பதில் அமைச்சர்கள் முழுக்கவனம் செலுத்திட வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
மேலும், கொட்டையூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி நிகழ்வை போன்று இனி எந்தவொரு சம்பவமும் நடக்காத வண்ணம் பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகளில் மாணவர்களுக்கு உணவு பரிமாறுவதற்கு குறைந்தபட்சம் 30 நிமிடங்களுக்கு முன்பாக, அங்குள்ள ஆசிரியர்கள் அல்லது பணியாளர்கள் அந்த உணவைச் சுவைத்துப் பார்த்து, சோதனை செய்யப்பட்ட பிறகே மாணவர்களுக்கு வழங்கப்படுவதை உறுதிசெய்யும் வகையில், வாட்ஸ்அப் (WhatsApp) குழுக்கள் மூலம் கண்காணிக்க பள்ளி, கல்லூரி துறைகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
டாக்டர் க. கிருஷ்ணசாமி MD, Ex. MLA,
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி
24.09.2026







