கோவை மதுக்கரை, குறிச்சிக்குளம் போக்குவரத்து நெரிசலைச் சீரமைக்கக் கோரி டாக்டர் க.கிருஷ்ணசாமி கடிதம்!

அறிக்கைகள்
s2 1 Views
Dr K Krishnaswamy, Puthiya Tamilagam, Coimbatore Traffic, Madukkarai Traffic, Kurichi Lake Traffic, Coimbatore Police Commissioner, TN Traffic Control, Coimbatore News 6132908152591459961 N
Published: 28 Sep 2026

Loading

பொதுமக்களின் நலன் கருதி, கோவை மாவட்டம், மதுக்கரை மார்க்கெட் பகுதி மற்றும் குறிச்சிக்குளக் கரைப் பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை உடனடியாக ஒழுங்குபடுத்திடவும், தேவையான எண்ணிக்கையில் போக்குவரத்து காவலர்களை பணியில் அமர்த்தி போக்குவரத்தை விரைந்து சீரமைக்க நடவடிக்கை எடுத்திடவும் வலியுறுத்தி கோவை மேற்கு மண்டலக் காவல் துறை ஆணையர் (IGP), கோவை மாநகரக் காவல் ஆணையர், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (புறநகர்) ஆகியோருக்கு புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் க. கிருஷ்ணசாமி MD, Ex.MLA அவர்கள் எழுதிய கடிதத்தின் சாராம்சம்:

அன்புடையீர் வணக்கம்!

கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகள் தொழில் கூடங்கள் மற்றும் கல்விக் கூடங்கள் நிறைந்த பகுதியாகும். நாள்தோறும் கார்கள், இருசக்கர வாகனங்கள் மற்றும் சரக்கு வாகனங்களின் எண்ணிக்கை இப்பகுதிகளில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் இயற்கையாகவே கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

அண்டை மாநிலமான கேரளாவிலிருந்து தமிழ்நாடு – கோவைக்கு வரக்கூடிய பெரும்பாலான பயணிகள் மற்றும் சரக்கு வாகனங்கள் மதுக்கரை ’மரப்பாலம்’ வழியாகவே வந்து கொண்டிருந்தன. தற்போது மரப்பாலம் விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருவதால் தமிழகத்திலிருந்து கேரளாவுக்கும், கேரளாவிலிருந்து தமிழகத்திற்கும் செல்லும் அனைத்து வாகனங்களும் மதுக்கரை நகராட்சியின் மையப்பகுதி வழியாக திருப்பி விடப்பட்டுள்ளன.

ஆனால், அப்பகுதியிலுள்ள குறுகலான சாலைகள் இருசக்கர வாகனங்கள், வேன், லாரி போன்ற கனரக மற்றும் சரக்கு வாகனங்கள் சென்று வருவதற்குப் போதுமானதாக இல்லை. பல நெடுங்காலமாக சீரமைக்கப்படாத அச்சாலைகளில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் ஒரே நேரத்தில் வருவதால், குறிப்பாக மதுக்கரை மார்க்கெட் பகுதியில் மிகப்பெரிய அளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பள்ளி மற்றும் அலுவலக நேரங்களான காலை மற்றும் மாலை வேளைகளில் போக்குவரத்து முற்றிலும் ஸ்தம்பித்துப் போகிறது. இந்த நெரிசலை ஒழுங்குபடுத்துவதற்கு அப்பகுதியில் ஒரு காவலர் கூட பணியில் ஈடுபடுத்தப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

இதேபோன்று தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், மதுரை, இராமநாதபுரம் உள்ளிட்ட சுமார் 10 தென் மாவட்டங்களிலிருந்து உடுமலை, பொள்ளாச்சி வழியாக வரும் வாகனங்கள் அனைத்தும் கோவையின் புறநகர் பகுதியான சுந்தராபுரம், குறிச்சி குளத்துக்கரை வழியாகவே கோவை மாநகரத்தின் ஆத்துப்பாலம் மேம்பாலத்தை வந்தடைகின்றன.

குறிச்சிக்குளம் ஒட்டியுள்ள மாரியம்மன் கோவில் பகுதி சாலை குறுகலாக இருப்பதாலும், அப்பகுதியில் நடைப்பயிற்சி மேற்கொள்வோர், பக்தர்கள் வாகனங்களை நிறுத்துவதாலும் அப்பகுதியை கடக்க நாள்தோறும் 45 நிமிடங்கள் முதல் ஒரு மணி நேரம் வரை வாகனங்கள் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கின்றனர். குறிச்சிக் குளக்கரைப் பாதையை விரிவுபடுத்துவதற்கோ அல்லது அங்கு ஏற்படும் நெரிசலைக் கட்டுப்படுத்தக் கூடுதல் காவலர்களை நியமிப்பதற்கோ உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.

எனவே, பொதுமக்களின் நலன் கருதி மதுக்கரை மார்க்கெட் பகுதி மற்றும் குறிச்சிக்குளக் கரைப் பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை உடனடியாக ஒழுங்குபடுத்த வேண்டும் என்றும், தேவையான எண்ணிக்கையில் போக்குவரத்து காவலர்களை நியமித்து, பணியில் அமர்த்தி போக்குவரத்தை விரைந்து சீரமைக்க நடவடிக்கை வேண்டும் என்றும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

டாக்டர் க. கிருஷ்ணசாமி MD, Ex. MLA,
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி
28.09.2026