கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் அயல்நாட்டு மருத்துவக் கல்லூரிகளில் பயின்ற மருத்துவர்களைப் பணி அமர்த்த முதல்வருக்கு டாக்டர் கிருஷ்ணசாமி கடிதம்
271 Views
![]()
பெறுநர்:
மாண்புமிகு திரு மு. க. ஸ்டாலின் அவர்கள்,
தமிழ்நாடு முதலமைச்சர்,
தலைமைச் செயலகம்.
சென்னை – 600 009.
அன்புடையீர், வணக்கம்!
பொருள் : கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் அயல்நாட்டு மருத்துவக் கல்லூரிகளில் பயின்ற மருத்துவர்களைப் பணி அமர்த்துவது குறித்து.
தமிழக முதல்வராக பொறுப்பேற்றிருக்கும் தங்களுக்கு என் இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள்!
மருத்துவப் படிப்பிற்காக தமிழகத்திலிருந்து ரஷ்யா, சீனா, பிலிப்பைன்ஸ் மற்றும் மேற்கிந்திய நாடுகளுக்கு ஆயிரக்கணக்கான மாணவர்கள் செல்கிறார்கள். அங்குப் மருத்துவ படிப்பை நிறைவு செய்தவர்கள், இந்திய அரசால் நடத்தப்படும் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றால் மட்டுமே இந்தியாவில் பணியாற்ற முடியும் என்ற நிலையில் அதற்கான தயாரிப்பில் 5000-6000க்கும் மேற்பட்டோர் உள்ளனர் என தெரிய வருகிறது. இப்பொழுது கரோனா இரண்டாவது அலை தீவிரமாக உள்ள நிலையில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும் பணிபுரியும் மருத்துவர்களுக்கு மிகப்பெரிய பணிச்சுமை ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற அவசரக் கால கட்டத்தில் அயல்நாடுகளில் படித்து தகுதித் தேர்வுக்காகக் காத்துக் கொண்டிருக்கும் மருத்துவர்களின் சேவையைப் பயன்படுத்தி கொள்வதில் எவ்வித தவறும் இல்லை என கருதுகிறேன். எனவே, அரசின் மூலமாக வெளிப்படையாக அழைப்பு கொடுத்து, அரசின் கிராமப்புற, நகர்புற மற்றும் மாவட்ட மருத்துவமனைகளிலும்; தனியார் மருத்துவமனைகளிலும் முன் களப் பணியில் ஈடுபடுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
அதேபோல நீட் தேர்வு தேதி அறிவிப்பு ஆகஸ்ட் மாதத்திற்கு பின்பு என்பதால், கடந்த ஆண்டு மற்றும் அதற்கு முந்தைய ஆண்டுகளில் இளநிலைப் பட்டப்படிப்பை முடித்துவிட்டு, மேல்நிலை பட்டங்களுக்கான நீட் தேர்வுக்காக தங்களை ஆயத்தப்படுத்திக் கொண்டிருக்கும் பல்லாயிரக்கணக்கான இளம் மருத்துவர்களையும் முன்கள பணியாளர்களாக பயன்படுத்தக் கேட்டுக்கொள்கிறேன்.
மேற்குறிப்பிட்டுள்ள மருத்துவர்கள் பணியமர்த்தப் படுகின்றபோது உரிய முறையில் ஊக்கத்தொகையும் வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். நாளுக்கு நாள் உயிரிழப்புகளும், பாதிப்புகளும் அதிகரித்து வரும் சூழலில் அனைத்து மருத்துவ முன்களப்பணியாளர்களையும் ஒருங்கிணைத்துச் செயல்பட அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
டாக்டர் க.கிருஷ்ணசாமி MD,
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
12.05.2021






