மகாத்மா காந்தி பிறந்த நாளில் அமளிப் போராட்டங்கள் வேண்டாம்: டாக்டர் க.கிருஷ்ணசாமி வேண்டுகோள்!

இந்திய விடுதலைக்காக மகாத்மா காந்தியின் அர்ப்பணிப்பைப் போற்றும் வகையில் அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி அன்று போராட்டங்களைத் தவிர்த்து அமைதியாகக் கொண்டாட புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் க.கிருஷ்ணசாமி விடுத்துள்ள அறிக்கை.

அறிக்கைகள்
s2 10 Views
dr-krishnaswamy-gandhi-jayanti-statement-october-2
Published: 02 Oct 2026

Loading

அக்டோபர் 2 – மகாத்மா காந்தி அவர்களின் பிறந்த நாளில்,
அமளிப் போராட்டங்கள் வேண்டாம்.!
அவரது அர்ப்பணிப்பைப் போற்றுவோம்.!
………………………………………

1000 ஆண்டு காலம் இஸ்லாமியர்களுடைய படையெடுப்புக்களாலும்; 300 வருடம் ஆங்கிலேயர்கள், டச்சுக்காரர்கள், போர்ச்சுகீசியர்களின் ஆக்கிரமிப்புகளாலும் இந்திய தேசம் அடிமைப்பட்டு கிடந்தது. இந்திய தேசத்தின் விடுதலைக்காக எண்ணிலடங்காதோர் அளப்பரிய தியாகங்களைச் செய்து இருக்கிறார்கள். கடைக் கோடியில் வாழ்ந்த விவசாயி முதல் ஆங்கிலேயர்களின் படைப் பிரிவில் பணியாற்றிய சிப்பாய்கள் வரை கலகம் செய்திருக்கிறார்கள். தனிநபர் போராட்டங்களும் உண்டு; குழு போராட்டங்களும் உண்டு; பெரும் படை திரட்டி போராடிய வரலாறுகளும் உண்டு. இவ்வாறு பல்வேறு திசைகளிலிருந்த போராட்டங்களை எல்லாம் ’இந்தியாவின் முழு விடுதலை’ என்ற ஒரு மையப்புள்ளியில் கொண்டுவர முக்கிய பாத்திரம் வகித்தவர் காந்தியார் என்றால் மிகையாகாது.

காந்தியாரின் வழிமுறைகள் மற்றும் அவருடைய பொருளாதார திட்டங்கள், சமூக பார்வைகளில் பலருக்கும் மாறுபட்ட கருத்துண்டு, அதேபோல எமக்கும் உண்டு; பலருக்கும் இன்னும் இருக்கும் என்பதில் ஐயமில்லை. எனினும் பாரத தேசம் விடுதலை பெற வேண்டும் என்பதில் அவருடைய அர்ப்பணிப்பை எவரும் ஐயுற முடியாது. அந்த வகையில் தென்னாப்பிரிக்காவிலிருந்து 1919இல் இந்தியாவில் காலடி வைத்த காந்தியார் அவர்கள் ஏறக்குறைய 30 வருடங்கள் தனக்கென்று வகுத்துக் கொண்ட பாதையில் ஆங்கிலேயரை நெஞ்சுரத்தோடு எதிர் கொண்டார். ஆங்கிலேயர்களின் ஆயுத பலம், அதிகார பலம், ஏகாதிபத்திய தன்மைகள் அனைத்தையும் உணர்ந்து அவர் அவர்களுக்கு எதிராக இந்திய மக்களை அணி திரட்டி இருக்கிறார்.

இன்றைய தலைமுறையினர் பலர் இந்தியச் சுதந்திரத்தின் அருமையை உணராமல் இருக்கலாம். ஆனால் ’இம்மென்றால் சிறைவாசம், ஏன் என்றால் வனவாசம்’ என்று இருந்த காலத்தில் ஒரு தேச முழுமையும் அடிமைப்பட்டு கிடந்ததிலிருந்து அதை முற்றாக விடுதலை செய்ய காந்தியார் எடுத்துக் கொண்ட முயற்சியும், வழிமுறைகளும், அர்ப்பணிப்பும் என்றென்றும் போற்றுதலுக்குரியவை. அவர் தேசத் தந்தையாக போற்றப்படுவதற்கு உண்டான பெருமை மிக்கவரே. அவருடைய பிறந்த நாளான அக்டோபர் 2 ஆம் தேதி பாரதம் எங்கும் இனிதே கொண்டாடப்பட வேண்டும்.

இம்மாமனிதரின் பிறந்த நாளை அனுசரிக்கின்ற பொழுது, அவருடைய வரலாறுகளையும், தியாகங்களையும், அர்ப்பணிப்புகளையும் மட்டுமே போற்றப்படக் கூடியதாக அந்நாள் விளங்கிட வேண்டும். மாறாக, அவருடைய பிறந்த நாளில் அமைதி பேரணியையோ, அமைதி குலைப்பு பேரணியையோ நடத்துவது உசிதமானது அல்ல.

அக்டோபர் 2 – மகாத்மா காந்தி அவர்களின் பிறந்த நாளில்,
அமளிப் போராட்டங்கள் வேண்டாம்.!
அவரது அர்ப்பணிப்பைப் போற்றுவோம்.!

டாக்டர் க. கிருஷ்ணசாமி MD, Ex MLA,
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
02.10.2026