தேவேந்திரகுல வேளாளர் உள்ளிட்ட அனைத்து சமுதாயத்தினர் பங்களிப்புடன் கண்டதேவி தேரோட்டம் நடைபெற வேண்டும்!

அறிக்கைகள்
s2 359 Views
  • Kandadevi
  • Kandadevi
Published: 17 Nov 2023

Loading

கண்டதேவி முன்னோட்டத் தேரோட்ட நிகழ்வை சாதி, இன பாகுபாடின்றி தேவேந்திரகுல வேளாளர் உள்ளிட்ட அனைத்து சமுதாயத்தினரின் பங்கேற்போடு நடத்துவதற்குண்டான நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பாக புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர்- தலைவர், டாக்டர்.க.கிருஷ்ணசாமி, MD, ExMLA, அவர்கள், சிவகங்கை மாவட்ட ஆட்சியர் திருமதி. ஆஷா அஜித் IAS, அவர்களுக்கு 16.11.2023 அன்று அனுப்பியப் புகாரின் சாராம்சம்.
—————————————————————
அனுப்புநர்
டாக்டர்.க.கிருஷ்ணசாமி, MD, Ex.MLA,
நிறுவனர் – தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
தமிழ்நாடு.
பெறுநர்
திருமதி. ஆஷா அஜித், IAS அவர்கள்,
மாவட்ட ஆட்சியர்,
சிவகங்கை மாவட்டம்,
சிவகங்கை.
பொருள்: கண்டதேவி முன்னோட்டத் தேரோட்ட நிகழ்வை சாதி, இன பாகுபாடின்றி தேவேந்திரகுல வேளாளர் உள்ளிட்ட அனைத்து சமுதாயத்தினரின் பங்கேற்போடு நடத்துவதற்குண்டான நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தல் தொடர்பாக.

பேரன்புடையீர், வணக்கம்!
சிவகங்கை மாவட்டம், கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் கோவில் தேரோட்டத்தை நடத்துவது சம்பந்தமாக, கடந்த 09.11.2023 அன்று தங்களது தலைமையில் நடைபெற்ற அனைத்து சமுதாயத் தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் குறித்தும், சொர்ணமூர்த்தீஸ்வரர் கோவில் முன்னோட்டத் தேரோட்டம் குறித்தும் சில முக்கியமான கருத்துகளை முன்வைக்கக் கடமைப்பட்டிருக்கிறேன்.

ஏறக்குறைய 20 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கண்டதேவித் தேர், மீண்டும் 21.01.2024 அன்று இழுக்கப்படுவதற்கு தேதி குறிக்கப்பட்டதாகத் தெரிகிறது. கண்டதேவியைச் சுற்றியிருக்கக்கூடிய சில கிராமங்களில் நாட்டார்கள் என்று அழைத்துக்கொள்ளக்கூடிய கள்ளர்கள், அதே கிராமங்களில் வாழக்கூடிய தேவேந்திரகுல வேளாளர்களையும் பிற சமுதாய மக்களையும் தேரோட்ட நிகழ்ச்சியில் பங்குபெற அனுமதிக்காததும், அம்மக்கள் தேர்வடம் பிடித்து இழுக்க முற்பட்ட பொழுதெல்லாம் நான்கு நாட்டுக் கள்ளர்களால் தாக்குதலுக்கு ஆளான சம்பவங்கள் நடந்தேறின.

குறிப்பாக 1997-ஆம் ஆண்டு நடைபெற்ற தேரோட்டத்தில் தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்தைச் சார்ந்த ஒரு மாணவர் வடத்தைப் பிடித்ததற்காகத் தாக்கப்பட்ட சம்பவத்தை, நாம் கண்டதேவி சுற்றுவட்டார கிராமங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த போது நம்முடைய கவனத்திற்குக் கொண்டு வந்தார்கள். எனவே ’அனைத்துச் சமுதாய மக்களும் தேர்வடம் பிடிக்க அனுமதிக்கப்படவும், அம்மக்களுக்கு உரிய பாதுகாப்புக் கொடுக்கப்படவும் வேண்டும்’ என்று, 1998-ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் W.M.P.No.14132/1998 in W.P.No.9235/1998 என்ற நான் தொடுத்த வழக்கில், 06.07.1998 அன்று பிறப்பிக்கப்பட்ட உத்தரவில், “கண்டதேவி தேரோட்டத்தில் சாதி, மத, இன, மொழி வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு அனைத்து தரப்பினரின் பங்கேற்பையும் உறுதிசெய்வதற்குண்டான அனைத்து நடவடிக்கைகளையும் மாநில அரசு எடுத்திட வேண்டும்” என சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி லிப்ரான் அவர்கள் தீர்ப்பளித்தார். இந்திய அரசியல் சாசனத்தின் 17 மற்றும் 19-வது விதிகளின்படி, ”இந்தியக் குடிமக்கள் அனைவரும் எவ்விதமான சாதி, மத, இன, மொழி பேதத்திற்கும் உள்ளாக்கப்படாமல், அவர்கள் மீது தீண்டாமை எந்த விதத்தில் இருந்தாலும் அதை ஒழிப்பது மற்றும் முழுச் சுதந்திர உரிமையை உறுதிபடுத்துவது” ஆகியவை அடிப்படை உரிமைகளாக வழங்கப்பட்டுள்ளன. ஆனால், இந்திய அரசியல் சாசனத்தினுடைய அடிப்படை உரிமைகள் மற்றும் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்குப் பிறகும் தேவேந்திரகுல வேளாளர் உள்ளிட்ட பிற சமுதாய மக்கள் மீது நான்கு கிராம கள்ளர்கள் வன்முறைகளை ஏவினர். எனவே 1998-ஆம் ஆண்டு தேரோட்டம் நிறுத்தப்பட்டது.

1999-ஆம் ஆண்டு தேரோட்டம் தொடர்பாக இந்துசமய அறநிலையத்துறை இணை ஆணையர் பிறப்பித்த அறிவிப்பை எதிர்த்து மீண்டும் உயர்நீதிமன்றத்தில் நான் தொடுத்த வழக்கில், 25.07.1999 அன்று, “மாநில அரசு சட்டம் – ஒழுங்கு பிரச்சினையைக் கருத்தில் கொண்டு, மனுதாரரின் கோரிக்கையை பரிசீலித்து, அதன்மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனடிப்படையில், 26.07.1999 அன்று தமிழக இந்துசமய அறநிலையத்துறை ஆணையர், “சாதி, இன பாகுபாடு இன்றி அனைத்து தரப்பினரின் பங்கேற்போடு தேரோட்டம் நடத்தப்படும்” என்று அறிவிப்பு செய்தார்.

நீதிமன்ற உத்தரவையும், ஆணையரின் அறிவிப்பையும் கள்ளர் தரப்பினர் மீண்டும் அவமதிப்பு செய்து, சட்டம் ஒழுங்குப் பிரச்சினையை உருவாக்கியதால், 1999-ஆம் ஆண்டும் தேரோட்டம் நிறுத்தப்பட்டது. இவ்வாறு, தொடர்ச்சியாக உயர்நீதிமன்ற உத்தரவுகளை அமல்படுத்தவிடாமல் கள்ளர் தரப்பினர் பிரச்சினை செய்த காரணத்தினால், கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாகக் கண்டதேவி தேரோட்டம் நிறுத்தப்பட்டிருக்கிறது. இந்த உண்மை நிலைகளை மறைத்து, அண்மையில் ஒரு நபர் தொடுத்த வழக்கில் தேரோட்டத்தை விரைந்து நடத்துமாறு நீதிமன்றம் கொடுத்த உத்தரவின் அடிப்படையில், அதற்கான முன்னேற்பாடு நிகழ்ச்சியாக தங்களுடைய தலைமையில் ஒரு கூட்டத்தை நடத்தியிருக்கிறீர்கள்.

இந்தத் தேரோட்டம் நின்றதே நாங்கள் தொடுத்த வழக்கில் வழங்கப்பட்ட உயர்நீதிமன்ற உத்தரவை அவமதித்து, அதனை அமல்படுத்துவதற்கு கள்ளர்கள் தடையாக இருப்பதன் காரணமாகத்தான். எனவே இந்த முன்னோட்டத் தேரோட்டத்தை நடத்துவதற்கு முயற்சி எடுத்தாலும், அதற்கான ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினாலும், எனக்கும் முறையாக அழைப்புக் கொடுத்திருக்க வேண்டும். ஆனால் நடைபெற்றக் கூட்டத்திற்கு எனக்கு அழைப்புக் கொடுக்கப்படவில்லை.

தமிழகத்தில் வாழுகின்ற கோடானகோடி தேவேந்திரகுல வேளாளர் உள்ளிட்ட பிற ஒடுக்கப்பட்ட, அட்டவணைப்படுத்தப்பட்ட சமுதாய மக்களுடைய அடிப்படை உரிமைகளுக்காக நாங்கள் போராடி வருகிறோம். சுதந்திரம் பெற்று 76 ஆண்டுகள் நிரம்பியும் இன்னும் வறுமையிலும், அடக்குமுறைகளுக்கு ஆளாகி அச்சத்திலும் வாழக்கூடிய மக்களின் பிரதிநிதிகளாக இருக்கக்கூடிய எங்களைப் போன்றவர்களால் மட்டுமே அவர்களுக்கான நியாயங்களும் உரிமைகளும் மறுக்கப்படுகின்ற பொழுது அரசிடமும் நிர்வாகத்திடம் முறையாக எடுத்துச் சொல்லி அதை நிலைநாட்ட முடியும். ஏறக்குறைய 25 ஆண்டுகால கண்டதேவி தேரோட்டப் பிரச்சினையை நன்கு அறிந்த நீங்கள், எனக்கு முறையாக அழைப்பிதழ் அனுப்பாமலும், போதிய அவகாசம் கொடுக்காமலும் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியிருப்பது வருத்தமளிக்கிறது. அதில் உள்நோக்கம் இருப்பதாகக் கூட கருத வேண்டியிருக்கிறது.

மேலும் அந்தக் கூட்டத்திற்கான அழைப்பிதழ், கண்டதேவி மற்றும் சுற்றுவட்டாரத்தில் வாழக்கூடிய அந்தக் கோவிலுக்குப் பாத்தியப்பட்ட தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்தைச் சார்ந்த ஊர்த் தலைவர்கள் எவருக்கும் முறையாக வழங்கப்படவில்லை. தங்களுடைய அலுவலகத்திலிருந்து அனுப்பப்பட்ட கடிதத்தில் அனைத்து சமுதாயத் தலைவர்கள் என்றுக் குறிப்பிடப்பட்டிருந்தாலும், கள்ளர் சாதியை சார்ந்தவர்களுக்கு மட்டுமே அழைப்பிதழ் விநியோகிக்கப்பட்டிருக்கிறது.

இந்த முன்னோட்டத் தேரோட்டத்திற்கு முக்கியமாக அழைப்புக் கொடுக்கப்பட வேண்டிய தேவேந்திரகுல வேளாளர் சமுதாய ஊர்த் தலைவர்கள் திட்டமிட்டுப் புறக்கணிக்கப்பட்டிருக்கிறார்கள்; அவர்களுக்கு எவ்விதமான அழைப்புகளும் எந்த அதிகாரியாலும் வழங்கப்படவில்லை. வேறுவேறு விதங்களில் தெரிந்துகொண்ட சிலர் மட்டுமே கூட்டத்தில் பங்கேற்றிருக்கிறார்கள். எனவே நடைபெற்ற கூட்டம் ஒருதலைபட்சமானதும் உள்நோக்கம் கொண்டதாகவுமே கருத வேண்டியிருக்கிறது.

மேலும் கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் கோவில் இந்துசமய அறநிலையத்துறைக்குட்பட்ட கோவில் ஆகும். ஆனால் அதை மறைத்து, என்றோ காலாவதியாகிப்போன சிவகங்கை சமஸ்தானம் என்ற பெயர் தாங்கி தேர் வெள்ளோட்டம் குறித்து மாவட்ட நிர்வாகத்தினுடைய அறிக்கை வெளியாகியிருக்கிறது. சுதந்திரத்திற்கு முன் செயல்பட்டு வந்த 546-க்கும் மேற்பட்ட சமஸ்தானங்கள் அனைத்தும் ஒன்றாக இணைக்கப்பட்டு இந்தியா என்ற ஒன்றுபட்ட தேசமாக இருக்கிறது. பெயரளவிற்குக் கூட சமஸ்தானம், அரண்மனை, ராணி, ராஜா என்றப் பெயர்களைப் பயன்படுத்த முடியாது. அந்தப் பகுதியிலிருக்கக் கூடிய 130-க்கும் மேற்பட்ட கோவில்கள் அனைத்துமே இப்பொழுது இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் வந்துவிட்டன.

எனவே எந்தச் சூழ்நிலையிலும் இந்துசமய அறநிலையத்துறைக்குட்பட்ட அக்கோவில்களை சமஸ்தானத்திற்குட்பட்டது என்று குறிப்பிடுவது தவறானதும் சட்டவிரோதமானதும் ஆகும். தேரோட்டத்தில் வெள்ளோட்டம் நல்லோட்டம் என்றெல்லாம் எதுவுமில்லை.

தேர் கோவிலைவிட்டுப் புறப்படுகிறதென்று சொன்னாலே நீதிமன்ற உத்தரவுப்படி, 4 வடங்களிலும் கண்டதேவியைச் சுற்றியிருக்கக்கூடிய அனைத்து கிராமங்களில் வாழும் தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்தைச் சார்ந்த ஊர்த்தலைவர்கள் உட்பட அனைத்து மக்களும் சரிசமமாகப் பங்கேற்கக்கூடிய வகையில் நடவடிக்கைகளை மேற்கொண்டு, அவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கவேண்டிய பொறுப்பு மாவட்ட ஆட்சியராகிய உங்களுக்கும், காவல்துறைக்கும் இருக்கிறது.

அதைவிட்டுவிட்டு அறநிலையத்துறை ஊழியர்களை வைத்து தேர்வடம் பிடித்து இழுக்கப்போகிறோம் என்று சொல்வது தவறானதும், உயர்நீதிமன்ற உத்தரவை மீறுவதும், மறைமுகமாக தேவேந்திரகுல வேளாளர்களையும் இதரப் பட்டியலின மற்றும் பிற சமுதாய மக்களையும் முன்னோட்டத் தேரோட்ட நிகழ்ச்சியில் புறக்கணிக்கக்கூடிய முயற்சியும் ஆகும். இதை நான் கடுமையாக அட்சேபிக்கிறேன்.

எனவே நீங்கள் அந்த சுற்றுவட்டாரத்தைச் சார்ந்த தேவேந்திரகுல வேளாளர் உள்ளிட்ட அனைத்து சமுதாயத் தலைவர்களுக்கும் முறையாக அழைப்பிதழ் கொடுத்து, மீண்டும் ஒரு கூட்டத்தை நடத்தி, ஆலோசனை செய்து, ஜனநாயக ரீதியாக, தீண்டாமைக்கு எந்தவிதத்திலும் இடம் கொடுக்காமல், சாதி வேறுபாடற்று அந்த முன்னோட்டத் தேரோட்ட நிகழ்ச்சியையும் நடத்துவதற்குண்டான வழிமுறைகளை வகுத்திட வேண்டும்.

மேலும், சுற்றியிருக்கக்கூடிய கிராமங்களைச் சார்ந்த கள்ளர் சாதி ஊர்த் தலைவர்களிடத்தில், தேரோட்டத்தில் பங்கேற்கக்கூடிய தேவேந்திரகுல வேளாளர்களுக்கும் பிறசமுதாய மக்களுக்கும் எவ்விதமான இடையூறுகளும் செய்யமாட்டோம் என்பதற்குண்டான உறுதிமொழிப் பத்திரத்தையும் பெற வேண்டும். மீறி சம்பவங்கள் நடந்தால் அதற்கு அவர்கள் மட்டுமே பொறுப்பேற்கக்கூடிய வகையில், உரிய சட்ட விதிமுறைகளையும் வகுத்து, நீங்கள் அதனை அமலுக்குக் கொண்டுவர வேண்டும்.

உயர்நீதிமன்றத்தில் 21.01.2024 அன்று வெள்ளோட்டம் நடத்தப்படும் என்று நீங்கள் சொல்லியிருக்கக்கூடிய அறிவிப்பை இப்பொழுது அமல்படுத்துவதற்கு முன்பு, மீண்டும் முறையாக ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்து, வெள்ளோட்டம் மட்டுமின்றி, தொடர்ந்து உயர்நீதிமன்ற உத்தரவுகளின்படி, அனைத்து தரப்பினரின் பங்கேற்போடு தேரோட்டம் எவ்வாறு நடத்தப்பட வேண்டும் என்பதற்கான எல்லாவிதமான வழிமுறைகளையும் வகுத்த பிறகே, இந்த முன்னோட்டத் தேரோட்டம் நடத்தப்பட வேண்டும். அதற்கு முன்பு தேவேந்திரகுல வேளாளர் உள்ளிட்ட பட்டியலின மக்களின் உரிமைகளைப் பறிக்கும் வகையில் முன்னோட்டத் தேரோட்டத்திற்கான எவ்வித முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன்.
இப்படிக்கு,
டாக்டர்.க.கிருஷ்ணசாமி, MD, Ex.MLA,
நிறுவனர் – தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
16/11/2023.