தேசியமும் தெய்வீகமும் திராவிடமும் தென்தமிழகத்தில் வன்முறைக் கும்பல்களிடம் மண்டியிடுவது ஏன்?

அறிக்கைகள்
s2 150 Views
  • Dr Krishnasamy 2
  • Dr Krishnasamy 2
Published: 14 Nov 2023

Loading

நேற்று ஒரு தேவேந்திரன் படுகொலை.
தேசியமும் தெய்வீகமும் திராவிடமும்
தென்தமிழகத்தில் வன்முறைக் கும்பல்களிடம் மண்டியிடுவது ஏன்?
ஏழை, எளிய தேவேந்திரகுல வேளாளர், ஆதிதிராவிடர், அருந்ததிய மக்கள் மீது
வன்முறையை ஏவும் கிரிமினல் குற்றவாளிகளைக் கண்டிக்க, தமிழக அரசியல் கட்சிகள் தயக்கம் காட்டுவது ஏன்?

மணக்கரை மணி கொலைக் குற்றவாளிகள் உடனடியாகக் கைது செய்யப்பட வேண்டும் !!
காவல்துறை நடுநிலையோடு நின்று சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்ட வேண்டும் !
எளிய மக்கள் மீதான இதுபோன்ற வன்முறைச் சம்பவங்களை
அனைத்துச் சமூகத்தினரும் வெளிப்படையாகக் கண்டிக்க வேண்டும் !!
தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு அருகே மணக்கரை – கீழூர் தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்தைச் சார்ந்த 60 வயதான மணி என்பவர் 13.11.2023 அன்று மாலை 4 மணியளவில் அதே கிராமத்தைச் சார்ந்த ஒரு கொலைகாரக் கும்பலால் கர்ணக்கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டிருக்கிறார். இச்சம்பவத்திற்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
1990 – 2000 ஆண்டுகளில் நிலவிய பெரும் கலவரச் சூழ்நிலைக்குப் பிறகு, மீண்டும் தென்தமிழகத்தைப் பழைய சூழ்நிலைக்குத் தள்ளிடும் வகையில், எந்தவிதமான முகாந்திரமும் இல்லாமல், நிராயுதபாணிகளாக விவசாய நிலத்தில் பாடுபட்டுக் கொண்டிருக்கக்கூடிய விவசாயிகள், ஆடுமேய்த்துக் கொண்டிருப்போர், பணிகளுக்குச் சென்றுவிட்டுத் தன்னந்தனியாக வரக்கூடியவர்கள், ஆற்றங்கரைக்குக் குளிக்கச் செல்லக்கூடியவர்கள் என ஏழை, எளிய மக்கள் மீது அண்மைக்காலமாக மனித உரிமை மீறல்களும், வன்முறைகளும், பட்டப்பகலிலேயே கொலைகளும் நடந்துவருகின்றன.

இந்த அபாயகரமான சூழல் குறித்து, மாநில அரசினுடைய கவனத்தை ஈர்க்கக்கூடிய வகையில், தென்தமிழகத்தில் நாம் நடத்திய அனைத்துப் பத்திரிக்கையாளர் சந்திப்புகளிலும் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறோம். தேவேந்திரகுல வேளாளர் மற்றும் சக ஒடுக்கப்பட்ட ஆதிதிராவிடர், அருந்ததியர் சமுதாயங்களின் மீது மட்டும் ஏவப்படும் இந்த வன்முறைகளைத் தவிர்த்திட கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று பலமுறை வலியுறுத்தியிருக்கிறோம். தேவேந்திரகுல வேளாளர் உள்ளிட்ட ஒடுக்கப்பட்ட மக்கள் மீது இதுபோன்ற வன்முறைகள் நடந்தால் மட்டுமே காவல்துறை உள்ளிட்ட அரசு நிறுவனங்கள் அங்கு வருகிறார்கள்; பரபரப்பு காட்டுகிறார்கள்.
கொலை செய்வதையே தொழிலாகக் கொண்டு திரியும் வன்முறைக் கும்பலை முழுமையாகக் கண்காணிப்பதற்கோ, அவர்கள் மீது இருக்கக்கூடிய பல்வேறு வழக்குகளை முறையாக நடத்தி, அவர்களுக்குத் தண்டனை பெற்றுக் கொடுப்பதற்கோ உரிய நடவடிக்கைகள் எடுத்திருப்பின் இதுபோன்ற சம்பவங்கள் நடந்திருக்காது. மணக்கரையில் விவசாயப் பணிகளை முடித்துக் கொண்டு, தனது சொந்தக் கிராமத்தில் கோவில் திண்ணையில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்த விவசாயியைத் தட்டி எழுப்பி, பட்டப்பகலில் கர்ணக்கொடூரமாக வெட்டிக் கொலை செய்திருக்கிறார்கள்.

மணக்கரை கிராமத்தைச் சார்ந்த சிலரது வன்முறைப் பின்புல வரலாறுகள் அனைத்தும் காவல்துறையினருக்கு நன்கு தெரியும். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வல்லநாடு வனக் காவலரையே வெட்டிக் கொன்றவர்களும் அந்த வட்டாரத்தைச் சார்ந்தவர்களே. நெல்லை – கீழநத்தம் கிராமத்தில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த இராஜாமணி என்ற நபர் எவ்விதக் காரணமும் இல்லாமல் வெறும் கணக்கிற்காக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். நாங்குநேரி, கழுகுமலை, இலட்சுமியாபுரம், சிவந்திப்பட்டி, ஆகிய கிராமங்களைச் சார்ந்த பள்ளி மாணவர்கள் சகப் பள்ளி மாணவர்களால் தாக்கப்பட்டார்கள். நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகே அருணாச்சலப்பேரி, பாப்பாக்குடி, முக்கூடல் ஆகிய கிராமங்களிலும் அதேபோன்ற சம்பவங்கள் நடந்தன. நெல்லை மாநகர எல்லைக்குட்பட்ட மணிமூர்த்தீஸ்வரத்தைச் சார்ந்த இளைஞர்கள் தாமிரபரணி ஆற்றில் குளிக்கச் சென்றபோது கடுமையாகத் தக்கப்பட்டதோடு மட்டுமின்றி, அவர்கள் மீது அப்பட்டமான மனித உரிமை மீறல் நடத்தப்பட்டது.

நேற்றைய தினம் மணக்கரையில் தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்தைச் சார்ந்த ஏழை விவசாயி கொல்லப்பட்டிருக்கிறார். இவருக்கும் கொலையாளிகளுக்கும் எந்தவிதமான முன்பகையும் இல்லை. கணக்கிற்கு ஒரு தேவேந்திரகுல வேளாளரை கொல்ல வேண்டுமென்று நடத்தப்பட்ட அப்பட்டமான, மிருகத்தனமான நடவடிக்கையே இது. ஊருக்கு நான்கைந்து பேர் கொலையையே தொழிலாகக் கொண்டு அலையக்கூடிய இந்தக் கும்பல்களை ஒடுக்குவதற்கு, அடக்குவதற்கு காவல்துறை ஏன் தயங்குகிறது என்று தெரியவில்லை. 1995-96-களில் கொடியங்குளம் சம்பவ நிகழ்வின்போது இதேபோன்று வல்லநாடு மற்றும் மணக்கரையைச் சார்ந்த 3 பேர் தங்கள் நிலத்தில் நீர் பாய்ச்சிக் கொண்டிருந்தபோது வெட்டிக் கொல்லப்பட்டார்கள். தொடர்ந்து இந்தக் கிரிமினல் நடவடிக்கைகளில் ஈடுபடுவது ஒருசில கிராமங்களைச் சார்ந்த ஒரு குறிப்பிட்ட பிரிவைச் சார்ந்த மணல்திருட்டு உள்ளிட்ட அனைத்துக் கிரிமினல்கள் என்றுத் தெரிந்தும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்காததே, தென்தமிழகத்தில் திரும்பதிரும்ப இத்தொடர் சம்பவங்களில் சாதாரணமக்கள் இரையாவதற்குக் காரணமாகிறது.

2013-2016-களில் திருவைகுண்டத்தை மையமாக வைத்து, ஏறக்குறைய 30-க்கும் மேற்பட்ட படுகொலைகள் நடந்தன. அண்மையில், விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் இதுபோன்று எவ்விதத்திலும் சம்பந்தமில்லாத காந்திராஜன் என்ற இளைஞர் வெட்டிக் கொல்லப்பட்டார். அதேபோன்று காரியாப்பட்டி அருகே முருகன்வெற்றிலைப்பட்டி கிராமத்தைச் சார்ந்த மாயக்கிருஷ்ணன் என்ற சாதாரண நபர் படுகொலைக்கு ஆளானார். தென்தமிழகத்தில் மீண்டும் ஒரு பதற்றத்தை உருவாக்க வேண்டுமென்ற நோக்கத்தோடு, மனிதநேயமற்ற ஒரு கும்பல் ஏழை, எளிய மக்கள் மீது வன்முறையை ஏவுகிறது. காவல்துறை அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொண்டு அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தும் என்று நம்புகிறோம்.
தமிழகத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு, தேசியமும் தெய்வீகமும் திராவிடமும் இன்னபிற இசங்களும் உரத்தக் குரலில் பேசப்படுகின்றன. இந்த நாட்டினுடைய பூர்வீகக் குடிமக்கள், தமிழ் மொழி மட்டுமே பேசக்கூடிய தமிழ்க்குடிமக்கள், வேளாண்மையை தொன்றுதொட்டு செய்துவரக்கூடிய இந்த வேளாண்குடி மக்கள் மீது இதுபோன்று திட்டமிட்டு நடந்தேறுகின்ற கொலைகள், மனித உரிமை மீறல்கள் ஆகியவற்றைக் கண்டிக்காமல், தேர்தல், ஓட்டு ஆகியவற்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் அரசியல்வாதிகளிடம் இருக்கக்கூடிய குறுகிய சிந்தனைகளாலும், தயக்கங்களாலும் தான், கொலையாளிக் கும்பல்கள் வீரர்களாக கொம்புசீவி விடப்படுகிறார்கள். அவர்கள் ஏழை, எளிய அப்பாவி மக்கள் மீதே தங்கள் வீரத்தைக் காட்டுகிறார்கள்.

தேவேந்திரகுல வேளாளர்கள் கடந்த நூறாண்டுகளில் எத்தனையோ வன்முறைகளையும் சமூகக் கொடுமைகளையும் தாண்டி, தங்களுடைய அடையாளங்களை இழக்காமல் வாழ்கிறார்கள். அதைத் தாங்கிக்கொள்ள முடியாதவர்கள், இதுபோன்ற மிருகத்தனமான நடவடிக்கையால் மீண்டும் பழைய அடிமை நிலைமைக்குத் தள்ளிவிட வேண்டும் என்ற முனைப்போடு மீண்டும் மீண்டும் இதுபோன்ற வன்முறைச் சம்பவங்களை ஏவிவிடுகிறார்கள். குலத்தைக் கெடுக்க வந்த கோடரிக் காம்புகளைப்போல, இந்தச் சமுதாயத்தில் பிறந்த சில புல்லுறுவிகளும், கருங்காலிக் கூட்டங்களும் பிணந்தின்னிக் கழுகுகளைப் போல, சில ஆயிரங்களுக்கு விலைபோய், இதுபோன்ற சம்பவங்கள் நடக்கும்போதெல்லாம் போட்டிபோட்டுக்கொண்டு வெட்டியான் வேலை பார்ப்பதும் இந்த வன்முறைக் கும்பல்களுக்கு சாதகமாகிவிடுகிறது. கடந்த 10, 15 ஆண்டுகளாக அமைதியாகவும் நிம்மதியாகவும் வாழ்கின்ற தென்தமிழகம் மீண்டும் பதற்றத்திற்கும் கலவரத்திற்கும் ஆளாக வேண்டியதாகிறது; எழுந்த சமுதாயம் மீண்டும் வீழ்ந்துவிடக்கூடாது. கொலைகாரக் கும்பல்கள், ரெளடிக் கூட்டங்கள் கடுமையான சட்ட நடவடிக்கைகளுக்கே அஞ்சுவார்கள்.

இதுபோன்ற சம்பவங்கள் நடக்கின்றபொழுது ஓரிரு நாட்கள் ஆத்திரத்தைக் கொட்டிவிட்டு, பின் மழுங்கிப் போய்விடாமல் மணக்கரை மணியின் கொலையாளிகளுக்கு சட்ட ரீதியான தண்டனையைப் பெற்றுக் கொடுப்பதையே குறிக்கோளாகக் கொண்டு ஒற்றுமையுடனும், உறுதியுடனும், மணியின் குடும்பத்தாரும், மணக்கரை ஊராரும், அந்தப் பகுதி மக்களும் இருந்திட வேண்டுமென்றும், தூத்துக்குடி மாவட்டக் காவல்துறை இதனுடைய எல்லா விளைவுகளையும் கணக்கிலே கொண்டு, கொலையாளிகளை உடனடியாகக் கைது செய்து, விரைந்து குற்றப்பத்திரிக்கைத் தாக்கல் செய்து, அவர்களுக்கு உரிய தண்டனையைப் பெற்றுத் தர வேண்டுமென்றுக் கேட்டுக்கொள்கிறேன்.

ஏழை, எளிய தேவேந்திரகுல வேளாளர், ஆதிதிராவிடர், அருந்ததிய மக்கள் மீது
வன்முறையை ஏவும் கிரிமினல் குற்றவாளிகளைக் கண்டிக்க,
தமிழக அரசியல் கட்சிகள் தயக்கம் காட்டுவது ஏன்?
தேசியமும் தெய்வீகமும் திராவிடமும்
தென்தமிழகத்தில் வன்முறைக் கும்பல்களிடம் மண்டியிடுவது ஏன்?
மணக்கரை மணி கொலைக் குற்றவாளிகள் உடனடியாகக் கைது செய்யப்பட வேண்டும் !!
காவல்துறை நடுநிலையோடு நின்று சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்ட வேண்டும் !
எளிய மக்கள் மீதான இதுபோன்ற வன்முறைச் சம்பவங்களை
அனைத்துச் சமூகத்தினரும் வெளிப்படையாகக் கண்டிக்க வேண்டும் !!

டாக்டர்.க.கிருஷ்ணசாமி, MD,Ex.MLA,
நிறுவனர் – தலைவர்,
புதிய தமிழகம் கட்சி,
14/11/2023.