41 தொழிலாளர்களையும் பத்திரமாக மீட்ட மத்திய – மாநில அரசுகளுக்கும், இந்திய ராணுவத்திற்கும் புதிய தமிழகம் கட்சியின் பாராட்டுக்கள்.!
253 Views
![]()
உத்தரகாண்ட் மாநிலம் சில்க்யாரா சுரங்கத்தில் சிக்கித் தவித்த 41 தொழிலாளர்களும் 17 நாட்கள் கடும் முயற்சிக்குப் பின் பத்திரமாக மீட்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது; காலதாமதம் ஆனாலும், நிறைவாக அனைத்து தொழிலாளர்களும் மீட்கப்பட்டு விட்டார்கள். 17 நாட்கள் சுரங்கத்திற்குள் சிக்கி இருந்த நிலையிலும், அவர்களுடைய மனோதைரியம் பாராட்டுக்குரியது.
மாநில அரசு, மத்திய அரசு, இந்திய ராணுவம் மற்றும் வெளிநாட்டு நிபுணர்களுடைய ஆலோசனைகளின் அடிப்படையில் கடந்த 17 தினங்களாக பல முயற்சிகள் எடுக்கப்பட்டு இருக்கின்றன. தொழிலாளர்களைப் பத்திரமாக மீட்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்ட உத்தரகாண்ட் மாநில முதல்வர், மத்திய – மாநில அரசுகள், இந்திய ராணுவத்திற்கு புதிய தமிழகம் கட்சியின் பாராட்டுக்கள்.!
எலிகள் வளையை தோண்டுவது போல மிகவும் குறுகலான சுரங்களை கைகளால் மிகக் குறைந்த அளவிலான கருவிகளைப் பயன்படுத்தித் தோண்டுபவர்கள் ‘Rat miners’ என்று அழைக்கப்படக்கூடியவர்கள். அவர்களைப் பயன்படுத்தி துளையிட்டுத் தான் 41 தொழிலாளர்களும் மீட்கப்பட்டு இருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. என்னதான் நவீன இயந்திரங்கள் வந்தாலும் மனித முயற்சிக்கு ஈடாகாது என்பதை இந்த நிகழ்ச்சிக் காட்டி இருக்கிறது.
மீட்கப்பட்ட தொழிலாளர்கள் அனைவருமே மிகக் குறைவான சம்பளத்திற்கு வேலைக்கு அமர்த்தப்பட்ட தொழிலாளர்கள். சுரங்கத்திற்குள் சிக்கிய 17 நாட்கள் அவர்களுக்கு மனோ ரீதியாக மிகப்பெரிய பாதிப்புகளை உண்டாக்கி இருக்கும். அதன் தாக்கம் பல வருடங்களுக்குக் கூட இருக்கும். எனவே, அவர்களுடைய குடும்பங்களுக்கு மத்திய, மாநில அரசுகள் உரிய முறையில் பொருளாதார ரீதியாக பக்கபலமாக இருக்க வேண்டும்.
எதிர்காலங்களில் இந்தியாவின் எந்த பகுதியிலும் இது போன்று மலைகளைக் குடைவது, சுரங்கப்பாதைகள் தோன்றுகின்ற போது ஏற்படும் எதிர்பாராத விபத்துக்களிலிருந்து தொழிலாளர்களை மீட்க உண்டான வழிமுறைகளையும், உபகரணங்களையும் முன்கூட்டியே ஆயத்தப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதே சில்க்யாரா சுரங்க விபத்தில் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம்.
டாக்டர்.க.கிருஷ்ணசாமி, MD,Ex.MLA,
நிறுவனர் – தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
28.11.2023





