அப்பழுக்கற்ற சுதந்திர போராட்டத் தியாகியின் பிறந்த நாளை புதிய தமிழகம் கட்சி நினைவு கூறுகிறது

அறிக்கைகள்
s2 204 Views
  • Voc
  • Voc
Published: 05 Sep 2023

Loading

ஆங்கிலேய – கிழக்கிந்திய கம்பெனி சுரண்டல்காரர்களுக்கு எதிராக சுயமாக கப்பலை இயக்கி – மிரட்டிய வ.உ.சி!

செப்-5, அப்பழுக்கற்ற சுதந்திர போராட்டத் தியாகியின் பிறந்த நாளை புதிய தமிழகம் கட்சி நினைவு கூறுகிறது.!

வணிகம் செய்வதற்காக இந்தியாவில் நுழைந்து, பின் இந்தியாவின் ஒட்டுமொத்த ஆட்சி – அதிகாரத்தையும் தன் வசப்படுத்திக் கொண்ட கிழக்கிந்திய கம்பெனி – ஆங்கில அரசுக்கு எதிராகப் போராடியவர்களை இரு பிரிவாகப் பிரிக்கலாம். சிற்றரசர்களாகவும், அவர்களின் கீழ் பணியாற்றிய ஜமீன்கள் தங்களுடைய ஆட்சி-அதிகாரம் பறிபோகிறது என்ற அடிப்படையிலும் அவர்கள் விதித்த வரிகளைக் கட்ட மறுத்து, எதிர்ப்பு தெரிவித்தவர்கள் ஒரு பிரிவினர்; ஆங்கிலேயர்களின் எந்த விதமான அமைப்புகளும் இந்தியாவில் தொடரக் கூடாது; பாரத தேசத்தை பாரத மக்கள் தான் ஆள வேண்டும், அதற்குப் பூரண விடுதலையே அடிப்படை என்ற அடிப்படையில் சொத்துக்களை இழந்தும், சுகங்களை அர்ப்பணித்தும் வாடியவர்கள், போராடியவர்கள், வாழ்க்கையை அர்ப்பணம் செய்தவர்கள் எத்தனையோ பேர் அவர்கள் இரண்டாம் பிரிவினர்.

தமிழகத்தின் தென்பகுதியான தூத்துக்குடி மாவட்டத்தில், அன்றைய ஒட்டப்பிடாரம் தாலுகாவில் வடக்கு வண்டானம் என்ற கிராமத்தில் பிறந்து பள்ளி, கல்லூரி பயின்று வழக்கறிஞரான பின்பும் இந்திய சுதந்திர வேட்கையில் அதற்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்ட மகத்தான மாமனிதர் வ.உ.சிதம்பரனார் என்றால் மிகையாகாது. செப்டம்பர் 5, அவருடைய பிறந்தநாள். அவரின் பிறந்த நாளை ஒவ்வொரு இந்திய குடிமகனும் நினைவு கூற வேண்டும். அவருக்கு அஞ்சலி செலுத்த வேண்டும்.

அன்றைய கால கட்டங்களில் ஆங்கிலேயருக்கு எதிராகப் பேசுவதே பெரும் குற்றம் என்று இருந்த நிலையில், ஆங்கிலேயர்களுடைய மிக முக்கியமான வருவாயாக இருந்த கப்பல் போக்குவரத்திற்கு சவாலாக ஒரு கப்பலையே வாங்கி, அவர்களுக்கு எதிராக இயக்கினார் என்றால், அதை இன்று நாம் நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை. இந்தியாவிற்கு சுதந்திர வேட்கையை கொண்டுவர தன்னுடைய சொத்து, சுகங்களை விற்றும்; நிதி திரட்டியும் ‘எஸ்.எஸ்.காலியோ’ என்ற கப்பலை புதிதாக வாங்கி, அதை தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பலாக இயக்கினார். வ.உ.சியின் அந்த முயற்சியைத் தோற்கடிக்க ஆங்கிலேயர்கள் ஒரு கட்டத்தில் அவர்களுடைய கப்பலில் ‘இலவச பயணம்’ என்று கூட அறிவித்தார்கள்.

இன்று மட்டுமல்ல, அன்றும் இலவசங்களுக்கு இரையாகி போன மக்கள் ஒரு சுதந்திரப் போராட்ட தியாகியின் இலட்சிய வேட்கையை; கொள்கையை; அவர் அதற்காக எடுத்துக் கொண்ட முயற்சியை சிறிதும் கூடக் கணக்கிலே கொள்ளாமல், ஆங்கிலேயர்களின் இலவசக் கப்பலில் பயணம் செய்தார்கள். அதனால், ஆங்கிலேயர்களின் கப்பல் வணிகத்தை முடக்கிப் போட முயற்சி எடுத்த கப்பலோட்டிய தமிழனின் கப்பல் வணிகம் முடங்கியது. எனினும், அவர் முடங்கிபோய்விடவில்லை. தூத்துக்குடி நூற்பாலை தொழிலாளர்களின் பக்கம் நின்றார். சிவாவை விடுதலை செய்வதற்காக நெல்லையில் பேசி, ஆயுள் தண்டனை பெற்று, கோவை சிறையிலே அடைக்கப்பட்டு, செக்கிழுக்கும் கொடுமைக்கும் ஆட்படுத்தப்பட்டார். மேல்முறையீட்டில் தண்டனை குறைக்கப்பட்டு விடுதலையான வ. உ. சி அவர்கள், அன்று அகில இந்திய அளவில் வேகமாக நடைபெற்ற சுதந்திரப் போராட்ட இயக்கம் அல்லது சென்னை மாகாணத்தில் ஆங்கிலேயர்களின் தயவில் ஆட்சியில் அமைத்திருந்தவர்களாலும் கைவிடப்பட்ட நிலையில், அவர் தன்னுடைய காலத்தை அமைதியாகக் கழித்து 1936-இல் மரணம் எய்தினார்.

தமிழகத்தில் சுதந்திரப் போராட்ட அடையாளம் எனில், வ.உ.சியை மறந்துவிடலாகாது. அவருடைய வாழ்க்கை வரலாறுகளை நம்முடைய அனைத்து கல்வி நிலையங்களிலும் இன்னும் விரிவாகக் கொண்டு செல்வதே அவருக்கு நாம் செலுத்தக்கூடிய அஞ்சலியாகும். அவருடைய 152 வது பிறந்த நாளில் அவரை என்றென்றும் புதிய தமிழகம் கட்சி நினைவு கூறும்.!
வாழ்க வ.உ.சி புகழ்.!

டாக்டர் க. கிருஷ்ணசாமி MD.Ex MLA,
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
05.09.2023