சாதி – மொழி – இனம் கடந்து இந்துக்களாக ஒன்றிணைவோம்! விநாயகர் சதுர்த்தி கொண்டாடுவோம்!

அறிக்கைகள்
s2 400 Views
  • Vinayaga
  • Vinayaga
Published: 18 Sep 2023

Loading

இந்திய தேசம் மட்டுமின்றி உலகெங்கும் வாழக்கூடிய இந்துக்களால் கொண்டாடக்கூடிய மிகப்பெரிய விழா விநாயகர் சதுர்த்தி அல்லது கணேச சதுர்த்தி. இந்நன்னாளில் அனைத்து இந்துக்களுக்கும் எனது உள்ளம் கனிந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

கைலாசத்திலிருந்து விநாயகர் இந்த பூமியில் அவதரித்த நாளே விநாயகர் சதுர்த்தி என்பது இந்துக்களின் நம்பிக்கை. ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி அன்று விநாயகர் சிலைகளை வீட்டிலோ அல்லது பொது இடத்திலோ வைத்து பத்து தினங்கள் வழிபாடு நடத்திவிட்டு நீர் நிலைகளில் கரைப்பதே விநாயகர் சதுர்த்தியின் சிறப்பம்சமாகும். ஒரு தனி மனிதனோ, குடும்பமோ, சமுதாயமோ தாங்கள் செய்யும் எந்த சுபகாரியத்திற்கு முன்பும் விநாயகர் வழிபாடு நடத்துவது இந்து மக்களின் அபரிமிதமான நம்பிக்கை. ஏனெனில், விநாயகர் வழிபாடு எந்த சுபகாரியத்திற்கும் ஏற்படும் தடைகளை உடைத்தெறியும் என்பதால்தான்.

விநாயகர் சதுர்த்தி இந்தியா முழுமைக்கும் சாதி, மொழி, இனம் கடந்து இந்துக்கள் என்ற ஒற்றை அடையாளத்தில் நடத்தப்படக்கூடிய ஒரு மிகப்பெரிய இந்து விழா. இந்திய மக்களின் முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கக்கூடிய கரோனா பாதிப்பும், அதன் அச்சமும் நீங்கிடவும்; இந்திய தேசத்திற்கு உள்ளும், புறமும் அண்மையில் ஏற்பட்டிருக்கக்கூடிய பகைகள் அனைத்தும் நீங்கிடவும்; இந்தியர்-இந்துக்கள் என்ற சகோதர உணர்வும், ஒற்றுமையும் மேலோங்கிடவும், அனைவரின் இல்லங்களிலும் சமாதானமும், சந்தோசமும் பெருகி, எல்லாவிதமான வளமும் பெற்றிட இந்த நன்னாளில் வாழ்த்துகிறேன். அரசின் சட்டங்கள், நீதிமன்ற உத்தரவுகளுக்கு தலைவணங்கி நாம் இந்த ஆண்டு கடந்த ஆண்டைக் காட்டிலும் அதிகமான விநாயகர் சிலைகளை அவரவர் இல்லங்களிலேயே வைத்து வழிபாடு நடத்தி மகத்தான இந்து ஒற்றுமை உணர்வை வளர்க்கும் நாளாக விநாயகர் சதுர்த்தியை அனுசரிக்க வேண்டும் என வாழ்த்துகிறேன்.

– டாக்டர் க. கிருஷ்ணசாமி MD. Ex MLA,
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
18-09-2023