ரஷ்யாவில் உள்நாட்டு யுத்தமா?? Wagner- Prigozhin நடத்தியது நாடகமா?
ரஷ்யாவில் உள்நாட்டு யுத்தமா??
Wagner- Prigozhin நடத்தியது நாடகமா?
ஐரோப்பாவின் skinhead – ரஷ்யாவின் Wagner யார் இவர்கள்?
எதிர்பார்த்தது ஒன்று; நடந்தது இன்னொன்று.!
413 Views
![]()
நேற்றைய தினம் உலகெங்கும் உள்ள அனைத்து செய்தி நிறுவனங்களிலும் ‘ரஷ்யாவில் மிகப்பெரிய உள்நாட்டு யுத்தம் நடக்கப்போகிறது – Wagner ராணுவம் மாஸ்கோவை நெருங்கி விட்டது – புட்டின் தலைநகரிலிருந்து தனி விமானத்தில் தப்பிவிட்டார் – ரஷ்யாவில் ஆட்சி மாற்றம் நிகழப்போகிறது” என்று தலைப்புச் செய்திகள் வெளிவந்த வண்ணம் இருந்தன.
இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளின் அதிபர்களும், அமெரிக்க அதிபர் பிடனும் நேற்று மாலைக்குள் புட்டியின் ஆட்சி விழுந்துவிடும் என்று தங்கள் நாட்டு உளவு நிறுவனங்கள் கொடுத்த தகவலை நம்பி கண் கொட்டாமல் தொலைக்காட்சிகளின் முன்பாகவே அமர்ந்திருக்கிறார்கள்.
உக்ரைன் அருகே உள்ள மிக முக்கிய அரசியல் நகரமான Rostov-on-Don ரஷ்யாவின் முக்கிய பிராந்திய ராணுவ தளத்திலிருந்து Prigozhin-ன் Wagner படைகள் மாஸ்கோவை மின்னல் வேகத்தில் நெருங்கிக் கொண்டிருக்கின்றன; எந்த நேரத்திலும் மாஸ்கோவிற்கு அப்படைகள் நுழைந்து விடும்’ என்று எல்லோரும் எதிர்பார்த்தார்கள்.
ஆனால்; ‘ஆயுதத்தைக் கீழே போட்டுவிட்டு Wagner படைகள் சரணடைய வேண்டும்; இல்லையேல் அனைவரும் சுட்டு வீழ்த்தப்படுவார்கள்; Prigozhin-ன் கைது செய்யப்படுவார்” என ’புட்டின் ராணுவ உத்தரவை’ பிறப்பித்தார்.
உலகத் தலைவர்கள் எல்லாம் எதிர்பார்த்ததைப் போல் எந்தப் படையும் மாஸ்கோவை நோக்கி வரவில்லை. புட்டியின் உத்தரவு வாக்னர் படைகளை கதி கலங்கச் செய்துவிட்டது. வந்த வேகத்தில் புறப்பட்ட இடத்திற்கு திரும்பிப் போய் விட்டார்கள். வாக்னர் படைகளின் தலைவர் Prigozhin ரஷ்யாவின் நட்பு நாடான பெலாரசில் தஞ்சம் புகுந்தார். புட்டின் வீழ்ந்து விடுவார் என்று ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஐரோப்பிய, அமெரிக்க தலைவர்களுக்கு பெருத்த ஏமாற்றமே மிஞ்சியது.
இது உண்மையா அல்லது புட்டின் அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட நாடகமா என்பதை கூட அவர்களால் யூகிக்க முடியவில்லை. புடின் ஒரு தலைசிறந்த ராணுவ வீரரும், அதி நுட்பம் வாய்ந்த ராஜதந்திரியும் ஆவார். அவரை கணிப்பதும் அவரை வெல்வதும் அவ்வளவு சுலபமானது அல்ல.
கடந்த 16 மாதங்களாக அமெரிக்க – ஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரம் மற்றும் ஆயுத உதவியோடு ஐரோப்பா முழுவதும் பரவி இருக்கக்கூடிய ராணுவ பயிற்சி பெற்ற வெள்ளை நிற மேலாதிக்கம் கொண்ட பல்லாயிரக்கணக்கான பேர் 2014 ஆம் ஆண்டு ரஷ்யா கிருமியாவை கைப்பற்றிய காலத்திலிருந்தே உக்ரைனில் களம் இறக்கப்பட்டு, உக்ரைனர்கள் என்ற பெயரில் போராடிவரும் SkinHead தீவிரவாத குழுக்கள் உக்ரைன் போரில் முன் களப்பணியிலிருந்தும் இன்று வரை ரஷ்யாவை ஒன்றும் செய்ய முடியவில்லை என்பதிலிருந்தே புட்டினின் பலத்தை மேலை நாடுகள் புரிந்திருக்க வேண்டும்.
உக்ரைனுக்கு ஆதரவாக SkinHead குழுக்களும், ரஷ்யாவுக்கு ஆதரவாக Wagner குழுக்களும் உக்ரைன் மண்ணில் களம் இறக்கப்பட்டுப் போராடுகிறார்கள்.
யார் இந்த Wagner? யார் இந்த SkinHead குரூப்கள்?
Wagner குரூப் முழுக்க முழுக்க ரஷ்யாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஒரு தனியார் ராணுவமாகும். அந்த தனியார் ராணுவத்தில் சேரக்கூடியவர்கள் பெரும்பாலும் பல்வேறு விதமான கொடூர வழக்குகளில் தண்டிக்கப்பட்டு சிறை சென்று திரும்பியவர்கள் அல்லது சிறைவாசத்தில் இருக்கக்கூடியவர்களே ஆவார். Wagner ராணுவம் ரஷ்யாவின் அதிபர் புட்டின் அவர்களுடைய ஆதரவுடன் துவக்கப்பட்டது. ரஷ்யாவின் பெருமளவு நிதியும் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதன் காரணமாகத்தான் 2014 ஆம் ஆண்டு கிருமியாவை கைப்பற்றுவதற்கும், உக்ரைனின் பாக்முத் நகரைக் கைப்பற்றுவதற்கும் Wagner ராணுவமே பயன்படுத்தப்பட்டுள்ளது. பெரும்பாலும் Wagner ராணுவத்திற்கான எல்லா விதமான உதவிகளும் ரஷ்ய இராணுவத்தால் மட்டுமே செய்யப்பட்டுள்ளது. எனவே அதை ரஷ்யாவின் துணை ராணுவம் என்று அழைத்தாலும் கூட அது மிகையாகாது. புட்டின் அவர்களுடைய சிந்தனையில் உதிர்த்து செயல்பாட்டுக்கு வந்த ஒரு அரசு ராணுவத்திற்கு நிகரான – இணையான அமைப்பாகும். எனவே புட்டினின் ஆணைக்கு முழுமையாகக் கட்டுப்பட்டு நடக்க வேண்டிய கடமை உண்டு.
ஆனால், அதை புட்டினோ அல்லது ரஷ்யா அரசோ வெளிப்படையாகக் காட்டிக் கொள்வதில்லை. பல நேரங்களில் அரசின் ராணுவத்திற்கும், Wagner படைகளுக்குமே கருத்து வேறுபாடுகள் ஏற்படுவதுண்டு. Wagner குரூப்பின் தலைவர் Prigozhin அண்மையில் ரஷ்யாவின் ராணுவத் துறை அமைச்சர், வெளியுறவுத்துறை அமைச்சர் மற்றும் முக்கிய அமைச்சர் மீது பகிரங்கமாகக் குற்றச்சாட்டுகளை வெளிப்படுத்தியுள்ளார். அவர்கள் ராணுவ பயிற்சி பெற்றிருந்தாலும் கூட பெரும்பாலும் பலர் குற்றப் பின்னணி கொண்டவர்கள் என்பதால் அவர்கள் ராணுவ நடவடிக்கையின்போது மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டுகளும் உண்டு. இவர்களுடைய உதவியை ஆப்பிரிக்க நாடுகள் பயன்படுத்திய போதும் இவர்கள் அரங்கேற்றிய மனித உரிமை மீறல்கள் இன்னும் பேசும் பொருளாகவே உள்ளது.
உக்ரைனில் நடக்கக்கூடிய போர் ஏதோ ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் நடக்கக்கூடிய போராக வெளிப்படையாகத் தோன்றினாலும் உண்மையில் அதில் களத்தில் போராடக் கூடியவர்கள் ஒரு பக்கம் ஐரோப்பா மற்றும் அமெரிக்க நாடுகளால் நிதி உதவி வழங்கப்பட்டு வளர்க்கப்படும் Skinhead ஆயுதபாணி குழுக்களுக்கும், ரஷ்யாவின் ஆதரவில் உருவாக்கப்பட்டு களத்தில் நிற்கும் Wagner குழுக்களுக்கும் தான். இப்போரில் உயிர் இழப்புகளையும், பொருட்சேதத்தையும் அப்பாவி உக்ரைன் மக்கள் சந்திக்கிறார்கள்.
எதார்த்தத்தில் ரஷ்யாவும் அமெரிக்காவும் தங்களுடைய பலத்தை சம்பந்தமில்லாத இன்னொரு பிரதேசத்தில் காட்டிக் கொள்ளும் நிகழ்வே ரஷ்யா – உக்ரைன் போர்.
ஆப்கான் யுத்தத்தில் தோல்வியுற்ற அமெரிக்கா வேறு எங்காவது யுத்தத்தைத் தொடங்க வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தில் உக்ரைனைத் தூண்டிவிட்டு ஐரோப்பிய நாடுகளையும் பலிகடா ஆக்கி, ரஷ்யாவுக்கு எதிராக நேரடியாக இல்லாமல் போர் முஸ்தீபைக் காட்டுகிறார்கள். சுயமரியாதைக்காகவோ மண்ணுரிமைக்காகவோ நடைபெற்ற போராட்டமாக இருந்திருந்தால் இந்தப் போரே துவங்கியிருக்கிறது அல்லது துவங்கி இருந்தாலும் இருநாட்டு மக்களும் சமரசமாகப் போயிருப்பார்கள். இப்பொழுது உலகத்தில் மேலாண்மை மிக்க தேசமாக தன்னை மீண்டும் நிரூபணம் செய்து கொள்ள வேண்டிய பொறுப்பு – சுமை அமெரிக்காவிற்கு அதிகம் இருக்கிறது. இதில் எப்படியாவது உக்ரைன் போரை வென்று புகழ் தேடிக் கொள்ள அமெரிக்கா பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கிறது. ஆனால், மூன்றரை வருடமாக லட்சக்கணக்கான கோடி ரூபாயை குவித்தும், 50-60 நாடுகள் தங்களது சக்தி வாய்ந்த ஆயுதங்களை உக்ரைனுக்கு கொடுத்தும் எதுவும் செய்ய முடியாமல் திணறுகிறார்கள். எனவே தான் புட்டினால் உருவாக்கப்பட்டு வளர்க்கப்பட்ட Wagner எனும் தனியார் ராணுவத்தையே புட்டினுக்கு எதிராகத் திருப்பி விடக்கூடிய செயல் நேற்று அரங்கேறி உள்ளது. அதைத்தான் புட்டின் சரியாக ’Prigozhin முதுகில் குத்தினார்’ எனச் சொல்லி இருக்கிறார்.
Prigozhin Wagner படைகள் ஒருவேளை மாஸ்கோவை நெருங்க முயற்சி செய்திருந்தால் அவர்கள் மிகப்பெரிய கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேர்ந்திருக்கலாம் அல்லது அவர்கள் வேறு திசை மாறி ரஷ்யாவின் அணுகுண்டு ஏவுகனை தளங்கள் எதையாவது கைப்பற்றி இருக்கும் பட்சத்தில் அதை அவர்கள் பரிசோதிக்க நினைத்திருந்தாலே அது ஐரோப்பாவிற்கு எதிராகத் தான் முடிந்திருக்கும். ஆனால் எல்லா அசம்பாவிதங்களும் நேற்று தடுக்கப்பட்டு விட்டன. ஆனால், இது போன்ற ஒரு சூழல் உருவானால் ஐரோப்பிய நாடுகளும் அமெரிக்காவும் எப்படி நடந்து கொள்வார்கள் என்பதைத் தெரிந்து கொள்வதற்காகவும் ரஷ்யாவால் அரங்கேற்றப்பட்ட நாடகமாகவே இதைக் கருத வேண்டி இருக்கிறது. ஆனால் நிச்சயமாக இதனுடைய உண்மைகள் விரைவிலே வெளிவரும்.
ஒருவேளை இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் புட்டினுடைய பிடி தளர்கிறதா? அவர் பலம் இழந்து வருகிறாரா என்பதும் வெளிச்சத்திற்கு வரும். அதுவும் நல்லதல்ல. ஒட்டுமொத்த ராணுவத்தையும், பல்லாயிரக்கணக்கான அணுகுண்டு ஏவுகணை தளங்களையும் கையில் வைத்திருக்கக்கூடிய ஒருவர் தான் பலவீனமாகக் கருதப்படும் பட்சத்தில் அதை நிச்சயம் பயன்படுத்தவே நினைப்பார். அது இன்னும் கூடுதலான ஆபத்துக்களை ஏற்படுத்தும். அது ஐரோப்பாவிற்கும் அமெரிக்காவிற்கும் உலகிற்கும் பேராபத்துக்களைக் கொண்டு வந்து சேர்க்கலாம்.
அமெரிக்காவின் F16 விமானங்கள், இங்கிலாந்தின் storm shadow ஏவுகணைகள், ஜெர்மனியின் அதிநவீன leopard tank என அனைத்தையும் உக்ரைன் ரஷ்யாவுக்கு எதிராக ஒன்று திரட்டி இழந்த பகுதிகளைப் பிடிக்கிறோம் என்ற பெயரில் முன்னேறிச் செல்லும் பட்சத்தில் என்ன விபரீதங்கள் நடக்கும் என்பதை இப்போது எண்ணிப் பார்க்க முடியவில்லை. ஆனால் மிகப்பெரிய ஒரு ஆபத்தான கட்டத்தை மட்டும் நோக்கி ரஷ்யா – உக்ரைன் போர் செல்கிறது என்பது மட்டும் தெள்ளத் தெளிவாகிறது. இவ்வளவு சிக்கலான சூழல்களிலிருந்தும் ஐரோப்பாவில் உள்ள ஒரு நாட்டினுடைய தலைவரோ, அமெரிக்கத் தலைவர்களோ சமாதானமே மிக முக்கியம் என்ற அடிப்படையிலோ அணுகாமல் நாளுக்கு நாள் ஆயுதங்களை அள்ளிக் கொடுத்துப் போரைத் தீவிர படுத்துவதிலேயே குறியாக இருக்கிறார்கள். ரஷ்யாவை களத்தில் சந்திக்க முடியாமல் மூன்றாம் தர நடவடிக்கைகள்ள் மூலமாக வீழ்த்த நினைக்கிறார்கள்.
அமெரிக்க மக்களும், ஐரோப்பிய மக்களும், உலக மக்களும் வேண்டுவது ’அமைதி’ ஆனால், ’இலைகள் சும்மா இருந்தாலும் காற்று சும்மா விடுவதில்லை’ என்பதை போல உக்ரைன் அமைதியை விரும்பினாலும், ரஷ்யா அமைதியை விரும்பினாலும் அமெரிக்கா இந்தப் போரை நடத்திக் கொண்டே இருக்க விரும்புகிறது. அமெரிக்கா என்பது ஒரு தேசமாக இருந்தாலும் ஏகாதிபத்திய உணர்வு மித மிஞ்சி இருப்பதால் ’அமைதிக்கும் அமெரிக்காவுக்கும்’ எவ்வித சம்பந்தமும் இல்லை.
ரஷ்யாவுக்கு ஆதரவாக இனி Wagner ராணுவம் போரிடுமா? அதை புட்டின் அனுமதிப்பாரா? அதற்குண்டான சூழல் இருக்குமா? என்பது தெரியவில்லை. ஒருவேளை ரஷ்யாவின் புதிய ராணுவப் படைகள் உக்ரைன் போர்க்களத்திற்கு அனுப்பப்பட வேண்டிய சூழலில் போரின் போக்கு எப்படி இருக்கும்? என்பதை இப்போது யூகிக்க முடியாது.
நேற்று நடந்தது நாடகமா? நிஜமா? என்பதை என்றாவது ஒருநாள் காலம் கண்ணாடியைப் போல உண்மையைக் காட்டும்.!
ஐரோப்பாவின் நிறவெறி – ஆயுத skinhead குழுவும், ரஷ்யாவின் தனியார் Wagner ராணுவமும் பலமிழக்கும் பட்சத்தில்
உக்ரைன் போர் முற்றுப் பெறலாம்; உலகம் அமைதி பெறலாம்.!
ரஷ்யாவில் உள்நாட்டு போர் மூளும்.!
புட்டின் வீழ்வார்! தங்களுக்கு வெற்றி என்று கருதிய
அமெரிக்க – ஐரோப்பிய நாடுகளின் கனவு பலிக்கவில்லை!
புட்டின் இன்னும் களத்தில் நிற்கிறார்!!
டாக்டர் க.கிருஷ்ணசாமி MD, ExMLA,
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
25.06.2023





