சொந்த ஆலையை மூடிவிட்டு அன்னிய ஆலைகளை திறக்க அலைவது நியாயமா?
321 Views
![]()
தமிழகத்தின் முதல் சர்க்கரை ஆலை!
கோவை, திருப்பூர் தமிழகத்தின் பெருமைமிகு அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை!
அணைகளும், ஆலைகளும் ஆலயங்களுக்கு ஒப்பானவைகள் தானே!
அதிகாரிகள் – நிர்வாக உறுப்பினர்களின் கூட்டுக் கொள்ளையால் சீர்கேடடைந்த, 100 கோடி மதிப்பிலான ஆலையை புனரமைப்பதை விட்டுவிட்டு ‘விலை’ பேச அனுமதிக்கலாமா?
சொந்த ஆலையை மூடிவிட்டு அன்னிய ஆலைகளை திறக்க அலைவது நியாயமா?
முந்தைய கோவை மாவட்டம், தற்போதைய திருப்பூர் மாவட்டம் ’அமராவதி அணை’ அருகே உள்ள 63 ஆண்டுகள் பாரம்பரியமிக்க அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையின் தற்போதைய அவல நிலை குறித்தும், அந்த ஆலை எக்காரணம் கொண்டு மூடப்படக் கூடாது என்பது குறித்தும் தங்களுடைய கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன்.
தமிழகத்தின் முதல் சர்க்கரை ஆலை என்ற பெருமையைப் பெற்றது அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை. உடுமலை, மடத்துக்குளம், பழனி, ஒட்டன்சத்திரம், தாராபுரம், பல்லடம், குண்டடம் ஆகிய அமராவதி அணை, திருமூர்த்தி அணை, பரம்பிக்குளம், ஆழியாறு பாசனப் பகுதிகளுக்கு உட்பட்ட நிலப் பகுதிகளில் கரும்பு விவசாயத்தை ஊக்குவிக்கவும், அதிகரித்து வரும் மக்களின் பயன்பாட்டுக்கு ஏற்ப தரமான சர்க்கரை அனைவருக்கும் கிட்டிட வேண்டும்; வேளாண்மைச் சார்ந்த தொழிலை ஊக்குவிக்க வேண்டும் என்ற நோக்கத்துடனும் அந்தப் பகுதியின் பல்லாயிரக்கணக்கான விவசாயிகளின் பங்களிப்போடு இந்தப் பெருமைமிகு அமராவதி சர்க்கரை ஆலை 1960 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 19 ஆம் தேதி; ஜெர்மனி நாட்டுத் தொழில்நுட்பத்துடன் நிர்மாணிக்கப்பட்டது. தினமும் 1250 டன் அரவைத் திறனோடு ஆண்டொன்றுக்கு 4 லட்சம் டன் பிளி திறனைக் கொண்டிருந்தது. இந்த ஆலை 230 ஏக்கர் பரப்பளவில் கரும்பு அபிவிருத்தி மையத்துடன் இணைந்து செயல்பட்டு வந்துள்ளது. மண்வளம் மற்றும் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணை நீர் தரத்தின் அடிப்படையில் வேறெந்த சர்க்கரை ஆலைகளையும் காட்டிலும் சர்க்கரையின் விகிதாச்சாரம் 11.5% ஆக இருந்துள்ளது.
பல்லாயிரக்கணக்கானோருக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு அளித்து வந்த ஒரு தொழிற்சாலை விரைவில் இழுத்து மூட இருக்கும் அபாயம் குறித்து விவசாயிகளிடமிருந்து எழுந்த கோரிக்கைகள், அவர்கள் நடத்திய போராட்டங்களைக் கண்ணுற்று நேரடியாக அந்த ஆலைக்கு நேற்று விஜயம் செய்தேன்.
இந்தியாவின் அன்றைய பாரத பிரதமர் நேரு அவர்கள் பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தைத் துவங்கி வைத்த பொழுது ”அணைகளும் ஆலைகளும் தான் நமது ஆலயங்கள்” என்று குறிப்பிட்டதை இந்த நேரத்தில் நான் நினைவு படுத்த விரும்புகிறேன். பல்லாயிரக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரமாகவும், எண்ணற்றோர்க்கு வேலை வாய்ப்பு வழங்கிய அந்த தொழிற்சாலையின் தற்போதைய அவல நிலை மிகவும் கவலைக்குரியதாக உள்ளது. ஆலைகள் ஆலயங்களைப் போன்று என்றென்றும் பளிச்சென்று பரிணமிக்க வேண்டும். ஆனால், 230 ஏக்கர் பரப்பளவில் அமைந்த அந்த சர்க்கரை ஆலை பொலிவிழந்து பல ஆண்டுகளாக எவ்விதமான புனரமைப்பு பணிகளும் மேற்கொள்ளப்படாமல் ஆலையின் கூரை பகுதிகளே துருப்பிடித்து மொத்தத்தில் ஆலை எழும்புக்கூடைப் போல காட்சி அளிக்கிறது.
மே, ஜூன், ஜூலை மாதங்களில் உச்ச பட்ச அறவை திறனுடன் இயங்க வேண்டிய ஆலை இயங்காமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. பொதுவாக ஆலைக்கு முன்பாக நூற்றுக்கணக்கான லாரி, ட்ராக்டர்களில் கரும்புப் பாரம் ஏற்றி பல மைல்கள் அணிவகுத்து நிற்கும். ஆனால், இன்று ஆலையின் வளாகத்திற்குள் இரண்டே இரண்டு கரும்பு பாரம் ஏற்றிய லாரிகளை மட்டுமே காண முடிந்தது. ஆலையின் சுய தேவைக்கு மின் உற்பத்தி செய்யும் கொதிகலன்கள் போதிய அழுத்தத்தை தாங்க முடியாததால் தேவைக்கு குறைவான மின் உற்பத்தியாவதால் ஆலையின் ஒட்டுமொத்த செயல்திறனில் ஐந்தில் ஒரு பங்காக குறைந்து விட்டது. இந்த ஆண்டு ஒன்றிற்கு 2 லட்சம் டன் கரும்பு ஆலைக்கு வர வேண்டும் ஆனால், 35,000 டன் கரும்பு மட்டுமே உபயோகப்படுத்தப்பட்டு இருக்கிறது. 660 விவசாயிகள் 70,000 டன் அளவிற்கு பதிவு செய்திருந்தும் அதைக்கூட முழுமையாக பயன்படுத்தாமல் 40,000-க்கும் மேற்பட்ட டன் கரும்பு விதிமுறைகளுக்கு மாறாக தொலைதூர தனியார் ஆலைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. அந்தப் பகுதி முழுக்க முழுக்க ’கரும்பு கட்டுப்பாட்டுப் பகுதி’. அந்த பகுதியிலிருந்து எந்த ஆலைக்கும் கரும்பு கொண்டு செல்லப்படக்கூடாது என்ற விதிகளுக்கு மாறாக 150 to 200 கிலோமீட்டருக்கு அப்பால் இருக்கக்கூடிய தனியார் ஆலைகளுக்கு அமராவதி கூட்டுச் சர்க்கரை ஆலை அதிகாரிகளும், அதனுடைய நிர்வாக உறுப்பினர்களும் கூட்டுச் சேர்ந்து 40,000 டன் கரும்புகளை வேறு ஆலைகளுக்கு லாப நோக்குடன் கடத்தியது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
துவக்கத்திலிருந்த 11.5% சர்க்கரையின் அளவு மெல்ல மெல்லக் குறைந்து இப்பொழுது வெறும் 7% ஆகி ஒரு கிலோ சர்க்கரை உற்பத்தி செலவு மட்டும் 58 ரூபாய் ஆகிறது. ஆனால், ரூபாய் 36-க்கு மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. ஒவ்வொரு கிலோ சர்க்கரை உற்பத்திக்கும் ரூபாய் 22 நட்டம் ஏற்படுவதாகத் தெரிகிறது. எந்த ஒரு சர்க்கரை ஆலையிலும் எரிபொருளுக்காக சக்கையை வெளியிலிருந்து விலைக்கு வாங்க மாட்டார்கள். இந்த ஆலையில் சக்கையைக் கூட வெளியே இருந்து வாங்குகின்ற மோசமான நிலையும், வாங்கக்கூடிய சக்கையையும் செயற்கையாக தண்ணீரில் நனைத்து எடையைக் கூட்டி ஊழல் செய்வதும், அந்த நனைத்த சக்கையைப் போட்டு எரிப்பதாலேயே கொதிகலன்கள் பாதிப்படைந்து விட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆலையில் அனைத்து வேலைகளுக்கும் கான்ட்ராக்ட் முறையே நிலவுகிறது. அந்த ஆலைக்கு பொறுப்பேற்கக் கூடிய அதிகாரிகள் மேலிருந்து கீழ் வரை போட்டி போட்டுக் கொண்டு கொள்ளை அடிப்பதில் தான் குறியாக இருந்திருக்கிறார்களே தவிர, ஆலையை மேம்படுத்துவதற்கு யாரும் கவனம் செலுத்தியதாகத் தெரியவில்லை. ஆலையைச் சுற்றி 50 – 60 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள உள்ள ஒவ்வொரு கிராமத்திற்கும் ஒரு கரும்பு அபிவிருத்தி அலுவலகம் திறக்கப்பட்டு கரும்பு உற்பத்தி செய்ய ஊக்குவிக்கப்படும்; மானியத்துடன் கரும்பு விதைகள் கொடுக்கப்படும்; தேவையான உரங்களும் வழங்கப்படும்; அப்பகுதி கிராமங்களுக்கு செல்வதற்கு தரமான தார்ச்சாலைகள் அமைக்கப்படும். சில வருடங்களுக்கு முன்னர் வரையிலும் சாலைகள் போடுவதற்கென்றே ஒரு டிவிஷனல் இன்ஜினியரே பொறுப்பேற்று இருந்திருக்கிறார்.
கோவை வேளாண்மை பல்கலைக்கழகத்தில் உள்ள கரும்பு அபிவிருத்தி நிலையமும் அமராவதி சர்க்கரை ஆலையும் இணைந்தே புதிய புதிய ரகங்களை அறிமுகம் செய்வார்கள். அந்தக் கரும்பு கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் இருந்து வேறு எந்த ஆலைக்கும் யாரும் கரும்பு எடுத்துச் செல்லக் கூடாது. ஆனால், இப்பொழுது அது போன்று எந்த கட்டுப்பாடுகளும் இல்லை. கரும்பு அபிவிருத்திக்கு உண்டான எவ்வித செயல்பாடுகளும் இல்லை. பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்புள்ள ஒரு ஆலையை அதன் நிர்வாக உறுப்பினர்களும், அதிகாரிகளும் மற்றும் பலரும் கூட்டுச் சேர்ந்து நிலைகுலையச் செய்திருக்கிறார்கள். ஆண்டொன்றுக்கு 4 லட்சம் டன் கரும்பைப் பிழிந்து சர்க்கரை தயார் செய்து வந்த ஆலை இப்பொழுது வெறும் 35,000 டன்னுக்கு குறைவான பிழி திறனுடன் செயல்படுவது குறித்து யாரும் கவலைப்படாதது ஆச்சரியம் அளிக்கிறது. அங்கே ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்தார்கள். இப்பொழுது 120 பேர் மட்டுமே பணி செய்கிறார்கள். அவர்களுக்கும் ஆறு மாதத்திற்கு ஒரு முறை தான் சம்பளம் கொடுக்கப்படுகிறது. பிஎஃப் இல்லை, இஎஸ்ஐ இல்லை, எவ்வித பலன்களும் இல்லை. ஆண்டொன்றுக்கு குறைந்தது 162 நாட்கள் ஆலை செயல்பட வேண்டும்; ஆனால், இந்த ஆண்டு 54 நாட்கள் மட்டுமே இயங்கி உள்ளது; அதிலும் 20 நாட்கள் ஆலை பழுதாகி நின்றுள்ளது. வெறுமனே 34 நாட்கள் மட்டுமே உண்மையில் செயல்பட்டு உள்ளது.
இந்த ஆலையின் இன்னொரு சிறப்பு மொலாசஸிலிருந்து எத்தனால் தயாரிக்கக் கூடிய துணை தயாரிப்பு அமைப்பும் 1994 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. தினமும் 55,000 லிட்டர் ஆண்டொன்றும் 1 கோடியே 50 லட்சம் லிட்டர் எரிசாராயம் (எத்தனால்) உற்பத்தி செய்ய வேண்டியதற்கு பதிலாக 20,000 லிட்டர் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது. தற்போதைய நிலவரப்படி எரி சாராய உற்பத்திக்கு தேவையான மொலாசஸ் வேறு ஆலைகளிலிருந்து வாங்கப்படுகிறது. வெளி மார்க்கெட்டில் ரூபாய் 600 முதல் 1200 வரை விற்கப்படக்கூடிய ஒரு லிட்டர் எத்தனால் மிகக் குறைந்த அளவில் ரூபாய் 60க்கு மட்டுமே விற்கப்படுகிறது. இவ்வாறு பல முனைகளிலும் முறைகேடுகளும், நிர்வாக சீர்கேடுகளும் நடைபெற்று வருகிறது. அற்புதமான தொழில்நுட்பம் கொண்ட இந்த ஆலையை தொடர்ந்து பராமரிக்கத் தவறியது – அதீத ஊழலுமே இந்த ஆலையை நட்டத்தில் இயங்கும் அவல நிலைக்குக் கொண்டு வந்திருக்கிறது.
அந்தப் பகுதி விவசாயிகள் தங்களாலும், தங்களுடைய முன்னோர்களாலும் உருவாக்கப்பட்டுப் போற்றி பாதுகாக்கப்பட்ட ஆலையை தங்கள் கண் முன்னால் திட்டமிட்டு நலிவடையச் செய்து, ஆலை நட்டத்தில் இயங்குகிறது என்று காரணம் கற்பித்து ஓரிரு நாளில் மூடி விட்டு யாருக்கோ தாரை வார்த்துக் கொடுப்பதற்குத் திட்டமிடுவதாக அப்பகுதி கரும்பு விவசாயிகள் கவலை கொள்கிறார்கள்.
ஒருவேளை அமராவதி சர்க்கரை ஆலை மூடப்பட்டு விட்டால் கரும்பை மட்டுமே விளைவிக்கக் கூடிய மண் தன்மை கொண்ட அந்த பகுதி விவசாயிகளால் வேறு எந்த வேளாண்மையும் செய்ய இயலாது. கஷ்டப்பட்டு கரும்பை விளைவித்தாலும் அவர்களுக்கு இப்பொழுது கிடைக்கக்கூடிய டன் ஒன்றுக்கான ரூபாய் 3000 கிடைக்காமல் தனியார் ஆலைகள் அடிமாட்டு விலைக்குக் கேட்கக்கூடிய சூழல்கள் உருவாகும். ஏறக்குறைய 5 – 6 தாலுகாக்ளை சேர்ந்த கரும்பு விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும்.
ஒரு சர்க்கரை ஆலையை நிர்வாகம் செய்வதற்கு கரும்பு மற்றும் சர்க்கரை குறித்து கொஞ்சமாவது புரிதல் இருக்கக்கூடியவர்களை நியமித்தால் ஆலை உருப்பட வாய்ப்பு உண்டு. ஆனால், பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்புள்ள சர்க்கரை ஆலைக்கு அதில் எவ்வித நிபுணத்துவமும் இல்லாத ஏன் சிறிதும் சமந்தமில்லாத வருவாய் துறையைச் சேர்ந்த அதிகாரிகள் ஏன் நியமிக்கப்படுகிறார்கள் என்று தெரியவில்லை? தற்போது தமிழக பட்ஜெட்டில் வேளாண்மை துறைக்கு என்று தனி நிதிநிலை அறிக்கை சமர்ப்பிக்கப்படுகிறது. வேளாண்மை சார்ந்த தொழில்களை ஊக்குவிப்பதற்கு அறிவிப்புக்கள் வருகின்றன. ஆனால், வேளாண்மை சார்ந்த இதுபோன்ற பெரும் தொழிற்சாலைகளை மூடிவிட்டு அதன் அருகில் ’இன்னொரு குடிசை தொழில் ஒன்றைக் கொண்டு வருவதால் என்ன பலன் ஏற்படப் போகிறது?
அமராவதி சர்க்கரை ஆலை பல்லாயிரக்கணக்கான விவசாயிகளின் பங்களிப்போடு துவங்கப்பட்டது. அவர்களுடைய வியர்வையும் ரத்தமும் கலந்தது தான் அந்த ஆலை. தவறான நிர்வாகம் மித மிஞ்சிய ஊழல் தொலைநோக்குப் பார்வை எதுவும் இல்லாததால் பொன் முட்டையிடும் வாத்தை கொல்வதைப் போல இப்பொழுது அமராவதி சர்க்கரை ஆலையை முறைகேடுகளால் ஏற்பட்ட நட்டத்தைக் காரணம் காட்டி நிரந்தரமாக மூடிட முயற்சி செய்தால் அது எவ்விதத்திலும் ஏற்புடையதாகாது. இன்றைய நிலவரப்படி, ஆண்டுக்கு 20 கோடி ரூபாய் நட்டம் ஏற்படுவதாக வைத்துக் கொண்டால் கூட இந்த ஆலையை ரூ 100 கோடி செலவு செய்து புனரமைப்பு செய்தால் மூன்று அல்லது நான்கு வருடத்திற்குள்ளாக நட்டங்களைச் சரி செய்து லாபத்தில் இயக்க முடியும். 2016 ஆம் ஆண்டில் 25 கோடி ஒதுக்கப்பட்டு அது பயன்படுத்தாமல் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. மேலும், இந்த ஆலையில் இன்றைய மதிப்பு மட்டுமே 100 கோடிக்கு மேல் இருக்கும்.!
50 அல்லது 100 பேருக்கு வேலை கொடுப்பதற்காக தொழிலைத் தொடங்க சிங்கப்பூருக்கும் ஜப்பானுக்கும் அமெரிக்காவிற்கும் சென்று முதலீட்டாளர்களை ’வாருங்கள்! வாருங்கள்!’ என்று மண்டியிட்டு அழைக்கிறோம். ஆனால், நம்முடைய வீட்டருகே நம்முடைய முன்னோர்கள் உருவாக்கிய பல்லாயிரக்கணக்கானோருக்கு வாழ்வளிக்கும் தொழிற்சாலைகளை மூடிவிட்டு பன்னாட்டு கம்பெனிகளுக்கும், பிற நாட்டுக் காரர்களுக்கும் சிவப்பு கம்பளம் விரிப்பதில் என்ன நியாயம் இருக்கிறது? தமிழ்நாட்டில் இதேபோன்று 16-க்கும் மேற்பட்ட கூட்டுறவு ஆலைகள், அரசு ஆலைகள் இருக்கின்றன. தமிழ்நாட்டில் ஒரு நல்ல துவக்கமாக முதன் முறையாக துவங்கப்பட்ட அமராவதி சர்க்கரை ஆலையை மூடிடும் எண்ணம் அரசுக்கு ஏதாவது இருப்பின் அதை முற்றாகக் கைவிட்டு விட்டு, ஆலையை உடனடியாக புனரமைப்பதற்கு உண்டான நிதியை மாநில அரசு ஒதுக்கவும், இந்த ஆலை எக்காரணம் கொண்டு மூடப்படாது என்ற உத்தரவாதத்தையும், நம்பிக்கையையும் விவசாயிகளிடத்தில் எடுத்துச் சொல்லவும், அமராவதி சர்க்கரை ஆலையை அட்டைப் பூச்சிகளைப் போன்று சுரண்டிக் கொண்டிருக்கக் கூடிய நிர்வாக குழு மற்றும் தற்போதைய அதிகாரிகள் அனைவரையும் கூண்டோடு மாற்றிவிட்டு ஒரு நேர்மையான அதிகாரி மற்றும் விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் அடங்கிய ஒரு குழுவை நியமித்து அமராவதி சர்க்கரை ஆலையைப் புனரமைக்க வேண்டும் எனவும், அதற்கான நிதியை உடனடியாக ஒதுக்கிடவும் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.
சர்க்கரையை எரும்பு தின்றதும், சாக்கை கரையான் தின்றதும் கதை அல்ல, அது நிஜம்!
அமராவதி சர்க்கரை ஆலைக்கு அது சாலப் பொருந்தும்!!
சொந்த ஆலையை மூடிவிட்டு அன்னிய ஆலைகளை திறக்க அலைவது நியாயமில்லை!
அமராவதி சர்க்கரை ஆலையை புனரமைக்க உடனடியாக ரூபாய் 100 கோடி ஒதுக்குக.!
டாக்டர் க.கிருஷ்ணசாமி MD, ExMLA,
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
29.06.2023
குறிப்பு:
இந்த கடிதம் தமிழக முதல்வர், நிதி அமைச்சர், தொழில்துறை அமைச்சர், விவசாயத்துறை அமைச்சர் – செயலாளர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.





