ஆளுநர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது, திமுக மேடைப் பேச்சாளர்களின் தனிநபர் விமர்சனங்களை திமுக தலைமை அனுமதிக்கக் கூடாது.!
328 Views
![]()
ஆளுநர் – பெற்றோரை அவமானப்படுத்தி பேசிய ’சிவாஜி கிருஷ்ணமூர்த்தி’ மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.!
மேதகு ஆளுநர்கள் இந்திய அரசியல் சாசனத்தின் அடிப்படை விதிகளின்படி ஜனாதிபதி அவர்களால் அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட கூடியவர்கள்.
ஆளுநர்கள் பொறுப்பேற்கக்கூடிய மாநிலங்களுக்கு அவர் மட்டுமே தலைமை நிர்வாகி ஆகிறார். மக்களால் தேர்ந்தெடுக்கக்கூடிய நிர்வாகிகளான சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு உருவாக்கப்படும் அமைச்சரவைக்கு பதவி பிரமாணம் செய்து வைப்பவரும், அமைச்சரவை பட்டியலுக்கு அங்கீகாரம் அளிக்க கூடியவரும் ஆளுநரே.!
அரசினுடைய அனைத்து திட்டங்களுக்கும் ஆளுநரின் ஒப்புதலும் பெறப்பட வேண்டும்; அவை ஆளுநர் அவர்கள் பெயரால் மட்டுமே வெளியிடப்பட வேண்டும். அன்றாட நடவடிக்கைகளில் ஆளுநர் தலையிட மாட்டாரே தவிர, ஆனால் அவர் பொறுப்பு ஏற்று இருக்கக்கூடிய குறிப்பிட்ட மாநிலத்தின் எல்லாவிதமான நடவடிக்கைகளும் அவருடைய கவனத்திற்கு கொண்டுவரப்பட்டே தீர வேண்டும். சட்டமன்றத்தில் நிறைவேற்றக்கூடிய அனைத்து தீர்மானங்களுக்கும் ஆளுநர் ஒப்புதல் அளித்தால் மட்டுமே அவைகள் செல்லுபடியாகும்.
அரசியலமைப்பின் வழிகாட்டுதலின் படியே, தமிழக ஆளுநர் திரு ஆர். என். ரவி அவர்களும் செயல்படுகிறார். அவர் பொறுப்பேற்ற பின்பு தமிழ்நாடு அரசு இயற்றிய பல சட்டங்களுக்கு அவர் உடனடியாக ஒப்புதல் அளிக்காததால் மாநில அரசுக்கும் ஆளுநருக்கும் முரண்பாடு ஏற்பட்டதுண்டு.
செந்தில் பாலாஜி டாஸ்மாக் துறைக்கு அமைச்சராக இருந்த காலகட்டங்களில் பல்வேறு வகைகளில் முறைகேடுகளில் ஈடுபட்டதால் அவர் மீது வழக்கு தொடுக்க அனுமதி அளிக்க வேண்டும்; அவர் மெகா மெகா ஊழலில் ஈடுபட்டதால் அமைச்சர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட வேண்டும் என்று நாம் ஏற்கனவே ஆளுநர் இடத்தில் மனு அளித்தோம்.
அதேபோன்று, செந்தில் பாலாஜி கடந்த அதிமுக அமைச்சரவையில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த போது, ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களுக்கு பல கோடி ரூபாய் லஞ்சம் பெறப்பட்டு அதன் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, குறிப்பிட்ட கால வரையறைக்குள் வழக்கு முடிக்கப்பட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.
அந்த அடிப்படையில் அவர் மீது வழக்கு இருப்பதால் அவர் அமைச்சரவையில் இருந்தால் விசாரணை முறையாக நடைபெறாது என்று நாம் உட்பட பலரும் வைத்த வேண்டுகோளின் அடிப்படையில் அவரை அமைச்சரவையில் இருந்து நீக்குமாறு கடந்த 31.05.2023 அன்று ஆளுநர் அவர்கள் தமிழ்நாடு முதல்வர் அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். கடந்த ஜூன் 1 ஆம் தேதி அக்கடிதம் அவருக்கு கிடைக்கப்பெற்றும், செந்தில் பாலாஜியை நீக்குவதற்கு முதலமைச்சர் நடவடிக்கை எடுக்கவில்லை.
செந்தில் பாலாஜி கடந்த 13 ஆம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு, முழுமையான கட்டுப்பாட்டில் உள்ளார். நீதிமன்ற காவலில் உள்ள அமைச்சர் ஒருவரால் பணியையும் மேற்கொள்ள இயலாது. மேலும் கைது செய்யப்பட்டு காவலில் உள்ள ஒருவர் அமைச்சரவையில் நீடிப்பது முறையும் ஆகாது என்ற தார்மீக அடிப்படையில் செந்தில் பாலாஜியின் துறைகள் மாற்றப்பட்டாலும், அமைச்சர் பொறுப்பு நீக்கப்படாமல் இருந்ததை ஆளுநர் அவர்கள் ஒப்புக்கொள்ளாமல் அவர் அமைச்சரவையில் இருந்தும் நீக்கப்பட வேண்டும் என மாநில அரசுக்கு அறிவுரை வழங்கினார்.
இது தமிழக மக்கள் – தமிழ்நாடு அரசின் சுயமரியாதை சம்பந்தப்பட்ட விஷயம். மிகப் பெரிய ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான ஒரு அமைச்சர் கைது செய்யப்பட்டு இருக்கின்ற பொழுது அமைச்சரவையில் நீடிப்பது என்பது ஒட்டுமொத்த அமைச்சரவைக்கும் ஒரு இழுக்கை கொண்டு வந்து சேர்க்கும் என்ற நல்லெண்ணத்தோடு ஆளுநர் அவர்கள் அறிவுரை வழங்கினார். அதில் எவ்வித சட்ட விதிமுறை மீறல்களும் இல்லை.
ஒருவேளை இதில் மாறுபட்ட கருத்துக்கள் இருந்தால் இதில் முதல்வருக்கும் ஆளுநருக்கு உள்ள சட்ட ரீதியான பிரச்சனை. அதை அவர்கள் சட்டத்திற்கு உட்பட்டு தீர்வு கண்டு கொள்வார்கள்.
அவர்களுடைய இந்த சட்டபூர்வமான நடவடிக்கை குறித்து கடந்த 16ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் திமுகவின் மேடை பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி என்ற ஒரு நபர் ஆளுநர் அவர்களை மிகவும் தரக் குறைவாக பேசியுள்ளார். ஆளுநரை மட்டுமல்ல, அவரை ஈன்றெடுத்த தாயாரையும், தந்தையாரையும் அவமானப்படுத்தக் கூடிய வகையில் அந்த நபர் பேசியிருக்கிறார். இது எவ்விதத்திலும் ஏற்புடையதல்ல; வன்மையாக கண்டிக்கக் கூடிய செயல்.
சாதாரணமாக சட்டபூர்வமாக நடக்கக்கூடிய செயல்களை எல்லாம் மேடைப் பேச்சாளர்களைக் கொண்டு தமிழகத்தின் முதல் குடிமகனாகிய ஆளுநரை அவமானப்படுத்துவது எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள இயலாது. ஆளுநர் அவர்களை – அவரது பெற்றோர்களை தரக் குறைவாக பேசிய கிருஷ்ணமூர்த்தி மீது வழக்குப் பதிவு செய்து, அவரை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். மேலும் ஜனநாயகத்தினுடைய மாண்புகளைக் குறைக்கக்கூடிய வகையில் திமுக இதுபோன்ற பேச்சாளர்களை எல்லாம் அனுமதித்தால் அது ஒட்டுமொத்த ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய அவமரியாதையும், இழப்பையும் கொண்டு வந்து சேர்க்கும்.
எனவே, தனிநபர் மீதான வன்ம பேச்சுக்கள் சிவாஜி கிருஷ்ணமூர்த்தியின் வாடிக்கையாக இருப்பதால் அவரை திமுகவிலிருந்து நிரந்தரமாக நீக்கி வைக்க நடவடிக்கை எடுக்க திமுக தலைமையையும்; அவர் மீது வழக்குப் பதிவு செய்து, கடும் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள காவல்துறையையும் வலியுறுத்துகிறேன்.
டாக்டர் க.கிருஷ்ணசாமி MD, ExMLA,
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
18.06.2023





