ஆயுத பூஜையும், சரஸ்வதி பூஜையும் சடங்கும், சம்பிரதாயமும் அல்ல.! இந்திய தேசத்தின் கல்வி – தொழில் மாண்புகளின் அடையாளம்..!

அறிக்கைகள்
s2 329 Views
  • Dr-Krishnasamy

    ஆயுத பூஜையும் சரஸ்வதி பூஜையும் தேசத்தின் கல்வி தொழில் மாண்புகளின் அடையாளம்

  • Dr-Krishnasamy
Published: 14 Nov 2020

Loading

ஆயுத பூஜையும், சரஸ்வதி பூஜையும் சடங்கும், சம்பிரதாயமும் அல்ல.!
இந்திய தேசத்தின் கல்வி – தொழில் மாண்புகளின் அடையாளம்..!

இந்தியத் திருநாட்டின் பாரம்பரியமான விழாக்களில் ஒன்று சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை ஆகும். வடக்கு மாநிலங்களில் ’நவராத்திரி’, கர்நாடகத்தில் ’தசரா’, தமிழகத்தில் ’ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை’ என தொழில் மற்றும் கல்வி நிறுவனங்களிலும், அலுவலகங்களிலும், வீடுகளிலும் அனைத்து இந்து மக்களாலும் ஆண்டுதோறும் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

இந்தியத் தேசத்தில் வேளாண்மை இதயமாகப் போற்றப்பட்டாலும் கூட கல்வியும், தொழிலும் இரு கண்களாக மதிக்கப்பட வேண்டும் என்பதன் பிரதிபலிப்பே இவ்விழாவாகும். ’செய்யும் தொழிலே தெய்வம்’ ’சித்திரமும் கைபழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம்’ – இவ்விரண்டும் கல்வியையும், தொழிலையும் பெருமைப்படுத்தும் தமிழ் மண்ணின் மிகப்பழமையான பொன்மொழிகள் ஆகும். போர் புரியும் வீரர்கள் தங்கள் படைக்கலன்களையும்; கைவினைஞர்கள் தாங்கள் ஈடுபடும் தொழிலுக்கு ஆதாரமாக விளங்கும் கருவிகளையும்; கல்விமான்கள் கல்வி நிறுவனங்கள், புத்தகங்களைப் போற்றுவதற்கும், அவற்றிற்கு பெருமை சேர்ப்பதற்கும், அவற்றைப் புதுப்பித்துக் கொள்வதற்கும் ஆண்டுக்கு ஒருமுறை அனுசரிப்பதே இந்த மகத்தான விழாவின் அடிப்படை நோக்கமாகும். கல்விக்கு அதிபதியான சரஸ்வதியையும், செல்வத்திற்கு இலட்சுமியையும், அனைத்து சக்திகளுக்கும் தாயாக விளங்கும் பார்வதியையும் போற்றுவதே இவ்விழாவின் சிறப்பு. இன்று நாடெங்கும் இந்திய மக்கள் இந்த மகத்தான விழாவை மகிழ்ச்சியாகக் கொண்டாட வாழ்த்துகிறேன்.

ஒரு விழாவைக் கொண்டாடுகின்ற போது, எந்த நோக்கத்திற்காக நமது முன்னோர்களால் அது துவக்கப்பட்டதோ, அதை நிறைவேற்றக்கூடிய வகையில் நாம் அதை வளர்த்தெடுக்க வேண்டும். இந்தியப் பண்பாடு, கலாச்சாரங்களில் ஒவ்வொரு செயலிலும் ஒவ்வொரு பொருள் புதைந்திருக்கும். ஆனால் நாம் அவற்றையெல்லாம் புரிந்து கொள்ளாமல், எல்லாவற்றிற்கும் குதர்க்கமான விளக்கங்களை அளித்து மூடநம்பிக்கை, பகுத்தறிவு, காலத்திற்கு ஒவ்வாதது என முத்திரை குத்தி ஒதுக்கி வருகிறோம்.

2000 வருடங்களுக்கு முன்பு ஒரு விழா தோற்றுவிக்கப்பட்டுள்ளது என்றால் அன்றிருந்த சமூக வளர்ச்சியை உள்ளடக்கியதாகவே அது பிரதிபலித்து இருக்கும். திருக்குறளை பனை ஓலையில் எழுதினார்கள் என்று சொன்னால் அதை அறிவுக்கண் கொண்டு பார்க்க வேண்டுமே தவிர, இன்றைய தொடுதிரை உள்ளிட்ட கணினி உலகத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கக்கூடாது. நம்முடைய முன்னோர்கள் வேளாண்மையை முதுகெலும்பாகக் கருதி அதிலும் கவனம் செலுத்தியிருக்கிறார்கள். அதேபோல அந்த வேளாண்மையைச் செம்மையாகச் செய்திடக் கலப்பை தேவை, கலப்பைக்கு இரும்பிலான கொளு தேவை. விளைபொருட்களை வீட்டிற்கு எடுத்துச் செல்ல வண்டி, வாகனங்கள் தேவை. உணவை சமைக்கப் பாத்திரங்கள் தேவை. நாகரிகங்கள் வளர, வளர உடைகள் தேவை. மழையிலும், வெயிலிலும் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள நல்ல குடியிருப்புகள் தேவை. ஓய்வு நேரங்களில் கூட்டாகச் சேர்ந்து மகிழ்ச்சியாக இருக்க பாட்டுத் தேவை, பாட்டுக்கருவிகள் தேவை. இவற்றை எல்லாம் உருவாக்கித் தர வேண்டியதன் அவசியத்தில் தொழில்களும், தொழிற்கூடங்களும் உருவாகின. உற்பத்தியான பொருட்களைப் பண்டமாற்று செய்யவும், விற்பனை செய்யவும் எண் கல்வியான கணித முறை தேவைப்பட்டது. அதைத்தொடர்ந்து வாழ்க்கையை மேம்படுத்திக்கொள்ள எழுத்து, கல்வி தேவைப்பட்டது. இப்படித்தான் பல்லாயிரம் ஆண்டு காலம் இந்தியாவில் தொழிலும், கல்வியும் வளர்ந்தன.

இந்த தொழிலையும், கல்வியையும் மேன்மேலும் வளர்த்தெடுக்கவே தொழிலுக்காக ஆயுத பூஜையாகவும், கல்விக்காக சரஸ்வதி பூஜையாகவும் பரிணமித்தன. ஆனால் கல்வியும், தொழிலும் தோன்றிய வேகத்திற்கு வளர்ச்சியில் வேகம் காட்டவில்லை. அப்படிக் காட்டப்பட்டிருந்தால் தொழிலிலும், கல்வியிலும் உலகத்திற்கே இந்தியா வழிகாட்டியாக இருந்திருக்கும். எல்லா நுட்பமும், அறிவும் தோன்றிய இடம் இந்திய தேசம் தான். ஆனால் அவை முறையாக வளர்த்தெடுக்கப்படாததால் நாம் இன்னும் பின்தங்கி நிற்கிறோம்.

ஆயுத பூஜையும், சரஸ்வதி பூஜையும் ஆண்டுக்கு ஒருமுறை கொண்டாடப்படக்கூடிய சடங்காகக் கருதக்கூடாது. இந்திய தேசம் தொழில் ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் தன்னிறைவு பெறவும், உலகிற்கே தலைமை தாங்கவும் வலுவான அடித்தளத்தை அமைத்திடுவதை இலட்சியமாகக் கொள்ள வேண்டும். இந்நன்னாளில் ஒவ்வொரு இந்தியக் குழந்தையும், இளைஞரும், ஆண்களும், பெண்களும் தங்களை சொந்தக் காலில் நிலை நிறுத்திக்கொள்ள உதவிடும் கல்வியையும், தொழிலையும் கற்றுக் கொள்வதே சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜையின் நோக்கமாக இருக்கட்டும். தொழிலும், கல்வியும் தான் செல்வத்தை உருவாக்கும். செல்வம் மகிழ்ச்சியையும், வளர்ச்சியையும் கொண்டு வந்து சேர்க்கும். இந்து – இந்திய மக்களையும், இந்திய தேசத்தையும் ஒற்றுமைப்படுத்தவும், ஒருமுகப்படுத்தவும் ஓங்கி ஒலிக்கட்டும் அந்த உள்ளார்ந்த குரல்.
இந்த விழாவின் வழி கரோனாவை வெற்றி காண்போம், தொழிலில் தன்னிறைவு பெறுவோம், கல்வியில் உச்சத்தை அடைவோம், இந்தியர் எனும் ஒற்றை அடையாளத்தில் உலகை ஆள்வோம்..! என இந்நன்னாளில் சபதமேற்போம்.

டாக்டர் க. கிருஷ்ணசாமி MD,
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
25.10.2020