மாற்றுக்கருத்துகள் என்ற பெயரில் வேற்று கருத்துகளையும், விஷமக் கருத்துகளையும் பரப்பாதீர்கள்!!

அறிக்கைகள்
s2 328 Views
  • Dr K Krishnasamy

    டாக்டர் கிருஷ்ணசாமி

  • Dr K Krishnasamy
Published: 14 Nov 2020

Loading

தேவேந்திரகுல வேளாளர் அறிவுஜீவிகளே…

என்றென்றும் கேட்டுப்பெறும் நிலையிலேயே இருப்பதா?
கொடுக்கும் நிலைக்கு உயர வேண்டாமா?

மாற்றுக்கருத்துகள் என்ற பெயரில் வேற்று கருத்துகளையும், விஷமக் கருத்துகளையும் பரப்பாதீர்கள்!!
காடுகளாகக் கிடந்த இந்த மண்ணை கழனிகளாக மாற்றியவர்கள்! ஆடு, மாடுகளை மேய்த்துக்கொண்டு நாள் ஒரு இடம் என இடம் பெயர்ந்த நிலை மாறி, ஓரிடத்தில் நிலைகொண்டு குடும்பங்களையும், சமூக அமைப்புகளையும் உருவாக்கியவர்கள்!

பொங்கி வந்த வெள்ளத்தை அணைபோட்டு வேளாண்மையை உலகிற்கு அறிமுகப் படுத்தியவர்கள்! குடும்பங்களிலிருந்து சிற்றரசுகளும், பேரரசுகளும் உருவாகுவதற்கு அடித்தளமாக விளங்கியவர்கள் தேவேந்திரகுல வேளாளர்கள்!

அந்த ’வித்திலே’ இருந்து பரிணமித்த கிளைகளும், இலைகளும், பூக்களும், கனிகளுமே சேரரும், சோழரும், பாண்டியரும் ஆவர்!
எல்லோரும் மண்ணை மட்டுமே சொந்தம் கொண்டாடுவார்கள், உலகில் மண் சொந்தம் கொண்டாடும் ஒரே இனம் தேவேந்திரகுல வேளாளர்கள் மட்டுமே! இயற்கை என்பது மற்றவர்களுக்கு வெறும் வார்த்தை, தேவேந்திர குல வேளாளர்களுக்கோ அதுதான் வாழ்க்கை!
விலங்கினங்களை வளர்த்து பாலையும், நெய்யையும் உலகிற்குத் தந்தவர்கள்! சேற்றிலே கை வைத்து, நெல் சோற்றை உலகிற்கு கொடுத்தவர்கள்!
தங்களை அழுக்காக்கிக் கொண்டு, மற்றவர்களை அழகு படுத்தியவர்கள்.
அள்ளிக்கொடுத்து மட்டுமே பழக்கப்பட்டவர்கள். கிஞ்சித்தும் எவருடையதையும் கிள்ளிக் கொண்டு போகாதவர்கள். இம்மண்ணில் மணி மகுடம் சூட்டி நல்லாட்சி செய்தவர்கள்.

பிறப்பின் பெருமைமிகு அடையாளங்களைப் பறித்துக் கொண்டு, பட்டியலின பிரிவில் அடைத்து வைத்ததை இன்றுவரை ஏற்றுக் கொண்டிருப்பது மட்டுமே நமது பிழை. இதுவே நம்முடைய பூர்வீக அடையாளம் என்று நினைப்பது அரிஜன மனப்பான்மை. உச்சத்திலிருந்த நாம் வீழ்த்தப்பட்டோம் என்ற உண்மையைப் புரிந்து கொள்வதும், அந்த உச்சத்திற்கு மீண்டும் எழுந்து வர எண்ணுவதும்தான் நம்முடைய பூர்வீக அரச (அரசன்) மனப்பான்மை.

உலகில் எந்த உயிரினமும் தன்னை தாழ்த்தி வாழ்வதில்லை. தான் வாழக்கூடிய பகுதியில் கூட்டமாகவும், ஒற்றுமையாகவும், ஒற்றை தலைமையின் கீழ் அணிவகுத்து சுதந்திரமாக வாழ்வதையும் மட்டுமே சிறந்த அம்சங்களாக அவை கொண்டுள்ளன. அதிகாரத்திலேயே தொடர்ந்து இருப்பது என்பது எளிதானது; இழந்த அதிகாரத்தை மீட்டெடுப்பது என்பது கடினமானது. அடிபணிந்தே கிடப்பதா? அதிகாரத்திற்கு வருவதா? என்பதே இப்பொழுது நம் கண் முன் இருக்கும் இலக்கு. கால் போன போக்கிலே ஒரு பயணி பயணிக்க முடியாது, ஒரு மாலுமி கப்பலைச் செலுத்த முடியாது, விமானி விமானத்தைச் செலுத்த முடியாது. எனவே, இலக்கும், கொள்கைகளும் கோட்பாடுகளும், திட்டங்களும் தெளிவாக இருக்க வேண்டும். மருத நிலத்தின் பூர்வீக குடிமக்களான இலட்சோபலட்சம் தேவேந்திர குல வேளாளர்களின் இழந்த மண்ணையும், இழந்த அடையாளத்தையும், அதிகாரத்தையும் மீட்டெடுப்பதற்கான தெளிவான திட்டங்களையும், செயல்பாடுகளையும், கொள்கைகளையும், கோட்பாடுகளையும் கொண்டு வழிநடத்திச் செல்லும் ஒரே இயக்கம் புதிய தமிழகம் கட்சி.

ஓர் ஊருக்குப் பயணம் செய்ய விரும்புபவர்கள், அந்த ஊருக்குச் செல்லக்கூடிய இரயிலில் ஏறினால் மட்டும்தான், அந்த ஊரைச் சென்றடைய முடியும். மாறாக, இரயில் நிலையத்தில் இரயில்கள் நிற்கிறதே என்பதற்காக எதிர்த் திசையில் செல்லக்கூடிய இரயிலில் ஏறிப் போனால் நீங்கள் செல்லவேண்டிய இடத்தை அடைய முடியாது அல்லவா? இலட்சக்கணக்கான தேவேந்திரகுல வேளாளர் மக்களுடைய அபிலாசைகளை நிறைவேற்றக்கூடிய மகத்தான மக்கள் இயக்கம் புதிய தமிழகம் என்பதை நன்கு ஆய்ந்து அணிவகுக்கின்ற போது, ஆங்காங்கே சில அறிவுஜீவிகள் மட்டும் தெளிவற்ற சிந்தனைகளுக்கும், குழப்பங்களுக்கும் ஆளாவது ஏன்?

ஆசிரியர்கள், மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், அரசு ஊழியர்கள், பொறியாளர்கள் உள்ளிட்ட அறிவுஜீவிகளே..! குழப்பமான தெளிவற்ற, காலத்திற்கு ஒவ்வாத சிந்தனைகளுக்கு ஆளாகி, எதிர்த்திசையில் பயணம் செய்யாதீர்கள். உடல் உழைப்பில் ஈடுபட்டு வாழ்க்கை நடத்தினாலும் தங்களை எஸ்.சி என்ற மலிவான பெயரில் அழைக்கக் கூடாது என்பதில் இலட்சக்கணக்கான ஏழை, எளிய தேவேந்திரகுல வேளாளர் மக்கள் சுயமரியாதையோடு உறுதியாக நிற்கிறார்கள். தாங்கள் எவ்வளவு மலிவாக மதிக்கப்பட்டாலும் அல்லது மிதிக்கப்பட்டாலும் அதன் மூலம் ஏதாவது வசதிகள் வந்துவிடாதா? எனப் படித்து பட்டம் பெற்றவர்கள் எண்ணுவது எந்த விதத்தில் நியாயம்? ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் பட்டங்களைப் பெற்று நீங்கள் உயர்ந்தீர்கள்; இந்த சமுதாயத்திற்கு என்ன உயர்வு கிடைத்திருக்கிறது? கொஞ்சம் ஆத்ம பரிசோதனை செய்து கொள்ளுங்கள். உலகில் ஏற்பட்ட சமூக மாற்றங்கள் அனைத்தும் பெருமளவில் உழைக்கும் ஏழை, எளிய மக்களால் மட்டுமே நிகழ்த்தப்பட்டிருக்கிறது. உங்களை ஈன்ற கிராமங்களையும், உற்றார் உறவினர்களின் வாழ்நிலையையும் கொஞ்சம் திரும்பிப் பாருங்கள்.

அக்டோபர் 6-ம் தேதி 10,000 கிராமங்களில் உண்ணாவிரதம் என்று அறிவித்து, ஊருக்கு பத்து துண்டுப்பிரசுரங்களும், ஒன்றிரண்டு சுவரொட்டிகளும் கொடுத்தோம். இரண்டு வாரகாலம் எங்களுடைய பொறுப்பாளர்கள் தங்களுடைய முழு உழைப்பை மட்டுமே செலுத்தினார்கள். கடந்த 40 ஆண்டு காலத்தில் காணாத காவல்துறையின் நெருக்கடிகளையும், அச்சுறுத்தல்களையும் சந்தித்தோம். 4000-க்கும் மேற்பட்ட கிராமங்களில் போடப்பட்ட பந்தல்களை எடப்பாடியின் காவல்துறை கிழித்து எறிந்தது. முதல் நாள் இரவெல்லாம் புதிய தமிழகம் கட்சியின் முன்னணி பொறுப்பாளர்களையும், கிராம தலைவர்களையும் அச்சுறுத்தலுக்கு ஆளாக்கியது. கலெக்டர், காவல் கண்காணிப்பாளர் போன்ற உயர் பதவிகளுக்கான உத்தரவுகளைக் கையிலே வைத்திருப்பது போலவும், உண்ணாவிரதத்தில் பங்கு பெற்றால் அந்த வேலை வாய்ப்புகள் எல்லாம் பறிபோய்விடும் என்பது போலவும் மிரட்டினார்கள். இதைவிடக் கொடூரமாக, ஜனநாயக விரோதமாக தமிழ்நாட்டில் எந்தவொரு அரசும் நடந்து கொண்டது இல்லை. இதையெல்லாம் மீறித்தான் 10,000 கிராமங்களில் உண்ணாவிரதப் போராட்டம் என்பது 11,000 கிராமங்களில் வெற்றிகரமாக நடைபெற்றது. இந்த உண்ணாவிரதப் போராட்டம் மகத்தான வெற்றி பெற்றதற்கு ஒரே ஒரு முக்கியமான காரணமே..!

தேவேந்திரகுல வேளாளர்கள் தங்களைப் பட்டியல் பிரிவில் சேர்த்ததால் தங்களுடைய வாழ்க்கை சூனியப்பட்டு விட்டதாக உணர்ந்து பட்டியலில் இருந்து வெளியேற வேண்டும் என்ற ஒற்றை கோரிக்கையில் உறுதியாக இருக்கிறார்கள்.

தேவேந்திரகுல வேளாளர் அறிவுஜீவிகளே…
நீங்கள் இதுவரை படித்த படிப்பு என்பது வேறு,
படிக்க வேண்டிய பாடம் என்பது வேறு!
தேவேந்திர குல வேளாளர் மக்களின் கிராமங்களுக்கு செல்லுங்கள்…
அவர்களோடு ஒரு நாள் வாழ்ந்து பாருங்கள்!
அவர்களுடைய மன கஷ்டங்களை உணருங்கள்!
உள்ளுணர்வுகளைப் புரிந்து கொள்ளுங்கள்!
இப்பொழுது தேவேந்திரகுல வேளாளர் மக்கள் பட்டியலை விட்டொழிக்க வேண்டும் என்று போர்க்கோலம் பூண்டுள்ளார்கள்.

மாற்றுக்கருத்துகள் என்ற பெயரில் வேற்று கருத்துகளையும், விஷமக் கருத்துகளையும் பரப்பாதீர்கள்!
இனிமேலாவது தேவேந்திரகுல வேளாளர் மக்களின் உணர்வுகளோடு ஒன்றி நில்லுங்கள்!
அவர்களுடைய உணர்வுகளுக்கு மதிப்பளியுங்கள்!
உங்களுடைய எஞ்சிய வாழ்க்கையை, அவர்களுக்காக தியாகம் செய்யுங்கள்!
தேவேந்திர குல வேளாளர் மக்கள் பட்டியலில் இருந்து வெளியேறும் தங்களுடைய பயணத்தைத் துவக்கி விட்டார்கள்!

இந்த பட்டியல் வெளியேற்றம் என்ற மகத்தான போராட்டத்தை முன்னெடுக்கும் அனைத்து தேவேந்திரகுல வேளாளர்களும் என்றென்றும் நன்றிக்குரியவர்கள் மட்டுமல்ல, வணக்கத்திற்கும் உரியவர்கள்.
எம்மக்களின் போராட்டம்,
கையேந்தி பெறக்கூடிய இடத்திற்கு அழைத்துச் செல்வதற்காக அல்ல.
மாறாக, கரம் நீட்டிக் கொடுக்கக் கூடிய அதிகாரமையத்திற்கு அழைத்துச் செல்வதற்காக!
சுயமரியாதையை காப்பாற்றுவதற்காக!
சொந்தக்காலில் நிற்க வைப்பதற்காக!
பெயரளவில் உள்ள சுதந்திரத்தையும், சகோதரத்துவத்தையும், செயலளவில் கொண்டுவருவதற்காக!
சமத்துவத்தையும், சமபங்கையும் (Equality –Equity) உறுதிப்படுத்துவதற்காக!
இனி ஒரு கணமும் தாமதம் செய்யாதீர்கள்!
விடியலை நோக்கிப் பயணிப்போம்!

புதிய தமிழகத்தின் பின்னால் அணிவகுப்போம்!!!
டாக்டர் க. கிருஷ்ணசாமி MD,
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
10.10.2020