நவம்பர் 16-ஆம் தேதி பள்ளிகள், கல்லூரிகள் திறப்பு என்ற அரசின் முடிவை கைவிட வேண்டும்.!

அறிக்கைகள்
s2 315 Views
  • Dr K Krishnasamy

    டாக்டர் கிருஷ்ணசாமி

  • Dr K Krishnasamy
Published: 14 Nov 2020

Loading

நவம்பர் 16-ஆம் தேதி பள்ளிகள், கல்லூரிகள் திறப்பு என்ற அரசின் முடிவை கைவிட வேண்டும்.!
பெறுநர்
மாண்புமிகு எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்கள்,
தமிழக முதல்வர்,
தலைமைச் செயலகம்,
சென்னை.

பொருள் : நவம்பர் 16-ஆம் தேதி பள்ளிகள், கல்லூரிகள் திறப்பதை ஒத்தி வைக்கக் கோருதல்.
பேரன்புடையீர், வணக்கம்..!

கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக உலகெங்கும் இலட்சோபலட்சம் மக்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகி ஒவ்வொரு தேசமும் அதிலிருந்து மெல்ல மெல்ல மீண்டு வருகின்றன. கடந்த மார்ச் மாதம் 22-ஆம் தேதி இந்தியாவில் அறிவிக்கப்பட்ட கரோனா முழு முடக்கம் முற்றாக இன்னும் நீக்கப்படவில்லை. தினமும் 50,000 பேருக்கு குறைவில்லாமல் கரோனா தொற்றால் பாதிக்கப்படுகிறார்கள்.

தமிழகமெங்கும் ஒரு சில நாட்களாகத்தான் பாதிக்கப்படுவோர் – உயிரிழப்போர் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. இப்பொழுது வடகிழக்கு பருவமழையும் துவங்கிவிட்டது. இதைத் தொடர்ந்து டிசம்பர் மாதத்தில் பனிக்காலம் துவங்கி விடும். இந்த தட்ப வெப்பநிலையுடன் தீபாவளி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் என தொடர்ச்சியாக விழாக்களும் வர உள்ளன. இப்படிப்பட்ட பல்வேறு சூழல்கள் காரணமாக கரோனா எளிதாக பரவுதற்கு வாய்ப்புகள் உள்ளன.

இச்சூழலில் வரும் 16-ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது. இதை நல்ல முடிவாக கருத இயலாது; இதுபோன்ற ஒரு முடிவை எடுத்து ஆந்திராவில் ஆசிரியர்களும், மாணவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏறக்குறைய எட்டு மாதங்களுக்கு பிறகு பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்படும் பட்சத்தில் மாணவர்கள் ஒருவரோடு ஒருவர் நெருங்கி பேசவும், பழகவும் செய்வார்களே தவிர சமூக இடைவெளியை அமலாக்குவது மிகவும் கடினமான செயலாக இருக்கும். இதனால் கோவிட்-19 பெருந்தொற்று மீண்டும் அதிகமாகுவதற்குண்டான வாய்ப்பாக அமைந்துவிடும் என அச்சப்படுகிறேன்.

தமிழகத்தில் கரோனா பெருந்தொற்று முற்றாக கட்டுப்படுத்தப்பட்டு சம நிலையை அடைந்த பிறகே பள்ளிகள், கல்லூரிகளை திறப்பது சரியானதாக இருக்க முடியும். எனவே 16-ஆம் தேதி பள்ளிகள், கல்லூரிகள் திறப்பு என்ற அரசின் முடிவை கைவிட வேண்டும் எனவும், கரோனா பரவலற்ற சூழல் சரியான பிறகே பள்ளிகள், கல்லூரிகள் திறப்பு அறிவிப்பு கொடுக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறேன்.

டாக்டர் க. கிருஷ்ணசாமி MD,
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
05.11.2020