கீழவெண்மணியில் மண்ணுரிமை போராட்டத்தைத் தொடங்கிய தேவேந்திரகுல வேளாளர்கள்! தொடரத் தவறிய கம்யூனிஸ்டுகள்!!

அறிக்கைகள்
s2 522 Views
  • Kilvenmani Massacre

    கீழவெண்மணி நினைவு நாள்

  • Kilvenmani Massacre
Published: 25 Dec 2020

Loading

கீழவெண்மணியில் மண்ணுரிமை போராட்டத்தைத் தொடங்கிய தேவேந்திரகுல வேளாளர்கள் !
தொடரத் தவறிய கம்யூனிஸ்டுகள்!!

புதிய தமிழகம் போராட்டத்தை தொடரும்; அதை முடித்து வைக்கும்!

கீழவெண்மணியில் மண்ணுரிமைக்கான போரில் உயிர்நீத்த 44 தேவேந்திரகுல வேளாளர்களுக்கு புதிய தமிழகம் கட்சியின் புகழ் வணக்கங்கள்!

44 தேவேந்திரகுல வேளாளர்கள் படுகொலை!
தமிழகத்தின் நெற்களஞ்சியம் என்று புகழ்ந்து கொள்கிறோம்; சோழப்பேரரசின் பூமி என்கிறோம்; இரண்டாயிரம் ஆண்டுகால கல்லணைப் பற்றிப் பேசுகிறோம்; இராஜராஜசோழன் கட்டிய பெரியகோவில் பெருமைப் பற்றிப் பேசுகிறோம். ஆம், அவைகளும் தமிழகத்தின் அடையாளங்கள் தான். அதே தஞ்சை மண்ணில் மறைத்தாலும், மறைக்க முடியாத, மறக்க முடியாத வரலாறுகளும், அடையாளங்களும் உண்டு. அவற்றுள் ஒன்று, அன்றைய கீழத் தஞ்சை மாவட்டம், இன்றைய நாகை மாவட்டம், கீழ்வேளூர் அருகேயுள்ள கீழவெண்மணியில் 44 தேவேந்திரகுல வேளாளர்கள் ஒரே குடிசையில் அடைக்கப்பட்டு, தீயிட்டு எரித்துக் கொல்லப்பட்ட வரலாறு. சுதந்திர இந்தியாவில் இதுபோன்ற ஒரு கொடிய சம்பவம் வேறெங்கும் நடைபெறவில்லை.

வேளாண்மையை முதன் முதலில் தொடங்கியவர்கள் தேவேந்திரகுல வேளாளர்கள்
1968-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 25-ஆம் தேதி நடத்தப்பட்ட மிகமிகக் கொடிய சம்பவம் அது. எரித்துக் கொன்றவர்கள் மறைக்க முயற்சி செய்திருந்தாலும் கூட, அவர்கள் அப்படித்தானே செய்வார்கள் என்று கடந்து செல்லலாம். ஆனால், இந்த 44 தேவேந்திரகுல வேளாளர்களும் ஏதோ ஒரு சம்பவத்தில் மாண்டு போனவர்கள் அல்ல; சரித்திரத்தை மாற்றி அமைக்க, தொடங்கிய அவர்களின் போராட்ட வரலாற்றை அன்றைய கம்யூனிஸ்ட்கள் மறைக்க முயற்சி செய்தது ஏன்? அன்று தொடங்கிய அந்த அற்புதமான போரட்ட வரலாறு தொடர்ந்து இருக்குமேயானால் இன்று தமிழகத்தின் நிலை மட்டுமல்ல, இந்தியாவின் நிலையே உருமாறி இருக்கும். நிலம் அதன் உரிமையாளரிடத்திலும், உழுபவனிடத்திலும் இருக்கும் வரையில்தான் சுரண்டலற்ற சமுதாயமாக இருக்க முடியும். நிலம் உழுபவனிடத்தில் இருந்து பறிக்கப்படுகின்ற போதும், அது ஒரு சிலரிடத்தில் குவிகின்ற போதும் ஆண்டான் – அடிமை, நிலப்பிரதித்துவ, ஜமீன்தாரிமுறைகளாக மாறி ஒடுக்குமுறைச் சமுதாயமாகவும், நிலம் உற்பத்தி சாதனம் என்கிற உன்னத நிலையிலிருந்து, சுரண்டலின் மோசமான அடையாளமாகவும் மாறி விடுகின்றன.
’கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்த தமிழ் குடி’ என்ற பெருமை பேசுகிறோம்; சிந்து சமவெளி நாகரிகமே, தமிழ் நாகரிகம் என்று சொல்கிறோம்; தாமிரபரணி – ஆதிச்சநல்லூர்; வைகை – கீழடி அகழ்வாராய்ச்சி நம்மை 2500 முதல் 3000 ஆண்டுகளுக்குப் பின் நோக்கி இழுத்துச் செல்கிறது. அக்காலகட்டங்களிலேயே தொழில்கள் செழித்து இருந்ததாக ஆய்வுகள் கூறுகின்றன. வேளாண்மையை அடிப்படையாகக் கொள்ளாமல், 2500 ஆண்டுகளுக்கு முன்பு எந்தத் தொழிலும் நிலைகொண்டு இருந்திருக்காது. அந்த வேளாண்மையை முதன் முதலில் தொடங்கியவர்கள் தேவேந்திரகுல வேளாளர்கள். அவர்களை இம்மண் சொந்தம் கொண்டாடியிருக்கிறது.

Kilavenmai Indian Express

அன்றும், இன்றும், என்றும், என்றென்றும் தேவேந்திரகுல வேளாளர்களையும், மண்ணுரிமையும் பிரிக்க இயலாது. கடந்த 2000 ஆண்டுகளில் இந்தியாவை நோக்கிப் படையெடுத்த அனைவரின் பார்வையும் தேவேந்திரகுல வேளாளர்களால் வளப்படுத்தப்பட்ட இம்மண்ணின் மீதே இருந்துள்ளது. மாறி மாறி நடந்த படையெடுப்புகளால் நிலைகுலைந்து போன தேவேந்திரகுல வேளாளர்கள் தங்கள் மண்ணை இழக்க நேரிட்டது. சொந்த மண்ணில் வறியவர்களாகி உழைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். கிபி 1000-க்குப் பிறகு தொடர்ச்சியாக நடைபெற்ற இஸ்லாமிய படையெடுப்புகளானாலும் சரி, கிபி 1350-க்கு பிறகு நடைபெற்ற விஜயநகரப் பேரரசின் படையெடுப்பானாலும் சரி, கிழக்கிந்திய கம்பெனியாகத் தொடங்கிய ஆங்கில அரசின் நீட்சியாக விளங்கிய போதும் சரி, தேவேந்திரகுல வேளாளர்களின் இழந்த மண்ணுரிமையை மீட்டுக் கொடுக்க எந்த முயற்சியும் எந்த ஆட்சியாளர்களாலும் மேற்கொள்ளப்படவில்லை. இஸ்லாமியர்கள் மற்றும் ஆங்கிலேயரின் ஆட்சிக் காலத்திலும் அடிமை அரசர்களாக, குறுநில மன்னர்களாக கப்பம் கட்டி வளம் வந்தவர்கள் வளமான நிலங்களை வளைத்து போடுவதிலும், அதைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்வதிலும் கண்ணும் கருத்துமாக இருந்தார்கள். ஆங்கிலேய அரசு மெல்ல மெல்ல இந்தியாவிலிருந்து நகரத் துவங்கிய பிறகு, இந்த எடுபிடி மன்னர்களின் நிலத்தின் மீதான பிடியும் மெல்ல மெல்ல தளர்ந்தது. அச்சமயங்களில் அவர்களின் கீழ் ஆங்காங்கே நிலங்களைத் தங்களின் மேற்பார்வையில் வைத்து கொண்டிருந்த போலி வெள்ளாள, கணக்குப் பிள்ளைக் கும்பல்களும், நிலச்சுவான்தார்களும், ஜமீன்தாரிகளும் நிலங்களை அபகரித்து கொண்டு, தங்கள் பெயரிலும், உற்றார் உறவினர் பெயரிலும் மாற்றிக்கொண்டார்கள். நாய்கள், பேய்கள், நரிகள், பிசாசுகள் மீதெல்லாம் நிலங்கள் எழுதி வைக்கப்பட்டன. போதாக்குறைக்கு ஆதீனங்களுக்கும், அறக்கட்டளைகளுக்கும் ஆயிரமாயிரம் ஏக்கர் நிலங்கள் வாரி வழங்கப்பட்டன.

இந்த மண் – உழவர் மண், தேவேந்திரகுல வேளாளர்களின் சொந்த மண்
வரலாற்று ரீதியாக நிலங்களின் சொந்தக்காரர்களான தேவேந்திரகுல வேளாளர்களுக்கு சுதந்திர இந்தியாவிலாவது தங்களுக்குரிய நிலம் தங்களிடம் வந்து சேரும் என்று எதிர்பார்த்தார்கள், அப்பொழுதும் அவர்களுக்கு வந்து சேரவில்லை. இந்த மண் – உழவர் மண், தேவேந்திரகுல வேளாளர்களின் சொந்த மண் என்ற உண்மையை எடுத்துச் சொல்லி மண்ணுரிமைப் போராட்டத்தைத் தொடங்குவதற்கு பதிலாக நில அபகரிப்பு பேர்வளிகளிடத்தில் கூலி உயர்வு கேட்டு போராடினார்களாம் கம்யூனிஸ்டுகள்! நெல் விளையும் பூமியாக, இன்றும் நெற்களஞ்சியமாக விளங்கக்கூடிய தஞ்சை மாவட்டத்தில் சேற்றில் காலை வைத்து உழுபவர்களும், தொழி அடிப்பவர்களும், நாற்று நடுபவர்களும், களை எடுப்போரும், கதிர் அறுப்போரும் தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்தைச் சேர்ந்த ஆண்களும், பெண்களும் தான். அவர்களுக்கு நன்கு தெரியும் இன்றில்லை என்றாலும் என்றாவது ஒருநாள் அந்த நிலம் தங்களுடைய கைக்கு வந்து சேரும் என்று. அன்று கம்யூனிஸ்டுகள் அரைப்படி நெல் உயர்வு போராட்டத்தை துவங்கி இருந்தாலும் கூட, அதில் கலந்து கொண்ட ஒவ்வொரு தேவேந்திரகுல வேளாளர்களின் உணர்வும் மண்ணுரிமையையும், அடையாளங்களையும் மீட்பதற்கானது. இந்த மண்ணில் அவர்களுக்கான உரிமையை முறையாக எடுத்துச் சொல்லி அன்று போராட்டம் துவங்கப்பட்டிருந்தால் தமிழகத்தில் தலைவிதி மட்டுமல்ல இந்தியாவின் தலைவிதியே மாறியிருக்கும். நிலங்கள் உழைப்பவரிடத்திலும், அதன் உரிமையாளர்களான தேவேந்திரகுல வேளாளர்களிடத்திலும் வந்து சேர்ந்திருக்கும். சுரண்டுகிறவன் – சுரண்டப்படுகிறவன் என்ற பேதம் அறவே இல்லாமல் போயிருக்கும். ஆண்டான் – அடிமை என்ற உணர்வு மண்ணோடு மண்ணாக மக்கிப் போயிருக்கும். கீழவெண்மணியில் மண்ணுரிமைக்காக பற்றிய நெருப்பு தமிழகத்தைத் தாண்டியும் பாரதமெங்கும் பரவியிருக்கும். இன்று இந்தியா ஒரு சமத்துவ பூமியாக நிலை கொண்டிருக்கும்; சாதியக் களைகள் மரங்களாகியிருக்காது; ஊழல் அரசியல் வேறூன்றி இருக்காது.

மண்ணுரிமை போராட்டத்தை கூலிப் போராட்டமாக சித்தரித்த கம்யூனிஸ்டுகள்!
கோடானகோடி தமிழ் மக்களின் மண்ணுரிமைகளை, மனித உரிமைகளை, வாழ்வுரிமைகளை மீட்பதற்கான மகத்தான வரலாற்றுச் சிறப்புமிக்க போராட்டத்தை கீழவெண்மணியில் 44 தேவேந்திரகுல வேளாளர்கள் இரத்தம் சிந்தி, இன்னுயிரை நீத்து தொடங்கி வைத்தார்கள். கம்யூனிஸ்டுகள் போர்வையில் இருந்தவர்களோ அதைக் கூலிப் போராட்டமாக சித்தரித்து, அப்போராட்டத்தை தொடரத் தவறினார்கள். புதிய தமிழகம் கட்சி மண்ணுரிமைக்கான போராட்டத்தைத் தொடரும்; அதை முடித்து வைக்கும்!

குறிப்பு: மண்ணுரிமைக்காகவும், மனித உரிமைக்காகவும் போராடி உயிர்நீத்த 44 தேவேந்திரகுல வேளாளர்களின் தியாகத்தை போற்றும் வகையில் தமிழகமெங்கும் தேவேந்திரகுல வேளாளர் மக்களும், புதிய தமிழகம் கட்சியினரும் இன்று (டிசம்பர் 25) மாலை 6 மணிக்கு 44 மெழுகுவர்த்திகளை ஏற்றி அஞ்சலி செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

டாக்டர் க. கிருஷ்ணசாமி MD
புதிய தமிழகம் கட்சி