கிறித்தவமாகவும், கிறித்தவராகவும் வாழ கிறித்தவப் பெருமக்களுக்கு நெஞ்சம் கனிந்த கிறித்துமஸ் நல்வாழ்த்துக்கள்.!
408 Views
![]()
உலகெங்கும் வாழும் கிறித்தவப் பெருமக்களுக்கு எனது நெஞ்சம் கனிந்த கிறித்துமஸ் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இயேசுபிரான் அவர்கள் பிறந்த நாளான டிசம்பர் 25-ஆம் தேதியை கிறித்துமஸ் விழாவாக உலகெங்கும் உள்ள கிறித்தவர்கள் கொண்டாடுகிறார்கள். இன்று போலவே அபரிமிதமான அறிவுத்திறனோடும், பொருளாதார வலிமையோடும் யூத இன மக்கள் அன்றும் திகழ்ந்துள்ளனர். எனினும் அவர்கள் ஒற்றுமையின்றியும், சிதறடிக்கப்பட்டும் இருந்தனர். தங்கள் சமுதாயத்திற்கு வலுவூட்ட யாராவது உதித்து வரமாட்டார்களா? என எதிர்பார்த்துக் காத்திருந்த காலம் அது.
2000 ஆண்டுகளுக்கு முன்பு, பாலஸ்தீனம் அருகில் உள்ள பெத்தலகேம் நகரில் மேரி மாதா அவர்களுக்கு இயேசு பிறந்தார். அவர் சாதாரண ஏழை, எளிய தச்சுத்தொழில் குடும்பத்தைச் சார்ந்தவர் என்றே வரலாறுகள் கூறுகின்றன. அவர் இந்த மண்ணில் வாழ்ந்த காலம் மிகமிகக் குறைவு. அன்றையக் காலகட்டத்தில் ரோமப் பேரரசே ஐரோப்பா மற்றும் ஆசியப் பகுதிகளில் பெரும் ஆதிக்கம் செலுத்தியுள்ளது. இயேசுநாதர் தனது 30-வது வயதில் பிரசங்கங்களைத் தொடங்கி அதிகபட்சம் ஐந்து அல்லது ஆறு வருடங்கள் மட்டுமே புரட்சிகரமான சமூக கருத்துக்களைப் பரப்பி வந்திருக்கிறார். தனது 30 வயது வரையிலும் அறிவுக் களஞ்சியத்தைத் தேடிப் பல இடங்களுக்கும் அவர் பயணித்திருக்கிறார். அக்காலகட்டம் இந்தியா, சீனா போன்ற நாடுகள் கல்வி மற்றும் தத்துவார்த்த ரீதியான வளர்ச்சிகளில் ஓங்கி உயர்ந்திருந்த நேரம். புத்தரின் பகுத்தறிவு தாக்கமும் பரவியிருந்த நேரம் அது.
அதிகார இன்பத்தையும், பொருள் சுகத்தையும் நாடவில்லை!
அச்சமயம் இந்தியாவில் தட்சசீலா, நாளந்தா பல்கலைக்கழகங்கள் பிரசித்தி பெற்றும் விளங்கியுள்ளன. அவர் இந்த சீர்மிகு பல்கலைகழங்களுக்கும் வந்து சென்றிருக்கிறார் என பல்வேறு ஆய்வுகள் கூறுகின்றன. அறிவுத்திரட்டல்களோடு தாயகம் திரும்பிய அவர் தன் இன யூதர்களுக்கு வலுவூட்டுவார்; ஆட்சியாளர்களுடன் ஒத்துப்போவார் என்றே எதிர்பார்த்து இருந்திருக்கிறார்கள். ஆனால் அவர் அதிகார இன்பத்தையும், பொருள் சுகத்தையும் நாடவில்லை; ஆட்சியாளர்களின் அடக்குமுறைக்கு அஞ்சியும்; பேய், பிசாசு, பில்லி, சூனியம், சாத்தான்கள் என பல்வேறு மூடநம்பிக்கைகளுக்கு ஆட்பட்டும்; வறுமையிலும், அறியாமையிலும், பிணியிலும் மக்கள் வாடிக்கொண்டிருந்தார்கள். வாராது வந்த மாமணியைப் போல இயேசு வந்து சேர்ந்தார். அவர், தான் வாழ்ந்த மிகக் குறுகிய காலத்தில் எவ்வளவு தூரம் பயணித்திருப்பார் என்று சொல்ல முடியாது. ஆனால் அக்குறுகிய காலகட்டத்திலேயே பல அற்புதங்களை நிகழ்த்திக் காட்டியிருக்கிறார்.
மத மூடபழக்கவழக்கத்தையும்; சாதிய, இன, பொருளாதார ஏற்றத்தாழ்வுகளையும் அடிமைத்தனங்களையும் எதிர்த்து நின்றார்!
அவருடைய பிரசங்கங்கள் மூலம் மக்கள் மூடநம்பிக்கைகளிலிருந்து விழிப்பு பெறுவதையும், எழுச்சி பெறுவதையும் ரோமாபுரி அரசு விரும்பவில்லை. அரசுக்கு எதிரான புரட்சிக்காரராகவே அவரை சித்தரித்தார்கள். போண்டி பிளேட் எனும் ரோமாபுரி மன்னன் அவரை சிறைபிடித்து விசாரணை செய்தான்; இயேசுவோடு உடனிருந்த சீடர்களில் பலர் துரோகிகளாக மாறினார்கள்; சிலர் காட்டியும் கொடுத்தார்கள். மன்னன் தண்டனையை நிறைவேற்றினான். இயேசு கடும் சித்திரவதைச் செய்யப்பட்டுச் சிலுவையில் அறையப்பட்டார். மத மூடபழக்கவழக்கத்தையும்; சாதிய, இன, பொருளாதார ஏற்றத்தாழ்வுகளையும்; அடிமைத்தனங்களையும் எதிர்த்து நின்றார். நிர்க்கதியற்ற ஏழை, எளிய மக்களுக்கு நேசக்கரம் நீட்டினார்; அளவற்ற அன்பைப் பொழிந்தார்; சமாதானத்தைப் போதித்தார்; உடைமைகளைத் துறந்த அர்ப்பணிப்பை வலியுறுத்தினார். அவர் போதித்தது எல்லாம் அன்பும், அர்ப்பணிப்பும், சேவையுமே!
அவர் வலியுறுத்தியது எல்லாம் அப்பழுக்கற்ற அன்பும், தியாகமுமே!
அவர் தன் வாழ்நாளில் எதையும் நிறுவனப்படுத்த அறிவுறுத்தவில்லை. அவர் வலியுறுத்தியது எல்லாம் அப்பழுக்கற்ற அன்பும், தியாகமுமே. அவர் மறைவுக்குப் பல வருடங்களுக்குப் பின்பு, அவரது தியாக வரலாறு வெளிக்கொணரப்பட்டது. CHRIST என்று சொன்னால் MESSIAH என்று பொருள். இயேசுவின் கருத்துக்களை ஏற்றுக்கொண்டு, அந்த நல்ல கருத்துக்களை அப்படியே பரப்பக்கூடியவர்களே கிறித்தவர்கள் ஆனார்கள். எனவே, கிறித்தவர்கள் என்பது எந்தவொரு ஜாதி, மதம், இனம், பொருள், மொழி போன்ற குறுகிய வட்டத்திற்குள்ளும் அடங்காது; அடங்கக்கூடாது. அனைவரிடத்திலும் அன்பு; அனைவருக்கும் சேவை; சாதி, மொழி, இன, நிற வேற்றுமை பாராட்டாமை; பொய், புறங்கூறுதல், களவு, காமம், கொலை, கொள்ளை ஆகியவற்றிலிருந்து விலகி நிற்றல்; உயர்வு தாழ்வற்ற, சுரண்டலற்ற, ஏழ்மையற்ற நிலையை உருவாக்கும் உயர்ந்த பண்புகளையே குறிக்கும். கிறித்தவராக மட்டுமின்றி கிறித்துவமாக வாழ்வதே இலட்சியமாகட்டும்!
அனைவருக்கும் கிறித்துமஸ் நல்வாழ்த்துக்கள்!
– டாக்டர் க. கிருஷ்ணசாமி MD
புகைப்படம்:- 2017 ஆம ஆண்டு பின்லாந்து நாட்டில் சாண்டா கிளாஸிடம் எடுத்துக் கொண்ட புகைப்படம்.






