உலகெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கும் பாரத தேசத்தின் புதல்வர்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்..!!

அறிக்கைகள்
s2 353 Views
  • New Year 2021

    புத்தாண்டு வாழ்த்துகள்

  • New Year 2021
Published: 01 Jan 2021

Loading

உலகம் முடங்கிய போதும், நாம் முடங்கவில்லை
ஊர் உறங்கிய போதும், நாம் உறங்கவில்லை!
2021 புதிய விடியல்- புதிய தமிழகம் நோக்கிப் பயணிப்போம்!

உலகெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கும்; பாரத தேசத்தின் புதல்வர்களுக்கும்; நாடு, இனம் கடந்து பல்வேறு தேசங்களில் வாழுகின்ற எனது அன்பு நண்பர்களுக்கும்; மிக மிகச் சிக்கலான காலகட்டத்தில் நம்மோடு பயணித்த புதிய தமிழகம் கட்சியின் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி, மாநகராட்சி, கிளை நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும், தேவேந்திரகுல வேளாளர் தாய்மார்களுக்கும்-சொந்தங்களுக்கும்; சமூக வலைத்தளங்களை முறையாகப் பயன்படுத்தி நம்முடைய கருத்துக்களைப் பொதுத்தளத்திற்கு கொண்டுச் சென்ற தொழில்நுட்ப அணியினருக்கும்; முகநூலில் பதிவிட்டப் பதிவுகளை, தேச நலன் சார்ந்த கருத்துக்களை அனைவரிடமும் கொண்டு சென்ற தேச அபிமானிகளுக்கும்; மேடம் டாக்டர் சந்திரிகா கிருஷ்ணசாமி அவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த மூன்று மாதங்களும் என்னோடு தங்களது கவலையையும், அன்பையும் பகிர்ந்து கொண்டு குடும்பத்தோடு குடும்பமாக பயணித்த அனைத்து புதிய தமிழகம் கட்சியினருக்கும்; உற்றார் உறவினர்களுக்கும்; சங்கீதா மருத்துவமனை ஊழியர்களுக்கும்; டாக்டர் கிருஷ்ணசாமி IAS அகாடமி, இண்டோபின் மழலையர் பள்ளி மற்றும் தாமரை வேர்ல்டு பள்ளி ஆசியர்களுக்கும் என்னுடைய நன்றிகளையும், நெஞ்சம் நிறைந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

2020-ஆம் ஆண்டு இந்தியத் தேசத்திற்கு மட்டுமல்ல, உலக மக்களுக்கே மிகவும் சோதனையும், வேதனையும் நிறைந்த ஆண்டாகும். 2019 டிசம்பரில் தொடங்கிய கரோனா 2020 முழுக்க ஆதிக்கம் செலுத்தி, இலட்சக்கணக்கான உயிர்களைப் பலி வாங்கி, பல கோடி மக்ககளை படுக்கையிலே வீழ்த்தி, கோடானகோடி மக்களின் வாழ்வாதாரத்தையும், பொருளாதாரத்தையும் பாதாளத்தில் வீழ்த்திய 2020 நம்மை விட்டுக் கடந்து செல்கிறது. ஒட்டுமொத்த மனித குலத்தை முகக் கவசங்களுக்குள்ளே, தங்களுடைய இல்லங்களுக்குள்ளே முடக்கிப் போட்டதை என்றென்றும் மறக்க இயலாது. தனிப்பட்ட முறையில், என்றும் அனுபவித்திராத கசப்பான, சொல்லொணா துயரங்களையும், துன்பங்களையும் தந்த ஆண்டு இது.

இந்த 2020-ஆம் ஆண்டின் எல்லா விதமான வேதனைகளிலிருந்தும் விடுபட்டு அனைவரும் இன்பகரமான வாழ்நிலைக்கு 2021 புத்தாண்டில் அடியெடுத்து வைக்க வாழ்த்துகிறேன்.

2020-ல் கோவிட் தாக்குதலுக்கு தங்களை அர்ப்பணித்துக் கொண்ட இலட்சோபலட்சம் மனிதக் குலத்திற்கும், அதை எதிர்த்து நின்று போராடிய மருத்துவ உலகிற்கும், துணைநின்ற அரசு மற்றும் தனியார் நிர்வாகத்தினருக்கும், ஒத்துழைத்த மக்களுக்கும் எனது வணக்கங்கள்! 2020-ஆண்டில் முழு ஆதிக்கம் செலுத்திய கோவிட் அதனுடைய இறுதிக் காலத்தில் மீண்டும் உருமாறி அச்சுறுத்துவது கவலை தரக்கூடியது. எனினும், அதை எதிர்கொள்ளத் தடுப்பூசிகளும் தயார் நிலைக்கு வந்துவிட்டன. எனினும் எந்த எச்சரிக்கைகளையும் உதாசீனப்படுத்தாமல் சிறிது காலத்திற்காவது முகக் கவசங்களுடன் இருப்பது மிகவும் அவசியம்.

புத்தாண்டு என்றவுடன் அதனுடைய வரலாறுகளையும் நாம் தெரிந்துகொள்ள வேண்டும். ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு பருவத்தில் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. பல நூறாண்டுகாலம் மார்ச் மாதம் புத்தாண்டு கொண்டாடப்பட்டுள்ளது. இன்றைய கால கட்டங்களில் அரேபிய நாடுகளைத் தவிர, பெரும்பாலான நாடுகளில் ஜனவரி-1 புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. தமிழ் புத்தாண்டு, தெலுங்கு புத்தாண்டு என பல புத்தாண்டுகளும் உண்டு. ஆனால் ஒரு நாளைக்கு 24 மணி நேரம்; வாரத்திற்கு 7 நாட்கள்; மாதத்திற்கு 30 நாட்கள்; வருடத்திற்கு 365 நாட்கள் என காலண்டரை அடிப்படையாகக் கொண்ட ’கிரிகோரியன் அல்லது ஜூலியன் ஆண்டு’ என்பதே இன்று பெரும்பாலும் உலக வழக்கில் உள்ளது. இது ஆங்கில புத்தாண்டு என்று சிலர் கருதுகிறார்கள். உண்மை அதுவல்ல, ரோமபுரியை ஆண்ட ஜீலியஸ் சீசர் காலத்தில் தான் இந்த காலண்டர் ஆண்டு முறை நடைமுறைக்கு வந்தது. ஜீலியன் காலண்டர் ஆண்டு கி.மு 46 ஆம் ஆண்டிலிருந்து அனுசரிக்கப்பட்டு வருகிறது. 1582 பிறகு, இப்போது பின்பற்றப்படும் ’கிரிகோரியன் ஆண்டு காலண்டர் முறை அமலுக்கு வந்துள்ளது. இரண்டு காலண்டர் ஆண்டுகளுக்கும் பெரிய வித்தியாசம் ஒன்றுமில்லை. ஜூலியன் காலண்டர் ஆண்டு என்பது 365. அதாவது ஒரு ஆண்டுக்கு 10.8 நிமிடம் மட்டுமே வித்தியாசம். நம்மைவிட ஏழு மணி நேரத்திற்கு முன்பாக ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளில் மக்கள் புத்தாண்டு கொண்டாடுகிறார்கள். ஐரோப்பிய நாடுகள் நமக்கு நான்கு மணி நேரத்திற்கு பிறகு புத்தாண்டை துவங்குகிறார்கள். இந்த மகத்தான ஜனவரி 1, 2021 புத்தாண்டில் அடியெடுத்து வைக்கும் அனைவரது வாழ்விலும் ஒளி பிறக்கட்டும்.

புதிய தமிழகம் கட்சியைப் பொறுத்த மட்டிலும், 2020-ஆம் ஆண்டில் உலகம் முடக்கப்பட்டு இருந்தாலும் கூட, நாங்கள் முடங்கிப் போய்விடவில்லை. ஊர் உறங்கினாலும், நாங்கள் உறங்கவில்லை சொல்லப்போனால் இந்தப் பொது முடக்கக் காலத்தை மிகவும் பயனுள்ளதாகப் பயன்படுத்தி இருக்கிறோம். தொழில்நுட்ப விஞ்ஞான வளர்ச்சியைத் துணையாகக் கொண்டு இலட்சக்கணக்கான உள்ளங்களை எளிதாகத் தொட முடிந்தது. தேசம், இனம், மொழி, சமத்துவம், சமநீதி, சம உரிமை ஆகியவற்றைப் பற்றி மிகப்பெரிய அளவிற்கு விழிப்புணர்வை உண்டாக்க முடிந்தது. புதிய தமிழகம் கட்சியின் தொண்டர்களும் வறுமைக்கும், கரோனா முடக்கத்திற்கும் ஆட்பட்டிருந்தாலும் அதைப்பற்றிக் கவலைப்படாமல் உணவுகள், காய்கறிகள், முகக் கவசங்கள், சானிடைசர்கள் என வீடுதோறும் வழங்கினார்கள்.

வீட்டை விட்டு வெளியே வந்து பெரிய ஆர்ப்பாட்டங்களைப் போராட்டங்களை நடத்த அனுமதி இல்லாவிட்டாலும் உடுமலை சங்கர் படுகொலைக்கு மேல்முறையீடு கேட்டு போராட்டம்; புதுக்கோட்டை 7 வயது சிறுமி ஜெயப்பிரியா கொலைக்கு நீதி கேட்டு போராட்டம்; திருநெல்வேலி மாவட்டம், வாகைகுளம் அணைக்கரைப்பட்டி விவசாயி முத்து கொலைக்கு மறுபிரேத பரிசோதனை கேட்டு தொடர்ந்து 10 நாட்கள் போராட்டம்; கேரள அரசின் கவனக்குறைவால் மூணாறில் உயிர்நீத்த 82 தோட்டத் தொழிலாளர்களுக்கு நீதி கேட்டு போராட்டம் என ஊர் எல்லாம் முடங்கினாலும் நாம் முடங்காமல் நமது பணியினை தொடர்ந்தோம். ஜூலை 23 மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆண்டுதோறும் செலுத்தக்கூடிய அஞ்சலி; செப்டம்பர் 11 தியாகி இமானுவேல் தேவேந்திரனார் அவர்களுக்கு நினைவஞ்சலி; டிசம்பர் 25 கீழவெண்மணி தேவேந்திரகுல தியாகிகளுக்கு அஞ்சலி என நமது கடமைகளை நிறைவேற்றினோம்.

புதிய தமிழகம் கட்சியின் புனரமைப்பு பணிகளை மேற்கொண்டு ஊராட்சி ஒன்றியம், நகராட்சி, பேரூராட்சி, மாநகராட்சி என அனைத்திலும் ஆர்வம் மிக்க இளைஞர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு புதிய பொறுப்புகள் வழங்கியுள்ளோம். பல்லாயிரக்கணக்கான படித்த இளைஞர்கள், பட்டதாரிகள், ஆசிரியர்கள், பேராசிரியர்கள், அரசு ஊழியர்கள் என அனைவருடனும் பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து கொள்ள முடிந்தது. ’அடையாளத்தை மீட்போம்; அதிகாரத்தில் அமர்வோம்’ என்ற முழக்கத்தை முன்வைத்து 2021 சட்டமன்ற தேர்தலில் மிகப்பெரிய அரசியல் வெற்றியைப் பெற நம்மை ஆயத்தப்படுத்தி வருகிறோம்.

கடந்த நூறாண்டுக் காலமாக வைக்கப்பட்ட கோரிக்கை, கடந்த முப்பது ஆண்டு காலமாக நம்மால் முன்னெடுக்கப்பட்ட, கடந்த பத்து வருடங்களாக தீவிரப்படுத்தப்பட்ட தேவேந்திரகுல வேளாளர்களின் பட்டியல் மாற்றத்துடனான பெயர் மாற்றக் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி உச்சக்கட்ட காணொளி பிரச்சாரம் மூலம் மக்களிடம் கொண்டு சென்றோம். ’மத்திய, மாநில அரசுகளே ஏமாற்றாதே’ என்ற முழக்கத்தோடு அக்டோபர்-06 ஆம் தேதி 10,000 கிராமங்களில் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டோம். நம்முடைய போராட்டத்தின் விளைவாக விடிந்தும் விடியாததைப் போன்ற ’பட்டியல் வெளியேற்றமில்லா பெயர் மாற்றப் பரிந்துரை’ செய்யத் தமிழக அரசு முன்வந்தது.

இப்பொழுது ஜனவரி-06, 2021 அன்று தேவேந்திரகுல வேளாளர்களுடைய பட்டியல் வெளியேறத்துடனான பெயர் மாற்ற விடுதலையையும், விடியலையும் நோக்கி பயணிக்கிறோம். ’எண்ணமே வாழ்க்கை’ என்று சொல்வார்கள். எந்த சூழ்நிலையிலும் தன்னை தகவமைத்துக் கொண்டு வெற்றி பெறுவது என்ற எண்ணங்கள் மட்டும் மேலோங்கி நின்றால் நிச்சயமாகச் சாதிக்க முடியும் என்பதற்கு 2020-ஆம் ஆண்டின் அனுபவங்களே நமக்கு அத்தாட்சியாகும். எனினும், முயல் ஆமை கதைபோல் இருந்துவிடாமல், எல்லோரும் முடங்கிய நேரத்தில் விழித்துச் செயல்பட்டு, எல்லோரும் செயல்படக்கூடிய நேரத்தில் நாம் உறங்கி விடக்கூடாது. தரிசாகக் கிடந்த நிலத்தை பண்படுத்தி, பயிரிட்டு, களை எடுத்து, உரமிட்டு, நீர் பாய்ச்சி, விளைந்து நிற்கும் நேரத்தில் பட்டியல் வெளியேற்றத்துடனான பெயர் மாற்றமானாலும் சரி, தேர்தல் வெற்றியானாலும் சரி இரண்டையும் பயிரிட்டு விளைவித்தவர்கள் என்ற அடிப்படையில் நாம் மட்டுமே அறுவடை செய்யக் கூடிய தகுதி பெற்றவர்கள். நம்முடைய இத்தனை ஆண்டுக்கால கஷ்டத்தில் மட்டுமல்ல; இதற்கான போராட்டங்களின் போதும் எவ்வித பங்கும் எடுத்துக் கொள்ளாதவர்கள், குதர்க்கம் பேசி எதிராக செயல்பட்டவர்கள் கூட அந்த பலனைக் கைப்பற்றவும், அபகரிக்கவும், களவாடிச் செல்லவும் எத்தணிக்கக்கிறார்கள். கழனிகளில் கதிர்களாகவும், பழங்களாகவும் இருந்தால் பகலில் காக்கை உள்ளிட்ட பறவைகளாலும்; கரும்பாகவும், கிழங்காகவும், காய்கறிகளாகவும் இருந்தால் இரவில் பன்றிகள் உள்ளிட்ட பிற விலங்கினங்களாலும் சூறையாடப்படும். நாம் இரண்டையுமே விளைவித்திருக்கிறோம். எனவே இரவும் பகலும் கட்டிப் பாதுகாக்க வேண்டும்.

2021 புத்தாண்டை புதிய தமிழகத்தின் சாதனை ஆண்டாக மாற்றிட வேண்டும். மனித குலத்திற்கு எதிராக சில நோய்கள் உடலுக்குள்ளே இருந்தும், வெளியிலிருந்தும் தாக்குவது போல, தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்திற்குள்ளேயே தோன்றி துரோகம் செய்யும் கும்பல்களிடம் இருந்தும், நாம் வளர்ந்து விடக்கூடாது என வெளியிலிருந்து தாக்கும் சக்திகளிலிடமிருந்தும் தேவேந்திரகுல மக்களையும், புதிய தமிழகத்தையும் பாதுகாக்க நாம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.

பட்டியல் மாற்றத்துடன் தேவேந்திரகுல வேளாளராக பரிணமிப்போம்!
நம்மிடையே புதிய புதிய உயரிய பண்புகளும் விழுமங்களும் வளரட்டும்.!
புதிய சிந்தனைகள் மலரட்டும்.!

என்றென்றும் தேவேந்திரகுல வேளாளர் மக்களின் பாதுகாப்பு அரண் புதிய தமிழகம் கட்சி!

புதிய தமிழகம் கட்சியின் பிரத்தியேக அடையாளம் சிவப்பு-பச்சைக் கொடி!!

தேவேந்திரகுல வேளாளர் மக்கள் அனைவரும் புதிய தமிழகமாக ஒன்றிணைவோம்!

பட்டியல் வெளியேற்றத்துடன் பெயர் மாற்ற அடையாளத்தை மீட்டெடுப்போம்!

சமத்துவ சிந்தனையோடும், உணர்வோடும் தமிழக மக்கள் அனைவரோடும் கைகோர்த்து அரசியல் அதிகாரத்தை வென்றெடுப்போம்!

2021 சட்டமன்ற தேர்தலில் சிவப்பு-பச்சைக் கொடியை சென்னை கோட்டையிலே நிலைநாட்டுவோம்!

2021 ஜனவரி 6-ல் மதுரையில் சங்கமிப்போம்!