மத்திய அரசு அத்திட்டத்தை அமலாக்குவதற்காக, தேவையற்ற பிடிவாதம் செய்யக் கூடாது! அனைத்து தரப்பினரின் கருத்துகளை அறியும் வரையிலும், அக்னிபத் திட்டத்தை நிறுத்தி வைக்க வேண்டும்.!
522 Views
![]()
மத்திய அரசு அத்திட்டத்தை அமலாக்குவதற்காக,
தேவையற்ற பிடிவாதம் செய்யக் கூடாது!
அனைத்து தரப்பினரின் கருத்துகளை அறியும் வரையிலும்,
அக்னிபத் திட்டத்தை நிறுத்தி வைக்க வேண்டும்.!
இந்திய ராணுவத்தில் நான்கரை ஆண்டு கால குறுகிய சேவையை அறிமுகப்படுத்தியதை எதிர்த்து இந்தியாவின் பல மாநிலங்களில் இளைஞர்கள் பெரும் போராட்டங்களிலும்; ரயில்கள் மற்றும் பொதுச் சொத்துக்களுக்கு தீ வைக்கும் வன்முறை சம்பவங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். ஒரு திட்டத்தின் மீதான எதிர்ப்பை வெளிப்படுத்துவதற்காக வன்முறை என்பது தீர்வாகாது. பொதுவாக எந்த ஒரு புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டாலும் அதற்கு ஆதரவும் எதிர்ப்பும் இருப்பது வழக்கமே! பொதுவாக அரசினுடைய கொள்கைகளுக்கும்; மதம், சாதி, மொழி சார்ந்த அறிவிப்புகளுக்குத்தான் இது போன்ற எதிர்ப்புக்கள் அதிகமாக இருக்கும். ஆனால் முதல்முறையாக ராணுவத்தில் ஆட்கள் சேர்க்கும் கொள்கைக்கு இவ்வளவு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இந்திய ராணுவத்தில் JAWAN என்று அழைக்கப்படக்கூடிய அடிமட்ட ராணுவ போர் வீரர்கள், JCO எனும் இடைநிலை அதிகாரிகள், மற்றும் officers என்றழைக்கப்படும் உயர் அதிகாரிகள் அடங்கிய மூன்று பிரிவுகள் உண்டு. இந்த மூன்று பிரிவுகளில் JCO என்றழைக்கப்படும் இடைநிலை அதிகாரிகள் மற்றும் officers என்று அழைக்கப்படக்கூடிய அதிகாரிகள் பிரிவில் நிரந்தரமாக (permanent) 70% பேரும், மீதமுள்ள 30% பேர் குறுகியகால சேவையிலும் (short service) சேர்க்கப்படுகின்றனர். JAWAN என்றழைக்கப்படும் அடிமட்ட ராணுவ போர் வீரர்கள் பிரிவில் நிரந்தரமான ராணுவ பிரிவைத் தவிர, குறுகியகால பணிப் பிரிவுகள் இதுவரையிலும் உருவாக்கப்படவில்லை. இந்திய ராணுவத்தில் எண்ணிக்கையில் அதிகமானவர்கள் JAWAN என்று அழைக்கப்படக்கூடிய அடிமட்ட ராணுவ போர் வீரர்களே.! அவர்களுள் 99 சதவீதம் பேர் ஏழை, எளிய பின்புலத்திலிருந்து வரக்கூடியவர்களாகவே இருப்பர்.
இப்பொழுது மத்திய அரசால் அறிவிக்கப்பட்டு இருக்கக்கூடிய இந்த ‘நெருப்பு பாதை’ அதாவது அக்னிபத் திட்டத்திற்கு இவ்வளவு எதிர்ப்பு எக்காரணமும் இல்லாமல் வந்துவிட்டதாகச் சொல்ல முடியாது. அதற்காக இந்தத் திட்டமே ஒரு கெட்ட நோக்கத்தோடு கொண்டு வந்ததாகவும் எவரும் சொல்ல இயலாது. புதிதாக ஒரு திட்டம் கொண்டு வரப்படும் பொழுதும், அதுபற்றிய முன் அனுபவம் எதுவும் இல்லாத போதும் சாதகங்களும் இருக்கும்; பாதகங்களும் இருக்கும். மேலும் திட்டத்தின் சாதகங்கள் அதிகமாகவும், பாதகங்கள் குறைவாகவும் இருக்க வேண்டும். ஆனால், அக்னிபத் நான்கரை ஆண்டு கால குறுகிய கால சேவையில் சாதகங்களை விடப் பாதகங்களே அதிகமாக இருப்பதாக இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய அச்சங்கள் ஏற்பட்டு இருக்கின்றன. இந்த நாட்டில் எண்ணற்ற பிரச்சனைகள் இருக்கின்றபோது மத்திய அரசு இதை ஏன் இவ்வளவு அவசர அவசரமாகக் கொண்டு வர வேண்டும் என்பது தெரியவில்லை.
17 வயது முதல் 22 வயதுக்குள்ளான இளைஞர்களைத் தேர்ந்தெடுத்து, ஆறு மாதம் எல்லா விதமான பயிற்சிகளையும் அளித்து, அவர்களை ராணுவ வீரர்களாக்கவும், நான்கரை ஆண்டு கால குறுகிய கால சேவைக்குப் பின்னர் அவர்களில் 25% பேரை நிரந்தர ராணுவப் படையில் சேர்க்கவும், மீதம் 75 % பேருக்கு அவர்கள் சம்பளத்தில் பிடித்தது உட்பட அரசு மானியமாக 5 லட்சம் சேர்த்து 10.5 லட்சத்தை அவர்கள் கையில் கொடுத்து அதை வைத்துப் பிழைத்துக் கொள்ளுங்கள் என்று ஒரு புதிய திட்டத்தை அரசு அறிமுகப்படுத்தி இருப்பதே இப்பொழுது இளைஞர் மத்தியில் கடும் கோபம் உண்டாகி இருப்பதற்கான அடிப்படைக் காரணமாகும்.
தென் மாநிலங்களைக் காட்டிலும் வடக்கு மாநிலங்களில் தான் ராணுவத்தில் சேர்வதையும், அதில் பணிபுரிவதையும் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் பெருமையாகக் கருதி தலைமுறை தலைமுறையாக தங்களை இராணுவத்தில் இணைத்துக் கொள்கின்றனர். பணியின்போது உயிரிழப்பாக இருந்தாலும், உடல் உறுப்புகள் இழப்பாக இருந்தாலும் நாட்டிற்காக அர்ப்பணிப்புச் செய்ததாகவே கருதி பணியாற்றி வருகிறார்கள். இந்தக் குறுகிய கால ராணுவ சேவை திட்டத்தின் மூலம் தங்களுடைய நிரந்தர ராணுவ பணி கனவு சிதைந்து விடும் என்ற அச்சத்திலேயே அவர்கள் களத்தில் இறங்கிப் போராடுகிறார்கள். அவர்கள் அச்சத்திலும் நியாயம் உண்டு.
ராணுவ பயிற்சியோ, ராணுவ பணியோ அவ்வளவு எளிதானது ஒன்றுமல்ல. அது உண்மையில் அக்னி பாதைதான். ராணுவத்தில் சேர்ந்த பிறகு அதனுடைய கடினத்தன்மையை தாங்கிக் கொள்ள முடியாமல் ஓடி வந்தவர்கள் எத்தனையோ பேர் உண்டு. ஆனால் கடும் குளிர், வெயில், பசி மற்றும் பல்வேறு விதமான உபாதைகளையும் தாங்கிக் கொண்டு எந்த நேரத்திலும் போர் வரலாம் அல்லது உயிரிழப்பு ஏற்படலாம் என்பது தெரிந்திருந்தும் இராணுவத்தின் உடையை அணிந்து மிடுக்காகச் செல்லுகின்ற அந்த தலை நிமிர்விற்காகவும், ராணுவத்தில் பணியாற்றுகிறோம் என்ற மனநிறைவிற்காகவும் இந்த நாட்டிற்காக தன்னுடைய உடலையும் உயிரையும் இழப்பதை பெரும் பேராகக் கருதுகின்றவர்கள் லட்சோப லட்சம் பேர் உண்டு. அதனால் தான் இந்தியா என்ற பரந்துபட்ட தேசத்தின் எல்லைகள் பாதுகாக்கப்படுகின்றன; 140 கோடி மக்களும் நிம்மதியாக உறங்கி எழுகின்றனர்.
எனவே, தனது நாட்டினுடைய பாதுகாப்பிற்காக தங்களை முழுமையாக அர்ப்பணித்துக் கொள்வது என்ற தியாகத்தோடு ராணுவத்தில் சேர்ந்து பணியாற்றுவதற்குத் தயாராக உள்ள இளைஞர்களின் வாழ்க்கையில் திடீரென்று குறுகிய காலத்திற்கான ராணுவ சேவையை வெறும் நான்கரை ஆண்டுகளுக்கானது என்று மாற்றிட அரசு முயற்சி செய்யுமேயானால், அது அந்த இளைஞர்களுக்கு ஏமாற்றம் அளிக்கக்கூடியதும், ஆத்திரமூட்டக் கூடியதுமே.!
இந்திய ராணுவத்தைப் பற்றி, ராணுவ வீரர்களின் தியாகங்களைப் பற்றி அவ்வப்போது ஒவ்வொரு மொழியிலும் சினிமா திரைப்படங்கள் எடுத்துக் காசாக்கப் படுகின்றன. அது அத்தோடு சரி. ஆனால் எதார்த்தத்தில் இந்த நாட்டில் – இந்த மண்ணில் 140 கோடி மக்கள் சுதந்திரமாக நடமாட தங்களை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்ட, பணியிலிருந்து ஓய்வு பெற்ற அல்லது குறுகிய காலத்தில் சேவையிலிருந்து விடுபட்டு வெளியே வரக்கூடிய இராணுவ சிப்பாய்களுக்கோ அல்லது இராணுவ அதிகாரிகளுக்கோ இந்த மண்ணில் பெரிய மரியாதை இருப்பதாகக் கருத இயலாது. அவர்களுக்கான மரியாதை மற்றும் வாய்ப்புக்களும் மிக மிகக் குறைவானதாகவே உள்ளது. Securities பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற எண்ணம் மட்டுமே எல்லோருடைய மனதிலும் பதிந்து கிடக்கிறது.
இந்திய ராணுவம் Medical Division, Engineering Division, Paramedical Division Technical And Communication, Transport Healthcare Construction போன்ற பல்வேறு துறைகளை அடங்கிய அமைப்பு ஆகும். எனினும் பல்வேறு துறைகளில் பயிற்சி பெற்று வெளியே வரும் திறமைசாலிகளுக்குக் கூட யாரும் வேலை வாய்ப்பு அளிப்பதில்லை. இந்திய ராணுவத்தில் ’one rank one pension திட்டம்’ மற்றும் ஓய்வு பெற்ற இராணுவ வீரர்களுக்கு அரசு மற்றும் பெரும் கம்பெனிகள் அல்லது தனியார்த் துறைகளில் வேலைக்கு அமர்த்தப்பட வேண்டும் என்பது நீண்ட நெடுநாளைய கோரிக்கை. ஆனால் இதையெல்லாம் மத்திய அரசு கண்டு கொள்வதில்லை.
இந்த நாட்டுக்காகப் பாடுபட்டுள்ளவர்களுக்குக் கிடைக்கக்கூடிய ஒரே பலன் அந்த ஓய்வூதிய நிதி மட்டுமே. இந்தியாவில் ஓய்வு பெறும் ராணுவ ஊழியர்களுக்கு பென்ஷன் தொகையாக ஆண்டொன்றுக்குப் பல்லாயிரக்கணக்கான கோடி போகிறது. எனவே ஓய்வூதியத்தை குறைக்க வேண்டும் என்பதற்காகவே இப்பொழுது முழுநேர ராணுவ வீரர்களை உருவாக்குவதற்கு பதிலாக பென்சன் இல்லாத நான்காண்டு குறுகிய கால சேவையைச் செய்வதற்காக மட்டுமே இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது. இந்திய அரசாங்கத்தின் அமைச்சர்களும் ராணுவ அதிகாரிகளும் என்ன விளக்கம் வேண்டுமென்றாலும் சொல்லலாம். பசியோடும் பட்டினியோடும் கிடக்கக்கூடியவர்களுக்கு விளக்கங்கள் எவ்விதத்திலும் உதவாது. நான்கரை ஆண்டு கால சேவை என்பது விவாதத்திற்கு உட்பட்டதாகவே கருத வேண்டியுள்ளது.
அக்னிபத் – இராணுவ ஆட்ச்சேர்ப்பு கொள்கையை எப்படியாவது ஒருமுறை கஷ்டப்பட்டு அறிமுகப்படுத்தி விட்டால் அதையே தொடர்ந்து கடைப் பிடித்து விடலாம் என்று மத்திய அரசு கருதக்கூடும். லட்சக்கணக்கான கோடி ரூபாய் பட்ஜெட் போடும்போது ஒரு நாட்டில் ராணுவ வீரர்களுக்காக ஒதுக்கப்படக்கூடிய ஒரு லட்சம் கோடி பென்சன் திட்டத்தால் இந்த நாட்டிற்கு எவ்வித பாதிப்பும் வந்துவிடாது.
ஒரு இளைஞன் இத்திட்டத்தின் கீழ், 17-22 வயதில் ராணுவத்தில் சேருகிறான் என்றால் அவன் பள்ளிப்படிப்பை முடிந்தவுடன் உயர் படிப்புக்கும் செல்வதற்கு உண்டான கதவுகளை மூடிவிட்டு தான் ராணுவத்தில் சேருகிறான் என்பது பொருளாகும். உதாரணத்திற்கு ஒரு இளைஞன் 17 வயது முதல் 23 வயதுக்குள்ளாக ராணுவத்தில் சேர்வதாக வைத்துக் கொண்டால் அவன் 21-27 வயதில் ராணுவ சேவையிலிருந்து வெளியே வந்து விடுவான். அவனோடு படித்த மாணவர்கள் எல்லாம் பெரிய பெரிய பட்டதாரிகளாகி இருப்பார்கள். வாழ்க்கையின் மிக முக்கியமான காலகட்டத்தில் தன்னுடைய பெற்றோர்கள், உற்றோர் உறவினர்களிடமிருந்து விலகி ராணுவத்தில் பயிற்சி பெற்று தன்னுடைய சொந்த ஊருக்கு வருகின்றபொழுது அவர்கள் புதிய ஊரைத்தான் காண முடியும். கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போலத் தோன்றும். எப்படி முன்னேறுவது? எந்தத் தொழிலை மேற்கொள்வது? என்ற குழப்பமும் ஏற்படும். தாழ்வு மனப்பான்மை ஏற்படும். மத்திய அரசு 10 லட்சம் ரூபாய் கொடுப்பதாக வைத்துக் கொண்டாலும் கூட இன்னும் ஐந்து வருடங்கள் கழித்தோ, பத்து வருடங்கள் கழித்தோ அந்த பத்து லட்சத்தின் மதிப்பு சில ஆயிரத்திற்குக் கூடப் பெறுமானதாக இருக்காது. எனவே அந்த 10 லட்சத்தை வைத்து அந்த இளைஞன் ஒன்றும் செய்ய இயலாது. எனவே இந்த அரசு அக்னிபத் திட்டத்தை அமலாக்க முடிவெடுத்துவிட்டால் இந்திய ராணுவ சேவையில் குறுகிய கால சேவையில் ஈடுபட்டு வெளியே வரக்கூடிய அனைவருக்கும் மத்திய அரசு அல்லது மாநில அரசுத் துறைகளில் உத்தரவாதமான பணியை இப்பொழுதே ஊர்ஜிதம் செய்துவிட வேண்டும்.
திட்டத்தைத் துவங்கி விட்டு 25 சதவீதம் பேரைத்தான் மீண்டும் நிரந்தர ராணுவப் பணியில் சேர்ப்போம். 10% பேர் பேருக்கு வேறுசில துறைகளில் வாய்ப்பு அளிப்போம் என்று சொன்னாலும் மீதம் இருக்கக்கூடிய 65% பேருடைய நிலைமை என்னாவது? மத்திய அரசின் வெற்று அறிக்கைகளும் விளக்கங்களும் எதற்கும் உதவாது. எனவே, ஆண்டு ஒன்றுக்கு 96,000 பேரை நிரந்தர ராணுவச் சேவையில் சேர்க்கக்கூடிய நடைமுறையில் உள்ள திட்டத்தில் எவ்வித மாற்றத்தையும் கொண்டுவராமல் கூடுதலாக வேண்டுமென்றால் ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் பேரைக் குறுகிய காலப் பணிக்கு எடுத்துக் கொள்ளலாம். இந்தியாவில் மிகவும் கட்டுப்பாட்டுடன் இருக்கக்கூடிய ஒரு துறை என்றால் அது ராணுவம். குறுகிய கால ஆள்சேர்ப்பு அக்னிபத் திட்டம் இந்திய ராணுவத்தில் ஒரு சிறிய கீறலைக் கூட உண்டாவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி இருக்கக் கூடாது. அக்னிபத் திட்டத்திற்கு இப்போது ஏற்பட்டுள்ள அக்னிப் பரீட்சையில் தேற வேண்டுமெனில், மத்திய அரசு அத்திட்டத்தை அமலாக்குவதற்காக தேவையற்ற பிடிவாதம் செய்யக் கூடாது. அனைத்து தரப்பினரின் கருத்துகளை அறியும் வரையிலும் அக்னிபத் திட்டத்தை நிறுத்தி வைக்க வேண்டும்.
மத்திய அரசின் தேவையற்ற பிடிவாதத்தால்,
இத்திட்டம் பிள்ளையார் பிடிக்கப்போய்,
குரங்கு பிடித்த கதையாகி விடக் கூடாது.!
நன்றி, வணக்கம்.!
டாக்டர் க. கிருஷ்ணசாமி MD.Ex MLA,
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
20.06.2022.






