டிசம்பர் 15, 2024 – புதிய தமிழகம் கட்சியின் 28 ஆம் ஆண்டு துவக்க விழா! எழுச்சியாகக் கொண்டாடுவோம்..!

அறிக்கைகள்
s2 101 Views
  • Dr
  • Dr
Published: 14 Dec 2024

Loading

ஏழை, எளிய, விளிம்பு நிலை மக்களின் குரலாக ஓங்கி ஒலித்திடும் வண்ணம் ’மண்ணுரிமை, மனித உரிமை, வாழ்வுரிமை’ எனும் மூன்று முக்கியமான கொள்கைகளை இலக்காக கொண்டு புதிய தமிழகம் கட்சி 1997 டிசம்பர் 15 ஆம் தேதி தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டது.

27 ஆண்டுகள் நிறைவுற்று, 28 வது ஆண்டில் அடி எடுத்து வைக்கிறோம். அரசியல் தளத்திலும், சமூக தளத்திலும் இம்மியளவும் சமரசமின்றி தமிழக அரசியல் களத்தில் நிலையாக விளங்கக்கூடிய ஒரே இயக்கம் புதிய தமிழகம் கட்சியாகும். ஆட்சி – அரியணையில் அமராமலேயே அரிய பெரிய சாதனைகள் நிகழ்த்திய பெருமை நமது கட்சிக்கு மட்டுமே உண்டு.

நமது கட்சியின் 25 ஆம் ஆண்டு நிறைவு விழாவை 2022 ஆம் ஆண்டு ஸ்ரீவில்லிப்புத்தூரில் விமர்சையாக கொண்டாடினோம். நடைபெற்ற 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு, நமது புதிய தமிழகம் கட்சியினர் ஓய்வு, உறக்கம் இன்றி அரும்பணியாற்றி வருகின்றனர். ஜூன் 29 ஆம் தேதி தென்காசியில் நன்றி அறிவிப்பு கூட்டம் நடத்திய கையோடு; ஜூலை 1 ஆம் தேதி மாஞ்சோலை விஜயம் தொடர்ந்து, பத்திரிக்கையாளர் சந்திப்புகள்; ஜூலை 6 ஆம் தேதி மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்காக நெல்லையில் ஆர்ப்பாட்டம்; ஜூலை 8 ஆம் தேதி முதல் ஐந்து மாதங்கள் மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வுரிமையைப் பாதுகாக்க மதுரை மற்றும் சென்னை உயர்நீதிமன்றங்களின் படிக்கட்டுகளில் ஏறி இறங்கியது; உள் இட ஒதுக்கீட்டால் ஏற்படும் பாதிப்புகளை களைய வலியுறுத்தியும், மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வுரிமையை மீட்கவும் நவம்பர் 7ஆம் தேதி பல்வேறு தடைகளையும் மீறி சென்னையில் பேரணி, ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம்; மீண்டும் டெல்லியில் டிசம்பர் 6, 7 ஆகிய தேதிகளில் மகாராஷ்ட்ரா சதனில் கருத்தரங்கு மற்றும் சந்தர் மந்தரில் ஆர்ப்பாட்டம் என தமிழகத்தில் வேறு எந்த ஒரு கட்சியும் நிகழ்த்தாத, நிகழ்த்த முடியாத போராட்டங்களை கடந்த ஏழு மாதத்தில் முன்னெடுத்துள்ளோம்.

டெல்லியில் இரண்டு நாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு, புதிய தமிழகம் கட்சி நிர்வாகிகள் 12 அல்லது 13-ஆம் தேதி தான் தங்களது இல்லங்களுக்கு திரும்பி இருக்கக்கூடும். புதிய தமிழகம் கட்சியின் துவக்க விழாவை ஆண்டுதோறும் நாம் மிக விமர்சையாக கொண்டாடுவது வழக்கம். ஆனால் புதிய தமிழகம் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் பல்வேறு பணிச் சுமைகளைக் கருத்தில் கொண்டு, நாளை (டிசம்பர் 15) மிகவும் எளிய முறையிலும் அதே சமயம் எழுச்சிகரமாகவும் நம்முடைய கட்சியின் கொள்கைகளை செயல்பாடுகளையும் சாதனைகளையும் மக்களுக்கு எடுத்துச் சொல்லக் கூடிய வகையில் கிராம, நகர்ப் புறங்களில் நமது கட்சி கொடிக் கம்பங்களையும், கொடிகளையும் புதுப்பித்து கொடி ஏற்றியும், மக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் புதிய தமிழகம் கட்சியின் கொள்கைகளான ’மனித உரிமை, மண்ணுரிமை, வாழ்வுரிமை’ கோசங்களை எழுப்பியும் 27 ஆம் ஆண்டு நிறைவு மற்றும் 28 ஆம் ஆண்டு துவக்க விழாவை சிறப்புறக் கொண்டாட வேண்டுகிறேன்.

2024 டிசம்பர் முதல் அடுத்த ஓராண்டு 2026-ல் தமிழகத்தில் கூட்டணி ஆட்சியை நிறுவுவதற்கான ஆயத்த ஆண்டாக கருதி நம்மை முழுமையாக அர்ப்பணிப்போம். மக்களின் சமூக, பொருளாதார பிரச்சனைகளுக்காகப் போராடக்கூடிய அதே சமயத்தில் ஆட்சி – அதிகாரத்தை அடைவதும் புதிய தமிழகம் கட்சியின் பிரதான இலக்குகளில் ஒன்று. இன்றைய ஆட்சியின் அவலங்களை மூலை முடுக்கெல்லாம் எடுத்துச் சொல்லி ’ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு’ பெற புதிய தமிழகம் கட்சி பங்கு பெறும் கூட்டணி ஆட்சியை அமைக்க ஆயத்தப்படுத்திக் கொள்ள சபதம் ஏற்போம்.!

டாக்டர் கிருஷ்ணசாமி MD, Ex.MLA,
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
14.12.2024