அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் பலாத்காரம்! அரசு விழிப்புடன் இருக்க எச்சரிக்கிறோம்.!

அண்ணா பல்கலைக்கழக மாணவி ஒருவர் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் வன்கொடுமை மிகவும் கண்டிக்கத்தக்கது. அண்மைக்காலமாக சிறார்கள், இளம் பெண்கள், முதியோர்கள் மீது பல்வேறு விதங்களில் தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. பிரசித்தி பெற்ற பல்கலைக்கழகத்திற்குள் இரவு நேரத்தில் சம்பந்தமில்லாதவர்கள் எவ்வாறு உள்ளே அனுமதிக்கப்பட்டார்கள் என்பது மிகப்பெரிய கேள்வி? குற்றவாளி உடனடியாக கைது செய்யப்படக் கூடிய அளவிற்கு நன்கு தெரிந்த மாணவர் அல்லாத ஒரு நபர் எதற்காக அனுமதிக்கப்பட்டார்? தீய எண்ணத்துடன் வரக்கூடிய நபர்களுக்கு உள்ளே நுழைய வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தவர்கள் யார்? யார்? பல்கலைக் கழகத்தில் பெரும்பாலான சிசிடிவி கேமராக்கள் பழுதடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது; அதன் உண்மை நிலை என்ன? என்பது குறித்து விசாரிக்கப்பட வேண்டும். இது போன்ற நிகழ்வுகள் பெற்றோர்கள் மத்தியிலும் பொதுமக்கள் மத்தியிலும் பெரும் அச்சத்தை உருவாக்கும்.
பள்ளியோ, கல்லூரியோ, பல்கலைக்கழகங்களோ அங்கு பயிலும் மாணவர்களுக்கு முழுப் பாதுகாப்பு அளிக்கும் வகையில், உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். சமூகத்தில் அண்மைக்காலமாக இதுபோன்று நடைபெறும் சம்பவங்கள் கவலைக்குரியதாகவும், சமூக ஒழுங்கு மற்றும் சட்ட ஒழுங்கின் மீது மிகப்பெரிய ஐயப்பாட்டை எழுப்புகிறது; அரசு விழிப்புடன் இருக்க எச்சரிக்கிறோம்.!
டாக்டர் கிருஷ்ணசாமி MD.Ex MLA,
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
25.12.2024