எம்.எஸ்.சுவாமிநாதன் மறைவு டாக்டர் கிருஷ்ணசாமி இரங்கல்

நினைவுகள்
s2 348 Views
  • Swaminathan
  • Swaminathan
Published: 28 Sep 2023

Loading

இந்திய வேளாண்மையின் தந்தை எம்.எஸ்.சாமிநாதன் அவர்கள் மறைந்தாலும், வேளாண்மைத் துறையில் அவர் ஆற்றிய அரிய சாதனைகள் என்றென்றும் நிலைத்து நிற்கும்.!

இந்திய வேளாண்மை மற்றும் பசுமைப் புரட்சியின் தந்தை என்று அழைக்கப்படும் வேளாண்மை விஞ்ஞானி மதிப்பிற்குரிய எம்.எஸ்.சாமிநாதன் அவர்கள் தனது 98 வது வயதில் இன்று காலமாகிவிட்டார் என்ற செய்தி மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. உலக அளவில் வேளாண்மை துறை விஞ்ஞான ரீதியாக துவங்கிய காலத்திலேயே இந்தியாவிலும் நவீன விஞ்ஞானத்திற்கு அடிகோலியவர் எம். எஸ். சாமிநாதன் அவர்கள்.
இந்திய மக்களின் மிக முக்கியமான தானிய வகைகளான அரிசி மற்றும் கோதுமை ஆகியவற்றை இருபோக மற்றும் முப்போக விளைச்சல், நோய் எதிர்ப்புச் சக்தியைத் தாங்கும் புதிய ரகங்களைக் கண்டுபிடித்து அறிமுகம் செய்தவர்.

ஏறக்குறைய 75 வருடங்களுக்கு முன்பாகவே உருளைக்கிழங்கு மற்றும் அரிசி கோதுமை ஆகியவற்றின் மரபணு ஆராய்ச்சியில் ஈடுபட்டவர். இன்று, 140 கோடி மக்களின் உணவு தேவை பூர்த்தி செய்யப்பட்டு இருக்கிறது; ஏற்றுமதி செய்யக்கூடிய அளவிற்கு நாம் வளர்ச்சி பெற்று இருக்கிறோம் என்றால் அதற்கு எம்.எஸ். சாமிநாதன் அவர்கள் உருவாக்கிய அடித்தளம் தான் காரணம். அவருடைய மறைவு 140 கோடி மக்களுக்கும் பேரிழப்பாகும்.
வேளாண்மையே பூர்விக தொழில் என்ற அடிப்படையிலும், 1971 இல் மருத்துவ படிப்பில் சேர்வது முன்பாக வேளாண்மை கல்லூரியின் மாணவனாக சில நாட்கள் பயின்றவன் என்ற அடிப்படையிலும் 140 கோடி இந்திய மக்களின் உணவு ஆதாரத்தை வலுப்படுத்திய மகத்தான விஞ்ஞானி மற்றும் மனித நேயருக்கு புதிய தமிழகத்தின் சார்பாக நெஞ்சார்ந்த அஞ்சலியைச் செலுத்துகிறோம். அவர் மறைந்தாலும் வேளாண்மைத் துறையில் அவர் ஆற்றிய அரிய சாதனைகள் என்றென்றும் நிலைத்து நிற்கும்.!

டாக்டர் க. கிருஷ்ணசாமி MD. Ex MLA,
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
28-09-2023