இந்திய சுதந்திரப் போரின் முதல் தற்கொலைப் படை வீரர் – மாவீரன் சுந்தரலிங்க குடும்பர்
புதிய தமிழகம் கட்சியின் முனைப்பில், தேவேந்திர குல மக்களின் பெரும் போராட்டத்திற்கு பிறகு, 1997 மே மாதம் 1-ஆம் தேதியிலிருந்து விருதுநகரை மையமாக வைத்து, வீரன் சுந்தரலிங்கம் பெயரில் போக்குவரத்துக் கழகம் இயக்கப்பட்டது

முழுப்பெயர்: கருப்பண்ணன் சுந்தரலிங்கம்
பிறந்த தேதி: 16 ஏப்ரல் 1770
பிறந்த இடம்: பாஞ்சாலங்குறிச்சி அருகில் உள்ள கவர்னகிரி கிராமம், தூத்துக்குடி
பெற்றோர்கள்: காலாடி என்ற கட்டக் கருப்பண்ணன், முத்திருளி அம்மாள்
தனது ஊரில் உள்ள கண்மாயை (குளம்) பக்கத்து பாளையங்காரர்கள் மறிந்து கட்டும்பொழுது ஏற்படும் சண்டையில், மிக திறமையாக போரிடுவதால் அம்முயற்சி தடுக்கப்படுகிறது. இப்போரை அறிந்த கட்டபொம்மன், அவரது வீரத்தைக் கேள்விப்பட்ட கட்டபொம்மன் தனது ஒற்றர் படைக்குத் தளபதியாக்கினார். தனது வீரத்தாலும் மதி நுட்பத்தாலும் சீக்கிரமே கட்டபொம்மனின் அனைத்துப் படைகளுக்கும் தளபதியாக உயர்ந்தார் சுந்தரலிங்கம்.
சுந்தரலிங்கத்தின் பொறுப்பில்தான் கட்டபொம்மனின் தானியக்கிடங்கும், வெடிமருந்துக் கிடங்கும் இருந்தன. கட்டபொம்மனுக்கும் ஆங்கிலேயர்களுக்கும் முட்டல், உரசல் உருவானபோது வெள்ளையத்தேவனும், சுந்தரலிங்கமும் கட்டபொம்மனுக்கு பக்கபலமாக விளங்கினர்.
கட்டபொம்மனை பல நாட்கள் அலைக்கழிய வைத்து ராமநாதபுரம் அரண்மனையில் ஜாக்சன் துரை சந்தித்தபோது சுந்தரலிங்கமும் உடனிருந்தார். அந்தச் சந்திப்பு பின்பு பெரும் சண்டையாக மாறியபோது தனது வாளால் பல வெள்ளைச் சிப்பாய்களை வீழ்த்தினார். இதையடுத்து கட்டபொம்மனை அழிக்க வெள்ளையர்கள் 1799ல் பாஞ்சாலங்குறிச்சி மீது படையெடுத்தார்கள். ஆங்கிலேயப் படை பாஞ்சாலங்குறிச்சிக்கு வெளியே கரிசல் காட்டில் முகாமிட்டிருந்தது. பீரங்கிகள், வெடிகுண்டுகள், துப்பாக்கிகளுடன் வெள்ளையர்களின் படை குவிந்திருந்தது.
1799 செப்டம்பர் 8ம் தேதி சுந்தரலிங்கம் தனது முறைப்பெண்ணான வடிவுடன் ஆடுமேய்ப்பவர்களைப் போல வேடமணிந்து, வெள்ளையர்களின் வெடிமருந்து கிடங்குப் பகுதிக்குப் போனார். தீப்பந்தத்தைக் கொளுத்தியபடி சுந்தரலிங்கமும், வடிவும் வெடிமருந்துக் கிடங்கிற்குள் பாய்ந்தார்கள். பலத்த வெடிச்சத்தத்துடன் கிடங்கு தீப்பிடித்து எரிந்தது. சுந்தரலிங்கமும், வடிவும் இந்திய சுதந்திரப் போரின் முதல் தற்கொலைப் படை தாக்குதல் தொடுத்தவர்களானார்கள். அவர்களது வீரமரணத்திற்கு அடுத்த நாள் நடைபெற்ற போரில் பாஞ்சாலங்குறிச்சி ஆங்கிலேயர் வசமானது
1997இல் இவரது நினைவாக ஒரு போக்குவரத்துக் கழகத்துக்கு தமிழக அரசு பெயர் சூட்டியது. பின்னர் அனைத்து மாவட்டப் போக்குவரத்துக் கழகத்திற்கும் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் எனப் பொதுப்பெயரிடப்பட்டது.
Above Source: WikiPedia
ஏப்ரல்-16 வீரன் சுந்தரலிங்கம் பிறந்தநாள் விழா! எவர் மறப்பினும் நாம் மறவோம் !!
கி.மு 300 ஆண்டுகளுக்கு முன்பே மாவீரன் அலெக்சாண்டர் இந்தியாவிற்குள் நுழைந்து இந்தியாவை ஆக்கிரமித்தார். அதைத் தொடர்ந்து பல கிரேக்கர்களும் இந்தியாவின் வடமேற்கு பகுதியில் தங்கள் அதிகாரங்களை நிறுவினார்கள். கி.பி 600க்கு பிறகு மெல்ல மெல்ல துவங்கி கி.பி 1000-ஆம் ஆண்டுகளில் முகலாயர்கள் இந்தியாவை கபளீகரம் செய்தார்கள். 1600-களில் வணிகம் செய்ய நுழைந்து 1850-இல் ஆங்கிலேயர்கள் இந்தியாவை முழுமையாக ஆக்கிரமித்துக் கொண்டார்கள். இந்தியாவினுடைய வரலாற்றில் ஒரு பகுதி அந்நியரின் ஆக்கிரமிப்புக்கு ஆளானதாகவே இருந்திருக்கிறது. வரலாற்றில் அந்நிய ஆக்கிரமிப்புக்கு எதிராக போர்கள் பல்வேறு கட்டங்களில் நடந்திருக்கின்றன. எனினும் ஆங்கிலேயருக்கு எதிரான போர் மட்டுமே சுதந்திரப் போர் என்று வர்ணிக்கப்படுகிறது.
கொள்ளை கும்பல்களும், நாடோடி கூட்டங்களும், சிற்றரசர்களும் என பலருடைய ஆளுகைக்கு உட்பட்டு இந்தியா இருந்திருக்கிறது. இந்திய மக்கள் அறிந்து கொள்ளும் விதத்தில் உண்மை வரலாறுகள் எழுதப்படவில்லை. பல வரலாறுகள் அந்தந்த பகுதியில் மண்ணை கைப்பற்றி வைத்திருந்தவர்களால், தங்களை தாங்களே புகழ்ந்து எழுதி கொண்டவைகளே!
சமூக ரீதியான அநியாயங்கள், அட்டூழியங்கள், சுரண்டல்களுக்கு எதிராகவும் திரண்டெழுந்த வீரமிகு மனிதர்கள் மற்றும் இனங்களுடைய வரலாறுகள் திட்டமிட்டு மறைக்கப்பட்டு இருக்கின்றன. 17ஆம் நூற்றாண்டில் தூத்துக்குடி மாவட்டம், ஓட்டபிடாரம் அருகே உள்ள பாஞ்சாலங்குறிச்சியை மையமாகக் கொண்டு செயல்பட்ட பாளையக்காரர் வீரபாண்டிய கட்டபொம்மன் ஆவார். கிருஷ்ண தேவராயருடைய காலத்தில் தமிழகம் 64 பாளையப்பட்டுகளாக பிரிக்கப்பட்டு அவர்களுக்கு வரி வசூலிக்கும் உரிமை கொடுக்கப்பட்டது. 1857 க்கு பிறகு ஆங்கிலேயருடைய நேரடி ஆட்சி இந்தியாவில் முழுமை பெற்ற பிறகு அவர்களுடைய பிரதிநிதிகளாக கலெக்டர்கள் நியமிக்கப்பட்டு வரி வசூலிக்கும் உரிமை வழங்கப்பட்டது. ஆங்கிலேய அரசுக்கு பாளையக்காரர்கள் பல இடங்களில் வரி கொடுக்க மறுத்து விட்டார்கள். வரி கொடுக்க மறுத்த பாளையக்காரர்கள் மீதும் ஆங்கில அரசு கடுமையாக நடந்து கொண்டது.
பாஞ்சாலங்குறிச்சி பாளையக்காரர் கட்டபொம்மன் உடன் இணைந்து ஆட்சி செய்தவர் வீரன் சுந்தரலிங்கம் குடும்பனார் ஆவார். அவர் அளப்பரிய வீரர். பாஞ்சாலங்குறிச்சி அருகே உள்ள கவர்னகிரி என்னும் ஊரில் பிறந்தவர். கட்டபொம்மனின் கோட்டையை தகர்க்க, ஆங்கிலேயர்கள் பதுக்கி வைத்திருந்த வெடி மருந்து கிடங்குகளை, தன் இடுப்பில் நெருப்பை கட்டி, வெடிமருந்து கிடங்குக்குள் பாய்ந்து, வெடிமருந்து கிடங்கை அழித்த பெருமைக்குரியவர் ஆவார். இன்றும் அந்த பகுதி பாஞ்சாலங்குறிச்சி கவர்னகிரி அருகே பீரங்கிமேடு என்று அழைக்கப்படுகிறது.
ஆனால், அந்த மகத்தான, ஈடு இணையற்ற வீரன் சுந்தரலிங்கத்தின் வரலாறு திட்டமிட்டே மறைக்கப்பட்டது. சுதந்திரத்திற்குப் பின்னும் யார் யாருடைய வரலாறுகளோ பாடப்புத்தகங்களில் பாடங்களாகவும், மணிமண்டபகங்களாகவும், அரசு விழாக்களாகவும் கொண்டாடப்பட்டது. ஆனால், தன் உயிருக்கு உயிராக நேசித்த தனது அத்தை மகள் வடிவோடு தன்னையும் சேர்த்து ஆங்கிலேயருக்கு எதிரான போரில் மாய்த்துக் கொண்ட அவ்வீரரின் வரலாறு வெளிக்கொணரப்படவில்லை. அவருக்குரிய அங்கீகாரம் கொடுக்கப்படவில்லை.
புதிய தமிழகம் கட்சியின் முனைப்பில், தேவேந்திர குல மக்களின் பெரும் போராட்டத்திற்கு பிறகு, 1997 மே மாதம் 1-ஆம் தேதியிலிருந்து விருதுநகரை மையமாக வைத்து, வீரன் சுந்தரலிங்கம் பெயரில் போக்குவரத்துக் கழகம் இயக்கப்பட்டது. குறுகிய நெஞ்சம் கொண்டோரின் செயல்களால் அவர் பெயரில் துவக்கப்பட்ட போக்குவரத்துக் கழகம் நிறுத்தப்பட்டது. அவருடைய பிறந்தநாளான ஏப்ரல் 16-ம் தேதியை ஓட்டப்பிடாரம் அருகே உள்ள கவர்னகிரியில் புதிய தமிழகம் கட்சி வெகுவிமர்சையாக அனுசரித்து வருகிறது.
நாம் சட்டமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் வைத்த வேண்டுகோளை ஏற்று வீரன் சுந்தரலிங்கத்தின் பிறந்த நாளை அரசு விழாவாக அறிவித்தார்கள். ஆனால், பிற சுதந்திர போராட்ட தியாகிகளின் பிறந்தநாள், நினைவு நாளை போன்று செய்தித்தாளில் விளம்பரம் கொடுப்பதில்லை, தொண்டர்கள் புடைசூழ ஆளுங்கட்சி, எதிர்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களும், அமைச்சர்களும் செல்வதில்லை. ஓரவஞ்சனையுடனே இன்றும் தமிழகத்தில் அளப்பரிய தியாகம் செய்த சுதந்திரப் போராட்ட தியாகி தளபதி சுந்தரலிங்கம் வரலாறு மறைக்கப்படுகிறது. ஒன்றுபட்டு; உறுதியாக நின்று; தங்களுடைய வலுவை நிலைநாட்டும் சமுதாயம் தன்னுடைய அடையாளத்தை திரும்பப்பெறும் !
டாக்டர் கிருஷ்ணசாமி MD,
நிறுவனர் & தலைவர்
புதிய தமிழகம் கட்சி