வெண்ணிக்காலாடியாரின் வீர வரலாறு..!
926 Views
![]()
வெண்ணிக்காலாடியாரின் வீர வரலாறு!
போற்றிப் பாடுவதற்கானது மட்டுமல்ல!!
தேவேந்திரகுல வேளாளர் அடையாள மீட்பு – பட்டியல் வெளியேற்றப் போர்க்களத்தில் போர்ப்பரணி பாடுவதற்கானதுமாகும்..!!
2020, டிசம்பர் 18-ஆம் தேதியிட்ட தினமணி – வெள்ளிமணி நாளிதழில் ’பொருநை போற்றுதும்’ என்ற தலைப்பில் சுதந்திரப் போராட்ட மாவீரர் வெண்ணிக்காலாடியார் அவர்களை பற்றி டாக்டர் சுதா சேஷய்யன் அவர்கள் அருமையான கட்டுரை ஒன்றை எழுதி உள்ளார். அவருக்கு என் நெஞ்சார்ந்த நன்றியையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். களப்பணியில் களைப்புற்றவர்களை உற்சாகப்படுத்த போஷாக்கு கொடுப்பதைப்போல, போராட்டக்களத்தில் உள்ள வீரர்களை உற்சாகப்படுத்த இலட்சியத்திற்காகத் தங்களை அர்ப்பணித்துக் கொண்ட வீரபுருஷர்களின் வாழ்க்கை வரலாறுகளை எடுத்து சொல்ல வேண்டியுள்ளது. இந்த மண்ணின் மூத்தக்குடி மக்களான தேவேந்திரகுல வேளாளர்களின் வாழ்வுரிமையைப் பாதுகாத்துக் கொள்வதற்கு 1990-களில் தளபதி மாவீரன் சுந்தரலிங்கனார் அவர்களின் வாழ்க்கை வரலாறு தேவைப்பட்டது. தங்களையும், தங்கள் குடும்பத்தாரையும், உற்றார் உறவினர்களையும், உடைமைகளையும் பறிபோகாமல் பாதுகாத்துக்கொள்ள எண்ணற்ற இளைஞர்கள் அக்காலகட்டத்தில் சுந்தரலிங்கனாராகவே களமாடினார்கள். 1995-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 6-ஆம் தேதி கொடியங்குளத்திற்காக நீதி கேட்டு நடைபெற்ற சென்னை மெரினா போராட்டத்தில், திரிசூலத்தைச் சேர்ந்த சிவஞானம், சுப்பிரமணியம் ஆகிய இரு இளைஞர்கள் தங்களுடைய நெஞ்சுகளில் துப்பாக்கிக் குண்டுகளைத் ஏந்தி, இன்னுயிரை நீத்து வரலாறு படைத்தார்கள்; சுந்தரலிங்கனாராகவே வாழ்ந்து காட்டினார்கள். அதன் நீட்சியாக 1997-ஆம் ஆண்டு மே மாதம் 5-ஆம் தேதி திருநெல்வேலி மாவட்டம் துறையூரில் மாவீரன் பிலிப்ஸ் தன்னுடைய 27 வயதில், காவல் துறையின் துப்பாக்கிக் குண்டுகளை தன் வயிற்றில் தாங்கி வீரவரலாறு படைத்தான். தாமிரபரணியில் 17 பேர், அதேபோல இளம் வயது என்றாலும் புதிய தமிழகம் கொடி காத்த மாவீரன் எ.கோட்டைப்பட்டி சுரேஷின் வரலாறும் துப்பாக்கிக் குண்டுகளை நெஞ்சில் தாங்கிய வீரவரலாறுகள் தான். அன்புச் சகோதரி டாக்டர் சுதா சேஷய்யன் அவர்கள் வெண்ணிக்காலாடியார் எனும் பெரிய காலாடியார் பற்றி எடுத்துச் சொல்லியிருக்கக்கூடிய விதம் மறைக்கப்பட்டத் தங்களுடைய அடையாளத்தை மீட்டெடுப்பதற்காகப் போராட்டக்களத்திலிருக்கின்ற அல்லது போராட்டக்களத்திற்கு வரவேண்டியிருக்கின்ற இலட்சோபலட்சம் தேவேந்திரகுல வேளாளர் இளைஞர்களுக்கு நல்லதொரு உணர்வூட்டும் தூண்டுதலாக இருக்குமென்றே கருதுகிறேன். சிலரை சில காலம் ஏமாற்றலாம்; பலரை சில காலம் ஏமாற்றலாம்; எல்லோரையும் எல்லாக் காலமும் ஏமாற்ற முடியாது என்பதற்கிணங்க, என்னதான் முயற்சி செய்தாலும் தேவேந்திரகுல வேளாளர்களின் பூர்வீக வரலாற்றையும், வீரத்தையும், தியாகத்தையும் என்றென்றும் நிரந்தரமாக மறைக்க முடியாது என்பதற்கு இக்கட்டுரையே சாட்சியாகும். வெண்ணிக்காலாடியாரின் வரலாறு தாங்கிய இக்கட்டுரை 50 வருடங்களுக்கு முன்பு வந்திருந்தால் எப்படிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் என்று சொல்ல இயலவில்லை. ஆனால் இப்பொழுது மிகமிகப் பொருத்தமான நேரத்தில் வெளிவந்து இருப்பதாகவே கருதுகிறேன். ஏனெனில், இன்றைய தேவேந்திரகுல வேளாளர் இளைஞர்கள் பலபேர் எதார்த்த வாழ்க்கையை உணர மறுக்கிறார்கள். முகநூலிலும், பிற சமூக வலைத்தளங்களிலும் சுய புராணம் பாடுவதே பெரும் புரட்சி எனக் கருதுகிறார்கள். முகநூல் வெளிச்சத்தில் கிடைக்கும் தற்காலிக, அற்ப முகவரிகளைக் காட்டி இன்றைய தேர்தல் அரசியல் களத்தில் தங்களை சந்தைப்படுத்திக்கொள்ள கடை விரிக்கிறார்கள். சிவப்பு – பச்சை இன்றி தங்களால் எந்த ஒரு புதிய அடையாளத்தையும் உருவாக்கவும் முடியாது; பிறிதொரு அடையாளத்திற்குள் சுயரியாதையுடன் ஒருகணமும் பயணிக்கவும் முடியாது என்பதை அறிந்திருந்தும் இடம்மாறி வீண் போகிறார்கள்; எதிரிகளின் கூடாரத்தில் புகலிடம் தேடுகிறார்கள். இதுபோன்றவர்களை எதிர்பார்த்தே திராவிட அரசியல்வாதிகள் விரித்து வைத்திருக்கும் வலையில் மலிவாக விலைபோய் எளிதாக விட்டில் பூச்சிகளாக விழுந்து தங்களை மாய்த்துக் கொள்கிறார்கள். காலை ஒரு கட்சி, மாலை ஒரு தலைவன் என்று திக்கற்றவர்களாகப் பிரிந்து அலைவோர்களால் சமூக வலைத்தளங்கள் வாயிலாக தற்புகழ்ச்சி பரப்புரை செய்யலாமே தவிர, போர்ப்பரணி பாட முடியாது. அனுபவித்து வரும் ஒன்றை, தொடர்ந்து அனுபவிப்பது என்பது வேறு; பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு இழந்த ஒன்றை மீட்டெடுப்பது என்பது வேறு. அது எளிதான காரியம் அல்ல! அதை மீட்டெடுக்க அசாத்தியமான தைரியமும், பொறுமையும், அளவிடற்கரிய தியாகம் செய்யும் உணர்வும் வேண்டும். பெயரளவிலோ, வெற்று வாய்ச்சொல்லிலோ, தற்பெருமை பேசிக் கொள்வதாலேயோ நடந்தேறாது. வீட்டை விட்டு வெளியே கிளம்பினாலே, போர்க்களம் – போராட்டத்திற்குச் செல்கிறோம் என்ற உணர்வுதான் எழவேண்டும். போர்க்களம் – போராட்டம் என்றுச் சொல்லுகிற போது அன்றைய காலகட்டத்தில் நடந்ததைப் போன்று யானைப்படை, குதிரைப்படை, காலாட்படையோடு மோதிக் கொள்வது போன்ற அவசியமில்லை. ஓர் ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம், தர்ணா போராட்டம், பேரணி என எதுவாக இருந்தாலும் அல்லது எதிரிகளை அவர்களது களத்திலேயே சந்திக்கச் சென்றாலும் முன் வைத்த காலை பின் நோக்கி வைக்கும் எண்ணம் என்றுமே எழக் கூடாது. குண்டாந்தடிகளாயினும், குண்டடிகளாயினும் அது தன் நெற்றிப் பொட்டில் படவேண்டும் என நெஞ்சை நிமிர்த்தி நிற்பவனே ’மாவீரன்’ என்பதைத்தான் வெண்ணிக்காலாடியாரின் வீர வரலாறு உணர்த்துகிறது. வெண்ணிக்காலாடியாரின் இலக்கும், திசையும் தெளிவாக இருந்திருக்கின்றன; அவரது வீரம் அப்பழுக்கற்றது; அவரது விசுவாசம் பத்தரை மாற்றுத் தங்கத்திற்கு நிகரானது.
“எத்தனைப் பட்டாளம் வெட்டினானடா – வெண்ணியை எதிர்க்க ஆள் இல்லையடா! செங்குருதி நனைத்துப் பூலித்தேவன் வண்ணச் சீர்மிகு மேனியெல்லாம் கொப்பளிக்க… காலாடி உயிருக்கோர் காலன் வந்திட்டான் கால் நொடியில் காற்றாய்ப் பறந்திட்டான்…..’
– பூலித்தேவன் சிந்துப்பாடலின் பகுதியாகக் காலாடியாரின் பெயரும் ஒலிக்கிறது. யார் இந்தக் காலாடியார்?
பாளையங்கள் செழித்திருந்த காலத்தில், தேவேந்திரகுலப் பெருமக்கள் பலர், போர்ப்படை வீரர்களாக இருந்திருக்கின்றனர். சுற்றியிருந்த காட்டுப் பகுதிகளிலிருந்தும் பெருகிக்கொண்டிருந்த அயலாதிக்கத்திலிருந்தும் தத்தம் பாளையங்களைப் பாதுகாப்பதற்காகப் பாளையத் தலைவர்கள், தத்தம் பாளையப் பகுதிகளில் படைப்பிரிவுகளை அமைத்து நிர்வகித்துள்ளனர். இப்படித்தான் பூலித்தேவனும் கோட்டைகளைக் கட்டிப் படைகளை அமைத்துள்ளார்.
இத்தகைய படைவீரர்களில் சிலர், பரம்பரையாகவே படைப்பணியில் ஈடுபட்டிருந்தனர். காலாட்படையில் பணி செய்தவர்கள் என்பதால் “காலாடிகள்’ என்றழைக்கப்பட்டனர். தேவேந்திரகுலத்தின் உட்பிரிவாகவே “காலாடி’ என்னும் பிரிவு இருந்திருக்கிறது.
பெரிய காலாடி, சின்னக்காலாடி, கரையாளர் குடும்பனார், சாத்தான் காலாடி, சங்கரக்குடையான், மாடக்குடும்பனார், முத்துக்குடும்பனார், கட்டக்கருப்பணன் என்று இவ்வாறு பெரும்பணியாற்றிய வீரர்களின் பெயர்கள் தெரியவருகின்றன. பெரிய வீரர்கள், அவர்களின்கீழ் இயங்கிய படைப் பிரிவினர் என்ற முறையில் குழுக்களாகவும் இவர்கள் செயல்பட்டிருக்கின்றனர்.
ஒருசிலக் குழுக்கள் மற்றும் அந்தந்தக் குழுத் தலைவர்களின் வீரம், போர்த்திறம், செயல்திட்பம், நேர்மை காரணமாக, அந்தக் குழுவானது தங்களோடு இணைந்திருக்க வேண்டும் என்று பாளையத் தலைவர்கள் ஆசைப்பட்டதாகவும் தெரிகிறது. இப்படிப்பட்ட வீரர்களில் ஒருவர் வெண்ணிக்காலாடி என்றழைக்கப்பட்ட பெரிய காலாடி. நேரடியாகப் பூலித்தேவனையோ, அவரது படைகளையோ பகல் நேரத்தில் தாக்கமுடியாது என்றெண்ணிய பகைவர்கள், இரவுப் பொழுதில் தாக்கத் தீர்மானித்தனர்.
இந்தச் செய்தியை உளவறிந்து கொண்ட பெரிய காலாடியார், காட்டு வழியிலேயே முகாமிட்டுப் பகைவர்களை எதிர்த்தார். இருப்பினும், தொடர்ந்து நடைபெற்ற சண்டையில், வயிற்றில் குத்தப்பட்டார். கத்தி ஆழமாகப் பாய, குடல் கிழிந்து சரிந்து வெளியில் தொங்கியது. சற்றும் தளராமல், குடலை உள்ளே தள்ளிவிட்டு, தலையைச் சுற்றிக் கட்டியிருந்த தலைப்பாகையை அவிழ்த்து இறுக்கமாகக் கட்டிக் கொண்டு சண்டையைத் தொடர்ந்தார்; பகைவர்களை வீழ்த்தினார். இன்னும் பலர் ஆங்காங்கே காட்டுப் பகுதிகளில் பதுங்கியிருந்து அடுத்த சில நாள்களில் தாக்கக்கூடும் என்பதை உணர்ந்தவர், குதிரை மீதேறிச் சென்று பூலித்தேவனிடம் செய்தி தெரிவித்தார்.இ ரத்தம் சொட்டச்சொட்ட நின்று தகவலைச் சொன்னவர், அப்படியே சரிந்து வீழ்ந்து சரித்திரம் ஆனார்.
தம்முடைய நண்பரின் மரணத்தால் நிலைகுலைந்து போன பூலித்தேவன், எந்த இடத்தில் காலாடி வீரப் போரிட்டாரோ, அந்த இடத்தில் வீரக்கல் ஒன்றை நட்டு, அந்த இடத்திற்கே “காலாடி மேடு’ என்றும் பெயர் சூட்டினார். இப்போதும் இருக்கிறது “காலாடிமேடு’. ராடிஸ்பான் என்னும் ஜெர்மானிய நகரைப் பிடிப்பதற்காக நெப்போலியனின் படைகள் சண்டையிட்டுக் கொண்டிருந்தன. என்ன ஆகுமோ? என்னும் தவிப்பில், அருகிலிருந்த குன்றின் மீது நின்று, தொலைவில் தெரிந்த ராடிஸ்பானையே நெப்போலியன் பார்த்துக் கொண்டிருந்தான். திடீரென்று, ராடிஸ்பானிலிருந்து சிறு புழுதிப் படலம் ஒன்று நகர்ந்தது.
தன்னை நோக்கி அப்படலம் வருவதையும் நெப்போலியன் கண்டான். அருகே வர வர… குதிரைமீது இளைஞன் ஒருவன். ராடிஸ்பானை ஃபிரஞ்சுப்படைகள் வெற்றி கொண்டதையும் ஃபிரெஞ்சுக் கொடியைத் தானே ஏற்றியதையும் அந்த வீரன் எடுத்துரைக்க… காயத்தால் அவனுடைய மார்பு பிளவுபட்டிருப்பதைக் கண்ட நெப்போலியன், “நீ காயப்பட்டிருக்கிறாய்’ என்று ஆதங்கப்பட, “இல்லை நான் கொல்லப்பட்டு விட்டேன்’ என்று கூறிக்கொண்டே அந்த வீர இளைஞன் மாண்டு விழுவான். ராபர்ட் ப்ரெளனிங் இயற்றிய “த இன்சிடெண்ட் ஆஃப் தி ஃபிரெஞ்ச் கேம்ப்’ என்னும் கவிதையின் சாராம்சம் இது. 1809 – ஏப்ரலில் நடைபெற்ற ராடிஸ்பான் போரை மையமாக வைத்து இயற்றப்பட்ட கவிதை.
நெப்போலியனை நாடி வந்தக் குதிரை வீரன் கவிதையைப் போல், பூலித்தேவனை நாடி வந்த வெண்ணிக்காலாடியின் கதை, நாட்டுப்புறப் பாடல்களில் கவிதையாகியுள்ளது. “கடமை வீரனப்பா காலாடி வீரனப்பா’ என்னும் பாடல் ஒலிக்கும் போதெல்லாம், பொருநையாளின் உள்ளம் பூரிக்கத்தானே செய்யும்!
இப்படி எல்லாம் வரலாறு கொண்ட இந்தத் தமிழ் மண்ணில் ஒருவர் உயர்ந்தவராகவும், இன்னொருவர் தாழ்ந்தவராகவும் சித்தரிக்கப்பட்டு இரத்தம் சிந்தும் நிலை ஏற்பட்டதை எண்ணி ஆதங்கப்படுவதா? ஆத்திரப்படுவதா? காலத்தின் கோலம் என்று காலத்தின் மீது பழியைப் போடுவதா? வீரம் யாருக்கும் தனிப்பட்ட சொந்தமில்லை; வீரமும், பெருமைமிகு அடையாளங்களும் மண்ணின் மைந்தர்கள் அனைவருக்கும் இருந்திருக்கிறது, இருக்கிறது என்பதற்கு இதைவிட என்னச் சான்று வேண்டும். மனிதர்களாக, உழைக்கும் மக்களாக, மொழியால் தமிழர்களாக, பண்பாடுகளிலும் வழிபாடுகளிலும் இந்துக்களாக, தேசத்தால் இந்தியர்களாக ஒன்றிணைந்து வாழாமல் எத்தனை ஆண்டுகாலத்திற்கு நாம் சிதறுண்டு கிடக்க வேண்டும் என்பதைப் பற்றிச் சிந்திக்க வேண்டிய நேரம் அல்லவா! சிந்திப்பார்களா?
பெரிய காலாடியாரின் பெருமைகளை ராடிஸ்பான் எனும் ஜெர்மானிய நகரைப் பிடிப்பதற்காகச் சண்டையிட்ட நெப்போலியன் படைகள் குறித்து ஓர் அருமையான கவிதை ஒன்றையும் கட்டுரையாளர் எடுத்துச் சொல்லியுள்ளார். “கடமை வீரனப்பா, காலாடி வீரனப்பா” என்னும் பாடல் ஒலிக்கும் போதெல்லாம், பொருநையாளின் உள்ளம் பூரிக்கத்தானே செய்யும்! என்று தனதுக் கட்டுரையை நிறைவு செய்துள்ளார்.
இதைத்தான் நான் ஒவ்வொரு தேவேந்திரகுல வேளாளர் இளைஞர்களிடத்திலும் எதிர்பார்க்கிறேன். இன்றையக் காலகட்டத்தில் காலாடியாரின் பெருமை பேசுவது தேவை; அதனினும் தேவை அவரின் வீரமிக்க பேரப்பிள்ளைகளாக வாழ்ந்து காட்டுவதும் தேவை..! நாம் கடந்த 100 ஆண்டுகளாக ஒற்றை அடையாளத்திற்காகப் போராடிக் கொண்டிருக்கிறோம். வந்தேறிகள் செய்த தவறால் நமக்கு ஏற்பட்டக் கறையைப் போக்க விடுதலைப் போராட்டத்தைத் துவக்கி இருக்கிறோம். தமிழர்கள் – உழவர்கள் வரலாறு எழுதப்பட வேண்டுமென்றால் அது குடும்பர், பண்ணாடி, காலாடி, தேவேந்திரகுலத்தார், பள்ளர் உள்ளிட்ட தேவேந்திரகுல வேளாளர்களிடத்தில் இருந்துதான் துவங்க வேண்டும். தமிழகத்தின் எந்த மேட்டுப்பகுதியைத் தோண்டினாலும், ஆற்றுப்படுகையைத் தோண்டினாலும் அது தாமிரபரணியின் ஆதிச்சநல்லூராக இருந்தாலும், வைகையின் கீழடியாக இருந்தாலும் அவை இன்றும் தேவேந்திரகுல வேளாளர்களின் வாழ்விடங்களாகவும், வரலாறுகளாகவும் இருக்கின்றன என்பதை எப்படித் தான் சொல்வது? இன்று பெரிய காலாடியார் அவர்களின் வீர வரலாற்றை டாக்டர் சுதா சேஷய்யன் பதிவு செய்து இருக்கிறார். காலாடி, குடும்பர், தேவேந்திரகுல வேளாளர்களின் வரலாற்றை வெளிக்கொணர இன்னும் எண்ணற்ற சுதா சேஷய்யன்கள் வெளியே வர வேண்டும். தேவேந்திரகுல வேளாளர்களின் வரலாறு மண்ணுக்குள்ளும் மறைந்திருக்கிறது; மண்ணுக்கு மேல் கரும்பாகவும், நெற்பயிராகவும் அவர்கள் கை வண்ணத்தாலும் காட்சியளிக்கின்றது. ’ஒண்டவந்த பிடாரி ஊர்ப் பிடாரியை விரட்டுவது போல’ தொன்றுதொட்டு உழவர்களாக, வேளாளர்களாக வாழ்ந்துவரும் மக்கள் ’வேளாளர்’ என அடையாளப்படுத்தக் கூடாது என யார் யாரோ கூக்குரலிடுகிறார்கள். ஏரும் போரும் தேவேந்திரகுல வேளாளர்களின் இரத்தத்தில் இரண்டறக் கலந்தது என்பதை அறியாமல் யார் யாரோ தேவையில்லாமல் நம்முடைய மண்ணுரிமையிலும், மனித உரிமையிலும், வாழ்வுரிமையிலும் தலையிடுகிறார்கள்; வீண் வம்பு செய்ய நினைக்கிறார்கள். காலாடியாரும் பூலித்தேவனும், கட்டபொம்மனும் சுந்தரலிங்கனாரும் ஈருடல் ஓருயிராய் பின்னிப் பிணைந்து வாழ்ந்ததை மறைத்துவிட்டு என்னென்னவோ நடக்கிறது. நமது இலக்கு தெளிவானது; அதை அடைவதற்கான பாதையும் தெளிவானது; அதற்கான பயணமும் முடிவானது. மறைக்கப்பட்ட வரலாறுகளை மீட்டெடுப்பதற்கான பாதை வெண்ணிக்காலாடியாரின் பாதையாகத்தான் இருக்கும். முன் வைத்தக் காலை பின் வைக்கும் வழக்கம் புதிய தமிழகம் கட்சிக்கு என்றுமே இருந்ததில்லை; தொட்டவை சுட்டாலும், கையே வெந்தாலும் கைவிட்ட பழக்கமும் இல்லை; குண்டாந்தடிகளும், குண்டடிகளும், சிறைக்கொட்டடிகளும் நமது கொள்கையை என்றும் நிலைகுலையச் செய்தது இல்லை. வெண்ணிக்காலடியாரின் வாழ்க்கையைப் படிப்பது, அவரது வெற்றுப்புகழ் பாடுவதற்காக அல்ல, வெற்றிக்கொடி நாட்டுவதற்காக; அவராகவே வாழவேண்டும், இலட்சியத்திகாகத் தன்னை அர்ப்பணிக்க வேண்டும் என்பதை மனதில் நிறுத்திக் கொள்வதற்காகத்தான். எந்தவொருக் கட்சி/இயக்கத்தின் வெற்றியும் எத்தனை பேர் அதை ஆதரிக்கிறார்கள் என்பதைப் பொறுத்து அமையாது. அந்த இலட்சியத்தை அடைய எத்தனை பேர் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொள்கிறார்கள் என்பதைப் பொறுத்தே அமையும். எத்தனை எத்தனை பித்துக்களும், தத்துக்களும் எதிர்த்து நின்றாலும், வெண்ணிக்காலாடியாரின் வழிவந்த வீரமிகுப் பேரப் பிள்ளைகளுக்கு ஈடாகாது.
வெண்ணிக்காலாடியாரின் வீர வரலாறு..!
போற்றி பாடுவதற்கானது மட்டுமல்ல..!
பட்டியல் வெளியேற்றத்துடன்,
தேவேந்திரகுல வேளாளர் பெயர் மாற்றத்தையும் வென்றெடுக்க.!
ஜனவரி-06, மதுரையில் போர்ப்பரணி பாடுவோம்..!






